புரட்சிப் பெருநதி - 49
அபாயகரமான எதிரியாம் அந்த எழுத்தாளர்
- சு.பொ.அகத்தியலிங்கம்
கிட்டத்தட்ட
பத்து ஆண்டுகள் மிக்கோலாவைஸ்கி
உடன் லெனின் வலுவான தத்துவச்
சண்டை நடத்திய போதிலும்.......புரட்சிக்கு
பின்னர் நிறுவிய நினைவுத்
தூணில் பதினெட்டாவது பெயராய்
இவர் பெயரைப் பொறிக்கச்
செய்தார் .
“ அந்த ஊளையிடும் ரஷ்யக் கழுகுக்கு இரண்டு தலைகள். பேராசையுடன் கூடிய இரண்டு அலகுகள். ஒன்று பாரம்பரிய போலீஸ்; இன்னொன்று முதலாளித்துவம். இரத்தம் குடிக்கும் பறவையின் இரண்டு தலைகளிலும் அடியுங்கள்.”
நிக்கோலாய் கான்ஸ்டாண்டினோவிச் மிக்கோலாவிஸ்கி 1842இல் ரஷ்யாவில் மெச்சோவ்ஸ்க்காலுகா எனுமிடத்தில் பிறந்தார். இளமையிலேயே தாய், தந்தையரை இழந்தார். சுரங்க பொறியியல் கல்விக்கூடத்தில் படிக்கும்போது ஸோலார் மென்னிக் அதாவது சமகாலம் பத்திரிகை வாசகரானார். லெனினை ஈர்த்த என்ன செய்ய வேண்டும் நாவலாசிரியர் செர்னிசெவ்ஸ்கி, கவிஞர் நெக்ரஸோவ் மற்றும் டோப்ரோலியூபோவ் ஆகியோரின் கட்டுரைகளைத் தாங்கி வந்தது. ஜார் அரசை எதிர்த்து சங்கநாதம் முழங்கிய ஏடு அது.
நிக்கோலாய் அரசுக்கு எதிரான அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டதால் கல்விக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.பலத்த அடக்குமுறைக்கு இடையே 1860இல் மீண்டும் முற்போக்கு இயக்கங்கள் செயல்படத் துவங்கின. விடியல், நங்கூரம், சமகாலத்து உலகம் போன்ற ஏடுகளில் மிக்கோலாவிஸ்கி எழுதலானார். இதற்கிடையில் சுயதொழிலில் முனைந்து தோல்வி கண்டார் . 1869 ல் நெக்ரஸோவ் அழைப்பை ஏற்று தந்தையர் நாட்டிலிருந்து எனும் ஏட்டில் வேலைக்குச் சேர்ந்தார். இவரின் இலக்கிய, அரசியல் கட்டுரைகள் இளைஞர்களை ஈர்த்தது. முன்னேற்றம் என்றால் என்ன? டார்வின் சித்தாந்தமும் சமூக விஞ்ஞானமும், வீரர்களும் கட்டுப்பாடற்ற கூட்டத்தினரும், சுதந்திர மனிதர்களும் வெறிபிடித்தவர்களும் போன்ற பல முத்திரைக் கட்டுரைகளை தீட்டினார்.
அவரின் எழுத்து எத்தகைய உணர்வை மூட்டும் என்பதற்கு; இக்கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட அவரது வரிகளே சாட்சியாகும்.இவர் குறித்து லெனின் சரியாகச் சொன்னார்,” மிக்கோலாவிஸ்கி விவசாயிகளின் துயர் கண்டு நெஞ்சம் பதறி கண்ணீர்விட்டார்- நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையின் அனைத்து வெளிப்பாடுகளையும் எதிர்த்து உறுதியோடு போராடினார் - முதலாளித்துவ ஜனநாயக வழியில் ரஷ்ய நாட்டை விடுவிக்க பெரும்பங்காற்றினார். சட்டப்பூர்வமான ஏடுகளில் வெறும் குறிப்புகள் எழுதுவதன் மூலமே அவர்களுக்கு வக்காலத்து வாங்கினார். தலைமறைவு ஜனநாயகப் போராளிகளுக்கு ஆதரவையும் அனுதாபத்தையும் தெரிவித்தார் - தலைமறைவுப் போராளிகளுக்கு அவரே நேரடியாக உதவவும் செய்தார்.”நரோத்நயா வோல்யாஸமக்கள் பாதை ] புரட்சிக் குழுவுடன் மேலும் மேலும் தொடர்பை வலுப்படுத்திய மிக்கோலாவிஸ்கி ஒரு கட்டத்தில் அவர்கள் வெளியிட்ட லிஸ்ட்டோக் ஏட்டின் ஆசிரியர் ஆனார்.
கிரோக்னார்ட் எனும் புனைப் பெயரில் ஜாரின் கொடுங்கோன்மையை கடுமையாகச் சாடினார் . ஆசிரியர் குழு கூட்டங்களைத் தன் வீட்டிலேயே நடத்தினார். ஜாராட்சிக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி ஆசிரியர் குழுவுக்கு அளித்து விழிப்பூட்டினார்.ஒரு கட்டத்தில் மக்கள் பாதைக் குழுவுக்கும் அவருக்கும் கொள்கை மோதல் தலைதூக்கியது. அவ்வப்போது மேற்கொள்ளும் அரசியல் போராட்டம் தேவையா இல்லையா என்பதுதான் பிரச்சனை. வேண்டாம் என்றது தலைமை. வேண்டும் என்றார் மிக்கோலாவிஸ்கி.ஒரு சோஷலிஸ்டின் அரசியல் கடிதங்கள் எனும் சிறு நூலில் , “ ஜார் மன்னனையும் அவனது தொங்கு சதைகளையும் எதிர்த்த தனித்தனியான பயங்கரவாதச் செயல்கள் பயனற்றவை. அரசியல் போராட்டமே எதேச் சதிகாரத்தை ஒழித்துக்கட்டும் சரியான வழி.’” என்றார்.ஆனால் ஜார் அரசாங்கமோ மிக்கோலாவிஸ்கியை அபாயகரமான எதிரியாய்க் கருதி நாட்டைவிட்டு வெளியேற்றியது.
இக்காலகட்டத்தில் இவர் எழுதிய வெளியாளின் கடிதங்கள் எனும் தொடர் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தியது. 1885 வரை மிக்கோலாவிஸ்கி தலைநகருக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.இக்காலகட்டத்தில் தந்தையர் நாட்டிலிருந்து ஏடு நிறுத்தப்பட்டுவிட்டது. ஸோவர்னி வெஸ்டனிக், ரஷ்யன் கெஜட், ரஷ்யன் சிந்தனை போன்ற பல ஏடுகளில் எழுதிவந்தார். எதிலும் ஆசிரியர் பொறுப்பு ஏற்கவில்லை. சுமார் ஏழாண்டுகள் இப்படியே கழித்தார்.1892இல் ருஷ்கோவி போகட்ஸ்ட்வோ ஸரஷ்யச் செல்வர்கள்] எனும் ஏட்டில் பணிக்கு சேர்ந்தார். 1894இல் இதன் தலைமை ஆசிரியர் ஆனார். நாற்பதாண்டுகளுக்கு மேலாக வெளிவந்த இந்த ஏடு ரஷ்ய சமுதாயத்தின் சமுதாயச் சிந்தனையின் சிக்கலான முரண்பாட்டையும் வளர்ச்சியையும் பிரதிபலித்தது. இந்த ஏட்டில் தான் சாகும் வரை பத்தாண்டுகள் தலைமை ஆசிரியராக மிக்கோலாவிஸ்கி செயல்பட்டார் என்பது முக்கியமான செய்தியாகும்.
இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் மார்க்சியத்தை எதிர்த்து இதில் மிக்கோலாவிஸ்கி கட்டுரைகள் எழுதினார். சமூகத்தை மொத்தமாகப் பார்க்காமல் ஒரு பகுதியாக மட்டுமே மார்க்சியர்கள் பார்ப்பதாக குற்றம் சாட்டினார். லெனின் இந்த விவாதத்தை மறுத்து மார்க்சியமே சமூகத்தை ஒருங்கிணைந்து பார்க்கிறது என ஆதாரங்களுடன் நிறுவினார்.கற்பனாவாத சோஷலிஸ்ட்டான செர்னிசெவ்ஸ்கியை பின்பற்றுபவரே மிக்கோலாவிஸ்கி. ஆனால் செர்னிசெவ்ஸ்கியைவிட ஓரடி பின்னாலேதான் இருந்தார். ஏனெனில் செர்னி கருத்து முதல் வாதத்தை எதிர்த்தார்; பொருள் முதல் வாதத்தை சார்ந்து நின்றார். மாறாக
மிக்கோலாவிஸ்கி கருத்துமுதல்வாதிகள் பக்கமே நின்றார்.முன்னேற்றம் குறித்தும் தனிநபர் பாத்திரம் குறித்தும் இவரது பார்வை பிழையானதாக இருந்தது. தனிநபர் பாத்திரத்தை மிகை மதிப்பீடு செய்தார்.
இதன்காரணமாக இவரது எழுத்துகள் மக்கள் பாதைக் குழுவுக்குசித்தாந்த ஆயுதமானது. தனிநபர் பயங்கரவாதத்தை எதிர்த்த போதிலும் தனிநபர்களின் அரசியல் தலைமை உள்ளிட்டவற்றில் இவருக்கு மயக்கம் இருந்தது . அன்றைக்கு தொழிலாளி வர்க்க முக்கியத்துவம் அதிகம் உணரப்படாத சூழலில் இவரது பார்வையிலும் அது பிரதிபலித்தது.வீரர்களும் கட்டுப்பாடற்ற கூட்டத்தினரும் எனும் கட்டுரை தொடங்கி மக்கள் திரள் மீது நம்பிக்கை இழக்கலானார். 1860 புரட்சியின் தோல்வியால் ஏற்பட்ட சிந்தனைப் போக்கு அது. கட்டுப்பாடற்ற கூட்டத்துக்கு உணர்ச்சிகரமான பாத்திரத்தை அளித்தாலும் தனியொரு வீரனின் பங்கை மிகை மதிப்பீடு செய்தார். தத்துவத்தின் பங்கை சரியாக இனங்காணத் தவறினார். லெனினும் பிளக்கனோவும் இதனை எதிர்த்து தத்துவச் சமர் புரிந்தனர்.
முதலாளித்துவ வளர்ச்சி சாத்தியமா இல்லையா என மக்கள் பாதை விவாதித்தது. மிக்கோலாவிஸ்கியின் முதலாளித்துவ கருவில் இருப்பினும் சோஷலிஸ்ட் செல்வாக்குக்கு உட்படுத்தலாம் என கற்பனையாய் எழுதினார்.1894இல் லெனின் எழுதிய மக்களின் மெய்யான நண்பர்கள் யார் எனும் நூலில் மிக்கோலாவிஸ்கியின் வாதங்களில் உள்ள பலவீனத்தை சுட்டி மார்க்சியமே உலகு தழுவிய வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சித்தாந்தம் என நிரூபித்தார் .1904 ஆம் ஆண்டு மாரடைப்பால் மிக்கோலாவிஸ்கி மரணமடைந்தார். அவரின் இறுதி ஊர்வலத்தில் அன்றைக்கே ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் உணர்ச்சி கொப்பளிக்கப் பங்கேற்றனர் என்பது சாதாரணச் செய்தியா?
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் மிக்கோலாவிஸ்கி உடன் லெனின் வலுவான தத்துவச் சண்டை நடத்திய போதிலும்;ஜார் மன்னரையும் நிலப்பிரபுத்துவக் கொடுமையையும் எதிர்த்து மிக்கோலாவிஸ்கி நடத்திய போராட்ட த்தின் வீச்சையும் வலுவையும் சரியான வரலாற்றுக் கோணத்தில் மதிப்பிட்டார். உரிய இடம் அளித்தார்.புரட்சிக்கு பின்னர் நிறுவிய நினைவுத் தூணில் பதினெட்டாவது பெயராய் இவர் பெயரைப் பொறிக்கச் செய்தார். கட்சி பாடதிட்டத்தில் இவரையும் சேர்த்தார்.
ரோசா லக்சம்பர்க் ஜெர்மன் வலதுசாரிகளால் கொல்லப்பட்டார் . அவர் தன் எழுத்துகளில் மார்க்ஸோடும் லெனினோடும் முரண்பட்ட போதும் அவரின் பங்களிப்பை லெனின்போற்றி எடுத்து இயம்பினார். இப்படி பட்டியல் நீளும் . கிளாரஜெட்கின் உள்ளிட்ட பெரும் பெண்கள் படை மார்க்சியத் திற்கும் நவம்பர் புரட்சிக்கும் அளித்த பெருங்கொடை சொல்லில் அடங்காது. எழுத இடமின்மையால் விடுபடுகிறது.
ரஷ்யப் புரட்சி எனும் பெரு நெருப்பு மார்க்சியர்களால் மட்டுமே மூட்டி வளர்க்கப்பட்டதல்ல. பலதரப்பட்டவரின் பங்கு உண்டு. ஆனால் சரியான திசையில் புரட்சி பீரங்கியைச் செலுத்தியவர் மார்க்சியர்களே. இதனை லெனின் உணர்ந்தார். அடுத்த தலைமுறைக்கும் உணர்த்த விரும்பினார்.
புரட்சி தொடரும் …
நன்றி : தீக்கதிர் , 9/10/2017.
0 comments :
Post a Comment