நாவலைப்
படித்தபின் இரண்டு நாட்கள் அந்தப் பிணங்கள் என்னோடு பேசிக்கொண்டே இருந்தன ; சொரணையற்றுக்
கிடக்கிற நடமாடும் பிணங்களை எள்ளிநகையாடிக் கொண்டே இருந்தன . படியுங்கள் .இதே அனுபவம்
உங்களுக்கும் கிட்டும் !!!
பிணங்கள் பேசியபோது நாறிய அமெரிக்கா
….
யோசே
சரமாகோ எழுதிய “பார்வை தொலைத்தவர்கள்” [தமிழில்: எஸ்.சங்கரநாராயணன்] நாவலில்
எல்லோரையும் குருடாக்கும் தொற்று நோயொன்று பரவும் சூழலை கற்பனை செய்து கண்ணிருந்தும்
குருடாகிப்போன சமூகத்தை தோலுரித்து தொங்கவிட்டிருப்பார் . அவர் கம்யூனிஸ்ட் .இந்த நாவல்
நோபல் பரிசு பெற்றது .
கொரானா பெரும்தொற்று
காலத்தில் பிணங்களை பேசவைத்து அமெரிக்க சமூகத்தை மட்டுமல்ல ஒட்டு மொத்த மனித குலத்தையே
ஸ்கேன் செய்து காட்டியிருக்கிறார் “ இதுவும் கடந்துபோகும்” நூலில் நெய்தலினி. ஒரு நாவலும்
ஆறு சிறுகதைகளும் அடங்கிய இந்நூல் முழுக்க கொரானா கொடுங்கால துயரையும் சமூக ஏற்றதாழ்வையும்
நம் நெஞ்சோடு ஒரு சேரப் பேசுகிறது.
முதலில்
128 பக்கங்களில் நெஞ்சைப் பிசையும் “ இதுவும் கடந்துபோகும்” எனும் நாவல் . கொரானா காலத்தில்
பிணவறையில் அடுக்கிவைக்கப்பட்ட பிணங்கள் பேசுகிறது . ஜார்ஜ் என்கிற கறுப்பு இளைஞனும்
லூசி எனும் வெள்ளைக்காரப் பெண்ணுக்கும் இடையில் சொல்லாமலே முடிந்த காதல் காவியம், அதிலும்
கொரானாகாலப் பிணமாகி பேசியபோதும் பரஸ்பரம் காதலைப் பரிமாறாமலே முடிந்த சோகம் .காரணம் சமூகம் .அவர்களின் காதல்
மட்டுமா அதற்குள் எவ்வளவு சுடும் உண்மைகள் .
“ நிற வேற்றுமை
பாராத பிணங்களை முன்வைத்து நிறவெறி அரசியலைப் பேசுகிறார் நெய்தலினி ,” என ச.தமிழ்ச்செல்வன்
கூறுவது மிகைக்கூற்றல்ல .
ஜார்ஜ் ,லூசி
,ஹலிமா ,டியாகோ ,சென் என பிணங்களின் உரையாடலூடேயும் ,பிணவறை ஊழியர்கள் உரையாடலூடேயும்
காதலையும் சமூக ஒடுக்குமுறையையும் நிறவெறியையும் கொரானாவிலும் ஆதயம்தேடும் லாபக் கழுகுகுகளையும்
கொரானா அரசியலையும் அமெரிக்க இன்சூரன்ஸ் வாழ்க்கையின் அவலங்களயும் டிரம்பின் பைத்தியக்காரத்தனங்களையும்
ஏகாதிபத்திய அக்கிரமங்களையும் அழுத்தமாக பிரச்சார நெடியோ கட்டுரைத்தனமோ இல்லாமல் நாவல்
நெய்துவிட்டார் நெய்தலினி .
ஒளிவெள்ளத்தில்
ஜொலித்த அமெரிக்காவை கண்டு வியந்த நெய்தலினிதான் , “பிரகாசமாக மின்னிய அந்த ஒளியின்
பின்னே மறைந்திருந்த வர்க்க ,இன , பாலின பேதமென்னும் இருளை என் போன்ற பலருக்கும் திறந்து
காட்டியது” என்கிறார் , சும்மா அதை நெஞ்சக்கூட்டுக்குள் அடைத்து பொருமாமல் , நாவல்வழி
உரக்கப் பேசியிருக்கிறார் .பாராட்ட வார்த்தைகளில்லை .
கறுப்பின மக்களை
கோவிட் சோதனைக்கு அனுப்புவதில்கூட பாரபட்சம் காட்டிய அமெரிக்காவின் கோரமுகம் நாவலில்
பல்லிளிக்கிறது .ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பு மனிதனின் கழுத்தில் கால்வைத்து நசுக்கிக்
கொண்ற வெள்ளை போலீஸ் அதிகாரி ; அதற்கு எதிராய் கறுப்பர் வெள்ளையர் என நிறபேதமற்று திரண்ட
மக்கள் எனும் செய்தியை நாவலில் முற்றாய்ப்பாய் கோர்த்திருப்பது நுட்பமானது. நாவல் களம்
அமெரிக்கா என்பதால் பொருத்தமான ஆங்கிலக் கவிதைகளையும் மார்ட்டின் லூதர் கிங் கனவையும்
நேர்த்தியாக கோர்த்திருப்பது பாராட்டுக்குரியது .
“ ஆப்பிரிக்க மக்களுக்கு ஒரு மண்டேலா , அமெரிக்காவுக்கு
ஓர் [மார்ட்டில் லூதர்] கிங் இந்தியாவுக்கு ஓர் அம்பேத்கர்” என கருப்பின இளைஞனின் வலியில்
பிறந்த வார்த்தைகள் வரலாற்றின் பிழிவு .
நாவலைப் படித்தபின்
இரண்டு நாட்கள் அந்தப் பிணங்கள் என்னோடு பேசிக்கொண்டே இருந்தன ; சொரணையற்றுக் கிடக்கிற
நடமாடும் பிணங்களை எள்ளிநகையாடிக் கொண்டே இருந்தன . படியுங்கள் .இதே அனுபவம் உங்களுக்கும்
கிட்டும் !!!
கொரானா கொடுந்துயரில்
மாநிலம் விட்டு மாநிலம் நடந்தே கடந்த உழைக்கும் மக்களின் சோகம் சொல்லில் அடங்காது
.சென்னையிலிருந்து பீஹாருக்கு 1744 கிமீ நடந்தே கடந்த ஓர் மனிதக் குழுவின் ஓலம் “1744 கிலோ மீட்டர்” சிறுகதையாய் நெற்றிப் பொட்டில்
அறைகிறது .
எமிலி ,ஐசக்
,அவர்களின் தாத்தா பீட்டர் வழி தன் அனுபவ கறுப்பின் வலியைசொல்லி ,அதனூடே ஜார்ஜ் ஃபிளாய்ட்டிற்கு நடந்த கொடூரத்தை எதிர்த்த
பேரணியில் நடந்த நிகழ்வை சுட்டி , அதன் உளவியலை படம்பிடித்து , வாழ்வின் வலியை - அதற்கு
எதிரான கோவத்தை நம் நெஞ்சில் பற்ற வைக்கும் கதை “மாற்றம்”
“ஆக்சிஜன் சிலிண்ட்ர்” தலைப்பே சொல்லும் கதையின்
அடர்த்தியை .ஆக்ஸிசனுக்கு காத்துக்கிடக்கும் கொடுமையையும் , மனுஷனுக்கு மனுசந்தான்
உதவணும்ம்னு நல்ல செய்தியையும் சொல்லும் கதை .
காஸிப்பூரில்
எரிக்க காத்துக் கிடக்கும் பிணங்களூடே நடந்து
செய்தி சேகரிக்கச் சென்ற பெண் செய்தியாளர் அரசு சொல்லும் பொய்யை அம்பலப்படுத்த முனைகையில்
பாசிட்டிவ்வான செய்திகொடு என பத்திரிகை நிறுவனம் நிர்ப்பந்திக்க பாசிட்டிவ்வான செய்தியைத்
தேடித் தேடி நடந்தார் என ஊடகங்களையும் அரசின் பொய்களை மறைக்கும் ஊடக முதலாளிகளையும்
ஒருசேர காட்சிப்படுத்துகிற கதையே “ பாசிட்டிவ்”.
பிணங்களோடு
வாழ்வாகிப்போன ஊழியர்களின் மன உழைச்சலையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் சொல்லும் ,அதில்
நல்லதும் கெட்டதும் கலந்த உலகை காட்டி போராடச் சொல்லும் “இனிய காண்க”.
தங்களைவிட கொடிய
சாதிய மிருகத்தைக் காண மனிதன் தொண்டைக் குழியில் இறங்கிய கொரானா கிருமிகள் மூலம் நிலவும்
சாதிவெறியை நன்கு பகடி செய்யும் “ உயிரினம்”.
ஒவ்வொரு கதையும்
சமூகத்தை ஊடறுத்து உள்முகத்தைக் காட்டுகிறது . எங்கும் மானுட நம்பிக்கை செத்துவிடாமல்
துளிர்க்கச் செய்வதில்தான் நெய்தலினி வெற்றி பெற்றுள்ளார் .
இது உனக்கு
முதல் நூலாம் , யார் சொன்னது ? படித்தால் அப்படித் தெரியவில்லையே ! வெடிப்புற பேசியிருக்கிறாய்
! ஆத்மார்த்தமாய்ப் பேசி இருக்கிறாய் .நன்று ! நன்று !நன்று!
மகளே ! நெய்தலினி ! உன் திருமணத்திற்கு
என் இணையரோடு கடலூர் வந்து வாழ்த்தி மகிழ்ந்தேன் .இப்போது உன்னை உச்சிமோந்து மகிழ்கிறேன்
. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் மகளே !
சு.பொ.அகத்தியலிங்கம்.
24/12/2021.
இதுவும் கடந்துபோகும்
,
கொரானா காலத்து
நாவலும் சிறுகதைகளும்,
நெய்தலினி
,
வெளியீடு :
சவுத் விஷன் புக்ஸ்
212 பக்கங்கள்
, விலை : ரூ 150/
நூல் பெற
94453
18520.
0 comments :
Post a Comment