ஓசூரிலிருந்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கு...

Posted by அகத்தீ Labels:

 

ஓசூரிலிருந்து லேட்டாக வந்தாலும் , லேட்டஸ்ட்டா வந்திருக்கு….




 

 “வாசல்” ஓர் வித்தியாசமான அதேவேளை செறிவான ஓர் இலக்கியத் தொகுப்பு .ஓசூர் புத்தகத் திருவிழா 2021 ஐ ஒட்டி வெளியிடப்பட்ட நூல் .இது வழக்கமான மலரல்ல . விளம்பரம் துளியும் இடம்பெறவில்லை . ஒண்பது சிறுகதைகள் , எட்டு கவிதைகள் ,  மூன்று கட்டுரைகள் ,ஒர் புகைப்படத் தொகுப்பு ,இதரவை ஐந்து என 144 பக்கங்களில் ஓசூரின் படைப்பு மனம் பளிச்சிடுகிறது . அனைத்து படைப்பாளிகளும் ஓசூரோடு வாழ்வைப் பிணைத்துக் கொண்டவர்கள் என்பதுதான் இத்தொகுப்பின் மேன்மை .

 

கரிசல் இலக்கியம் கரிசல் எழுதாளர்கள் என மண்சார்ந்து ஓர் இலக்கிய படைவரிசை தென் மாவட்டங்களில் உருவானது . தங்கர் பச்சான் செம்மண் இலக்கியம் செம்மண்  எழுத்தாளர்கள் என பேசினார் ; முயன்றார் . நாஞ்சில் ,கொங்கு ,தஞ்சை இப்படி சில முயற்சிகளும் துளிர்த்தன ஆயினும் கரிசல் அளவு நிலைக்க முடிந்ததா ? ஏன் ? இதுவே விரிவாகப் பேச வேண்டிய செய்தி. சென்னையின் பெருநகர நெரிசலில் தனித்துவம் பளிச்சிடும் வாய்ப்பு மிகக்குறைவு . ஓசூரின் முகவரிக்கான முயற்சியில் 1997ல் “ பனியெனக் கவியும்” கவிதைத் தொகுப்பு முதன் முதலாய் வெளிவந்தது .இருபத்தி நாலு ஆண்டுகளுக்குப் பின் “ வாசல்” திறந்திருக்கிறது .  “ ஓசூரிலிருந்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கு”ன்னு சொல்லும் தரத்தோடு …

 

எல்லா படைப்பாளிகளும் ஓசூரில் பிறந்தவரல்ல . செவிடப்பாடி எனும் சிற்றூர் ஓசூரானதும் , எழுபதுகளில் ஆலைச்சங்கு முழங்க புது முகம் பெற்றதும் , நிறைய பேர் வாழ்வு தேடி இங்கு வந்து இவ்வூர்வாசிகளாகிப் போனதும் வரலாறு . அப்படி இந்நகருக்கு வந்து கலந்துவிட்ட எழுத்தாளர் , பேராசிரியர் ,தொழிலாளர் , சமூக செயல்பாட்டாளர் ,கணக்காளர் , தொழில் முனைவோர் என பலதரப்பட்டவரின் படைப்பாற்றல் வியக்க வைக்கிறது .இது மோசம் என எதையும் தள்ளி வைக்க முடியவில்லை. பைரவி சிவாவின் முகப்போவியம் பின் அட்டை ஓவியம் தொடங்கி முத்துவேலின் புகைப்படம் வரை ஒவ்வொரு பக்கமும் பொருள் பொதிந்ததே !

 

இத்தொகுப்பில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சார்ந்து இரண்டு கதைகள் .ஒன்று ஆதவன் தீட்சண்யா எழுதிய “ அடுத்த கதை…?” நம்மை உலுக்கி எடுக்கிறது . “ செத்த பின்னும் அடையாள அட்டையாய் இருந்து இவர்களுக்காக உழைக்கும் அந்த அனாமதேயங்களைப் பற்றி ஒரு கதை எழுதும் யோசனையுடன் நான் அங்கேயே அமர்ந்திருக்கிறேன் வெகுநேரமாய் .” என முடியும் அக்கதை ,எப்படி முகமும் முகவரியும் அற்று பாதுகாப்பும் இன்றி உழைப்புச் சுரண்டலில் ஓசுருக்கு வந்த வடநாட்டு தொழிலாளர்கள் பிழிந்து எறியப்படுகிறார் என்பதை நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்கிறது  . அடுத்து பழ.பாலசுந்தரம் எழுதிய “ பொன்னாறு” ராஜஸ்தானுக்குப் போன ஆழ்குழாய் கிணறு தோண்டும் தமிழகத் தொழிலாளரின் எந்திரமயமான வாழ்வும் பணியுமாய் தொடங்கி பாலைவனத்தில் நீரூற்றாய் முடிகிறது . ராஜஸ்தானின் தண்ணீர் தாகமும் நம்மைக் குடைகிறது . ஆக இந்த இரு கதைகளும் மொழி ,இனம் ,மாநிலம் என்கிற வேலிகளைத் தாண்டி மனிதம் பேசுகிறது .வாழ்வின் வலியைப் பேசுகிறது .

 

ஓசுருக்கும் சர்க்கஸுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்கிறது . ஒரு கவிதையும் ஒரு சிறுகதையும் அதனூடே வந்துள்ளது . “ கசங்கிய உடைகளணிந்த அந்த சிறுமி /பறக்கவிடும் விளம்பரக் காகிதங்களை / விரட்டிப் பிடிக்க யாருமில்லை..” இப்படி நெஞ்சைப் பிசையும் வரிகளோடு பத்ம பாரதியின் கவிதை . பெண்ணிய சிறுகதை ஆனால் ஆணாதிக்க மனோநிலையில் கதாநாயகனை பேசவிட்டு ; “ அவள் பொறுமை இழந்துவிட்டாள் எந்த நிமிடமும் கத்தியை சரித்திரத்தின் மீது வீசுவாள் ,”  என எச்சரிக்கும் கதையே  “சர்க்கஸ்.  எழில் வரதனின் கதை சொல்லும் சேதி அபாரம் .

 

 “ஒரு தடவை புலியைப் பார்த்துவிட்ட நிலையில் இனி அந்த இடத்தில் படுத்துக் கொள்வது அச்சமாக இருக்காதா … என்ற கேள்விக்கு ….. அது முதலில் தங்களுடைய இடமாகத்தான் இருந்தது … அங்கே படுத்துக் கொள்வது தன் பிறப்போடு கூடவே தொடர்ந்தது என்ற அவன் பதில் … ஊடகமதிப்பில் இது செலவாணியற்ற பதில்..” இப்படி விரியும் பா.வெங்கடேசன் படைத்துள்ள சிறுகதை “வாசல்” .  நகர்மயமாகும் போது வாழ்விடத்தை இழந்து கூலியாகி வறுபடும் வாழ்வின் வாதையையும் , ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலியையும் இணைத்து பின்னிய உளவியல் நுட்பம் தோய்ந்த கதை .

 

பாலகுமார் விஜயராமன் 12 குறுங்கதைகளை இணைத்து “ தருணங்கள்” என ஓர் சிறு கதைச் சித்திரம் தீட்டியுள்ளார் . ஆலை பற்சக்கரமாய் தேய்ந்து ஓய்வு பெற்றும் ஓர் தொழிலாளி மீண்டும் கூலியாக வேண்டிய நிலையைச் சொல்லும் ஜெகதீஷ் எழுதிய “ சக்கரம்” , செருப்பே பேசி செருப்பே பழிவாங்கும் சாதிய செருக்கை செருப்பாலடிக்கும் சங்கர் எழுதிய “ செருப்பு” , “ கம்மனாட்டி ! நீ என்ன பிறவிடா நீ ! ஒரு எழுத்தை மாற்றிப்போட்டு மூஞ்சி தெரியாதவர்களை அன்பு செஞ்சிட்டியேடா!” என சொற்களின் தேர்விலும் மானுட அன்பை வலியை வலியுறுத்தும் ராகவனின் “ஓரெழுத்தில் ஓங்கினான்” என ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கிறது .

 

 “ காலமெல்லாம் காழ்ப்பில்லா நண்பனாகக் /கடைசிவரை காப்பதுவும் நூல்கள்தாமே” என கவிபாடும் பாவலர் கருமலைத் தமிழன் , “ பெண்ணவளே தலைமைக்கு முன்னவளாம் காண்க” எனும் கவிஞர் ஓசூர் மணிமேகலை ,பெருந்தலைவர் காமராஜுக்கு புகழ்மாலை சாற்றும் இராஜ குமாரன் , நலமாக நாள்தோறும் நற்றமிழை நாம் சுவாசித்தால் /வளமான வாழ்க்கை பெற்று மகிழ்ந்திடலாம்” என நம்பிக்கையை சொல்லும் அ.க.இராசு என கவிஞர் படை அழகு சேர்த்திருக்கிறது .

 

“படித்துறை பற்கள் சிதைந்த /உள்வரு நீர்வழிகள் தூர்ந்து / துவாரங்கள் புதைந்த கோமா உடலென / ஏரிச்சடலம்” என கவிதை வீசும் ரமேஷ் கல்யாணும் , ராமநாய்க்கன் ஏரி பற்றி வரலாறும் நினைவுகளும் கவலையுமாய் கட்டுரை தீட்டிய பெரியசாமியும் சொல்லும் செய்தி ,” புதிதாக உருவாக்க முடியாவிட்டாலும் இருப்பதையாவது காணாமலாக்காமல் விழிப்போடிருப்போம்,” என்பதுதான். .

 

தொகுப்பில் எல்லாமே சமூகச் செய்திகளே எனினும் நிகழ்கால அரசியல் வெப்பம் வீசாமல் இருக்குமோ ? “கோணாலனா ஒரு காலத்தில்…” என நிகழ்காலத்தின் கசக்கும் உண்மைகளை சவுக்காலடிப்பதுபோல் கவிதை படைத்த சம்பு , லாக்டவுன் இந்தியாவை வெளிச்சம் போட்டுக் காட்டும் சி.பி.ஜெயராமன் , அற்புதமான பகடி நடையில் சங்கரநாராயணன் தந்துள்ள “  “வரிச்சூடும் வாழைப்பழம்” ஆட்சியாளின் மோசடி நாடகத்தையும் வரிக்கொடுமையையும் ஒருங்கே தோலுரிக்கிறது . இவை அனைத்தும் வாழ்வுரிமை அரசியலைப் பேசுகிறது . [ இவற்றை சமூக ஊடகங்களில் பரப்பலாமே : உரியோர் கவனிக்க ]

 

ஜே .கே , லா. ச. ரா குறித்த சப்தரிஷியின் நினைவோடையும் , அறமும் அன்பும் ஓங்க மூன்று நிகழ்வுகளை சுரேசுகுமார் நாகராசன் சுட்டிக்காட்டி நாட்டு நடப்பை படம் பிடித்திருப்பதும் நன்று. வாசிப்புகளுக்கும் படைப்புகளுக்கும் ஊக்கம் தந்திருக்கிறார் எம் ஜி சசிதேவ்.

 

ஒவ்வொரு படைப்பின் கீழும் படைப்பாளியைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றிருப்பது சிறப்பு . குறையெனச் சொல்வதானால் , கவிதைகளை படங்களின் மேல் அச்சிட்டதால் வாசிப்பு சிரமமாகிறது என்பதுதான் . நூல் கிடைக்கும் இடம் தெரிவித்திருக்கலாமே !

 

 “தமிழ் மரபுக்கு இம்மாதிரியான தொகைநூல் புதிதல்ல … அந்த மரபின் தொடர்ச்சியாய் இந்த எளிய தொகுப்பு வந்திருக்கிறது.” என்கிறார் தொகுப்புரையில் கமலாலயன் . ஆம் .மிகச்சரி ! இதுபோன்ற தொகை நூல்களை ஊக்குவிப்பது நம் கடனல்லவா ?

 

வாசல்

2021 – பத்தாவது ஓசூர் புத்தகத் திருவிழா தொகுப்பு நூல் ,

வெளியீடு :

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கம் - ஓசூர் ,

கிருஷ்ணகிரி மாவட்ட குடியிருப்போர் நலச்சங்கம்.

 

பக்கங்கள் : 144 , விலை : ரூ.140/

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

11/12/2021.

0 comments :

Post a Comment