வள்ளுவர் நிச்சயம் காதலித் திருப்பார்

Posted by அகத்தீ Labels:

 



 


வள்ளுவர் நிச்சயம் காதலித் திருப்பார்

 

   ‘வள்ளுவர் நிச்சயம்

காதலித் திருப்பார் ‘,

என்று

அவள் உள்மனம் சொன்னது .

 

இப்படி உறுதியாய் சொல்பவர் ஆர் .பாலகிருஷ்ணன் .

 

2017 ல் வெளியான “பன்மாயக் கள்வன்” புத்தகம் குறித்து 2023 ல் எழுதலாமா ? எப்போது படித்தாலும் எழுதலாம் என்பது பொதுவான சமாதானம். ஆனால் அதைவிட முக்கியமான காரணம் வேறொன்று உண்டு .

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் அறம் ,பொருள்,இன்பம் என முப்பாலிருந்தும் , மூன்றாம் பாலான இன்பத்துப்பால் அல்லது காமத்துப் பால் பற்றி தமிழ்ச் சமூகம் பேசியது மிகமிகக் குறைவே . இது என் நெடுநாள் கருத்து .

 

அறத்துப்பால் ,பொருட்பாலில் உள்ள குறள்கள் மேற்கோள் காட்டப்பட்ட அளவு ,புழங்கும் அளவு இன்பத்துப்பால் புழங்குகிறதா என்பது என் கேள்வி . இப்பாலில் 25 அதிகாரங்களும் 250 குறள்களும் இடம் பெற்றிருந்தாலும் விரல்விட்டு எண்ணத் தக்க குறள்களே பொது புத்திக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது .

 

கலைஞர் குறளோவியத்தில் சில காட்சிகளை வரைந்து காட்டி இருக்கிறார் . ஆயினும் போதுமான வெளிச்சம் படாத பகுதியாகவே நான் குறளின் மூன்றாம் பாலை எண்ணிப் பார்ப்பதுண்டு .இத்தகையச் சூழலில்  இன்பத்துப் பாலில் இருந்து 56 குறள்களைத் தேர்வு செய்து , 57 காட்சிச் சித்திரங்களாய் ,எழுத்தோவியங்களாய் இன்றைய நவீன உலகச் சொல்லாடல்களோடு ஆர் .பாலகிருஷ்ணன் தந்திருக்கிற “பன்மாயக் கள்வன்” என்னைக் கவர்ந்துவிட்டான். ஆகவே காலங்கடந்தும் எழுதுவதில் பிழை ஏதும் இல்லயே !

 

சங்க இலக்கியத்தில் காதலுக்கு உயர்ந்த இடம் உண்டு . இயற்கையையும் காதலையும் அறத்தையும் கொண்டாடியவன் தமிழன் என்பதற்கு சங்க இலக்கியங்களே சாட்சி . திருக்குறளின் மூன்றாம் பால் ஓர் மானுட உளவியல் படைப்பு எனில் மிகை அல்ல. பாலகிருஷ்ணன் அதனை நூல் நெடுக மெய்பிக்கிறார் .

 

 “ ‘ என்’

‘தொன்மையைப் போலவே

மென்மையானது

என் ‘ தொடர்ச்சி’

 

நான்

‘காவடிச்சிந்து அல்ல

காதல் சிந்து.”

 

 ‘ பிரிவு ஆற்றாமை’ யில் இடம் பெற்றுள்ள குறளை முன்வைத்து தீட்டிய முதல் சித்திரத்தில் தெறிக்கிற முத்திரை 57 கவிதைகளிலும் தொடர்வது வியப்பு . கவிஞனும் காதலும் பிரிக்க முடியாததா ? பிரிக்கக் கூடாததா ?

 

 “ சேலை கட்டிய கூகுள்” என்கிற கவிதை “ அலர் அறிவுறுத்தல்” அதிகாரத்திலுள்ள குறள் சார்ந்தது . தலைப்பே நவீனமாக இருக்கிறது . அலர் என்றால் என்ன ?

 

“ ‘தினத்தந்தி’ என்று

தனக்கொரு

பெயர் இருப்பது

அவளுக்கேத் தெரியும் .

மாலையில் குளக்கரைக்குப்

போகும்போது

அவள்

‘ மாலைமுரசு’ என்று

அழைக்கப்படுகிறாள்.

 

‘புறம்’ பேசுவது

என்னவோ

அநேகமாக

‘அகப்பொருள்’தான்..

 

இந்த நெடுங்கவிதையில் முடிவில் சொல்கிறார்,

 

“தனது வதந்தியால்

நிகழும்

நல்ல கெட்

பக்க விளைவுகள்

எதைப் பற்றியும் அறியாமல்

குருவம்மா

அலப்பறையாக

அலர் தூற்றி வருகிறாள்.

 

தினம் ஒரு

புது அலர்.

 

வளர்.”

 

கம்ப்யூட்டர் ,ஊடகம் ,சினிமா எல்லாவற்றையும் வள்ளுவனின் அலரோடு பிசைந்ததில் நூலாசிரியர் தனித்து நிற்கிறார் .

 

பருவக் கோளாறு பற்றி பேச வந்தவர் ‘ புருவக் கோளாறு’ பற்றி பேசுகிறார் .தகையணங்குறுத்தலில் வள்ளுவன் சொன்னதுதான் .

 

“விழியில் அம்பையும்

புருவத்தில் வில்லையும்

கண்டுபிடித்தவன்

கவிஞனோ இல்லையோ

நிச்சயம் ரொம்பவும்

காயம் பட்டவன்.”

 

  “ எடுத்ததும் கொடுத்ததும்” என்ற தலைப்பில் ” பசப்புறு பரவலை” பேசவந்தவர் சொல்கிறார்,

 

“ சிறகைக் கொடுத்து

சிலுவையை ஏற்பதா ?

காதல் கணக்கு ?

வாய்ப்பாடு அல்ல

உளவியல் .”

 

காதலில் மயங்கி வர்ணிப்பது போல் வரியாய் இந்நூலை விவரிக்கத் தேவையில்லை . இன்னும் ஒன்றிரண்டோடு முடித்துக் கொள்கிறேன்.

 

 “உறக்க தினம்” என்ற கவிதையில் “படர் மெலிந்திரங்கல்” சார்ந்து பேசுகிறார் ,

 

  “கட்டிலின் மறுமுனையில்

ஒரு காட்டெருமையைப்

போலத் தூங்கிக்

கொண்டிருந்தான்

அவள் காதல் கணவன்”

 

இக்கவிதையின் இன்னோர் இடத்தில் சொல்கிறார் ,

 

“எனது மனதை மட்டும்

உன்னால்

படிக்க முடியுமென்றால்

பனிக்குடம் ஆகும்

உன் கண்கள்.”

 

 “ஊடலுவகை” பற்றி பேசவந்தவர்  “சொர்க்கத்தின் பின்கோடு” என தலைப்பிட்டு சொல்கிறார்,

 

“இந்த

 ‘புலவி நுணுக்கம்’

தெரியாத

 ‘இடம்’

எதுவானாலும்

அது

தேடல் மருணித்த

வெற்றிடம் .”

 

ஒவ்வொரு கவிதையும் நீள் கவிதைதான் .நான் சில வரிகளையே சுவைக்கத் தந்தேன் . முழுவதும் சுவைக்க நூலைவாசிப்பீர் !

 

ஆர் .பாலகிருஷ்ணனின் எழுத்தோவியங்களுக்கு அழகு சேர்க்கிறது மருதுவின் கோட்டோவியங்கள் எனில் மிகை அல்ல. 25 அத்தியாயங்களையும் இந்நூல் தொட்டுச் சென்றாலும் “ படர் மெலிந்திரங்கல்” ,”குறிப்பு அறிவுறுத்தல்” எனும் இரு அத்தியாயங்களில் அதிகம் எடுத்தாண்டிருக்கிறார்.சங்க இலக்கிய நதியில் நீந்தி முக்குளித்த நூலாசிரியரின் கவிதை மணமும் காதல் மனமும் கைகோர்த்து நடம் புரிகிறது .

 

“ நீங்கள் எழுபது வயதைக் கடந்துவிட்டீர்கள் . இப்போது உங்களுக்கு இதெல்லாம் மிக முக்கியமா ?” என என்னை நானே கேட்டுக் கொண்டேன். சங்க இலக்கியம்  முதுமைக் காதலைக்கூட பேசுமே ! முதுமையிலும் காதல் வரும் மரணம் வரைகூடவரும் என கண்ணதாசன் சொல்லியிருக்கிறாரே ! எனக்கும் இந்த காதல் நூல் பிடித்துவிட்டது .படித்தால் உங்களுக்கும் பிடிக்கும்.

 

முன்னுரையில் பிரபஞ்சன் சொல்கிறார் ,” காதல் என்ற சொல்தான் ,பால்கள் எனப்படும் பெண்கள் ,திருநர்கள் ,ஆண்பால் என்ற ஆடைக்குள் அடங்காச் சொல்லாகும் .அதற்கு வர்ணம் இல்லை .சாதிமதம் இல்லை ,இடம் காலம் இல்லை .அது வானம் .வள்ளுவரால் அளக்க முடிந்தது . அவர் சூரியனாக மாறினார் ,ஆகவே முடிந்தது .”

 

மேலும் பிரபஞ்சன் தொடர்கிறார் ,” பொதுவாகக் குறள் ,குறளுக்கு அர்த்தம் என்பதுதான் நம் மரபு .[ மேலே யாரும் சிந்தித்துவிடக் கூடாது அல்லவா ?] ஆர் .பாலகிருஷணன் ,இந்த நுண்ணிய விஷயத்தின் பல பரிமாணங்களைக் கவிதையாக மாற்றுகிறார் .

 

வள்ளுவன் காதலின் உளவியலை நுட்பமாகப் பார்த்தவன் .இதை நன்கு உணர்ந்து இந்நூலை படைத்திருக்கிறார் ஆர் .பாலகிருஷ்ணன் .

 

இந்த நூலுக்கு “பன்மாயக் கள்வன்” என்ற தலைப்பு ஏன் ? நூலாசிரியரே விளக்கம் தருகிறார் ;

 

 “ ‘பன்மாயக் களவன்’ என்ற இந்த நூலின் தலைப்பே திருவள்ளுவர் தந்ததுதான் [குறள் 1258] .இன்பத்துப் பாலில் ததும்பும் உணர்வின் ஆழம் , உண்மையில் ஓர் யதார்த்த உளவியல் .என் மட்டில் ‘பன்மாயக் கள்வன்’ வேறுயாருமில்லை ,வள்ளுவன்தான்.அறம் பேசும் ஆசானாய் ,பொருள் பேசும் அறிஞனாய் ,இன்பம் பேசும் காதலனாய் இந்த வள்ளுவனுக்குள் எத்தனை பன்முகங்கள் ! ஆமாம் . பன்மாயக் கள்வன்’ என்பதில் ’மரியாதைப் பன்மை’இல்லைதான்.ஒருமைதான்.அதனால் என்ன ?அதுதான் அருமை. வள்ளுவனிடம் நமக்கு இல்லாத உரிமையா ?”

 

பன்மாயக் கள்வன் , ஆசிரியர் : ஆர்.பாலகிருஷ்ணன்,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு :24332924 /9444960935 

email : thamizhbooks@gmail.com    / www.thamizhbooks.com

பக்கங்கள் : 304  , விலை : ரூ.270 /

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

agathee2007@gmail.com

 

 

 


0 comments :

Post a Comment