மார்க்ஸை பயிலுவதன் பொருள் … [2]

Posted by அகத்தீ Labels:



மார்க்ஸை 
பயிலுவதன் பொருள் … [2]

 


சு.பொ.அகத்தியலிங்கம் .


இன்றும் ஒரு சதவீதம் பேருக்கா இவ்வுலகம் அல்லது தொண்ணூற்றி ஒன்பது சதம் பேருக்கா உலகம் என வெடித்தெழும் கேள்வி உலகெங்கும் மார்க்சியத்தின் தேவையை பொருத்தத்தை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது .





முன்னே இருக்கும் வழிகாட்டிகள்


இந்த பிரச்சனையிலிருந்து விடுபட எர்னஸ்ட் பிஷர் எழுதிய மார்க்ஸ் உண்மையில் கூறியதென்ன , டேவிட் ரியாஜெனோவ் எழுதிய மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்வும் எழுத்தும் , மாரீஸ் கார்ன்ஃபோர்த் எழுதிய மார்க்சிய மூலநூல் வாசிப்புக்கு ஒரு கையேடு ஆகிய மூன்று நூல்களும் [ பாரதி புத்தகாலய வெளியீடு ]ஓரளவு உதவக்கூடும் . வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதிய மார்க்சிய செவ்வியல் நூல் வாசிப்பு வழிகாட்டி என்ற நூலையும் வாசிப்பது அவசியம்.


மார்க்ஸிடம் மார்க்சியம் துவங்குகிறது ; அவருடன் அது முடிந்துவிடவில்லை.” என்பார் லெனின் . ஆம் சமூக விஞ்ஞானமாக அது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகிறது . அதன் வளர்ச்சியோடு நாம் பயணிக்க மூலத்தை சரியான கோணத்தில் பயில மேற்படி மூன்று நூல்களும் வழிகாட்டுகிறது எனில் மிகை அல்ல .


இங்கே நாம் சுட்டுவதன் ஆழத்தையும் அகலத்தையும் அறிய எஸ் .வி .ராஜதுரை தமிழாக்கம் , அறிமுகவுரை ,விளக்கக் குறிப்புகளுடன் வெளிவந்துள்ள - 519 பக்க நூல் காரல் மார்கஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதலில் கற்க முயலலாம் . அதில் நிறைய விபரங்கள் உள்ளன . அறிக்கையில் சுட்டப்பட்டுள்ள வரலாறு ,சித்தாந்தம் ஒவ்வொன்று குறித்தும் விளக்கம் கிடைக்கிறது . ஆகவே கம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்ஸ் எங்கெல்ஸ் என்ன நோக்கில் எழுதினாரோ அந்த நோக்கில் புரிந்து கொள்ள முடிகிறது .


உண்மையில் சொன்னது என்ன ?


கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எனும் நூலின் பெயரிலேயே கட்சி என்று உள்ளது ; அப்படியாயின் எந்த நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை அது என்கிற கேள்வி இயல்பாகவே எழும் . அது குறித்து இந்நூலில் எஸ் வி ராஜதுரை தந்துள்ள விளக்கத்தை பார்ப்போம் ;


“..... மேற்சொன்ன ஆவணம் கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயரிடப்பட்டிருந்தாலும் ,அப்படிப்பட்ட அமைப்பு [ கம்யூனிஸ்ட் கட்சி ] ஏதேனும் இருப்பதாக அறிக்கை கூறுவதில்லை ; மேலும் அரசியலில் நவீன காலக் கட்சிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பு ,எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் கட்சி [ party ] எனும் சொல் ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியை அல்ல ,முதன்மையாக ஒரு சிந்தனைப் போக்கையோ [ tendency] கருத்தோட்டத்தையோதான் [ current of opinion ] குறித்தது.”

ஆமாம் நம்ம ஊரிலே கூட எரிந்த கட்சி , எரியாத கட்சி என்ற சொல்வழக்கு உண்டு ; அதற்குக் நவீன கட்சிக்கும் என்ன தொடர்பு ?

இது வெறும் தகவல் சார்ந்த செய்தி மட்டுமல்ல ; அதற்கும் மேல் . முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட போது வெளியிட்ட கம்யூனிஸ்ட் லீக் அல்லது கம்யூனிஸ்ட் கழகத்தின் பெயர் கூட அதில் இடம் பெறவில்லை . ஏனெனில் உழைக்கும் வர்க்க விடுதலைக்கு ஒரு சித்தாந்த அடித்தளமாக அறைகூவலாக வெளிவந்ததே அவ்வறிக்கை .எனவே அது ஒரு குறிப்பிட்ட அமைப்பின் குரலாக வெளிப்படவில்லை . அதே சமயம் உழைப்பாளி மக்களுக்கென ஒரு அமைப்பு மிகமிகத் தேவை ; அது புரட்சிகர சித்தாந்தத்தால் வழிகாட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என மார்க்ஸ் கருதினார் . அதன் ஒரு கூறுதான் அவரால் வழிநடத்தப்பட்ட முதலாம் அகிலம் எனப்படும் சர்வதேச தொழிலாளர் கழகமாகும் . இந்த அமைப்பை மார்க்ஸின் மகத்தான சாதனைகளில் ஒன்றென்பார் எங்கெல்ஸ்.


நாம் புரிந்து கொள்ளவேண்டிய இன்னொரு செய்தி உண்டு . “ உலகத் தொழிலார்களே ஒன்றுபடுங்கள் !” என்ற முழக்கம் கம்யூனிஸ்ட் அறிக்கையில் இடம் பெற்றதும் ; இன்றும் அது உலகை ஈர்க்கும் முழக்கமாகவே உள்ளதும் மறுக்க இயலாது . ஆனால் மார்க்ஸ் உண்மையில் அப்படி எழுதவே இல்லை . ஜெர்மன் மூலத்தில் PROLETARIANS OF ALL COUNTRIRS ,UNITE என்றே உள்ளது அதாவது அனைத்து நாட்டுப் பாட்டாளிகளே ஒன்றுபடுங்கள் என்றே இதன் பொருள் . பின்னர் மொழி பெயர்த்தவர்கள் WORKING MEN OF ALL COUNTRIES ,UNITE அதாவது அனைத்து நாட்டு உழைக்கும் மனிதர்களே ஒன்றுபடுங்கள் என்றே உள்ளது ; இது மொழி பெயர்ப்பில் நிகழந்த மாற்றம் . இதனைப் பிடித்துக் கொண்டு உழைக்கும் ஆண்களைத்தான் மார்க்ஸ் சொன்னார் பெண்களை கண்டு கொள்ளவில்லை எனக் குறுக்குசால் ஓட்டுவோர் உண்டு . உலகம் முழுவதையும் ஒற்றை அலகாக மார்க்ஸ் கருதவில்லை . வெவ்வேறு நாடு ,வெவ்வேறு மொழி , வெவ்வேறு இனம் என்கிற சமூக யதார்த்தத்தை மார்க்ஸ் ஒப்புக் கொண்டு ; அந்த யதார்த்தத்தினூடே அனைத்து நாட்டுப் பாட்டாளிகளும் ஒன்றுபடுங்கள் என்று நுட்பமாகப் பதிந்தார் . அதனை சரியாக உள்வாங்கினோமா ?


பாடுபடும் தொழிலாளிக்கு சாதி இல்லை ,மதம் இல்லை எனச் சொல்லி வர்க்க ஒற்றுமைக்கு குரல் கொடுத்தது சரியாயினும் ; அதைத் தொடர்ந்து பாடுபடும் தொழிலாளிக்கு நாடு இல்லை - மொழி இல்லை - இனம் இல்லை என கோஷமிட்டதும் ; அது சார்ந்து எழுகிற பல கோரிக்கைகளை நியாயமான வெளிப்பாடுகளை இனம் காணுவதில் சிக்கல்களை சில நேரம் எதிர்கொண்டதும் உண்டு . ஆயினும் இங்கு நாம் மொழிவழி மாநிலக் கோரிக்கைக்கு முன்நின்று போராடியதும் ; தொடர்ந்து இத்திக்கில் உரிய கவனம் செலுத்துவதும் நல்ல கூறு .


இதன் பொருள் குறுகிய தேசபக்திக்கு / பிரிவினை வெறிக்கு துணை போவது அல்ல . முதலாம் உலகப்போரில் குறுகிய தேசபக்தியோடு யுத்தத்தை ஆதரிக்கக் கூடாது என வாதிட்டதும் ; இரண்டாம் உலகப்போரில் பாசிசத்தை எதிர்க்க தேசபதியைத் தூண்டிவிட்டதும் ரஷ்ய அனுபவம் . ஆக , எது தொழிலாளி வர்க்கத்தின் - ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு உதவும் என்கிற அனுபவக் கல்லிலே உரசியே எந்த முடிவையும் மேற்கொள்ள முடியும் . நம் அனுபவமும் அதுதானே !



இவ்வாறு மார்க்ஸை மிகச்சரியான வரலாற்று பின்புலத்தோடும் சித்தாந்தச் சார்ப்போடும் புரிந்து கொள்ள ஆங்கிலத்தில் நூல்கள் பல வந்தவண்ணம் உள்ளன .தமிழில் மொழிபெயர்ப்பாக அவை வரத்துவங்கி இருப்பது ஆரோக்கியமானது . அந்தவகையில் முன் குறிப்பிட்ட மூன்று நூல்களும் மார்க்ஸை சரியாக உள்வாங்க நம் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை .


மார்க்ஸிய சித்தாந்தத்தைச். சரியாக உள்வாங்க...

[ தமிழ் மண்ணோடு பிசைந்து எளிய தமிழில்  , “ மார்க்சியம் என்றால் என்ன ?” - ஒரு தொடக்க கையேடு . எனும் நூலை  நானாகிய சு.பொ.அகத்தியலிங்கம் எழுதிக் கொண்டிருக்கிறேன் . விரைவில் முடித்து . இவ்வாண்டில் கொண்டுவர திட்டம் . எளிமையாய் எழுதுவது அவ்வளவு சுலபமாய் இல்லை ;அதிலும் தமிழ் மண்ணோடு பிசைவது இன்னும் சிரமமாகிறது . அச்சேற காத்திருக்க வேண்டும் ; முயற்சிக்கிறேன். இப்போது அவ்வளவுதான் சொல்ல இயலும் .]


அறிவியலில் ஒவ்வொரு செயற்களத்திலும் - அறிவு குறித்த கோட்பாட்டிலும் நாம் இயக்கவியல் ரீதியாகவே சிந்திக்க வேண்டும் . அதாவது நம்முடைய அறிவானது ஏற்கெனவே தயார் செய்யப்பட்டுவிட்டதாகவோ மாற்ற முடியாததாகவோ கருதிவிடக்கூடாது . ஆனால் அறிவு எப்படி அறியாமையிலிருந்து உதயமாகிறது , எப்படி அறைகுறையான துல்லியமற்ற அறிவு முன்னிலும் முழுமையானதாகவும் முன்னிலும் துல்லியமானதாகவும் ஆகிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் .” என்பார் லெனின் . மார்க்ஸியமும் அப்படியே . அதன் இயங்கியல் பொருள் முதல்வாதம் மற்றும் வரலாற்றும் பொருள் முதல் வாதம் பற்றிய ஞானம் எல்லாவற்றிற்கும் அடிப்படைத் தேவையாகும் ,

அதனை துல்லியமாக பயில - மார்க்சிய சித்தாந்தத்தை படிக்க ஜார்ஜ் பொலிட்ஸர் எழுதிய மார்க்ஸிய மெஞ்ஞானம் - ஓர் அரிச்சுவடி [ நியூ செஞ்சுரி புக்ஸ் ] தொடக்க பாடமாகும் . விக்டர் ஆஃபேன் ஸீவ் எழுதிய மார்க்சிய லெனினிய தத்துவம் [ பாரதி புத்தகாலயம் ] எனும் நூல் பாடக் குறிப்பு போல் விளங்க எளிதாய் அமைந்துள்ளது . இயக்கவியல் பொருள் முதல்வாதம் , வரலாற்றுப் பொருள்முதல்வாதம் உள்ளிட்ட பல நூல்கள் தமிழில் கிடைக்கிறது . தோழர் எஸ் ஏ பெருமாள் எழுதிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம் நூலும் உரிய பயன் தரும் .


"மார்க்சியத் சித்தாந்தத்தை முழுமையடைந்த மீறக்கூடாத ஒன்றாக நாம் கருதவில்லை; மாறாக அது அறிவியலின் அடிக்கல்லை மட்டுமே இட்டுள்ளது என்று தெளிவாகவே உள்ளோம் ; சோஷலிஸ்டுகள் , வாழ்க்கையின் வேகத்துடன் இணைந்து செல்ல விரும்பினால் , அவர்கள் அந்த அறிவியலை அனைத்து திசைகளிலிருந்தும் வளர்க்க வேண்டும் . இந்த சித்தாந்தம் பொதுவான வழிகாட்டும் கொள்கையை மட்டும் அளிக்கிறது ; அக்கொள்கைகள் இங்கிலாந்தில் பிரான்ஸிலிருந்து வேறுவிதமாகாவும், பிரான்சில் ஜெர்மனியிலிருந்து வேறுவிதமாகவும் , ஜெர்மனியில் ரஷ்யாவிலிருந்து வேறுவிதமாகவும் பொருத்திப் பார்க்கப்பட்டனஎன்கிறார் லெனின்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் , பேராசிரியர் .நா.வானமாமலை , முத்துமோகன் , போன்றோர் தமிழ் மண்ணோடு மார்க்சியத்தைப் பிசைந்து எழுதியுள்ள நூல்கள் இன்றும் பெரிதும் பயந்தருவன .


ஆகவே , இந்திய தத்துவ மரபோடு இணைத்தும் - தமிழர் தத்துவ மரபோடு பிசைந்தும் உள்வாங்கும் போதுதான் மார்க்ஸிய தத்துவம் நம் நெஞ்சில் வேர்பிடிக்கும் . அதற்கு தேவிப் பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய மூன்று புத்தகங்கள் உதவும் . இந்திய தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் [பாரதி புத்தகாலயம் ] உலகாயதம் [ நியூ செஞ்சுரி புக்ஸ் ] இந்திய நாத்திகம் [ பாரதி புத்தகாலயம் ] ஆகியன ஆழ்ந்த வாசிப்புக்குரியது . .அருணன் எழுதிய தமிழர் தத்துவ மரபு - இரண்டு பாகங்கள் [ வசந்தம் வெளியீடு ] ,தேவபேரின்பன் எழுதிய தமிழர் வளர்த்த தத்துவங்கள் [ பாரதி புத்தகாலயம் ] இரு நூல்களும் விழிதிறக்கும் . அருணன் எழுதிய யுகங்களின் தத்துவம் [ வசந்தம் வெளியீடு ]சுருக்கமாக - சுண்டக் காய்ச்சிய பாலாக - ஒரு ஒட்டுமொத்த அறிமுகமாய் அமையும் . ப கு .ராஜன் எழுதிய புரட்சியில் பகுத்தறிவு [ பாரதி புத்தகாலயம் ] எனும் நூல் அறிவியல் வளர்ச்சியையும் மார்க்ஸிய தத்துவ ஞானத்தையும் ஒருங்கே குழைத்த்து பரிமாறி இருக்கிற - 872 பக்கங்கள் கொண்ட நூல் அறிவை விசாலமாக்க உதவும் . என்.குணசேகரன் எழுதிய விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் நூல் பன்முகம் காட்டும்.


இப்படி புத்தக் நதியில் நீந்தி மார்க்ஸியத்தை உள்வாங்கும் போது மார்க்ஸின் மூலதனம் படிக்கும் பேராவல் முகிழ்க்கும் . மூலதனத்தை வாசிக்க வழிகாட்டலும் விவாதமும் தேவை . ஏனெனில் அது வெறும் பொருளாதார ஞானமல்ல ; பெரும் சமூக மாறுதலுக்கான செயலுக்கு உந்திதள்ளும் நெம்புகோலும் ஆகும் . டேவிட் ஹார்வி எழுதிய மார்க்ஸ் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி எனும் நூலையும் ,ஜூலியன் போர்ச்சார்ட் எழுதிய மக்களின் மார்க்ஸ் நூலையும் வாசிப்பது மார்க்ஸின் மூலதன வாசிப்புக்கு முன்னோட்டமாகும் . வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதியுள்ள மார்க்ஸிய அரசியல் பொருளாதாரம் எனும் நூல் நல்ல அறிமுகமாக அமையும் .




சோவியத் யூனியன் மறைவுக்குப் பின்


இப்படி கற்கும் போது இப்போது ஒரு கேள்வி எழும் .இன்றைக்கும் மார்க்ஸியம் பொருந்துமா ? மார்க்சின் இரு நூறாண்டைக் கொண்டாடுகிறோம் ..கம்யூனிஸ் கட்சி அறிக்கை வெளியாகியே இன்று 169 ஆண்டுகளாகிவிட்டன . இன்றும் அவை அப்படியே பொருந்துமா ? கம்யூனிஸ்ட் அறிக்கையின் 150 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி கொல்கத்தாவில் நடந்த கருத்தரங்கில் அறிஞர் பெருமக்கள் வாசித்தளித்த ஆய்வுரைகள் வெளிச்சம் காட்டும் . அவை வெல்லவதற்கு ஒரு பொன்னுலகம் எனும் தலைப்பில் [பாரதி புத்தகாலயம் ] நூலாகவும் வந்துள்ளது . தேடி வாசிப்பது நல்லது .


சோவியத் யூனியன் மறைவு மற்றும் உலக சமூகத்தின் மேல்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றின் சூழலில் மார்க்சியப் பார்வையின் முக்கியத்துவம் மேலும் விரிவடைந்திருக்கிறது .மார்க்சினுடைய விமர்சன ஆய்வின் பிரதான இலக்காக எப்போதுமே முதலாளித்துவம்தான் இருந்து வந்திருக்கிறது . முதலாளித்துவம் நீடிக்கும் வரையிலும் மார்க்ஸின் சிந்தனைகள் - பூவுலகின் துயர மாந்தர்கள் மத்தியில் அதிர்ந்து எதிரொலித்துக்கொண்டே இருக்கும்.” என்பார் எர்னஸ்ட் ஃபிஷர் ,

மேலும் சொல்வார் , “ மார்க்ஸின் சிந்தனைகளுடைய உலகம் ஒரு மூடுண்ட கட்டமைப்பு அல்ல .அதில் மேம்பாடு ,அதிகரிப்பு ,விரிவாக்கம் ஆகியவை உள்ளார்ந்து உறைந்திருக்கின்றன . மார்க்சின் சொந்த உணர்வுபூர்வத்துடன் அதனுடைய வரலாறு ,கடந்தகாலம் ,நடப்புக்காலம் ,வருங்காலம் அவற்றைப் பற்றிப் பேசுவதாகும் . அது ஏற்கெனவே தொடங்கிவிட்டது.”

ஆம் , லெனின் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் ஏகாதிபத்தியம் என்கிற கருத்தியலை மார்க்சியத்தில் சேர்த்தார் ; முதலாளித்துவன் ஓங்கி வளர்ந்த பிரிட்டன் ,ஜெர்மனி நாடுகளில் புரட்சி வரும் என்கிற எதிர்பார்ப்பை மீறி ரஷ்யாவில் புரட்சியை லெனின் வெற்றியடையச் செய்தார் ; இரண்டாம் உலகயுத்தச் சூழலில் ஐக்கிய முன்னணித் தந்திரம் என்கிற வியூகத்தை ஜார்ஜ் டிமிட்டிரோவ் வடித்தெடுத்தார் ; அன்டொனியா கிராம்ஷி பண்பாட்டு போரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துச் சென்றார் ; மாசே துங்கும் , ஹோசிமின்னும் , பிடல் காஸ்டிரோவும் , செகுவேராவும் அவரவர் காலத் தேவையிலிருந்து பொருத்தமானவற்றை வகுத்து வழிகாட்டினர் . இன்றும் ஒரு சதவீதம் பேருக்கா இவ்வுலகம் அல்லது தொண்ணூற்றி ஒன்பது சதம் பேருக்கா உலகம் என வெடித்தெழும் கேள்வி உலகெங்கும் மார்க்சியத்தின் தேவையை பொருத்தத்தை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது .


ஆக , முதலாளித்துவம் முன்னிலும் கொடூரமாய் ,நுட்பமாய் சுரண்டுகிறது ; ஒடுக்குகிறது .சோவியத் யூனியன் உதயமானதைத் தொடர்ந்து முதலாளித்துவ நாடுகள் உழைப்பாளி மக்களுக்கு வழங்கிய பல்வேறு சலுகைகளும் சமூகநலத் திட்டங்களும் ; சோவியத் தகர்வுக்கு பிறகு கைகழுவப்படுகிறது . அதுவும் உலகமயம் ,தாராள மயம் அனைத்து மாண்புகளையும் அறுத்து வீசுகிறது . வறுமை , வேலையின்மை ,பண்பாட்டுச் சீரழிவு , அறப்பிறழ்வு என சகல நோய்களயும் முற்றி சீழ்பிடிக்க வைத்துள்ளது இந்த லாபவெறி முதலாளித்துவம் . இதிலிருந்து மனித குலம் மீண்டெழ மார்க்சையே இன்றைய உலகம் இறுதியில் வந்தடைகிறது . ஆனால் என்ன வேறுபாடெனில் வறட்டுச் சூத்திரமாகவோ அல்லது ஈயடிச்சான் காப்பியாகவோ இதை செய்ய இயலாது ; மார்க்ஸும் அவ்வாறு போதிக்கவும் இல்லை .பழைய அதே பாணியில் அல்ல ; முன்னிலும் உயர்ந்த வடிவத்தில் மார்க்சியம் ; முன்னிலும் மேம்பட்ட மனிநேயப் பார்வையோடு ; மேம்பட்ட புரட்சிகர சிந்தனையோடு எழுகிறது .


புதிய மாணுடத்தைப் படைக்க ...




மைக்கேல் எ லெபோவிச் எழுதிய இப்போதே நிர்மானிப்போம் 21 ஆம் நூற்றாண்டு சோஷலிசம் , மார்த்தா ஹர்னேக்கர் எழுதிய இடதுசாரிகளும் புதிய உலகமும் உள்ளிட்ட பல நூல்கள் [பாரதி புத்தகாலய வெளியீடாக ] வந்துள்ளன . இன்னும் பல நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன . உலகமயம் எனும் பெருங்கொள்ளையும் சூறையாடலும் நிகழ்கிறதே இதற்கு நேர் எதிராக பாட்டாளி வர்க்க சர்வதேசியம் உலகெங்கும் வெடித்தெழுகிற போராட்டங்களுக்கு அந்தந்த நாட்டின் சூழலோடு இணைந்து ஒருமைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்துகிறது .

புரட்சிகர மாற்றத்தை நோக்கியே ஒவ்வொரு நாட்டிலும் பாட்டாளி வர்க்கம் நடை போட்டாக வேண்டும் . அதன் மூலமே பட்டினிக் கொடுஞ்சிறையைத் தகர்த்து - ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்து புதிய மானுடத்தைப் படைக்க முடியும் .

மார்க்ஸைப் பொறுத்தவரையிலும் புரட்சிகள் என்பது சரியான முன்நிபந்தனைகளையும் பெருந்திரள் இயக்கத்தையும் கோருகின்ற நீண்ட நெடிய நிகழ்முறைகளாகும் .சதிகார அமைப்புகளில் இடம் பெற்றிருக்கும் வெற்று முழக்கத்துடன் இதற்குப் பொதுவானது என்று ஏதுமில்லை .”


ஆக , அதைச் சாதிக்க மார்க்ஸ் இன்றும் தேவைப்படுகிறார் ; புத்தெழுச்சி ஊட்டுகிறார் . அவரைப் பயில்வதென்பது சும்மா ஒப்பிக்க அல்ல ; செயலில் இறங்க .இந்த நூல்ப் பட்டியலைப் பார்த்து பயந்துவிட வேண்டாம் ; இதையெல்லாம் படித்தவர்தான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாமென்றோ ; போராட தகுதியானவரென்றோ நாம் கூறவில்லை . வர்க்க – வர்ண சமூகத்தில் வாழ்க்கைப் போராட்டமே உங்களை இடதுசாரி பக்கம் தள்ளிவிடும் . அந்த ஆரம்ப நிலையோடு நின்றுவிடாமல் விடாது வாசித்து மேலும் மேலும் முன் செல்ல - தகுதியான தலைமையாய் தன்னை வளர்த்துக் கொள்ள மார்க்ஸியத்தை இடைவிடாது கற்பதும் ; மீண்டும் மீண்டும் கற்பதும் ; புரிதலை கூர்மையாக்கும் ; போராட்ட உறுதியைக் கெட்டியாக்கும் . வழிகாட்டும் தலைவர்கள் , முன்னணித் தோழர்கள் எந்த அளவு சித்தாந்தத் தெளிவோடு இருக்கிறார்களோ அந்த அளவுக்கே போர்க்களம் சரியான திக்கில் அமையும் . ஆகவே அவர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே காலம் நமக்கு இட்டுள்ள கட்டளை .

அரசியல் போராட்டங்கள் இல்லாமல்....


நான்காவதாக செய்ய வேண்டியது என்ன என்பதே ஆக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி ; இந்திய ஒன்றியத்தின் தேவை சூழல் - தமிழகத்தின் தேவை சூழல் இவற்றை மார்க்சிய நோக்கில் அலசி காத்திரமான சூழலில் காத்திரமான முடிவுகளை மேற்கொள்ளுவதொன்றே வழியாகும் . இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் அந்தப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு ஒரு திசைவழியை உருவாக்கி இருக்கிறது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் திட்டம் முக்கிய மைல் கல்லாகும் . அவ்வழியில் இலட்சிய உறுதியோடு வலுவான அமைப்பை கட்டி புரட்சிகர திசைவழியில் முன்னேற மேலும் மேலும் மார்க்சியத்தை பயில்வதொன்றே மார்க்சின் 200 ஆம் ஆண்டைக் கொண்டாடுவதன் மெய்யான பொருளாகும். இறுதியாக ஒரு வார்த்தை ; லெனின் சொன்னதையே நினைவூட்டுகிறோம் ; அரசியல் போராட்டங்கள் , அரசியல் நடவடிக்கைகள் மூலம் அல்லாமல் வேறு எதன் மூலமும் அரசியல் கல்வி இருக்க முடியாது .”

நன்றி : தீக்கதிர் ,15/10/2017. + தீக்கதிரில் விடுபட்ட சில பகுதிகளும் ..

0 comments :

Post a Comment