ஒரு நட்சத்திரம் மடிந்து விழலாம்...

Posted by அகத்தீ Labels:


புரட்சிப் பெருநதி - 51


ஒரு நட்சத்திரம் மடிந்து விழலாம்...





- சு.பொ.அகத்தியலிங்கம்

ஸ்டாலின் உயிரோடு இருந்த காலத்திலேயே ஸ்டாலின் அணுகுமுறையால் 
கட்சிக்குள் கடும் எதிர்ப்பு இருந்தது. இன்னும் சொல்லப்போனால் 
இப்படி நிலைமை போகும் என லெனினே எதிர்பார்த்ததுதான் இது.




“அன்பான மக்களே! நாங்கள் வாழ்வை நேசித்தோம், எங்கள் தாயகத்தை நேசித்தோம் உங்களையும் நேசித்தோம். நாங்கள் உயிரோடு எரிக்கப்பட்டுவிட்டோம்...உங்களுக்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்: உலகில் நீங்கள் அமைதியைப் பாதுகாக்கக் கூடிய விதத்தில் - போர்களின் சூறாவளியில் உயிர் வாழ்க்கை என்றும் எங்கும் நாசமாகாத விதத்தில் - உங்கள் வேதனையிலிருந்து பலத்தையும் துணிவையும் பெறுவீர்!”


இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து உலகம் முழுவதும் வீசியடித்த புரட்சிகர எழுச்சிகள் என்பது உலகப்போரில் ஆங்காங்கு பல்வேறு வடிவங்களில் ஓங்கி நின்றஎழுச்சியின் உயிரார்ந்த தொடர்ச்சியே என்பார் சுகுமால் சென். கிழக்கு ஜெர்மனி, போலந்து. செக்கோஸ்லோ வாக்கியா. யூகோஸ்லோவாக்கியா, பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா, அல்பேனியா என கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாய் அதற்குரிய வரலாற்றோடு சோசலிச முகாமுக்குள் இணைந்தன. அப்போது ஐரோப்பாவின் மக்கள் தொகை சற்றேறக்குறைய அறுபது கோடி; அதில் சரிபாதி முப்பது கோடி இப்படி சிவப்பானது. இது இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா ஆற்றிய அளப்பரிய அர்ப்பணிப்புமிக்க பங்கேற்பின் விளைச்சல் எனலாம் .


எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா போன்றவை சோவியத் யூனியனில் தங்களை இணைத்துக்கொண்டன. பிரான்ஸிலும் இத்தாலியிலும் கூட்டணி ஆட்சிகள் மலர்ந்தன. கம்யூனிஸ்டுகள் பலமும் முன்பைவிட அதிகரித்தது. ஸ்காண்டிநேவிய, ஐரோப்பிய நாடாளுமன்றங்களில் இடதுசாரிக் குரல் வலுத்தது. ஸ்பெயினிலும், போர்ச்சுக்கல்லிலும்தான் பாசிச அரசுகள் தப்பிப் பிழைத்துத் தொடர்ந்தன.
மேற்குஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் புரட்சி எரிமலை வெடித்துவிடாதபடி நேசநாடுகளின் படைகள் அமர்ந்து கொண்டன. இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, பர்மா, மலேயா, கொரிய நாடுகளின் விடுதலைப் போர்கள் வீறுபெற்றன; காலகதியில் விடுதலை பெற்றன.



1945 ஜூலையில் சான்பிரான்சிஸ்கோவில் ஐக்கியநாடுகளின் தொடக்க விழா நடைபெற்றது. பிரிட்டிசார்அனுப்பியிருந்த இந்தியப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.அவர்களைச் சுட்டிக்காட்டி சோவியத் அயல்துறை அமைச்சர் மாலதோவ் சொன்னார். “இந்தியாவிலிருந்து ஒரு பிரதிநிதி குழுவும் வந்துள்ளது. இப்போது இந்தியா சுதந்திர நாடல்ல. சுதந்திர இந்தியாவின் குரலும்கேட்கப்படும் காலமும் விரைந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.” மின்சாரம் பாய்ந்தது போல் ஓர் புத்தொளி அங்கு தோன்றியது. ஆம் விடுதலைப் போராட்டங்கள்பால் அவர்களின் ஒருமைப்பாடு தெம்பூட்டுவதாகவே அமைந்தது. புதிதாய் விடுதலை அடைந்த நாடுகள் தங்களின் உற்ற தோழனாய்சோவியத்தைக் கருதின. சோவியத்தும் உதவிக்கரம் நீட்டியது.


ஆசியாவில் வேகங்கொண்ட புரட்சி அலையின் உச்சமாக 1949 சீனப்புரட்சிஅமைந்தது. சீனத்தில் செங்கொடி பறந்தது.வடகொரியா, வியட்நாம், லாவோஸ், கம்பூச்சியா, கியூபா என ஓவ்வொரு நாடும் அதற்குரிய வரலாற்றோடும் போர்க்குணத்தோடும் செம்பாதையில் வரலாயின. யுத்தத்திற்கு முன்னதாக சோவியத் யூனியனிலிருந்த இருபது கோடி மக்கள் சோசலிசத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருந்தார்களெனில் யுத்தத்திற்கு பிந்தைய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தொன்னூறு கோடியாக - மனிதகுலத்தின் மூன்றிலொரு பங்காக மாறியது என்பது வரலாற்றின் முக்கியச் செய்தியே !



முதலாளித்துவ நாடுகளும் தொழிலாளர்களுக்கு சலுகைகளும் உரிமைகளும் வழங்கி பல முற்போக்கான சட்டங்களை வடித்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உலகம் முழுவதும் சமாதானத்தின் குரல் வலுத்தது. இதனை ஓங்கி ஒலிக்கச் செய்வதில் சோவியத் யூனியன் பெரும் பங்கு வகித்தது. பாசிசத்தை எதிர்த்த போரில் சோவியத் நாடு கொடுத்த விலை அப்படி. சமாதானம் அவர்களின் உயிர்த் துடிப்பானது.



 பாசிச எதிர்ப்புப் போரில் 700 க்கும் மேற்பட்ட பைலோ ரஷ்யக் கிராமங்கள் நெருப்புக்கு இரையாக்கப்பட்டன.
இருந்த சுவடே இன்றி அழிக்கப்பட்டன. அப்படிப்பட்ட ஓர் கிராமமே கத்தீன். அக்கிராமத்தில் உள்ள நினைவுத் தூணில் பொறிக்கப்பட்ட வாசகத்தையே ஆரம்பத்தில் பார்த்தோம். அவர்களின் சமாதான விருப்பம் உள்ளார்ந்தது அல்லவா ?


ரஷ்யப் புரட்சியும் , பாசிசத்தையும் நாசிசத்தையும் சோவியத் யூனியன் வென்றதும் உலகெங்கும் இப்படி சிகப்பு சிந்தனையை வலுக்கச் செய்தன; ஆனால் மறுபுறம் ஏகாதிபத்தியம் தன் சூழ்ச்சி வலைகளைப் பின்னுவதில் நுட்பமாய் ஈடுபட்டது. கம்யூனிசத் தொடர்புகளை மறுதலிக்காத எழுத்தா ளர்கள் ஹாலிவுட்டில் பணியாற்றக்கூடாதென மெக்கார்த்தி சட்டம் அமெரிக்காவில் கடுமையாக்கப்பட்டது .சார்லி சாப்ளின் நாட்டிற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டது.பால் ராப்சன் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.ரஷ்யாவிற்கு அணு ஆயுத ரகசியங்களைச் தந்ததாகச் சொல்லி ஈதெல் மற்றும் ஜீலியஸ் ரோசன்பர்க் இருவருக்கும் மின்சார நாற்காலியில் வைத்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டன.



அமெரிக்கா தன்னைத்தானே உலகப் போலீஸ்காரனாக வரிந்துகொண்டு ;உலகெங்கும் ஆட்சி கவிழ்ப்பிலும் சிறுசிறு யுத்தங்களிலும் ஈடுபடலானது: எங்கும் எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்தது. கம்யூனிஸ எதிர்ப்புப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. 


ரஷ்யாவில் ஸ்டாலின் உட்கட்சி ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதில் செய்த தவறுகள், டிராட்ஸ்கி போன்றோரின் எதிர்ப்புக் குரல் எல்லாம் மிகச் சாதுரியமாக கம்யூ னிச எதிர்ப்புக்கு பயன்படுத்தப்பட்டன. இதே காலகட்டத்தில் கிழக்கு ஐரோப்பியாவில் ஸ்டாலினிச பாணி செயல்பாடுகளும் துவங்கிவிட்டன.ஒரு புறம் அமெரிக்கா தலைமையில் ஏகாதிபத்திய முகாம்; இன்னொரு புறம் ரஷ்யாவின் தலைமையில் சோஷலிச முகாம் என உலகச் சூழல் மாறியது. யுத்தச் செலவுகள் இரு பக்கமும் பன்மடங்கு அதிகரித்தன பனிப்போர் காலகட்டம் துவங்கியது.


1953 இல் ஸ்டாலின் மறைந்தார் . ஸ்டாலின் உயிரோடு இருந்த காலத்திலேயே ஸ்டாலின் அணுகுமுறையால் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இப்படி நிலைமை போகும் என லெனினே எதிர்பார்த்ததுதான் இது.


லெனின் தன் கடிதத்தில் எழுதுகிறார். “தோழர் ஸ்டாலின் பொதுச்செயலாளரான பின்புஎல்லையற்ற அதிகாரங்கள் அவர் கரங்களில் குவிந்துள்ளன. போதுமான எச்சரிக்கையுடன் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தும் திறன் அவருக்கு எப்போதும் இருக்குமா என்று என்னால் உறுதி கூற முடியாது. மறுபுறம் டிராட்ஸ்கி தகவல் தொடர்புக்கான மக்கள் கமிசாரகப் பிரச்சனையில் மத்தியக் குழுவிற்கு எதிரான போராட்டத்தில் ஏற்கெனவே வெற்றியை நிரூபித்திருப்பது போல , அளப்பரிய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தற்போதைய மத்தியக் குழுவில் தனிப்பட்ட முறையில் பார்த்தால் அவரே மிகத் திறமையானவர் எனலாம். ஆனால் அவர் அதீதமான தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். சுத்தமான நிர்வாக விஷயத்திலேயே அவர் அதிகம் ஈடுபட்டிருக்கிறார். தற்போதைய மத்தியக்குழுவின் இந்த இரு சிறந்த தலைவர்களின் இந்த இரண்டு வகை குணாம்சங்கள் .யதேச்சையாக ஒரு பிளவுக்கு இட்டுச் செல்லலாம்.இதைத் தடுக்க நமது கட்சி நடவடிக்கை எடுக்காவிடில் பிளவு எதிர்பாராதவகையில் நிகழக்கூடும்.”லெனின் அதன் பிறகு செயல்படும் நிலையில் இல்லை . மரணமும் விரைவில் தழுவியது .


ஸ்டாலின் கை ஓங்கியது . நாட்டில் வளர்ச்சியும் இருந்தது; கட்சிக்குள்பிரச்சனையும் மிகுந்தது . டிராட்ஸ்கி தண்டனைக்கு ஆளாகி நாடுகடத்தப்பட்டார் . பாசிச எதிர்ப்பு யுத்தத்தின் பின் ஸ்டாலின் புகழ் ஓங்கியது ; அதிகாரமும் எல்லை மீறியது. ஸ்டாலின் மறைவுக்குப் பின் கட்சி மாநாட்டில் வெடித்தது.



 “கட்சியில் ஒற்றுமையும் கட்டுப்பாடும் இயந்திரத்தன மானதாகவோ, பலவந்தமாகவோ இருக்கக்கூடாது. உணர்தலின் அடிப்படையில் அமைந்த கட்சி விசுவாசம்தான் உருவாக வேண்டும் . முற்றுகைக்கு உள்ளான எதிரியைப் போல் எவ்வாறு தப்பிச் செல்வது, எவ்வாறு திருப்பித் தாக்குவது என்று சிந்திக்கத் தூண்டுமாறு இருக்கக்கூடாது.”என இத்தாலிய கம்யூனிஸ்ட் தலைவர் கிராம்ஷி சொன்னதை இ.எம். எஸ்ஸும் கோவிந்தப் பிள்ளையும் தாங்கள் எழுதிய கிராம்ஷி பற்றிய நூலில் சரியாகச் சுட்டுகின்றனர் . 


அந்த கட்டுரையின் இன்னொரு இடத்தில் ஸ்டாலின் குறித்து சொன்னது முக்கியமானது இங்கு உணரத்தக்கது; “சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாம் காங்கிரசில் ஸ்டாலினுக்கு எதிராக கடுமையான விமர்சனம்மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு பகுதியை உலகெங்கிலும் உள்ள மார்க்சிஸ்ட்டுகளும், லெனினிஸ்ட்டுகளும் ஒப்புக்கொண்டனர். ஆனால் அது தொடர்பாக கிராம்ஷியின் வாரிசான தோக்லியாட்டி வெளியிட்ட கருத்து கவனத்துக்கு உரியதாகும் . ஸ்டாலினு டைய தலைமைக் காலத்தில் மகத்தான சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அதைபோலவே அனுமதிக்கவே முடியாத பல தவறுகளும் நேர்ந்திருக்கின்றன.ஆனால் அதன் காரணத்தை யதார்த்தமாகவும் பொருள்படவும் ஆராய்வதில் சோவியத் தலைமை தோற்றுவிட்டதாக தோக்லியாட்டி சுட்டிக் காட்டினார்.சோவியத் யூனியனில் சோஷலிச சமுதாய நிர்மாணம் தொடர்பாக முற்றிலும் சுயவிமர்சன பூர்வ ஒரு மறுமதிப்பைத்தான் தோக்லியாட்டி கோரினார் . அந்தக் கோரிக்கை இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை .” ஆம் இ.எம்.எஸ்சும் கோவிந்தப் பிள்ளையும் சொல்வது சரிதான். இன்றளவும் இல்லை.



உள் நெருக்கடியாலும் ஏகாதிபத்திய சதியாலும் 1991 டிசம்பர் 8 ஆம் நாள் சோவியத் யூனியன் தகர்ந்தது. உலக மக்கள் அதிர்ந்தனர். கண்ணீர் விட்டனர். முதலாளித்துவம் மகிழ்ந்து கொண்டாடியது . இதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள் பலவும் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்தன .இருபதாம் நூற்றாண்டு மாபெரும் சாதனைகளையும் மாபெரும் சோகத்தையும் ஒருங்கே கண்டது .



ஒரு சீனக் கவிதையின் வரிகள் …


ஒரு நட்சத்திரம் மடிந்து விழலாம்
ஆயினும் அதன் பிரகாசம்...
ஒரு மலர் வாடிவிடலாம்
ஆயினும் அதன் மணம் ...

புரட்சி தொடரும்...

நன்றி ; தீக்கதிர் 23/10/2017

0 comments :

Post a Comment