மார்க்ஸை பயில்வதன் பொருள் [1]

Posted by அகத்தீ Labels:





மார்க்ஸை 

பயில்வதன் பொருள் [1]


சு.பொ.அகத்தியலிங்கம் .


மார்க்ஸிய சித்தாந்தம் சமுதாயச் சிந்தனையின் பொது ஓட்டத்திற்கு 

அப்பாலோ, உலக நாகரிக வளர்ச்சிக்கு அப்பாலோ தோன்றி வரவில்லை. 

இயற்கையையும் சமுதாய வாழ்க்கையையும் படித்து 

ஆராய்வதில் மனித குலம் 

இதுவரை செய்துள்ள ஆகப்பெரிய கண்டு பிடிப்புகளின் 

சரியான தார்மீக வாரிசாகவே வந்திருக்கிறது.





காரல் மார்க்ஸ் பிறந்து இரு நூறாண்டுஆகிறது. உலகெங்கும் அவரைநினைவு கூர்கின்றனர். கொண்டாட்டமாகவோ வெறும் சடங்காகவோ அல்லாமல், மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறார் என்பதால் அவரை வாசிக்கவும் - வழிகாட்டியாகக் கொள்ளவுமான முயற்சியாகவே நினைவுகூரப்படுகிறார்

.மார்க்ஸை புரிந்து கொள்வதென்பது கதைகேட்பதல்ல. ‘சூத்திரமாய் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதல்ல. சமகால உலகைப் புரிந்து கொள்வதும், அதை மாற்றத் தோள் கொடுப்பதும், அதற்கு மார்க்சியத்தைக் கருவியாகக் கொள்வதும்தான்.


மார்க்ஸை நூறு பரிணாமங்களில் வாசிக்கலாம் எனினும் குறைந்தபட்சம் நான்கு பரிணாமங்கள் தவிர்க்க இயலாததாகும். 


முதலாவதாக, மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு.இரண்டாவதாக, மார்க்ஸ் விட்டுச்சென்ற சித்தாந்தம், மூன்றாவதாக மார்க்ஸியத்தின் இன்றைய பொருத்தப்பாடு, நான்காவதாக நாம் இப்போது செய்யவேண்டியது என்ன என்பதாகும்?இதனை சற்று விரிவாகப் பார்ப்போம். 


அதற்கு முன் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். “ மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும்பற்றிய அறிவைப் பெற்று உங்கள் சிந்தனையை வளமாக்கிக் கொள்ளும்போது மட்டுமே உங்களால் கம்யூனிஸ்ட் ஆக முடியும்,” இது லெனின் வகுத்த அளவுகோலாகும். 


ஆகவே கம்யூனிஸ்ட் ஆக விரும்புகிற ஒவ்வொருவரும் அதற்கு முயற்சித்தே ஆகவேண்டும், “விஞ்ஞானத்தில் ராஜபாட்டை என்பது கிடையாது. அதன் வழுக்கக்கூடிய செங்குத்தானப் பாதைகளில் தளராமன உறுதியோடு ஏறிச்செல்வதற்குத் தயங்காதார்களுக்கு மட்டுமே அதன் ஒளிமிகுந்த சிகரங்களை எட்டும் வாய்ப்புக்கிடைக்கும்.”


மார்க்ஸ் எப்படி மார்க்சிஸ்ட் ஆனார்?



முதலில், காரல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றை உணர்ச்சி கொப்பளிக்கும் கதையாக எளிமைப்படுத்தி சொல்லுவது மிகமிக ஆரம்ப நிலைத் தேவையாகும். சாமிநாத சர்மா எழுதிய காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறுஇதற்கு உதவலாம். வேறு பல மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்று நூல்களும் உள்ளன. தேடிப் பயிலலாம். இப்போது ஒலி வடிவிலும் கிடைக்கிறது.


மார்க்ஸைப் போல் அவமதிப்புக்கும் இன்னலுக்கும் ஆளான இன்னொருவரை சொல்ல முடியாது. துன்ப துயரங்களை இழப்புகளைத் தாங்கி மானுட மேன்மைக்கு உழைத்தவர் இன்னொருவரில்லை எனச் சொல்லலாம். அனைத்து நாடுகளின் உழைப்பாளருக்காகப் போராடிய அவர், தான் எந்த நாட்டுக் குடிமகனும் அல்ல என அறிவிக்க வேண்டிய அளவுக்கு வேட்டையாடப்பட்டார். கடன், வறுமை என வதைப் பட்டார். மார்க்ஸ் - ஜென்னி - ஏங்கெல்ஸ் மூவரின் வாழ்க்கையும் பின்னிப்பிணைந்த அர்ப்பணிப்பின் முன்னுதாரணம்..


சென்டிமெண்ட் அட்டாச்மெண்ட் என்பார்களே அத்தகு உணர்வுப்பூர்வமான பிணைப்புக்கு இந்த வாழ்க்கை வரலாற்றை அறிவது இன்றியமையாததாகும். சிகரத்தில் ஏற முதல் படிக்கட்டு அதுவே.அது மட்டும் போதாது ஏனெனில் மார்க்ஸ் தீர்க்கதரிசியோ தேவதூதனோ அல்ல; அவர் செயலுக்கு வழிகாட்டியாக சித்தாந்தம் தந்த சமூக விஞ்ஞானி. எனவே, “மார்க்ஸ் எப்படி மார்க்சிஸ்ட் ஆனார்?” என்கிற கேள்வியை நாம் கேட்டு விடை தேடியாக வேண்டும். வேடிக்கையாகத் தோன்றலாம், ஆயினும் ஆழந்த பொருள்மிகு கேள்வி இது. 


ஹென்ரி வோல்கோவ் எழுதிய மார்க்ஸ்பிறந்தார் எனும் அரிய நூல் ஸமாஸ்கோ வெளீயீடு] மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தின் வளர்ச்சியின் வரலாற்றை நமக்கு ஓரளவு சொல்லும். மார்க்ஸ் வெறும் கற்பனையிலோ கனவிலோ தன் சித்தாந்தத்தை வடித்தெடுக்கவில்லை. அதற்காக அவர் படித்து குவித்த நூல்கள் கணக்கில் அடங்கா.


முன்னோர்களின் அறிவுச் செல்வம் முழுவதும்...



இந்நூலில் ஓரிடத்தில் பொருத்தமாக ஹென்ரி சொல்வார், “இருபத்தாறு வயதில் மார்க்ஸ் உலகத்தைப்பற்றிப் புதுக்கண்ணோட்டத்தின் சிகரங்களை அடைந்துவிட்டார். ஒப்புவமையில்லாத தத்துவச் சிந்தனைக்குப் பிறகு இது சாத்தியமாயிற்று. தத்துவஞானம், சமூகச்சிந்தனை ஆகிய துறைகளில் ஐரோப்பியக் கலாச்சாரத்தின் மொத்த பாரம்பரியத்தையும் அவர் தன் வயப்படுத்திக்கொண்டு விமர்சன ரீதியில் திருத்தி வளர்த்தி அமைத்தார். ஃபாலேஸ் முதல் ஃபாயர்பாஹ்மற்றும் மோஸஸ் ஹேஸ் முடிய ஒரு சுதந்திரமான தத்துவக்ஞானியைக்கூட - அவர் எவ்வளவு சாதாரணமானவராக இருந்தாலும் மார்க்ஸ் ஒதுக்கவில்லை.
ஹொரடோடஸ் மற்றும் ப்ளூடார்க் முதல் கிஸோ மற்றும் தியேர் முடியஎல்லா வரலாற்றாசிரியர்கள் எழுதிய வரலாற்று நூல்கள்அனைத்தையும் படித்தார் . பிளாட்டோ முதல் லெரூ மற்றும் வைட்லிங் முடிய எல்லா சமூகக் கற்பனாவாதிகள் எழுதிய புத்தகங்களையும் படித்தார். ஆடம் ஸ்மித் முதல் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் வரை முக்கியமான அரசியல் பொருளாதார நூல்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்தார். இறுதியாக மார்க்ஸ் இலக்கியச் செல்வத்தின் எல்லாத் துறைகளையும் - லுக்ரெத்சியஸ் காருசின் கவிதையிலிருந்து ஹென்ரிக் ஹெய்ன் கவிதைமுடிய, எஸ்கிலசின் சோகநாடகங்களிலிருந்து ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் முடிய, பிளாட்டோவின் உரையாடல் தொடங்கி பால்ஸாக்கின் வசனம் முடிய ஆழ்ந்து படித்தார். ஆக தம் முன்னோர்களின் அறிவுச் செல்வம்எதையும் நிராகரிக்காமல் அனைத்தையும் உள்வாங்கினார். விமர்சனம் செய்தார்.’


அதன் அடித்தளத்தில் அவர் கண்டு சொன்ன உண்மைகள் இன்றும் காலத்தை விஞ்சிநிற்கின்றன.
நம் காலத்துக்கு முந்தைய அறிவுச் செல்வம்எதையும் அவர் நிராகரிக்கச் சொல்லவில்லை, அவரும் நிராகரிக்கவில்லை. மாறாக விமர்சனப்பூர்வமாய் உள்வாங்கினார். நமக்கும் அவ்வாறே வழிகாட்டியுள்ளார்.


மார்க்ஸ் வரலாற்றை இன்னும் ஆழமாக அறிய பி.என்.பெதோசியோவ், இரீன்பாக், எ.ஐ.கோல்மான், என்.ஒய்.கோல்பிஸ்கி, பி.ஏ.கிரிலோவ், ஐ.ஐ.குச்மினோவ், ஏ.ஐ.மாலீஷ், வி.ஜி. மோஸோலோவ், யெவ்கீனியா, ஸ்தெப்பனோவா ஆகிய ஒன்பது பேர் கூட்டாக ஆராய்ந்து எழுதிய 1308 பக்கங்கள் கொண்ட நூல் காரல்மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு [அலைகள் வெளியீடு] உதவும். வாய்ப்புள்ளோர் வாசித்தறிக. ஆங்கிலம் தெரிந்தோருக்கு மேலும் பலப்பல நூல்களோடு இன்னும் பெரிய வாசல் திறந்திருக்கிறது; உள்ளே நுழைந்தால் மூழ்கி முத்தெடுக்கலாம்.


மார்க்ஸ் கண்டுபிடித்தது என்ன?



இரண்டாவதாக மார்க்சியம் என்று எதைச் சொல்கிறோம் என்பதை அறிவதாகும். இதற்கு எளிமையான விடைசொல்வதெனில் இதற்கு முந்தைய தத்துவ ஆசிரியர்கள் உலகை அதன் துன்பதுயரங்களைக் குறித்து வியாக்கியானம் செய்தார்கள்; ஆனால் அதை மாற்றுவதற்கு வழி சொன்னதுதான் மார்க்சியம்.


ஏங்கெல்ஸ் சொல்லுவார், “இயற்கையின் உயிரியல் வளர்ச்சி விதியை டார்வின்கண்டு பிடித்ததைப் போல், மனித வரலாற்றின் வளர்ச்சியின் விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.’’ “மார்க்ஸிய சித்தாந்தம் சமுதாயச் சிந்தனையின் பொது ஓட்டத்திற்கு அப்பாலோ, உலக நாகரிக வளர்ச்சிக்கு அப்பாலோ தோன்றி வரவில்லை. இயற்கையையும் சமுதாய வாழ்க்கையையும் படித்து ஆராய்வதில்மனித குலம் இதுவரை செய்துள்ள ஆகப்பெரிய கண்டுபிடிப்புகளின் சரியான தார்மீக வாரிசாகவே வந்திருக்கிறது. அது சமுதாயச் சிந்தனையில், குறிப்பாக ஜெர்மனியதத்துவஞானம், பிரிட்டிஷ் அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் ஆகிய சமுதாயச் சிந்தனையின் ஆகச் சிறப்புமிக்க முன்னேற்றம் அனைத்திலும் ஆதாரமாக அமைந்திருக்கிறது” என்கின்றனர் பெதோசியோவும் ஏனையோரும்.


“மனித சிந்தனை தோற்றுவித்திருந்தவை யாவற்றையும் மார்க்ஸ் மறுபரிசீலனை செய்தார், விமர்சனத்துக்கு உட்படுத்தினார், தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கொண்டு சரிபார்த்தார். முதலாளித்துவ வரம்பால்கட்டுப்படுத்தப்பட்டோரால் அல்லது தப்பெண்ணங்களால் கட்டுண்டோரால் வந்தடைய முடியாத முடிவுகளை இவ்வழியில் வந்தடைந்து அவர் ஸமார்க்சியத்தை] வரையறுத்துக் கொடுத்தார்” என்பார் லெனின்.

அந்த மார்க்சின் படைப்புகளை முழுமையாக வாசித்துவிட வேண்டும் என்பது ஆசையாய் எழுவது இயல்பு ஆயின் எளிதல்ல. அதற்கு பெரு முயற்சி தேவை. முயன்றால் முடியாததுண்டோ. தற்போது 3500 பக்கங்களில் 12 பெரும் தொகுதிகளாக மார்க்சின் அறிவுச் செல்வத்தை பாரதி புத்தகாலயம் கொண்டு வந்துள்ளது. அதை எப்படி வாசிப்பது? எங்கிருந்து தொடங்குவது என்பது முக்கியக் கேள்வியே!


தேவை : பொறுமை, தேடல், உழைப்பு



மார்க்ஸைப் பற்றி குறைந்த பட்ச அறிவுடன் மட்டுமேசமூக - அறிவியலாளர்கள் மனநிறைவு கொண்டிருப்பதாகவும் தோன்றுகிறது. தங்களுடைய அறியாமை மிக்கஅறிக்கைகள் குறித்து சமூக - ஆய்வு சாம்ராஜ்யத்திலிருக்கும் அதிகாரமும் தகுதியும் வாய்ந்த எவரும் சவால்விடாமல் இருந்துவிடுவதன் காரணமாகத்தான் இத்துறையில் நிபுணர்களாக நடிப்பது பாதுகாப்பானது என்றுஅவர்கள் கருதிக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது” என்பார் எரிக் ஃபிரோம்.


ஆக, மார்க்ஸை பிழையற பயிலுவதென்பதும் சற்றுபொறுமையையும் தேடலையும் உழைப்பையும் கோருவதாகவே அமையும். ஏனெனில் மார்க்ஸை பயில இரண்டு இடையூறுகளை எதிர்கொண்டாக வேண்டும்.முதலாவதாக, இன்று சமூகத்தில் பழகிப்போன சிந்தனைத் தடத்துக்கு மாறாக மார்க்சிய சிந்தனை இருப்பதும், மார்க்ஸ் எழுத்துகளில் விரவியிருக்கும் வரலாற்றுத் தகவல்கள் பல இன்றைய வாசகர்களுக்கு அறிமுகம் இல்லாமல் இருப்பதுமாகும். இரண்டாவதாக, மார்க்ஸ் எழுத்துகள் ஊடேயிருக்கும் விவரங்கள் குறித்துவிளக்கம் தேட வேண்டியிருக்கும்; அப்போது கிடைக்கும்பெரும்பாலான விளக்கங்களோ திரிபு வாதங்களுக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன.


(தொடரும்)


நன்றி : தீக்கதிர் , 14/10/2017.

0 comments :

Post a Comment