“புனல் சூழ் மணல் தோப்பில் குயில் கூட்டம் நாங்கள்
:வைகறை 74 வாழ்க்கைப் படிப்பினை மலர்.” கிடைத்தது
. மகிழ்ச்சி.
வாழும் போதே
சான்றோர்களை மத்தித்து போற்றல் நல்ல மரபு . அது வெறும் தனிநபர் துதியாக அமையாமல் பல்வேறு
அருஞ்செய்திகளைத் தாங்கி வருதல் அதனினும் நன்று .
வைகறை வாணன்
எனும் நல்ல எழுத்தாளர் .இதழாழர் , நூல் பதிப்பாளர் , சமூக செயல்பாட்டாளர் ,தமிழாய்ந்த
சிந்தனையாளர் குறித்த அருமையான செய்திகளும் தகவல்களும் தமிழ்ச் சமூகம் அறிய வேண்டிய
ஒன்று .அதனை தொகுத்தளித்த மலர் குழுவுக்கு பாராட்டுகள் .
280 பக்கங்கள்
.69 கட்டுரைகள் ,படங்கள் அத்துடன் பெட்டிச்
செய்திகள் அடங்கிய மலர் . பொதுவாய் இது போன்ற மலர்களில் நாயகன் புகழ்மாலை மட்டுமே இடம்
பெறும் . மலரின் நோக்கமும் அதுதானே ! இம்மலர் அதனின்று மாறுபட்டு வந்திருக்கிறது .
அரியல்[அரிஷ்டம்]
எனும் அருமருந்து , திரைக்கு பின்னால் , கி.ரா .நேர்காணல் , இயற்கை பாலும் இலக்கணப்
பாலும் , காதல் என்பது எதுவரை ?, வைகறை வானம் என உருது பாரசீக கவிதைகள் குறித்த கட்டுரை ,ஸ்பானிஷ் நாட்டுப்புற
கதை அடங்கிய பிடாரி ,எம் வி வெங்கட்ராமனும் சமகால எழுத்துகளும் , தமிழ் ஒளி குறித்து
,இலக்கியப் பழமொழிகள் , கால்டுவெல் , மஹாகவி ,தரங்கம்பாடி சீகன் பால்கு , காமம் , இன்குலாப்
நாடகங்களில் ஈழப்பதிவுகள் , மூளை குறித்த மருத்துவ அறிவியல் கட்டுரை , பி.சீனிவாசராவ்
– கோ நடேசய்யர் ஒப்பீடு ,சிதம்பரனார் ,சோழர்கள் நீர் மேலாண்மை , இப்படி மலரின் கணிசமான
பகுதி பொதுத்தளத்தில் கட்டுரைகள் இடம் பெற்றிருப்பது வித்தியாசமான முயற்சி .
வைகறை தமிழ்
பற்றாளர் ,இடதுசாரி சிந்தனையாளர் அதே சமயம் பெரியார் அம்பேர்கர் சிந்தனையின் தாக்கத்தையும்
கொண்டவர் , தமிழீழ ஆதரவாளர் - அதன் பல்வேறு போக்குகளை உள்வாங்கி எல்லா குழுவோடும் நட்பு
பாராட்டி அதேநேரம் தேசிய இனப் பிரச்சனை குறித்த தனித்த பார்வை உடையவர் . இம்மலர் நெடுக
உள்ள கட்டுரைகளில் அவரின் அரசியல் சார்பு புலப்படும்.
நக்கீரன்
,சிகரம் ,காக்கைச் சிறகினிலே , பாலம் ,நந்தன் ,சங்கம் ,குமுதம் உள்ளிட்ட பல ஏடுகளில்
தடம் பதித்தவர் . பொன்னி எனும் பதிப்பகம் நடத்தி காத்திரமான நூல்களை பதிப்பித்தவர்
,
என்னைவிட
மூன்று வயது பெரியவர் . எனக்கு அவரை நன்கு தெரியும் .ஆனால் நெருங்கிப் பழகியதில்லை
.அவசரகாலத்தில் சிகரம் ஏட்டின் மூலம் அறிமுகம் . செந்தில்நாதன் ,இளவேனில் ,பெ.நா.சிவம்
போன்றோரோடு இருந்த நெருக்கம் வைகறையோடும் அரணமுறுவலோடும் இருந்ததில்லை . நான் எழுதிய களப்பால் குப்பு குறித்த
கட்டுரையை நந்தன் இதழில் வெளியிட்டவர் . [ மீண்டும் அந்த கட்டுரையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
.] அவர் வெளியிட்ட நூல்கள் , இதழ்கள் மூலமே அறிமுகம் .
எனக்கு இலக்கிய
ஆர்வமும் ஈடுபாடும் இருந்த போதிலும் ஒரு தொழிலாளி என்கிற முறையில் தொழிற்சாலை தாண்டி
இலக்கிய உலகோடு சங்கமிக்க வாய்ப்பு குறைவே .அவசரகாலத்திற்கு சற்று முன்பும் பின்புமாய்
இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அத்தகைய இலக்கியவாதிகள் ,அறிவுஜிவிகள் தொடர்பு
முகிழ்த்தது எனக்கு .ஆனால் இயக்கம் வேகமாக இழுத்துக் கொண்டது .
விரைவில்
வாலிபர் சங்க பொறுப்பேற்று கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் தமிழகம் முழுவதும் சுற்ற
வேண்டியவனானேன். அதன் பின் 20 ஆண்டுகள் தீக்கதிர் நாளேட்டில் பணி. எனவே இலக்கிய மற்றும்
அறிவுஜீவிகளோடு தனிப்பட்ட முறையில் நெருங்கிக் பழக உண்டு உறங்க உறவாட உரையாட சந்தர்ப்பம்
மிகக் குறைந்தது .
அவரவர் எழுத்தின்
மூலமே உறவு அமைந்தது . வைகறையை நான் நேசித்த போதும் இரண்டறக் கலக்க வாய்ப்பு அமையாதது
அப்படியே . நான் தோள் சாய்ந்து என் துயர்களை இறக்கி வைக்கும் சிபிஎம் தலைவர்களில் ஒருவரும் விவசாய சங்கத் தலைவருமான
தோழர் கோ .வீரய்யன் அடிக்கடி வைகறை வாணன் குறித்து என்னிடம் பேசுவார் . அவர் மூலமே
வைகறையை அதிகம் அறிந்தவன்.
இம்மலர் அவரின்
பன்முக பரிணாமத்தை எமக்கு சொல்கிறது . இன்றைய இளைய தலைமுறை அறியவும் பழைய தலைமுறை அசை
போடவும் இம்மலர் வாசம் மிகுந்து பூத்துள்ளது . வாசிப்பீர் !
“புனல் சூழ்
மணல் தோப்பில் குயில் கூட்டம் நாங்கள் :வைகறை 74 வாழ்க்கைப் படிப்பினை மலர்.”
பக்கங்கள்
: 280 , விலை : ரூ.400 /
தொடர்புக்கு
: பொன்னி , 8248338118 , vivekdushy@gmail.com
சு.பொ.அகத்தியலிங்கம்
,
20/10/2023.
0 comments :
Post a Comment