அகத்தாய்வில்… நியாயத்தராசில்….

Posted by அகத்தீ Labels:

 


அகத்தாய்வில்… நியாயத்தராசில்….
நெருநல் உளனொருவன் இன்றில்லை 

இருந்த தடமேனும் இருக்கிறதா ?

தடவிப் பார்த்தாலும் பலருக்கும் தெரிவதில்லை

தோள்தட்டும் பரம்பரையை துலக்கிப் பார்த்தாலும்

தலைமுறைக்கு சொல்ல சங்கதிகள் இல்லை


உண்டான் உறங்கினான் குட்டிகள் ஈன்றான்

வேறென்ன சாதித்தான் ? விவரங்கள் சொல்வீர்!

வாழுங் காலத்தில் அன்பை விதைத்தானா ?

வெறுப்பை மிதித்தானா ? அறிவைத் தேடித்திரிந்தானா ?

இரத்த அணுக்களில் மானுடத்தைக் கலந்தானா ?

வியர்வை சொரிந்தானா ? விஞ்ஞானம் தெளிந்தானா ?

பிறர்கென முயன்றானா ? பிறர் துயர் களைந்தானா ?

காலத்தில் கரைந்தானா ? வரலாற்றில் நிலைத்தானா ?


உயிரோடு இருந்தது வெறும் காலக் கணக்கு

பிறர்கென வாழ்ந்தது மானுடக் கணக்கு

தனக்கென மட்டுமே இருந்தது பிழைக்கணக்கு

ஊரை எழுப்ப ஓயாதுழைத்தது பொதுக்கணக்கு

உலகம் உய்ய குருதி சிந்தியது தியாகக் கணக்கு

பதவி பணம் என குறியாய் இருந்தது குற்றக்கணக்கு

அகத்தாய்வில் உனது கணக்கைத் திருப்பிப் பார் ! 

அடுத்த தலைமுறை  நியாயதராசில் எடைபோடும் !


சுபொஅ.

15/12/2021.

0 comments :

Post a Comment