புரையோடிய புண்களின் படப்பிடிப்பு ….

Posted by அகத்தீ Labels:

 


 


புரையோடிய புண்களின் படப்பிடிப்பு ….

 

 

 “ வாழ்க்கையும் ஒரே கோணத்தில் இல்லை .வலிகளும் ஒரே கோணத்தில் இல்லை… ”

 

 

 

இது நாவல் அல்ல . சிறுகதை தொகுப்பும் அல்ல . பல நூல்களை அறிமுகம் செய்வதின் வாயிலாக , இலங்கையில் வாழும் பல்வேறு தமிழர்கள் குறித்த ஓர் பன்மைத்துவ சிந்தனைப் பார்வையை நம்முள் விதைக்கும் அரிய முயற்சி . ஆசிரியரின் பரந்த வாசிப்பும் கூரிய அவதானிப்பும் நம்மை வியக்க வைக்கிறது .

 

 

கட்டுரைத் தொகுப்புகள் வெளிவருவது அண்மையில் அதிகரித்துள்ளன . பொதுவாய் அவை அவ்வப்போது பல்வேறு நிகழ்வுகளை ஒட்டி அல்லது தேவையை சார்ந்து அல்லது போகிற போக்கில் எழுதப்பட்டவற்றின் தொகுப்பாய் அமைகின்றன . அவற்றுள் சில பேசப்பட வேண்டியவையே .நானும் சிலதைப் பேசியுள்ளேன்.

 

 

ந.பெரியசாமியின் “ மொழியின் நிழல்” நூல்அறிமுகங்களின் தொகுப்பாய் அமைந்து , இன்னும் நான் வாசிக்க வேண்டிய பரப்பை என்னுள் உணர்த்திச் சென்றது . அய்ஜாஸ் அஹமதுவுடன் விஜய் பிரசாத் உரையாடித் தொகுத்த “மானுடத்துக்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல” எனும் நூல் இங்கு நாம் கற்றது கைமண் அளவு கற்க வேண்டியது கடலளவு என இடித்துச் சொன்ன நூல் .

 

 

இந்நூல் வாச்சியம் எனப்படும் நூல் பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு . ஆயின் பொதுவாய் வாசித்ததின் தொகுப்பல்ல . ஒரு கூர்த்த பார்வையோடு தமிழீழப் போருக்கு முன்னும் பின்னுமாய் பயணித்து ; பொது புத்தியில் இன்னும் போய்ச் சேராத சமூக வாழ்வை காட்சிப் படுத்தும் கடுமையான முயற்சி .

 

 

நான் இலங்கைத் தமிழ் இலக்கியத்தோடு எழுபதின் இறுதிகளிலேயே அறிமுகம் ஆனவன் .இந்நூலில் முதலில் பேசப்படும் டேனியலின் பஞ்சமரை அப்போதே வாசித்தவன் .  கவிதை ,நாவல் சிறுகதை இலக்கியத் திறனாய்வு என இலங்கைத் தமிழ் பரப்பில் ஆர்வம் கொண்டிருந்தவன் . ஒரு கட்சியின் திட்டத்தையே நாவலாக்கி “லங்கா ராணி” என உலவவிட்ட ஈழத்தமிழர் குறித்து பெருமை பொங்க பேசித் திரிந்த காலம் அது .

 

 

முள்ளிவாய்க்காலுக்குப் பின் வெளிவந்த நூல்கள் ஆதரித்து / எதிர்த்து என இரண்டே கோணங்களில் அனைத்தையும் பார்ப்பதாக என்னுள் ஒரு சோர்வு தட்டியது .நூலாசிரியரும் அதனைச் சுட்டுகிறார். அதன் பின் இலங்கைத் தமிழ் எழுத்துகளின் மீதான நாட்டம் குறைந்தது . “ சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி” என்கிற ட்டி .ராமகிருஷ்ணனின் மலையாள நாவலை குறிஞ்சிவேலன் மொழியாக்கத்தில் படித்ததுதான் நான் கடைசியாகப் படித்த ஈழத்தமிழ்ர் சார்ந்த நாவல் .

 

 

 “ சகமனிதர்னைத் தொடவோ கட்டித் தழுவவோ கைகுலுக்கிக் கொள்ளவோ முடியாத வாழ்க்கையை ஏன்தான் வாழவேண்டும் ?மானுட விழுமியத்தையும் அறத்தையும் முற்றாகப் புறந்தள்ளிவிட்டு வாழும் நாட்கள் எப்படி அர்த்தபூர்வமானதாக இருக்க முடியும் ? புறவெளியில் இயங்கும் தோய்த்தொற்றைக் குறித்தல்ல நான் கூறுவது . அகத்துக்குள் வஞ்சக விசமாய்த் தோய்ந்திருக்கிற பெருந்தொற்றைக் குறித்தே நான் பேச விரும்புகிறேன்.”  சுகன் தொகுத்த “தீண்டத்தகாதவன்” சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய வாச்சியத்தை இப்படித்தான் துவங்குகிறார் ம.மணிமாறன் . இந்நூலுக்கு மதிப்புரை எழுதிய கவிஞர் கருணாகரனும் இவ்வரிகளை மேற்கோள் காட்டியே தொடங்குகிறார் .

 

 

அப்படி எனில் இந்நூல் தீண்டாமை எனும் மைய அச்சில் சுழல்கிறதா ? ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லிவிட முடியாது . போரும் புரட்சியும் புலம்பெயர்தலும் எதுவும் கரைத்துவிடாத சாதிய ஆதிக்க மனக் கசடுகளை இந்நூல் வழி மணிமாறன் படம் பிடிக்கிறார் .முதல் கட்டுரை பஞ்சமர் தொடங்கி கடைசிவரை ஊடும் பாவுமாய் இந்நூலில் நிறைந்துள்ளது .

 

 

அதற்கும் மேல் தோட்டத் தொழிலாளர் வாழ்வு ,தேயிலை காப்பித் தோட்டங்களில் செடியின் தூரில் உறைந்திருக்கும் கண்ணீரின் வெப்பமும் அடர்த்தியும் , இலங்கை முஸ்லீம்களில் கையறு வாழ்க்கை அவலம் ,பெண்களின் இரட்டைத் துயரம் , போர் சப்பிப்போட்ட வாழ்வின் முடிவற்ற துயரம் என பன்முக சமூக அவலங்களையும் புரையோடிப்போன புண்களையும் பேசிய பல இலக்கியங்களை முன்வைத்து கதை ,நாவல் வழி சமூக வரலாற்றைச் தீட்ட முயல்கிறார் மணிமாறன் .

 

 

மலையகத் தமிழ்ர் ,யாழ்ப்பாணத்தமிழ்ர் ,முஸ்லீம் தமிழர் என பலவாறு பிரிந்தும் ஒட்டியும் வாழ்கிற மொத்தத் தமிழ்ர்களையும் ஈழத்தமிழ்ர் என்ற சொல்லில் அடக்க முடியுமா ? அங்கே நிலவும் அரசியல் ,சமூகச் சூழல் அதற்கேற்ப உள்ளதா ? இலங்கைத் தமிழர் எனும் பொதுச் சொல்லில் அழைப்பதிலும் சிக்கல் உண்டு .வேறு சொல்லும் இன்னும் பரிந்துரைக்கப்பட வில்லை.

 

 

யாழ்ப்பாண தமிழர் அதிலும் சைவநெறி நின்ற மேல்தட்டு தமிழர் வழியும் வலியும் மட்டுமே இலங்கைத் தமிழர் பிரச்சனையின் முதலும் முடிவுமல்ல என்கிற செய்தி அழுத்தமாய் மணிமாறனால் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது . “ போர் சிதைத்த நிலத்தின் கதை “ என மின்னிதழில் தொடராக வந்தவையே இப்போது “ போருக்கும் அப்பால்” என்கிற பெயரில் நம் கையில் தவழ்கிறது .புதிய தலைப்பு கவிஞர் கருணாகரன் உபயம் . போருக்கு பின்னால் என்று சொல்லாமல் போருக்கும் பின்னால் என ஒரு உம் சேர்த்ததே நுட்பமானதுதாம்.

 

 

 “போரால் நிலைகுலைந்து கலங்கிக் கிடக்கும் கதையை வரிசைப் படுத்திதான் எழுத வேண்டுமா என்ன ? ஆகவே காலத்தைக் கலைத்து முன்பின்னாக எழுதலாம் என நினைக்கிறேன்.” என்கிற மணிமாறன் அப்படித்தான் செய்திருக்கிறார் . எப்போது பேசினும் சில வலிகளும் வாழ்க்கையும் முடிவற்றதாய் தொடருதே ! குற்ற உணர்ச்சி குத்திக் குடையுதே ! மணிமாறன் நோக்கத்தில் வென்றுவிட்டார் .

 

 

 “ சொற்கள் யாவும் ஒரு பொருளுடையவை அல்ல .இயக்கம் என்றால் அது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை . நம் காலத்தில் வலது கருத்தியலைப் பின்பற்றுபவர்கள்கூட தங்களை இயக்கக்காரர்கள் என்று அழைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள் .இப்படித்தான் புரட்சி ,போர்க்குணம் , நவீனம் ,ஏன் பின் நவீனம் என யாவற்றின் மீதும் பன்மைத்துவ உரையாடல் நிகழ்த்த வேண்டும் என்பது காலத்தின் கோரிக்கையாக நம்முன் நிற்கிறது “ என ஜீவகுமாரின் “கடவுச்சீட்டு” நாவலுக்கு எழுதிய வாச்சியத்தில் மணிமாறன் சொல்கிறார் . இந்நுல் நெடுக அவ்வாறு முயன்றும் உள்ளார் .

 

 

 “போரின் சூழலுக்குள்ளேயே இருந்தவர்களின் ஆழ்மனதின் தடித்த சுவர்களுக்குள் பதுங்கிக் கிடந்த கதைகள் மெதுவாய் வெளியேறுகின்றன.’ என மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்.” கதைத் தொகுப்பிற்கு வாச்சியம் எழுதும் போது மணிமாறன் சொல்லும் வரிகள் மெய்யென்பதை அறிய முடிகிறது .

 

 

 “இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மனுஷியும் நடமாடும் ஆவணங்களாக இருப்பதை …”  மலையக வாய்மொழி இலக்கியத்திற்கு வாச்சியம் எழுதுகிற போது மணிமாறன் நினைத்துப் பார்க்கிறார் ; நம்மையும் அந்த நாட்களுக்குள் இழுத்துவிடுகிறார் .

 

 

சொந்த மண்ணின் அகதிகள் கதையை ,கூலித் தமிழர்களின் கதையை , போர் சிதைத்த இஸ்லாமிய வாழ்க்கைப் பாடுகளை , இஸ்லாமிய பெண்களின் உள்ளத்து போராட்டக்குரலை என இவர் தொட்டுக்காட்டும் பரப்பும் வீச்சும் மிகப் பெரிது . காலங்காலமாய் சுமக்கும் கொடும் வலிகளுடன் யுத்தம் திணித்த பேரவலம் இரண்டையும் நினைத்தாலே தூக்கம் தொலைந்துவிடும் ; அழுகை நிற்காது . அதற்குள் நம்மை இலகுவாக தள்ளிவிட்டுவிடுகிறார் மணிமாறன் .

 

 

ஈழத்தமிழ் இலக்கியம் குறித்த நம்முள் இருந்த ஒடுங்கிய பார்வை இந்நூலை வாசித்தபின் நிச்சயம் நெகிழும் .மாறும் . வாழ்க்கையும் ஒரே கோணத்தில் இல்லை .வலிகளும் ஒரே கோணத்தில் இல்லை .நீங்கள் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியல் நீளும்.

 

 

தொடராக எழுதும் போது தினசரி வாசகர் பரப்பு மாறும் அதற்கொப்ப கொஞ்சம் முன்னுரையாக சிலவற்றை சொல்லுவது தவிர்க்க இயலாது .நூலாக்கும் போது கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாமோ ?

 

 

 

போருக்கும் அப்பால் ,ஆசிரியர் : ம.மணிமாறன் ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,பக்கங்கள் :216 , விலை : ரூ. 210/

தொடர்புக்கு :044 – 24332424 /24330024/ விற்பனை 24332934

bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

28/6/2022.

 

 

 

 

 


0 comments :

Post a Comment