இருதயத்தை விரல் ஆக்கி
ரேகை எடுத்து வந்து….
சு.பொ.அகத்தியலிங்கம் .
“இதயம் எழுதிய இரத்த வரிகளின்
கதைக் கொஞ்சம்…
கவனித்துக் கேளுங்கள் …”
என அழைக்கும் நவகவி
வெண்மணித் தீயின் வெப்பமும் வெஞ்சினமும் சற்றும் குறையாமல் வர்க்கப் போருக்கு ஊதுலையாக இந்த நெடுங்கவிதைத் தொகுப்பை உதிர மை தொட்டு எழுதியிருக்கிறார் .
“நந்தனை எரித்த தீ
நகர்ந்து வந்து அன்றொரு நாள்
வெண்மணியில் மையங்கொண்டு …”
“பீகாரில் பெல்ச்சியில் / விழுப்புரத்தின் வீதிகளில் /விழுதுவிட்டு நெய்க் குப்பை /குடிசைகளின் மீது /கொழுந்து விடும் காரணத்தால் …. ”ஆண்டு பல ஆனாலும் மீண்டும் இதைப் பாடியுள்ளார்.“தஞ்சை பூமியில் … உழைப்பவர் சிந்திய உதிரச் சமுத்திரம் உறைந்திருக்கிறது…”
“ஆயினும் இந்த அடிமை ஜனங்கள்/பூமியைக் கேட்டு போர் தொடுக்காமல்/ கூலி கேட்டுத்தான் குரல் கொடுத்தார்கள்” என கவிஞர் வர்க்க நியாயத்தோடு வழக்காடுகிறார் .
வெண்மணி எரிந்த செய்தி சொல்கையில் உஷ்ண வார்த்தைகளை உக்கிரமாய் சொல்லி அரற்றுகிறார் . ஆனால் வீழாமல் எழுகிறார். பாடுகிறார்.
“உக்கிரங் கொண்டெழுந் தோங்கி எரிந்தது /ஓ என வெண்மணியே ! – இந்த / அக்கிரமக் கொடுங்கோன்மையினால் சிவப் / பானதெம் கண்மணியே!” “தொட்டில் தினம் தொடங்கி / சுடுகாட்டு தினம் வரைக்கும்/பட்டினியையே புசித்துப்/ பசியடக்கும் என் ஜனமே / மருள் மயக்கம் தெளிவதற்கும் /மன விளக்கம் பெறுவதற்கும் / திருவிளக்கை வெண்மணியின்…” திருவிளக்கை இயற்றி இருக்கிறார் நவகவி.
“இருதயத்தை விரல் ஆக்கி /ரேகை எடுத்து வந்து..” கவிதை உயிலில் கைநாட்டிஇருக்கிறார் நவகவி .
ஒவ்வொரு வர்க்கப் போராளி கையிலும் /புத்தக அலமாரியிலும் தலைமுறை தலைமுறையாய் இருக்க வேண்டிய, வாசித்தறிய வேண்டிய கவிதைநெருப்பு இந்நூல்
வெண்மணி ‘தீக்குளியல்’நீள்கவிதை .ஆசிரியர் : நவகவி ,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,7 ,இளங்கோ தெரு , தேனாம் பேட்டை,
சென்னை – 600 018.
பக்: 38 விலை: ரூ .15 /-
தொ.பேசி: 044 -24332924
நன்றி :புத்தக மேசை ,தீக்கதிர் , 11/03/2018.
0 comments :
Post a Comment