உரைச் சித்திரம் : 15 பந்தும் பாவையும் கழங்கும் புனலும் ஆடுக இளம் பெண்ணே !

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் : 15


 

பந்தும் பாவையும் கழங்கும் புனலும்

ஆடுக இளம் பெண்ணே !

 

“ ஓடி விளையாடு பாப்பா!” என்பது சரிதான் ; “ ஓடி விளையாட திடல் எங்கே ?” , “ ஓடி விளையாடவும் நேரமின்றி ஹோம் ஒர்க் கொடுக்குதே பள்ளிக்கூடம் ?” - என இக்காலக் குழந்தைகள் கேட்கும் நிலை . எங்கிட்டு சொல்லி அழ.

 

 

பெண்கள் விளையாட்டுத் துறையில் பெரும் சாதனை புரியும் இந்நாளிலும் , ஊரிலும் நகரிலும் பொதுஇடத்திலும் விளையாட்டுத் திடல்களிலும் பெண்கள் வந்து விளையாடுவது எளிதாமோ ?

 

பொம்பள பிள்ளைக்கு என்ன விளையாட்டு வேண்டி கிடக்கு ? பொறுப்பா வீட்டில இருந்து கூடமாட உதவலாம்ல..” என்கிற அங்கலாய்ப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லையே .

 

 “ ஏ ! பெண்ணே ! ஏன் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாய் ? வெளியே வா ! விளையாடு ! “ அப்படின்னு  உரக்கக் கூப்பிட்டால் எப்படி இருக்கும் ?

 

இதோ கூப்பிடுறாங்க ! ஆமாம் , தமிழ்நாட்டில்தான் கூப்பிடுறாங்க … தமிழில்தான் கூப்பிடுறாங்க … ஆனால் அது சங்க காலத்தில்

 

பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி தொகுத்த நற்றிணை நானூற்றில் ஒரு காட்சி ! ரசிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்காகவும்…

 

 “ ஏ ! இளம் பெண்களே ! இளம் பெண்களே ! ஏன் வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கிறீர்கள் ! இந்தப் பருவம் எங்கும் ஓடியாடி விளையாட வேண்டிய பருவம் அல்லவா ? வெளியே வாருங்கள் ! வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பருவமல்ல இது ; அப்படி அடைந்து கிடப்பது நியாயமும் அல்ல ; உடல் நலத்துக்கும் கேடு ! வெளியே வாருங்கள் ! ஆற்றில் புதுவெள்ளம் நுரைபொங்கிப் பாய்கிறது .குதித்து நீந்தி மகிழ்ந்து விளையாட வேண்டிய நேரம் இது …. வாருங்கள் வெளியே ! ”

 

எவ்வளவு பொருளும் ஆழமும் மிக்க அழைப்பு .

 

கடியலூர் உருத்திரங் கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில் இன்னொரு காட்சியை சித்தரிக்கிறார் மிகை கற்பனைதான் ஆயினும் அன்றைக்கு இருந்த விளையாட்டுகளை அறிய முடிகிறது .

 

பெண்கள் பந்து விளையாடினர் ,கழங்கு எனும் கழச்சிக்காய் அல்லது கல் வைத்து விளையாடும் ஆட்டம் ஆடினர் என்கிறார் .அதுவும் எப்படி ஆடினார் தெரியுமா ?

 

நல்ல சத்தான சுவையான உணவைத் தின்றுவிட்டு ,இடுப்பில் முத்துவடம் எனும் தங்கச் சங்கிலி அணிந்து – மெல்லிய துகிலை உடுத்தி ஆடினர் .அந்த துகில் வெண்மை கொண்றை மலரில் பனிதுளி ஆடியது போல் இருந்ததாம் .கால்களில் தங்கத்தால் செய்யப்பட்ட கொலுசு ஒலிக்க ஆடினார்களாம் – மலைமீது தன் வண்ணத் தோகையை விரித்து மயில்கள் ஆடியதுபோல் ஆடினார்களாம் .மேகம் தவளும் உயர் மாளிகை மாடத்தில் நின்று , மென்மையான நூலினால் வரிந்து கட்டப்பட்ட பந்தினை எறிந்து எறிந்து ஆடினார்களாம் .

 

ஆக ,மாடியில் மகளிர் பந்து ஆடினார்கள் என்பதே செய்தி . எவ்வளவு நேரம் மாடியிலேயே ஆடுவது ? போரடிக்குமே ! கீழே இறங்கி வந்து மணல் வெளியில் தோழிகளுடன் கழங்கு ஆடினார்களாம் .அந்த கழங்கும் தங்கத்தால் செய்யப்பட்டதாம் . அந்தப் பட்டணத்தின் பெருமையைச் சொல்ல இப்படி விளையாட்டுக்கும் தங்கம்பூசிக் காட்டுகிறார் புலவர் .

 

சங்க காலத்தில் பெண்கள் என்னென்ன விளையாட்டுகள் விளையாடினர் என கணக்கெடுத்து ஆய்வாளர் பலர் சொல்லி இருக்கின்றனர் . 1] தண்ணீரில் குதித்து நீந்தி விளையாடும் புனல் விளையாட்டு, 2] வட்டாடுதல் என்ப்படும் ஒரு வகை வட்ட கல் / கட்டை /காய் கொண்டு ஆடுவது . இதில் சூதும் உண்டு அல்லாமலும் ஆடலாம். 3] பலவகையான பந்தாட்டம் , 4] கழங்காடுதல் எனும் கழச்சிக்காய் அல்லது சிறு கற்களை உள்ளங்கையிலும் புறங்கையிலுமாக போட்டுப் பிடித்து விளையாடும் ஆட்டம். ,5] புதிர் ,விடுகதை என பலவகையில் அறிவு சார்ந்து விளையாடல் . இது ஓரையாடல் எனப்படும். ,6] ஊஞ்சலாடுதல் 7] அம்மானை [ இதனை பந்து விளையாட்டின் ஒரு வகை எனவும் பார்க்கலாம் ,பாடலோடு ஆடுவதால் தனித்தும் பார்க்கலாம்] , 8] வண்டலிழைத்தல் அதாவது வண்டல் மண்ணில் பொம்மை செய்து சிங்காரித்து விளையாடல் .

ஆறு ,குளம் ,ஆற்றங்கரை ,மணல்வெளி ,சோலை ,மரத்தடி என பொதுவெளிகளில் இளம்பெண்கள் கூடி மேற்கண்ட ஆட்டங்களில் ஈடுபட்டதாக காட்சிச் சித்தரிப்புகள் உள்ளன.

 

இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பே பெண்களுக்கு இப்படி உடல் நலம் , அறிவு நலம் , உள்ள மகிழ்ச்சி எல்லாம் தரும் ஆட்டங்கள் இருந்தது சாதாரணமானதா ?  இந்த பட்டியல் இன்றைய தேவைக்கு போதுமானதல்ல . காலத்துக்கு ஒப்ப பட்டியல் பெருத்து விரிந்து சென்று கொண்டே இருக்கிறது . அத்தனையும் ஆட அழைப்பதாகவே கொள்ளலாம் .

 

விளையாட்டும் வாழ்க்கையின் ஒரு பகுதியே . இன்னொரு காட்சியைப் பார்ப்போமா ?

 

ஒரு இளம்பெண் திடீரென தன் உள்ளம் கவர் இளைஞனோடு உடன்போகி விட்டாள் . அன்று தாய் வருந்துவாள் ஆயினும் காதலரைப் பிரிக்க ஒரு போதும் எண்ண மாட்டார்கள் . கபிலர் குறுந்தொகையில் ஒரு சித்திரம் வரைந்து காட்டுகிறார் .

 

தன் பெண் விரும்பியவனோடு உடன்போகி விட்டாள் .தாய் அரற்றுகிறாள் . “ என் ஆசை மகள் என்னைவிட்டு போய்விட்டாளே ! வாங்கியம் எனும் வளைந்த இசைக்கருவி போல் தும்பிக்கையை உயர்த்தி முழங்கும் யானை உலவும் காட்டின் வழி சென்றுவிட்டாளே ! இதோ அவள் ஆசை ஆசையாய் தினமும் விளையாடி மகிழும் பந்து ,கழங்கு ,பாவை அதுதான் பொம்மை எல்லாம் சீண்ட அவளற்றுக் கிடக்கிறதே !” என பந்தையும் ,கழங்கையும் ,பாவையையும் பார்த்துப் பார்த்துக் அழுதாளாம்.

 

பாலின வேறுபாடின்றி குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் ஓடி ,ஆடி விளையாட , ஆடிப்பாடி களிக்க உரிய நேரமும் வாய்ப்பும் வழங்காத சமூகத்தைக் காறி உமிழினும் தப்பில்லை.

 

 விளையாட்டும் பொழுதுபோக்கும்கூட மனித உரிமையே !

 

விளையாட்டாககூட , ‘ விளையாடப் போகாதே!’ என குழந்தைகளுக்குச் சொல்லிவிடாதீர் !

 

 

 

 

 

விளையா டாயமொடு ஓரை யாடாது
இளையோர் இல்லிடத் திற்செறிங் திருத்தல்
அறனும் அன்றே ஆக்கமுந் தேய்ம்மெனக்
குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப்
பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம்.

நற்றிணை , நானூறு  

 

கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர்

கொன்றை மென் சினை பனி தவழ்பவை போல்

பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க

மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும்                    330

பீலி மஞ்ஞையின் இயலி கால

தமனிய பொன் சிலம்பு ஒலிப்ப உயர் நிலை

வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ

கை புனை குறும் தொடி தத்த பைபய

முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும்             335

பட்டின மருங்கின் அசையின் முட்டு இல்

 

பெரும்பாணாற்றுப்படை , கடியலூர் உருத்திரங் கண்ணனார்  

 

 

 

 

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை

இயம் புணர் தூம்பின் உயிர்க்கு அத்தம்

சென்றனள்மன்ற - என் மகளே

பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே

 

குறுந்தொகை , கபிலர்

 

விளையாட்டும் பொழுதுபோக்கும்கூட மனித உரிமையே !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

24/6/2022.

 

 

0 comments :

Post a Comment