இது மிக நல்ல திருப்பம்.

Posted by அகத்தீ Labels:

 

இது மிக நல்ல திருப்பம்.
ஆம். படத்திலுள்ள மூவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் .அண்மையில் நடந்த மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.குல்பர்க்கா எனப்படும் கல்புர்க்கி மாவட்டச் செயலாளராக தோழர் நீலாவும் [ வயது 55] , பீதர் மாவட்ட அமைப்புச் செயலாளராக தோழர் அம்புபாயி மாளகேவும் [வயது 53] ,உத்தர்கன்னடா மாவட்டச் செயலாளராக யமுனா கோவங்கரும் [வயது 47] தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . யமுனாவின் கணவரும் தோழருமான விட்டல் பண்டாரி மே மாதம்தான் கொரானாவால் உயிரிழந்தார்.இவை மூன்றும் தமிழ்நாடல்ல என்பதும் , கர்நாடக மாநிலம் என்பதும் சொல்லாமலே விளங்கும் .கேரளாவில் எனில் வியப்பில்லை கர்நாடகத்தில் என்பதே வியப்பு .தமிழ்நாட்டில் எப்போது எங்கு என்கிற பேராசையுடன் நினைவலைகளோடு பின்னோக்கி பயணித்தேன்.பேச அசைபோட விவாதிக்க நிறைய இருக்கிறதுதெலுங்கானாவும் புன்னப்புராவயலாறும் வோர்லி பழங்குடி போராட்டமும் இன்னபிற வீரகாவியங்களும் கம்யூனிஸ்ட் பெண் போராளிகளின் ஆற்றல்மிகு பங்களிப்பை ,துப்பாக்கியை ஏந்தும் வலிமையை , நாங்கள் பூங்கொடிகளல்ல போர்க்கொடிகள் எனும் உறுதி மிக்க அர்ப்பணிப்பைப் பறை சாற்றுகிறது .வீரத்தியாகி அக்னீஸ்மேரி ,மணலூர் மணியம்மாள் ,அன்னை லட்சுமி , புரட்சி மலர் லீலாவதி வால்பாறை வீரகாவியத்தில் செங்குருதி சொரிந்த தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளிகள் ,தஞ்சையில் நிலப்பிரபுத்துவத்தையும் சாதியத்தையும் ஒரு சேர எதிர்த்த உழுகுடி பெண்கள் , குமரிமாவட்ட இரப்பர் தோட்டங்களில் செங்கொடி ஏந்தியதற்காக அடக்குமுறையை எதிர்கொண்ட பெண் தொழிலாளர்கள் , ஆலைகளில் முதலாளித்துவக் கொடுமைக்கு எதிராய் இரத்தம் சிந்திய எம் பெண்கள் என நீண்டுகொண்டே செல்லும் தமிழக பெண் கம்யூனிஸ்டுகளின் வீரமும் தீரமும் தியாகமும் அர்ப்பணிப்பும் .ஜானகி அம்மா , பாப்பா உமாநாத் ,ஷாஜாஜி கோவிந்தராஜன் ,ஜானகி ராமச்சதிரன் என் நீளும் ஆளுமை மிக்க பெண் தலைமைத் தோழர்கள் என நெஞ்சை நிமிர்த்தும் பாரம்பரியம் நம்முடையது .ஆயினும் சமூகத்தில் சரிபாதியாய் உள்ள பெண்கள் கட்சியிலும் உரிய இடம் பெற வேண்டாமா ? சால்க்கியா பிளீனத்தின் போது இத்திக்கு நோக்கி நம் பார்வையும் பயணமும் திருப்பப்பட்டது . தமிழகத்தில் இக்கடமையை நிறைவேற்ற ஜானகி அம்மாவும் பாப்பா உமாநாத்தும் மைதிலி சிவராமனும் இன்ன பிறரும் நடத்திய இடைவிடா போராட்டம் உந்துவிசையானது .நாளையும் பேசுவோம்.

 

இது மிக நல்ல திருப்பம். 2.

 

[ நேற்று பதிவிட்டதை மீண்டும் வாசித்துவிட்டு இதனை படித்தால் நன்று ]

 

கர்நாடகாவில் மூன்று மாவட்டங்களில் பெண் செயலாளர்கள் தேர்வு பற்றி நான் நேற்றுக் குறிப்பிட்டேன் .மகாராஷ்டிரம் உட்பட வேறு சிலவற்றையும் சில தோழர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .மகிழ்ச்சி .

[மேலும் முன்செல்வோம். நேற்றைய பதிவை ஒட்டி தோழர்கள் பதிவிட்ட பின்னோட்டத்தில் சிலவற்றை இங்கே மேற்கோளாக கையாண்டுள்ளேன்.]

 

ஒரு மாநிலக்குழு கூட்டத்தில் அப்போதைய நெல்லை மாவட்டச் செயலாளர்  பாண்டியனும் பாப்பாவும் நானும் ஓரே காரில் பயணித்து வழியில் ஓர் கூட்டத்தில் பாப்பாஉமாநாத்தை இறக்கிவிட்டுவிட்டு நானும் அவரும் வேறொரு கூட்டத்துக்கு போனோம். திருப்பி வரும் போது பாப்பாவை அழைத்துக் கொண்டு வந்தோம் . பாண்டியனுக்கு பாப்பாவின் போர்க்குணம் மிகவும் பிடிக்கும் . அவர் என்னிடம் அந்த பயணத்தில் சொன்னது “ பாப்பா போடுற சண்டை பலருக்கு கசக்கும் , இந்த சண்டையில்லேண்ணா இந்த ஆம்பிளைங்க பொம்பள பிள்ளைகள கட்சிப் பொறுப்புகளில் அவ்வளவு சீக்கிரம் விடமாட்டாங்க..” அனுபவத் தெறிப்பான வார்த்தைகள் அவை. .

 

அவசரகாலத்திற்குப் பின் பெண்களை கட்சியில் அதிகம் சேர்க்கவும் வளர்தெடுக்கவும் தீவிர கவனம் செலுத்துவது என கட்சி முடிவெடுத்தது .வாய்ப்புள்ள இடங்களில் பெண்களுக்கென தனிக்கிளை அமைக்கலாம் என்றும் வழிகாட்டப்பட்டது .

 

அதன் ஒரு பகுதியாக பழவந்தங்கலிலும்  பெண்கள் ஆதராவாளர் கிளை தொடங்கும் முகத்தான் ஓர் கூட்டம் தோழர் விஜய ஜானகிராமன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது . விஜயா ஜானகிராமன் , கீதா சேகர் , அறிவியல் இயக்க ராமலிங்கத்தின் மனைவி , என் அம்மா தங்கம்மா , குமாரதாஸின் அம்மா ஜெயாம்மாள் , போக்குவரத்துத் தொழிலாளி ராஜுவின் மனைவி உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர் . நான்தான் கட்சி குறித்து அறிமுக உரை நிகழ்த்தினேன் .

 

அப்போதெல்லாம் கட்சிக் கிளைக்கூட்டம் எனில் விடிய விடிய கச்சேரியாகத்தான் இருக்கும் . அச்சூழலில் மாவட்டச் செயலாளர் தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் ஒரு பேரவைக்கூட்டத்தில் சொன்னார் , “ பெண்கள் பங்கேற்கும் கிளைக்கூட்டத்தை சுருக்கமாக குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி முடிக்கணும் ; பெண்கள் அவர்கள் வீட்டுச்சூழல் வீட்டார் ஒத்துழைப்பு இவற்றிற்கு ஏற்பத்தான் கட்சிப் பணிகளில் பங்கேற்க இயலும் என்கிற சமூக யதார்த்தத்தை புரிந்து பெண்கள் பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும்.” என்றார்.

 

 “ஒன்றுபட்ட கட்சியிலும் நமது கட்சியிலும் அதிக பெண்கள் / தலைவர்கள் பங்களித்திருக்கிறார்கள்.  தொழிற்சங்க அமைப்புகளில் ஊழியர்கள் செயல்பட்டார்கள். கட்சிக் கிளைகளில் ஆண்களும் பெண்களும் இணைந்த கிளைகளாகவும் இருந்தன. மாதர் சங்க வளர்ச்சியின் ஊடாக கட்சிக்கு பெண்கள் வரவு அதிகரித்தது . இச்சூழலில் பெண்களுக்கான தனிக் கிளைகள் தேவையாகின . கிளைகள் கூடும் நேரம், (பொதூவாக ஞாயிற்றுக்கிழமை) இவைகளும் பெண்கள் பங்கேற்புக்கு தடையாக இருந்தது ஆகவே அதிலும் மாற்றங்கள் மெல்ல நிகழ்ந்தன .

 

தஞ்சை கிராமங்களில் கட்சி அமைப்புக்குள் பெண்கள் - பெரும்பகுதியும் விவசாயத் தொழிலாளிகள் எனவே இரவுநேர குவியலான கூட்டங்கள் சாத்தியப்பட்டன, நகராட்சி பகுதிகள், மாநகரப் பகுதிகள், தொழிற்சங்க அமைப்புகளோடு இணைந்த உழைக்கும் பெண்கள். மத்தியதர அரங்கங்களில் பணியாற்றும் பெண்கள் இவர்களை கவனத்தில் கொண்டு கட்சி ஆங்காங்கு தன்னை தகவமைக்க வேண்டி இருந்தது. இதற்கொப்ப பல்வேறு யோசனைகளை பாப்பா உமாநாத்தும் மைதிலி சொன்னதை தோழர் சின்னையா நினைவு கூர்ந்தார்.

 

பாலின சமத்துவம் பற்றிய இன்றையப் புரிதல் அன்றைக்கு இருந்ததாகச் சொல்ல முடியாது . பெண்விடுதலை பற்றிய எழுபதுகளுக்கு முந்தைய கருத்தாக்கமும் , எண்பதுகளில் உருவான பெண்சமத்துவ கருத்தாக்கமும், பின்னர் ஓங்கிய பெண்ணிய கருத்தாக்கமும், இன்றைய பாலின சமத்துவப் பார்வையும் ஒன்றல்ல ; ஆனால் ஒன்றின் வளர்ச்சி ஒன்று என கருத்தின் பரிணாம வளர்ச்சியாகவே அதனைப் பார்க்க வேண்டும் .

 

குருப்ஸ்கயா எழுதிய பெண் சமத்துவ கட்டுரைகளையும் ,லெனின் அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சராக பணிபுரிந்த அலெக்சாண்டிரா கொலந்தாய் வாழ்க்கை வரலாற்றையும் எழுத்துகளையும் மீண்டும் இப்போது வாசிப்பதும் அவசியம் .

 

உழைக்கும் வர்க்க பாலின சமத்துவப் பார்வைக்கும் , உயர் நடுத்தர வர்க்க மற்றும் செல்வச் சீமாட்டிகளின் பாலின சமத்துவத் தேடலுக்கும் இடைவெளி உண்டு ; அதிலும் சாதியம் பீடித்துள்ள நம் சமூக அமைப்பில் அதன் படிநிலையும் ஆதிக்கமும் பெண்ணிற்கு கூடுதல் வலி .மதம் பிடித்த சமூகச் சூழலில் இன்னும் சுமை .

 

இந்த சமூக யதார்த்தம் கட்சிக்குள்ளும் முரண்பட்ட குரலாய் ஒலித்துக் கொண்டே இருக்கும் .அதை எதிர்த்து பாலின சமத்துவதுக்கான நேர்மையான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் .அது நெடிய கருத்துப் போராட்டமும்கூட.

 

பெண்கள் குறித்து தோழர் மைதிலி சிவராமன் எழுதிய ஓர் சிறுபிரசுரம் நீண்ட விவாதங்களுக்குப் பின் அப்போது வெளிவந்தது மிக முக்கியமானது .அது கட்சியின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது .

 

 

வாலிபர் சங்கம் ஆரம்பித்த பொழுது அது பெரிதும் ஆண்கள் அமைப்பாகவே இருந்தது . எண்பதில் முற்பகுதியில் கடுமையான முயற்சிக்கு பிறகே அங்கு பெண்களும் இடம் பெறலாயினர் .இங்கு இரண்டு சம்பவத்தை குறிப்பிடல் பிழையல்ல .

 

வாலிபர் சங்கத்தில் பெண் உறுப்பினர்களை சேர்க்க பெரும் போராட்டத்தை நடத்தி இருக்கிறோம் . பெண்களும் வாலிபரும் சேர்ந்து பழகினால் பிரச்சனைகள் உருவாகுமென எதிர்த்த ஓர் சிலர் இருந்தனர் .கட்சி போராடி பயிற்றுவித்து அவர்களை இணங்க வைக்க வேண்டி இருந்தது .

 

இன்னொரு சம்பவம் வாலிபர் சங்க மாவட்ட செயற்குழுவில் பெண்களைச் சேர்க்க வேண்டுமென முடிவெடுத்து முதலில் ஐந்து மாவட்டங்களை குறிவைத்தோம் கடும் முயற்சிக்கும் போராட்டத்துக்கும் பின்னேதான் சாத்தியமாயிற்று . உறுதியாக அதனை அமலாக்க கட்சி தோழர்களுக்கு தோழர் ஏ நல்லசிவன் அறிவுறுத்தியதை மறக்க இயலாது .

 

கட்சியிலும் எல்லா அமைப்புகளிலும் பெண்களை மாவட்டக்குழுவுக்கு தேர்வு செய்ய பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது . பேனல் முறைத் தேர்வில் பெண்களை ஒதுக்குவது எளிது , எனவே சில கறாரான வழிகாட்டுதல்களை ,இடஒதுக்கீட்டை பின்பற்றச் செய்ய பெரும் போராட்டமே நடத்த வேண்டி இருந்தது .

 

கடந்த மாநாடுகளில் சில இடைக் குழுக்களின் செயலாளராக பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர் . அங்கொன்றும் இங்கொன்றுமாக பொறுப்பேற்ற பெண் தோழர்களின் செயல்பாடுகள் மிகவும் மெச்சத் தகுந்ததாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தது .

 

தோழர் வே .மீனாட்சி சுந்தரம் சொன்னார் ,  “ களப்பணியில் முத்திரை பதிக்கும்  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்  நாட்டு பிரிவு   உண்டு. அதையும் முழுதாக நினைவில் கொண்டாக வேண்டும்.”  

 

அண்மை மாநாடுகளில் மேலும்பல இடைக்குழுக்களுக்கும் கிளைகளுக்கும் பெண் தோழர்கள் செயலாளராக தேர்வு செய்யப்பட்டனர் ; மிகுந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தன . ஏதேனும் ஓர் மாவட்டத்திலாவது பெண் தோழர் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என ஆவலோடு காத்திருக்கிறேன்…

 

அண்மையில் ஒரு தோழரோடு பேசிக்கொண்டிருந்த போது அவர் கேட்டார் , “ மாவட்டச் செயலாளரோ / வட்டச் செயலாளரோ பெண்ணாக இருந்தால் திடீர்னு இரவில் போலீஸ் ஸ்டேஷன் போக முடியுமா ?”

 

இந்தக் கேள்வியே அபத்தம் .கட்சி அமைப்பு பற்றிய புரிதல் இல்லாமை . செயலாளர் எனில் வட்டகுழுவின் செயலாளர் /மாவட்டக்குழுவின் செயலாளர் என்றே பொருள் . வட்டத்துக்கோ மாவட்டத்துக்கோ செயலாளர் அல்ல . கூட்டுத் தலைமைதான் நம் பண்பாடு . சரியான வேலைப் பங்கீடும் பரஸ்பர ஒத்துழைப்பும் இருந்தால் எந்தச் சிக்கலும் எழாது .அடுத்து நம் செயல்பாட்டின் வீரியம் எங்கும் நமக்கு உரிய மரியாதையைப் பெற்றுத் தரும் .இந்த சமூகம் ஆண் /பெண் என கோடு போட்டு பிரித்துள்ள வேலைகளை அடித்து நொறுக்கி மாற்றுவதும் கம்யூனிஸ்ட் வேலைதானே !”

 

 “ ஆளுமையும் ஆற்றலும் தலைமைதாங்கும் நற்பண்பும் போர்க்குணமும் மிக்க நம் கம்யூனிஸ்ட் பாரம்பரியத்தை நேற்றைய பதிவில் சுட்டினேன். இன்றைக்கும் அந்த பாரம்பரிய தொடர்ச்சியை  காண முடிகிறது .

 

தலைமைப் பொறுப்புகளுக்கு மேம்படுத்துவது - ஏற்க வழிவிடுவது - என்கிற பிரச்சினைகள் பொதுவாக ஆணாதிக்க சமூக கட்டமைப்பில் மிகப்பெரும் பிரச்சினை. கட்சியில் ஆண்களே நாற்காலியை இன்னொரு ஆணுக்கே விட்டுக் கொடுக்க தயாராக இல்லாத சூழல்.  எல்லைகளும் வரம்புகளும் ஒதுக்கீடுகளும் அமலாக்க வேண்டியுள்ளது.

 

பாலின சமத்துவப் பார்வை கடந்த நாற்பது ஆண்டுகளில் பெரிதும் விசாலமாகி இருக்கிறது . கூர்மைப்பட்டிருக்கிறது .இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கும் .கம்யூனிசம் எதையும் இயங்கியலாய் பார்க்கதானே நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது .

 

தமிழ்நாட்டில் மாவட்டச் செயலாளர்களாக பெண்கள் வருவது எப்போது ? பேராசையுடன் அதேவேளை மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் .

 

 

·         போர்க்குணமும்

·         லட்சிய உறுதியும்

·         தியாக வாழ்வும்

·         அர்ப்பணிப்பும்

·         தத்துவப் பயிற்சியும்

·         அமைப்பாய் செயல்படும் பாங்கும்

 

இரு பாலருக்கும் உரியதே . இரு பாலர் எனச் சுருக்குவதுகூட இனி சரியா ? திருநங்கை ,திருநம்பி உட்பட அனைத்து பாலினருக்கும் உரியதே !

 

என் பேத்தி மேகா [ இன்னும் நாலு வயசு ஆகலை ] அடிக்கடி சொல்கிறாள் ,”தாத்தா ! பாய்ஸ் செய்கிற எல்லாத்தயும் கேர்ள்ஸூ செய்யலாம்… நான் செய்வேன்…”

 

நாளை இன்னும் வீரியமான மாறுதல் நிகழட்டும் .அதற்கு விதை தூவுவோம்.

 

 

சுபொஅ.

22/12/2021.

 

 

 

 

 

0 comments :

Post a Comment