உரைச் சித்திரம் :10.கடவுளும் மழைக்கு பின்னர்தான்…

Posted by அகத்தீ Labels:

 உரைச் சித்திரம் :10.

 


கடவுளும் மழைக்கு பின்னர்தான்…

 

 

அண்டாவில் தண்ணீரை ஊற்றி , அதில் பார்ப்பனர் உட்கார்ந்து , சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதி , வருண ஜெபம் செய்தால் மழை பொழியும் என்கிற மூடத்தனங்கள் இல்லாத சமூகமாக தமிழ்ச்சமூகம் இருந்திருக்கிறது .

 

சங்க இலக்கியத்தில் எங்கே தொட்டாலும் மழை குறித்த அறிவியல் பார்வை மிகுந்திருக்கிறது .இதன் பொருள் இன்றைக்கு இருக்கிற ஞானம் அப்படியே அன்றைக்கு இருந்தது என்பதல்ல ; மாறாக மழை எப்படி உருவாகிறது என்கிற இயற்கையின் ரகசியத்தை உற்று நோக்கி அறிந்திருக்கிறார்கள் அன்றைய தமிழர்கள் .

 

 “மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!” என்பது தமிழ்ச் சமூகத்தின் பண்பாடாகவே ஊடும் பாவுமாய் இருந்துள்ளது . இன்றும் தொடர்கிறது . வள்ளுவர் கூட கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக வான் சிறப்பை வைத்து மழையைப் போற்றியது தற்செயல் அல்ல ;பண்பாட்டு வேர் .

 

சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் காவிரிப்பூம் பட்டிணத்தில் ஏற்றுமதி இறக்குமதி குறித்து பாடவந்தவர் மழையின் இயல்போடு அதனை ஒப்பிட்டு பாடலானார் .

 

கடலிலே முகந்த நீரை மலையிலே மேகம் மழையாகப் பொழியும் .அந்த மழைநீர் பெருக்கெடுத்து ஆறாகி ,கண்மாய் ,குளம் ,ஏரி ,குட்டை எங்கும் நிறையும் . மீதி நீர் கடலில் போய்ச் சேரும் .என மழைநீரின் சுழற்சியை மிக அழகாக சொல்லிவிட்டு ,

 

அது போல காவிரிப்பூம் பட்டிணத்தில் ஏற்றுமதி இறக்குமதி காட்சி இருந்ததாம் .ஒரு பக்கம் வெளிநாட்டிலிருந்து கப்பலில் வந்து குவிந்த பொருட்களின் பொதி மூட்டைகள் ;மறுபக்கம் உள்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் பொதிமூட்டைகள் என குவிந்து கிடந்ததாம் .

 

அந்த காட்சி மேகம் உரசும் பொதிகை மலையின் சாலைகளில் வருடை மான்கள் துள்ளி விளையாடுவது போலும் ,பண்டகசாலையில் கூர்மையான நகங்களையும் வளைந்த பாதங்களையும் உடைய ஆண் நாய்களும்செம்மறி ஆட்டுக் கிடாய்களும துள்ளிக் குதித்து விளையாடுவது போலும் இருந்ததாம்.

 

கடல் –மேகம் –மழை –ஆறு – கடல் என நீரின் சுழற்சி ஒழுங்காய் அமைந்தால்தான் வளம் கொழிக்கும் ; அதுபோல் ஏற்றுமதியும் இறக்குமதியும் சுழல்வழிப் பாதையாய்ச் சீராய் அமைய வேண்டும் என்கிற நுட்பமான சிந்தனையோட்டம் அன்றைக்கே தமிழ்ப் புலவன் முன்வைத்திருக்கிறான் என்பது வியப்பான செய்தி .

 

முதலில் கடவுள் வாழ்த்தாகத் திருமாலைப் பாடவந்து - மழையின் இயல்பைப் போற்றியதுதான் சங்க இலக்கியமான முல்லைப்பாட்டில் ஹைலைட் ! புலவர் நப்பூதனார் பாடியது .

 

முல்லை நிலத்துக்குரிய கார்காலம் துவங்குவதை மகிழ்ந்து போற்றி கடவுளை வணங்குகிறார். திருமால் இந்த பரந்த உலகை வளைத்துக் கொண்டானாம் - கையில் சங்கும் சக்கரமும் ஏந்தி நின்றானாம் – மாவலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் கேட்டு குனிந்து நின்றானாம் . மாவலி சக்கரவர்த்தி நீர்வார்த்து தானம் கொடுத்தாரம் – உடனே திருமால் விஸ்வரூபமெடுத்தாராம் …

 

என கற்பனைக் கதையைச் சொன்ன புலவன் இந்த திருமால் மழையைக் கொடுத்தாரெனச் சொல்லாமல் ; கடலில் நீரைப் பருகிவிட்டு வலப்புறமாக மேலெழுந்த மேகம்  நெடுந்தொலைவு பயணித்து மலையில் மோதி பெருமழையாகப் பொழிந்தது போல ; அதாவது கடலில் மேகம் உறிஞ்சிய சிறு துளி பெருவெள்ளமானது போல அந்த விஸ்வரூபம் அமைந்தது என்கிறார் .

 

இங்கும் கடவுளுக்கு மேலானதாக இயற்கையே உயர்வானதாகக் காட்டுவதுதான் தமிழின் சிறப்பு.

 

திருமுருகாற்றுப்படையில் முருகனைப் புகழ்ந்து போற்ற வந்த மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் மழையை ,மலரை ,வனத்தை முருகன் படைத்தான் என கதைவிடாமல் இயற்கையை விவரித்து முருகனைச் சுட்டுகிற பேரழகைப் பாருங்கள் ;

 

கடல்நீரை உறிஞ்சி சூலுற்ற மழை மேகங்கள் , வானில் வாள் போல் மின்னலோடு மழையாய்ப் பொழிந்தது . கடும் கோடைக்குப் பின் பெய்த அந்த முதல் மழையில் காடு இருண்டது , பசுமை பூத்தது , வெண் கடம்பம் மரத்தில் மலர்கள் சிரித்தன . அந்த மலர்களில் மாலை கோர்த்து முருகனுக்கு அணிவித்து வணங்கினர் .

 

இயற்கையை கடவுளின் கொடையாகச் சொல்லாமல் ; இயற்கையோடு இயைந்தே முருகனையும் வணங்கினார் தமிழர் என்பது எத்தனைச் சிறப்பு .


மழையெனும் இயற்கைப் பெரும் சுழற்சியை பழுதற உணர்ந்தவர் தமிழர் .

 

கடவுளும் மழைக்கு பின்னர்தான்…

ஆம் , 

 

“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்கும்மேல் வானோர்க்கும் ஈண்டு” [ திருக்குறள் : 18 .]

 

வானம் பொய்த்துப்போனால் பூஜை ஏது ? புன்ஸ்காரம் ஏது ? திருவிழா ஏது ?

 

கடவுளும் மழைக்கு பின்னர்தான்…

 

 

. “வான் முகந்த நீர் மலைப் பொழியவும்

மலைப் பொழிந்த நீர் கடல்பரப்பவும்

மாரி பெய்யும் பருவம் போல

நீரினின்றும் நிலத்து ஏற்றவும்

நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்

அளந்து அறியா பலபண்டம்

வரம்பு அறியாமை வந்து ஈண்டி

அருங்கடி பெருங்காப்பின்

வலிவுடை வல் அணங்கின் நோன்

புலிபொறித்து புறம் போக்கி

மதி நிறைந்த மலி பண்டம்

பொதிமூடைப் போர் ஏறி

மழை ஆடு சிமைய மால்வரைக் கவாஅன்

வரை ஆடு வருடைத் தோற்றம் போலக்

கூர் உகிர் ஞமலிக் கொடுந்தாள் ஏற்றை

ஏழகத் தகரொடு உகளும் முன்றில்” (126-141)

 

பட்டினப்பாலையில்  “கடியலூர் உருத்திரங்கண்ணனார்

 

 

 

 

 “நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல், போல,
பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி

5

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை,”

 

முல்லைப்பாட்டு 1-6 புலவர் நப்பூதனார்

 

 

 

 “கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . . .(10)
உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன் . . . .(7 – 11)

 

பாடியவர் :- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன் :- முருகப்பெருமான் 7-11

 

 

 

கடவுளும் மழைக்கு பின்னர்தான்…

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

14/5/2022.

 

 

0 comments :

Post a Comment