முடிவற்ற துயரத்தின் கதைகள் …

Posted by அகத்தீ Labels:


நாங்கள் மீண்டும் நைஜீரிய நாட்டுக்காரர்களா னோம்.” இப்படித்தான்முடிகிறதுமஞ்சள் சூரியன் பாதிஎன்கிற சிறுகதை. இது துயரத்தின்முடிவா? துயரத்தின் உச்சமா ?




முடிவற்ற துயரத்தின் கதைகள்

சு.பொ.அகத்தியலிங்கம்

நாங்கள் மீண்டும் நைஜீரிய நாட்டுக்காரர்களா னோம்.” இப்படித்தான்முடிகிறதுமஞ்சள் சூரியன் பாதிஎன்கிற சிறுகதை. இது துயரத்தின்முடிவா? துயரத்தின் உச்சமா ?

நைஜீரிய நாட்டின் வடபகுதியில் வாழும் ஹாஸா இன முஸ்லிம்களுக்கும் தென்பகுதியில் வாழும் இபோ இன கிருத்தவர்களுக்கும் இடையிலான முடிவற்ற மோதலை சித்தரிக்கும் சிறுகதை. பயாஃப்ராவே தனி நாடு கோரி இபோ இனத்தவர் நடத்திய போராட்டம் எப்படி தோற்கடிக்கப்பட்டது. சர்வதேச சமூகம் எப்படி ஓரவஞ்சகமாய் செயல்பட்டது என பல அரசியல் செய்திகளை, வலியை, ரணத்தை, இழப்புகளை இரத்தமும் சதையுமாய் உயிர்துடிப்போடு வெறும் 26 பக்கங்களில்கதைப் போக்கில் சொல்லிச் செல்வது அசாதாரணமானது.

நைஜீரிய மக்களின் வாழ்வை உள்ளும் புறமும் ஊடறுத்துச் செல்லும் 13 கதைகளின் தொகுப்புஉன் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது’. பல்வேறு விருதுகளை பெற்ற சிமாமண்டா என்கோஜி அடிச்சீ எழுதியதை வடகரை ரவிச்சந்திரன் அதே உயிர் துடிப்புடன் தமிழில் தந்துள்ளார் .

முதல் கதையானசிறை எண் ஓன்றுஇளைய தலைமுறையின் சீரழிவையும் சிறையின் அவலத்தையும் மனித உரிமை புறக்கணிக்கப்படுவதையும் ஒட்டு மொத்த நைஜீரியாவின் நிகழ்கால அவலத்தையும் ஒருங்கே ஒரு குடும்பத்தின் வலியோடு சொல்கிறது .

சாமர்த்தியமான பெண்கள் எப்போதும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள்.” இந்த வார்த்தைகள் ஆயிரம் சோகத்தைச் சொல்லும். நம்ம ஊர் எஸ்வி சேகராயினும் அமெரிக்காவில் வாழும் நைஜீரிய ஆணாயினும் பெண் முன்னேற்றத்தின் அடிப்படை அளவுகோல் ஒன்றேதான் போலும் ; இதை எதிர்த்து சாதிக்கப் போராடும் பெண்ணின் வாழ்வும் வலியும் எங்கும் ஒன்றுதான்.நூலின் தலைப்பாக உள்ளஉன் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருப்பதுஇப்படி அதிரடியாய் சொல்லும்யதார்த்தம் .

இந்தக் கதை மட்டுமல்லநகல்’, ‘நடுக்கம்’, ‘திருமண ஏற்பாட்டாளர்கள்’, ‘பறவையின் பாடல்உள்ளிட்ட கதைகள் நைஜீரியப் பெண்களின் சிதைக்கப்பட்ட கனவுகளை, முடிவற்ற கண்ணீரைஅதன் உப்புச் சுவையும் வெப்பமும் கொப்பளிக்க நம் கண்முன் கொண்டு வருகின்றன.

பிறக்க ஓரிடம் ,பிழைக்க ஓரிடம் என நைஜீரியாவிலும் அமெரிக்காவிலுமாய் பெண்கள் படும்பாடு சொல்லும் தரமன்று .

அமெரிக்க தூதரகம்கதை புகலிடவிசா பெற அரசியல் போரில் மகனைப் பலி கொடுத்த ஒரு பெண் படும்பாடு அமெரிக்காவின் மரத்துப் போன இதயத்தைத் தோலுரிக்கும் .

ஆவிகள்கதை உள்நாட்டுப் போரின் கொடூரத்தையும் பொருளாதாரப் பேரழிவின் தாக்கத்தையும் ஒருங்கே சொல்லும் . படிக்கும் போதுநம் நாட்டின் புதிய பென்ஷன் திட்டம்நினைவுக்கு வந்தால் நீ ஆண்டி இண்டியன் (இந்தியாவுக்கு எதிரானவன்) குற்றச் சாட்டுக்கு ஆளாகி விடுவாயோ?

பொதுவாய் இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் பாதியில் நின்று போனதுபோல் இருக்கும் . முடிவற்ற துயரத்தை வேறெப்படிச் சொல்லுவதாம் ? நம்பிக்கையின் தொலைதூரக் கீற்றையும் காணா ஆப்பிரிக்கர் வாழ்வின்ஊடும் பாவமாய் பின்னப்பட்ட இக்கதைகளை கண்ணீர் கோர்க்காமல் எப்படி படிப்பது ? என்னால் இயலவில்லை. நீங்கள் முயன்று பார்க்கலாம்.
உன் கழுத்தைச் சுற்றிக்கொண்டு இருப்பது
நைஜீரிய சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் : சிமாமண்டா என்கோஜி அடிச்சீ ,தமிழில் : வடகரை ரவிச்சந்திரன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,7 , இளங்கோ சாலை,தேனாம்பேட்டை சென்னை 600 018 .
பக் : 256 விலை: ரூ.250 /- தொ.பேசி: 044 – 24332924

நன்றி : புத்தக மேசை , தீக்கதிர் , 04/03/2019.


0 comments :

Post a Comment