அரேபிய பயணத்தினூடே அனுபவ நாவல்

Posted by அகத்தீ Labels:அரேபிய பயணத்தினூடே அனுபவ நாவல் சு.பொ.அகத்தியலிங்கம்

அரேபியாவில் நல்ல நல்ல பேரிச்சம் பழம்கிடைக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா தயிர் மோர் நல்லா இருக்குன்னு இப்போதுதான் கேள்விப்படுறேன்என சரவணனிடம் நாவலின் நாயகன் அனீஸ் சொல்லும் போதே ஒட்டகப் பாலில்தான் டீ கிடைக்குன்னு வடிவேலு மூலமா சினிமா நமக்குள் திணிச்ச பிம்பம் அடிபட்டு விழுது. இன்னொரு அத்தியாயத்தில் ஒட்டகப் பால் எப்படி ருசியானது என்பதும் வருகிறது .

கூழாங்கற்கள், சுமையா ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகள் மூலம் தமிழ் இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் கனவுப்பிரியன், அவர் இயற் பெயர் முஹமது யூசுஃப். “மணல் பூத்த காடுநாவலை இயற்பெயரோடும் தன் பயண அனுபவம் சார்ந்தும் எழுதியுள்ளார் .

 தகிக்கும் மணல் வெளியும் நாகரீக முதிர்ச்சியற்ற ஒரு கூட்டமும்என்றே நம் பொது புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ள அரேபிய பிம்பத்தை சுவையான தகவல்களின் மூலம் சுக்கல் சுக்கலாய் நொறுக்குகிறார் நூலாசிரியர். பரந்த வாசிப்பனுபவமும் கூர்மையான பார்வையும் நூலாசிரியரின் அருங்குணம் என முந்தைய இரு சிறுகதைத் தொகுப்பும் நிறுவியுள்ளது. இந்நாவல் அதனை மேலும் வலுவாக்குகிறது.

இந்நாவலின் நாயகனான அனீஸ் ஒரு பயோ என்ஜினியர். நூலாசிரியர் முஹமது யூசுப்பும் அப்படியே. ஆக இது சுய பயண அனுபவ நூல் போல் விரிகிறது. தொழில் நிமித்தம்அரேபியா முழுவதும் காரிலேயே பயணிக்கும் வாய்ப்பு கிடைத்த நாயகன் அனீஸின் பார்வையூடே அரேபியாவின் புவியியல், வரலாறு,ஆன்மிகச் செழுமை, சிக்கல், பிழைக்க வந்தோரின் உறவுகள், கசக்கும் வாழ்நிலை என நூலாசிரியர் கோர்க்கும் ஒவ்வொரு செய்தியும் உயிர்ப்போடு நம்மிடம் பேசுகிறது.

கடனில் சிக்கும் மனிதர் அந்தக் கடன் கடலில் இருந்து வெளியேற குடும்பம் பிள்ளை குட்டிகளை விட்டு கடல் கடப்பது சுகமான அனுபவமல்ல. “கண்ணில் பட்ட அயல்வாசிமனிதர்கள் பலரின் முதுகிலும் ஒட்டகத்திற்கு இருக்கும் குன்று போன்ற திமில் இருந்தது. திமிலில் ஒட்டகம் உணவினைச் சேகரித்துவைக்குமாம். இங்குள்ள மனிதர்கள் நினைவுகளைச் சேமித்து வைத்திருப்பார்கள் போல..” என அரேபியாவில் நுழைந்ததும் எண்ணுகிற அனீஸ் மூலம் நாவல் நெடுக 40 திமில்களில்அத்தியாயங்களில்எண்ண எண்ணகுறையாத செய்திகளை மனிதப்பாடுகளை பொதிந்து தந்துள்ளார் யூசுஃப்.

நாவலை நுட்பமாக வாசித்துநெடுக விரவியுள்ள அரபி உரையாடலைதமிழ் அர்த்தத்தோடு தந்திருப்பதையும்’, அத்துடன் நூலாசிரியர் குறிப்பிடும் வரலாற்று மற்றும் புவியியல் தகவல்களையும் தொகுத்தால் அது சுற்றுலா வழிகாட்டி ஆகிவிடலாம்!

பிழைக்கப் போன இடத்தில் கிடைக்கும் நம் நாடு நம் மொழி சார்ந்தவர்களின் தொடர்பும் உறவும் மிகவும் வலுவானது. அனீஸ்பழக நேர்கிற சுலைமான், இப்ரா`ஹிம்பாய், ஜார்ஜ், சரவணன், சித்ரா,முசிப், சுபைதா, காசிம் என ஒவ்வொருவருக்கும் துயரக் கதை இருந்தது. அந்த சோகம் எல்லோரையும் ஒருபுள்ளியில் இணைக்கும்; பிரச்சனைகளும் முளைக்கும். ஆனாலும் பணத்தின் அவசியம் ஒவ்வொருவரையும் ஒரு வித துறவுக்கு நிர்பந்திக்கும். இடுப்பின் கீழே ஆன பசி ஒவ்வொருவரையும் வதைக்கும். இதற்கிடையில் பயணம்,ஆட்டம், பாட்டம், சந்தோஷம் எல்லாவற்றையும் அனுபவிக்கும் வாழ்க்கை அனுபவமே தனி.

இண்டர் நெட் கூகுள் வேலைசெய்யாத இடத்திலும் ஒருமலையாளி டீக்கடை இருப்பதும்;அவரே வழிகாட்டும் கூகுளாவதும்நல்ல அவதானிப்பு. பாகிஸ்தானியருடன் இணைந்து பணியாற்றும் சூழலை மிக லாவகமாக வெறுப்பின் விதை வீழாமலும்; அடுத்த கோடிக்குநகர்ந்துவிடாமலும் சொல்லிச் செல்வது வெகுஜோர். ஏமாற்று, கள்ளச்சாரயம், காலைவாருதல் இப்படி எல்லாம் எங்கும் இருப்பதை சொல்லுவது சித்திரத்தை முழுமையாக்குகிறது.

அரேபிய தமிழ்ச் சங்கத்தில் நடந்த பட்டிமன்றத் தலைப்புநிச்சயிக்கப்பட்ட திருமணமா ? காதல் திருமணமா ?” என்பதும், அனீஸ்காதல் திருமணமே என வாதிட்டதும் அடேயப்பா எவ்வளவு நுட்பமான காட்சிச் சொருகல்.

தன் தந்தையைப் போல் அசப்பில்இருந்த - ‘தோளப்பாஎன அனீஸால் பாசம் பொங்க அழைக்கப்பட்ட மீராசா காக்கா உறவு அனீஸை செப்பம் செய்வதில் ஒரு நடமாடும் நூலகமாகவே அமைந்து போனது. அரேபிய தொன்மை, வரலாற்றுச் செழுமை, புவியியல் மேன்மை, இஸ்லாமிய பண்பாட்டின் ஆணிவேர் என தோளப்பா மூலம் அறிந்ததும்; அதனை அனீஸ் நேரில் அனுபவித்து உணர்ந்ததும் நூல் நெடுக விரவி நூலை முன் நகர்த்திச்செல்கிறது.

இஸ்லாமில் தலைதூக்கும் வஹாபிசம் எப்படி பன்முக ஜனநாயகத் தன்மைக்கு எதிரானது; பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாய் இருக்கிறது. ஏகாதிபத்தியம் இஸ்லாமிய வரலாற்று வேரை வெட்டி எறிய எப்படி எப்படி முனைகிறது என எல்லாம் கதைப் போக்கில் தோளப்பா வாய்வழி சொல்லிச் செல்வதால் பிரச்சார வாடை இல்லாமல் ஆக்கிவிட்டது.

மதவெறியும் பயங்கரவாதமும் இந்தியாவையும் உலகையும் மிரட்டும் சூழலில் மதத்துக்குள் ஜனநாயகக் காற்றை வீச எடுக்கும் முயற்சி நிச்சயம் முற்போக்கானதே! பாராட்டத் தக்கதே!. இந்நூல் அந்த வகையில் இஸ்லாமிய சமூகத்துள் பரவலாக வாசிக்கப்பட வேண்டும். இஸ்லாம் அல்லாதோரும் உள்ளுக்குள் நடக்கும் தத்துவ நடைமுறை மோதலை அறிந்தால் இஸ்லாம் எதிர்ப்பு என்கிற முரட்டு பார்வை அகலும்.

அதே நேரம் மதத்துக்குள் ஜனநாயகம் என்பதையும் தாண்டி மனித சமூகம் முன் செல்ல வேண்டுமே முஹமது யூசுஃப் எனக் கேடகவும் எனக்குத் தோன்றுவது தவறா? நூலை வாசிப்போர் முடிவு செய்க!

உலகில் பகலைக் காட்டிலும் இரவுக்குத்தான் பழமொழிகள் அதிகம். அனுபவம் தோய்ந்த வயதுமுதிர்ந்த வயோதிகன் போல அல்லது அப்பா போல, ஒன்றுமே தெரியாதது போல ஒன்றுமே நடக்காதது போல காட்சி அளிக்கும் இந்த இரவுகள் அனீசுக்கு பிடித்திருந்தது அவனும் அப்பாவாகி விட்டதால்.” என அனீஷ் உணரும் தருணம் அலுவலகச் சிக்கல், நோய் எல்லாம் ஒன்று சேர தோளப்பா வழிகாட்ட திடீரென வேலையை உதறாமல் உதறி ஊருக்கு ஓடுவது வாழ்வின் கசப்பான யதார்த்தம்;அப்புறம் ஊரில் வஹாபி எதிர்ப்பாளனாக என ஒரு புது திருப்பத்துடன் நாவல்முடிகிறது.

அரேபியா பாலை மட்டுமல்ல அங்கு மருதம், நெய்தல், முல்லை,குறிஞ்சி எல்லாம் உண்டு.அதெல்லாம் சரி! அரேபியா முழுக்க பெரும் பான்மையாக பிழைக்க வந்தேறிகளே செயல்படுவது போலும், அரேபியர்கள் பொதுவாய் பார்வையாளர் அல்லது எஜமானர் போல் இருப்பதாகவும் இந்நூல் எனக்குச் சொல்லுவதாக நான் கொள்ளலாமா ? அப்படியாயின் அங்கு அரேபிய மக்கள் வாழ்நிலைஎப்படி உள்ளது. இந்நூலில் சரியாகப் பதிவாகாத பதிவாகியிருக்க வேண்டிய பகுதி இது என நான் கருதுகிறேன்.

நிறைய செய்திகளை அறிந்து கொள்ளவும், ஆழமான விவாதத்துக்கு சமூகத்தை உந்தவும் களமாகிவிட்டதுமணல் பூத்த காடுஎனில் மிகை அல்ல.
மணல் பூத்த காடு ,[நாவல்]
ஆசிரியர் : முஹமது யூசுஃப் ,
வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ் ,
பக்கங்கள் : 448 . விலை : ரூ.500 /
தொடர்புக்கு : 9042461472 ,9841643380.

நன்றி : தீக்கதிர் ,புத்தகமேசை . 18/03/2019.

 

0 comments :

Post a Comment