வெற்றியின் விலை இரண்டு கோடி உயிர்

Posted by அகத்தீ Labels:







புரட்சிப் பெருநதி - 50



வெற்றியின் விலை 
இரண்டு கோடி உயிர்




 



பின்வாங்கும் சூழலிலும் 1523 தொழிற்சாலைகளை அதிலும் 1360 பெரும் தொழிற்சாலைகளை அப்படியே பெயர்த்து பாதுகாப்பான கிழக்குப் பகுதிக்கு 
கொண்டு செல்ல திட்டமிட்டு செயல்படுத்திய சோவியத்தின் 
அசுர சாதனையைக் கண்டு எதிரிகளே மிரண்டனர்.






- சு.பொ.அகத்தியலிங்கம்



“அந்த கிராமத்தில் ஒரு புல்புதர் மண்டிய ஒரு மண்மேட்டை அந்தக் குழந்தைகள் கண்டனர்.அங்கு யாரோ புதைக்கப்பட்டிருக்க வேண்டும்? அது ஒரு காட்டுப்பகுதி ; அது ஒரு கட்சி உறுப்பினர்நிலமாகவும் இருக்கக்கூடும் . அது யுத்தத்தில் காணாமல் போனவர் சிலரின் கல்லறையாக இருக்கக்கூடும் ; அடையாளம் காண முடியாதவர்களின் கல்லறை என எதுவுமே தாய் நாட்டில் இருக்கக்கூடாது. ஒவ்வொன்றையும் நினைவு கூர வேண்டும்” என எண்ணினர்.



”லெனினுக்கு பிறகு ஸ்டாலின் பொறுப்புக்கு வந்தார். தொழில் வளர்ச்சியில் ரஷ்யா முனைந்த போது பகைமை கொண்ட முதலாளித்துவ உலகில் தனியொரு நாடாக சோவியத் யூனியன் முட்டிமோதி முன்னேற வேண்டியிருந்தது . கடனோ , உதவியோ, தொழில்நுட்ப ஆலோசனையோ ,கச்சாப் பொருளோ அளிக்க எந்த நாடும் முன்வரவில்லை .தன் கையே தனக்கு உதவி என போராடவேண்டிய நிலை .
இதன் சுமையையும் வலியையும் தொழிலாளிகளும் விவசாயிகளுமே முழுமையாகத் தாங்க வேண்டியிருந்தது . இதன் இன்னொரு முகமான சில அடக்குமுறைகளும் கெடுபிடிகளும் இருக்கத்தான் செய்தன .



கிறிஸ் ஹார்மன் கூறுகிறார் ,“ 1930 களில் சோவியத் யூனியனின் பொருளாதார வெற்றியைப் பார்த்து மேற்கத்தியவர்கள் மிரண்டுபோனார்கள் . 1950 களிலும் 1960 களின் ஆரம்பத்திலும் அதன் வேகமான தொழில் முன்னேற்றத்தைப் பார்த்து மூன்றாம் உலகம் மிரண்டு போனது. அதன் குறைபாடுகள் என்னவாக இருந்த போதிலும் உலகின் மற்ற பகுதிகளின் சந்தைப் பொருளாதாரத்தைச் சுற்றி வளைக்கும் சிக்கல்களிலிருந்து மீள ஸ்டாலினிசம் ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டதாய்த் தோன்றியது . வாழ்நாள் முழுக்க புரட்சியை எதிர்த்து வந்த பிரிட்டிஷ் ஃபேபியர்களான சிட்னியும் ,பீட்ரிஸ் வெப்பும் 1930 களின் மத்தியில் ரஷ்யா சென்றனர் , ரஷ்யாவால் மிகவும் ஈர்க்கப்பட்டனர் , தி சோவியத் யூனியன் - எ நியூ சிவிலிசேஷன் என்று நூல் எழுதினர்.”


வறுமையிலும் அறியாமையிலும் பல நூறு ஆண்டுகள் வதைபட்ட ரஷ்ய மக்கள் நூறு சதவீதம் எழுத்தறிவு பெற்றனர்.இல்லந்தோறும் புன்சிரிப்பு காட்டியது 



இன்பம்.சோவியத்தின் அறிவியல் வளர்ச்சியும் உலகோரை வியக்கவைத்தது. அக்கதாமீஷியன் பாவ்லா உயர்நரம்பு மண்டலம் தொடர்பாகக் கண்டறிந்தது - லேபிதெவும், ஃபவோர்ஸ்கியும் கண்டுபிடித்த செயற்கை உரங்கள், செயற்கை ரப்பர், விண்வெளியியல், இயற்பியல், வேதியியல் சாதனைகள் என இருபதாண்டு காலப்பகுதியில் உலகைத் திரும்பிப்பார்க்க வைத்தது .


உலகெங்கும் உள்ள ஏகாதிபத்தியக் கழுகுகள் சோவியத் பூமியை அழிக்க வட்டமிட்டபடியே இருந்தன. முதல் உலக யுத்தத்தின் முடிவில் ஏற்பட்ட அநீதியான சந்தைப் பங்கீடு இன்னொரு யுத்தத்துக்கான விதையை தூவியிருந்தது. ஜெர்மனியில் ஹிட்லரும் இத்தாலியில் முசோலினியும் ஆபத்தான பாசிச, நாசிச சித்தாந்தங்களோடு எழுந்தனர். யுத்தமேகம் மிரட்டியது.1939இல் ஜப்பான் திடீரென சோவியத்தின் நட்பு நாடான மங்கோலியா மீது படை எடுத்தது - அதே ஆண்டு செப்டம்பர்முதல் நாள் போலந்து மீது ஜெர்மானியப் படையைஏவினான் ஹிட்லர்.


ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட அச்சுநாடுகள் ஒருபுறம் திரண்டன; பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா நேசநாடுகளாய்க் கைகோர்க்க ஸ்டாலின் சொன்ன யோசனையை முதலில்ஏற்க மறுத்தன. இதனால் ஜெர்மனியோடு ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஸ்டாலின் செய்து கொண்டார்.இதனால் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ரஷ்யாவுக்கு மூச்சுவிட அவகாசம் கிடைத்தது .போலந்து முப்பதைந்தே நாட்களில் வீழ்ந்தது - நாற்பது நாளில் பிரான்ஸ் வீழ்ந்தது - பெல்ஜியமோ ஒரே நாளில் சரணடைந்தது - நார்வே, டென்மார்க், நெதர்லாந்து என அடுத்தடுத்து அடி பணிந்தன.


 ஹிட்லர் கொக்கரித்தான்.1939 ஆகஸ்ட் 22 அன்று ஹிட்லர் திமிரோடு சொன்னான், “போலந்தில் மக்கள் அழிக்கப்படுவார்கள். அங்குஜெர்மானியர்கள் குடியேறுவார்கள் .. ஏனைய நாடுகளைப்பொறுத்தவரையும் ரஷ்யாவின் கதியும் அவ்வாறேதான் இருக்கும்... நாங்கள் சோவியத் யூனியனை முறியடிப் போம் பின்னர் உலகில் ஜெர்மானியர் ஆட்சி உதயமாகும்.”ரஷ்யா அழிந்தால் நல்லது என்றே அமெரிக்காவும் பிரிட்டனும் கணக்குப் போட்டன .


ஹிட்லரும் அவனது கூட்டாளிகளும் 14 நாளில் ரஷ்யாவை வீழ்த்தும் நோக்குடன் 1941 ஜூலை 22 ஆம் நாள் சோவியத் மீது படையை ஏவினர்.ஆனால் எல்லா யுத்தக் கணக்கும் பொய்த்தன. 3000 முதல் 6200 கி.மீ. விரிந்து பரந்த பிரதேசம் முழுவதும் சோவியத் வீரர்கள் வரலாறு முன்னெப்போதும் காணாத வீரத்துடனும் அர்ப்பணிப்புடனும் போராடினர்.


ஒன்றல்ல; பத்தல்ல; நூறல்ல; 1418 நாட்கள் யுத்தநெருப்பு பற்றி எரிந்தது. சோவியத் யூனியன் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒன்பது அல்லது பத்து உயிர்களை இழந்தது - மணிக்கு 587 உயிர்கள் - ஒவ்வொரு நாளும் 14,000 பேர். ஆக மொத்தம் இரண்டு கோடி சோவியத் மக்கள் உயிர்ப் பலியாகினர்.


பல சோவியத் கிராமங்கள் மொத்தமாக அழிக்கப் பட்டன. உதாரணமாக ஓலா என்ற பைலோ ரஷ்யக் கிராமத்தில் 950 குழந்தைகள் உட்பட 1758 பேர்- அதாவது ஒட்டுமொத்த கிராம மக்களும் உயிரோடு சுட்டெரிக்கப்பட்டனர். வி.ஒய் திக்குன் என்கிற ஒருவர் மட்டும் எரியும் நெருப்பிலிருந்து தீக்காயங்களோடு எப்படியோ தப்பினார்.இப்படி சோகக்கதை சொல்லும் கிராமங்கள் அநேகம் .



பெர்லினில் செங்கொடியை பறக்கவிடச் சென்ற குழுவில் இடம் பெற்ற வீரர் வாஸ்ஸிலி ஸுப்போட்டின் எழுதிய நினைவுக் குறிப்புகளும் நாவலும் பல செய்தி சொல்லும். “அந்தக் கிராமத்தில்..” என அவர் எழுதிய நாசமாக்கப்பட்ட ஓர் கிராமத்தின் கதையில் வர்ணிக்கப்பட்ட காட்சியே ஆரம்பத்தில் இடம் பெற்றது. 
தியாகத்தில் மூழ்கியதும் தியாகத்தைப் போற்றியதும் அவர்களின் தனித்த உயர் பண்பு . 



“காலமென்னும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் நீதி தேவனே! கொடிய பேராசையினால் மாதர்களையும் பெண்களையும் கொன்று தின்னும் அந்த கொடிய நரமாமிச பட்சிணியை நான் சபிப்பதற்கான வலிமையை எனக்குக் கொடு!” என கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் எழுதினார்.


இரண்டாவது போர்முனையைத் துவக்குக என ஸ்டாலின் தொடர்ந்து கேட்டுக்கொண்டும் பிரிட்டனும் அமெரிக்காவும் காலதாமதம் செய்தது . அமெரிக்க அதிபர் ட்ரூமன் சொன்னார் ,” ஜெர்மன் ஜெயித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் ரஷ்யாவுக்கு உதவ வேண்டும் ; ரஷ்யா ஜெயித்துக் கொண்டிருந்தால் ஜெர்ம னிக்கு உதவ வேண்டும் .


அவர்கள் ஒருவருக்கொருவர் அதிகம் பேரைக் கொன்று குவிக்க நாம் உதவுவோம்.” இப்படி பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் சொல்லவில்லையே தவிர செயல்பாடு அப்படித்தான் இருந்தது.செஞ்சதுக்கத்தில் வெற்றிப் பேரணி நடத்த நாள் குறித்து அழைப்பிதழும் அடித்துவிட்டான் ஹிட்லர் ; ஆனால் குலையா உறுதியுடன் எதிர்த்து நின்றதோடு 1941 நவம்பர் 7 ஆம் நாள் புரட்சி தின விழா பேரணியை யுத்த இடிபாடுகளுக்கு இடையிலும் நடத்தி சாதித்தார் ஸ்டாலின்.


ஆரம்பத்தில் பெரும் சேதமும் பின்னடைவும் இருந்தது. சோவியத் நிர்மாணத்தின் உயிர் சாட்சியாய்இருந்த மாபெரும் நிப்பர் அணை எதிரிக்கு பயன்படக் கூடாதென தகர்த்தெறிய எவ்வளவு நெஞ்சுரம் வேண்டும்! எவ்வளவு யோசனைக்கும் கண்ணீருக்கும் இடையில் சோவியத் தலைமை அந்த முடிவெடுத்திருக்கும்.



இரும்பு மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழில்கள் நிரம்பிய பிரதேசங்களைக் கைப்பற்றி சோவியத்துக்கு பெரும் மூச்சுத் திணறலைக் கொடுக்க ஹிட்லர் வியூகம் வகுத்து முன்னேறிக் கொண்டிருந்தான் அப்போது பின்வாங்கும் சூழலிலும் 1523 தொழிற்சாலைகளை அதிலும் 1360 பெரும் தொழிற்சாலைகளை அப்படியே பெயர்த்து பாதுகாப்பான கிழக்குப் பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு செயல்படுத்திய சோவியத்தின் அசுர சாதனையைக் கண்டு எதிரிகளே மிரண்டனர்.



பிரிட்டிஷ் யுத்த வரலாற்றாசிரியன் எழுதுகிறான், “நீங்கள் நேர்மையானவராக இருந்தால் - நீங்கள் கம்யூனிசத்தைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருந்தாலும் 1942 இல் ஸ்டாலின்கிராடில் ஜெர்மானியர்களை முறியடிப்பதில் ரஷ்யர்களும் அவர்களது ராணுவத் தலைமையும் புலப்படுத்திய துணிவு ,சகிப்புத் தன்மை ,திறமை ஆகியவற்றுக்காக அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது . ஸ்டாலின்கிராடை தனது உந்து தளமாகக் கொண்டு போரின் போக்கையே தனக்குச் சாதகமாகவும் ;மேலை நாடுகளுக்கு அனுகூலமாகவும் மாற்றிவிட்டனர் .”



ஹிட்லர், முசோலினி கனவு தவிடுபொடியானது .1945 மே 8 ஆம் நாள் செம்படை ஜெர்மனியின் தலைநகர்பெர்லினில் நுழைந்து. ரிச்ஸ்டாக் எனும் அரசு கோட்டையில்செங்கொடியைப் பறக்கவிட்டது, யுத்தம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது . அங்கொன்று இங்கொன்றாக சில தாக்குதல்கள் தொடர்ந்தன . எந்தத் தேவையும் இன்றி ஜப்பானில் ஹிரோஷிமா ,நாகசாகியில் அமெரிக்கா ஆகஸ்ட் மாதம் அணுகுண்டை வீசி மனித நாகரீகத்தை தலைகுனிய வைத்தது. 


இரண்டு கோடி ரஷ்யர்கள் உள்ளிட்ட ஐந்து கோடிப்பேரைக் காவு கொண்ட – பல நகரங்களை - கிராமங்களை தீக்கிரையாக்கிய - பேரழிவு தாண்டவமாடிய முழுதாக ஆறுவருடம் ஒரு நாள் - ஆக மொத்தம் 2138 நாட்கள் இரத்தத் தாண்டவமாடிய இரண்டாவது உலகமகா யுத்தம். 1945 செப்டம்பர் 2 ஆம் நாள் அதிகாரப் பூர்வமாக முடிவுக்கு வந்தது .


ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள டிரெப்டோ பூங்காவுக்குச் சென்றால் ஜெர்மன் குழந்தையைக் கையிலேந்திய ஒரு ரஷ்ய ராணுவ வீரரின் சிலை கம்பீரமாய் நிற்பதைக் காணலாம் ? ஏன் இப்படி ஒரு சிலை ? பெர்லினில் ரஷ்ய ராணுவம் நுழைந்து ஹிட்லரின் கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருந்த போது ரஷ்யத் தளபதி மார்ஷல் ஜூக்கோவ் ஓர் உத்தரவிட்டார்.



“எட்டு வயதுவரை உள்ள குழந்தைகளுக்காக பால் விநியோகம் தங்கு தடையின்றி நடக்க வேண்டும். பெர்லினுக்கு பால் கொண்டுவர மத்திய பால்பண்ணைக்கு 25 லாரிகளை ஒதுக்கி வைக்குமாறு மேஷர் ஜெனரல் ஷிஷினுக்கு ஆணையிடப்படுகிறது. இதுகுறித்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை ராணுவக் கவுன்சிலுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.”அந்தச் சிலை சொல்லிக் கொண்டிருப்பது இந்த செய்தியை மட்டுமல்ல; சோசலிசத்தின் உயர்ந்தபட்ச மனித நேயத்தையும்தான்.


உலகப் போரை முன்வைத்து மெய்ச் சம்பவங்களின் பின்புலத்தில் எழுதப்பட்ட சோவியத் கதைகள் , நாவல்கள், கவிதைகள், ஓவியங்கள், சிற்பங்கள், நாடகங்கள்,திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அர்ப்பணிப்பையும் சமா தானத்தையும் ஒருங்கே உயிர்ப்புடன் பேசிக்கொண்டே இருக்கின்றன.


இந்த உலகப் போர் முடிவு வரலாற்றில் மேலும் பல புதிய எழுச்சி அத்தியாயங்களை எழுதிச் சென்றது.புரட்சி 


தொடரும்

நன்றி : தீக்கதி , 16/10/2017.

0 comments :

Post a Comment