உரைச் சித்திரம் : 14 வயிறு ஆரத் தாய்முலை உண்ணாக் குளவி …

Posted by அகத்தீ Labels:

 


உரைச் சித்திரம் : 14

 

வயிறு ஆரத் தாய்முலை உண்ணாக் குளவி …

 

அம்மாவுக்கு இலக்கியத்தில் எப்போதும் உரிய உயர்ந்த இடம் உண்டு .ஆய், ஞாய், அன்னை, நற்றாய், ஈன்றாள்தாயார், அன்னை என பல பெயரில் சங்க இலக்கியத்தில் அம்மா அழைக்கப்பட்டிருக்கிறாள். பெயர் எதுவாயினும் அம்மாவுக்கு நிகர் அம்மாவே !

 

புறநானூற்று தாயின் வீரத்தையைப் பற்றி பேசாத தமிழ்ப் புலவர் யாரேனும் இருக்கிறார்களா ? ஈன்று புறந்தருதல் தாய்க்கு கடமை எனச் சொன்ன தமிழ் இலக்கியங்கள் பெண்கள் குறித்து பல கோணங்களில் பேசி இருக்கிறது . பெண்ணின் காதலை ,காமத்தை ,உடன்போதலை சங்க இலக்கியம் வெடிப்புற பேசி இருக்கிறதே ! ஆயினும் பாலின சமத்துவப் பார்வை அன்றைய சமூகச்சூழல் சார்ந்தே இருந்தது .இது புலவர் குற்றமன்று ; அவர் வாழ்ந்த காலத்தின் குற்றம் . இங்கு தாய் குழந்தை சார்ந்து சில செய்திகளைப் பார்ப்போமா ?

 

தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை என்றாள் ஒளவை . ” “ தையல் சொல் கேளேல்” “எதிரில்பேசு மனையாளில் பேய்நன்று” எனச் சொன்னவளும் அவளே ! ” பொன்தாலி யோடுஎவையும் போம்.” என மனைவி போயின் அனைத்தும் போகும் என்றவளும் அவளே ! சங்க இலக்கியம் நெடுகிலும் ஒளவையின் குரல் மாறி மாறிப் பேசும் .எல்லாம் ஒருவரே பேசியதா ? 18 ஒளவை உண்டென்பர் அக்குழப்பமோ ? யாமறியேன் .

 

 

எந்த ஒருவனுக்குக் கண்ணைப் போலச் சிறந்த உறுப்பு உண்டா ? இல்லை அல்லவா ?எந்த ஒரு பெண்ணுக்கும் கணவனைப் போல் நெருங்கிய உறவினர் வேறுண்டா ? பெற்றோருக்கு தம் பிள்ளைகளைப் போல மதிப்புமிக்க பொருள் வேறுண்டோ ?. குழந்தைகளுக்குத் தாயைப் போல கடவுள் வேறெதுவும் உண்டோ ? இல்லையே !. இப்படி விளம்பி நாகனார் எழுதிய நான்மணிக்கடிகை சொல்லும் .

 

ஒளவை தாயைக் கோயில் என்றாள் ;இவரோ கடவுளே என்கிறார் .தமிழ் திரை உலகில் அம்மாவைப் பாடும் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்படும் . இந்த அம்மா செண்டிமெண்ட் சங்க இலக்கியத்தில் தொடங்கியதாக இருக்குமோ !

 

காரியாசான் எழுதிய சிறுபஞ்சமூலம  குடும்ப வாழ்க்கைச் சிறப்பாக அமைந்திட  குழந்தைச் செல்வம் எப்படி  இன்றியமையாதது என வலியுறுத்தும் . குழந்தை பேற்றை எப்படி கண்ணும் கருத்துமாகச் செய்ய வேண்டும் என விவரிக்கிறது,  முதலில் ஒருவர்  கர்ப்பவதியைப் பாதுகாத்திட வேண்டும் ; அந்தப் பெண்  கணவனால்  தான் கொண்ட கர்ப்பத்தைப்  பாதுகாத்திட வேண்டும் ;.ஈன்ற குழந்தையைத் தானே பாதுகாத்து வளர்த்திட வேண்டும், வளர்ப்புத் தாயிடம் அனுப்பிவிடக்கூடாது ; வளர்ப்பாரில்லாத அனாதைக் குழந்தையைக்  கண்டெடுத்து வளர்த்திட வேண்டும் ; யாரோ ஒருவனால் கைவிடப்பட்டவரை அவர் குழந்தையைத் தன்னுடன் வைத்துப் பாதுகாத்திட வேண்டும் .  இவ்வைந்தும் சான்றோர்கள் சொன்ன அறமாகும் என்கிறது சிறுபஞ்சமூலம் , அனாதைக் குழந்தை ,ஒருவனால் கைவிடப்பட்ட பெண்ணைப் பேணச்சொன்ன அறம் மிக உயர்வானது அன்றோ ?

 

மேலும் சிறுபஞ்சமூலம் சொல்கிறது ,  குழந்தை வளர்ப்பில் பெண்ணே முக்கியபங்கு வகிக்கிறாள்.  [இன்றைக்கு தந்தையின் பங்கும் பேசப்பட வேண்டும். ] குழந்தையை கருவில்  பாதுகாத்து பெற்று எடுப்பது மட்டுமே ஒரு பெண்ணின் கடமையன்று, நன்முறையில் வளர்ப்பது ஒரு தாயின் கடமையாகும் என சுமை முழுவதையும் தாய் தலையிலேயே ஏற்றுகிறது சிறுபஞ்சமூலம் . கருவை அழியாமல் பாதுகாத்தலும், கரு சிதைந்தால்  தாயைக் காத்தலும், குழந்தையைப் பாதுகாத்தலும், குழந்தைக்கு நோய்வரின் மருந்துக் கொடுத்து, குழந்தையை அச்சுறுத்தாமல் வளர்த்தலும்  பெரிய அறமாகும் என்பதையும் பொதுவாகச் சொல்லியிருப்பதையும் கவனிக்க வேண்டும் ,


நாலடியாரோ , பிள்ளை பேற்றின் போது ஏற்படும் வலியையும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் மகிழ்ச்சியையும் பேசுகிறது . கருக்கொண்ட காலத்து உண்டாகும் மசக்கையாகிய நோயும், அப்போது ஏற்படும் அசதி ,சோர்வு ,வலி என வரும் பல துன்பங்களும், அதனைத் தொடர்ந்து குழந்தை பெறுங்காலத்து உண்டாகும் பெரு நோவும் சொல்லில் அடங்காது . ஆயினும் இத்தகைய துன்பங்களையெல்லாம் மடியில்  குழந்தையைக் கிடத்தியதும் தாய் மறந்துவிடுவாள் . தளர்ச்சியால் தான் உற்ற துன்பம் எல்லாம் கூட நலம் விசாரிக்கும் சுற்றத்தாரைக் காணின் மகிழ்ச்சியாக  நீளுமாம்..

 

 

குளம் வளமாக அமைய வேண்டுமாயின் அக்குளத்துக்கு நீர்வரும் வாய்க்கால் தூர்வாரப்பட்டு தடையற்று சிறப்பாக இருக்க வேடுமல்லவா ? முறையாக கல்வி பயின்று நன்கு பயிற்சியும் தேர்ச்சியும் பெறாதவர் அவையில் சிறப்பாக ஜொலிக்க முடியுமா ? அப்படி இல்லாத போது தாய்ப்பால் குடிக்காத குழந்தை போல் ஆரோக்கியமற்று இருக்கும் என்கிறார் நல்லாதனார் திரிகடுகத்தில் . தாய்ப்பாலே ஆரோக்கியத்தின் முதல்படி என்பதை அழுத்தமாகச் சொல்லிவிட்டார் .

 

தாய்ப் பால் என்பதை தாய்முலை உண்ணல் என்றே திரிகடுகம் சொல்லியது கவனத்துக்குரியது . திருஞான சம்பந்தருக்கும் பார்வதி திருமுலைப்பால் அருளியதாகவே பக்தி இலக்கியமும் பேசும் .  கேரளாவில் ‘குழந்தைக்கு பால்கொடு’ என்பதை. ‘ கொச்சுக்கு மொல கொடு’ என்றே சொல்லக் கேட்கலாம் . ஆக சொல்லில் பிழையில்லை ;நம் கண்ணோட்டமே காலகதியில் பிழையானது போலும்.

 

இப்படி ஆரோக்கியமாக வளரும் குழந்தை இன்பத்தை ஒளவையார் அற்புதமாகப் பாடுகிறார் ; அதுவும் நெல்லிக்கனி கொடுத்த அதியமான் நெடுமான் அஞ்சியைப் புகழ்ந்து பாடும்போது தாயின் கனிவும் மகிழ்வும் துள்ளிப் பாய்கிறது .

 

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என வள்ளுவன் சொன்னதைத்தான் இவரும் இவர் மொழியில் சொன்னார் . குழந்தைகளின் மழலை பேச்சு யாழிசையோடும் ஒத்து வருமா ? வராது; தாளத்தோடும் பொருந்துமா ? பொருந்தாது; அச்சொற்களுக்கு பொருள் ஏதேனும் இருக்குமா அறிவதற்கு ?  இருக்காது.

 

 

அது எப்படி இருப்பினும், பெற்றோர்களுக்கு அம்மழலைச் சொற்கள் மிகவும் பரவசம் ஊட்டும் .அவ்வளவு இனிக்கும் . குழந்தைகள் மீது அன்பை பொழியச் செய்யும் .

 

 

பகைவர்களுடைய காவல் மதில்களையும் பல அரண்களையும் தாண்டி வெற்றிக் கொடி நாட்டிய அதியமான் நெடுமான் அஞ்சியே! என் எளிய  சொற்களைக் கேட்டு நீ என்னிடம் அன்பு பொழிகிறாய் .

 

அது எதுபோல் இருக்கிறது தெரியுமா , என் சொற்களும் குழந்தைகளின் மழலைச் சொற்கள் போன்றனவோ ; அதனால்தான் இப்படி அன்பு சொரிகிறாயோ  என்றார் .

 

 

காதலை ,காமத்தை ,உடன் போக்கைப் பாடிய இலக்கியம் அன்று கொலைவாளேந்தி ஆணவக் கொலை செய்திட்ட செய்தி நானறிய சங்க இலக்கியத்தில் இல்லை .

 

குழந்தையைக் கொண்டாடிய சங்க இலக்கியம் , ஆண் குழந்தை /பெண் குழந்தை எனப் பிரித்து , பெண் குழந்தைக்கு கருவில் கள்ளிப்பால் ஊற்றியதாய் எங்கும் காணோம்.

 

கருவை ,தாய்மையை ,குழந்தையைப் போற்றுக !

தாய்ப்பால் போற்றுக !

வயிறு ஆரத் தாய்முலை உண்க …

 

 

கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை கொண்டானின்
துன்னிய கேளிர் பிறர் இல்லை, மக்களின்
ஒண்மைய வாய்சான்ற பொருள் இல்லை ; ஈன்றாளொடு
எண்ணக் கடவுளும் இல்.

 

நான்மணிக்கடிகை : 54 விளம்பி நாகனார்

 


ஈன்றெடுத்தல் சூல்புறஞ் செய்தல் குழவியை 
ஏன்றெடுத்தல சூலேற்ற கன்னியை - ஆன்ற 
ஆழிந்தாளை யில்வைத்தல் பேரறமா ஆற்ற
மொழிந்தார் முதுநூலார் முன்பு   

சிறுபஞ்சமூலம் .72 காரியாசான்.

 

கலங்காமைக் காத்தல் கருப்பஞ் சிதைந்தால்
இலங்காமை பேரறத்தால் ஈற்றம் - விலங்காமைக்
கோடல் குழவி மருந்து வெருட்டாமை
நாடின் அறம்பெருமை நாட்டு                         

 

சிறுபஞ்சமூலம் :74 காரியாசான்.

 

 

 

 

 

வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்.

 

நாலடியார் : 201.

 

 

வாய் நன்கு அமையாக் குளனும்வயிறு ஆரத்

தாய் முலை உண்ணாக் குழவியும்சேய் மரபின்

கல்வி மாண்பு இல்லாத மாந்தரும், - இம் மூவர்

நல் குரவு சேரப்பட்டார்.   

 

 

திரிகடுகம் :84 நல்லாதனார் இயற்றியது

  

யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீஅருளல் மாறே.

 

 

புறநானூறு 92. அவ்வையார்.

 

 

வயிறு ஆரத் தாய்முலை உண்க …

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

18/6/2022.

 

0 comments :

Post a Comment