சவாலான நேரங்களில் சரத் பவார் ….

Posted by அகத்தீ Labels:

 



 



 

சவாலான நேரங்களில் சரத் பவார் ….

 

வாழ்க்கை வரலாற்று நூல்களில் மிகக் குறைவான பொய்கள் கொண்டதே தன்வரலாற்று நூல் Autobiography என்பர் அறிஞர் பெருமக்கள் . மகாத்மாகாந்தியின் சுயசரிதை போல் ஏனையவையும் இருக்கும் என எதிர்பார்ப்பின் அது ஏமாற்றமாகும். . எப்படி இருப்பினும் சுயவரலாற்று நூல் நமக்கு பல செய்திகளை ஆதாரபூர்வமாகச் சொல்லும் . வாசிக்க சுவையாக இருக்கும் .

 

அந்த வகையில் சரத் பவார் சுயவரலாற்று நூலையும் வாசித்தேன் .2016 ல் தமிழில் வெளிவந்தது.தாமதமாக இப்போதுதான் வாசித்தேன் . சரத் பவார் “என் அரசியல் வாழ்க்கை” என மகுடமிட்டு அதன் சுழல் வட்டத்தை சுட்டிவிட்டார் . துணைத் தலைப்பு “அடிதட்டிலிருந்து அதிகாரத்தின் நுழைவு வாயில் வரை”

 

27 வயதில் மகாராஷ்டிரா மாநில பாரமதி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினரானவர் , 35 வயதில் அமைச்சர் , 38 வயதில் முதலமைச்சர் ஒரு முறை அல்ல நான்கு முறை , ஒன்றிய அமைச்சர் என பல படிநிலைகளில் வேகமாக தாவி ஏறியவர் .  “அதிகாரத்தின் நுழைவு வாயில் வரை” என துணைத் தலைப்பில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன ?

 

தன் அரசியல் குரு ஒய் .பி.சவானுக்கு பிரதமர் பதவி கிட்டாமல் நழுவிப் போனதுபோல் , தனக்கும் போனதை மறைமுகமாகச் சொல்லவே  “அதிகாரத்தின் நுழைவுவாயில் வரை” எனக் குறிப்பிட்டுள்ளார் போலும் . நூல் நெடுக அதன் சாட்சிகளும்  காட்சிகளும் உண்டு .

 

சாரதாபாய் கோவிந்தராவ் பவார் பொதுவாழ்வில் ஈடுபட்டவர் . சுதந்திர போராட்ட காலத்தில் காங்கிரஸில் இருந்தவர் ,உழவர் உழைப்பாளர் கட்சியில் இணைந்தவர் .இடதுசாரி முற்போக்கு சிந்தனையாளர் .செயல்பாட்டாளர் . இவரது கணவர் கோவிந்தராவ் பவார்  கூட்டுறவு ஊழியர் . பார்ப்பனிய கொடுமையை எதிர்த்து செயல்பட்ட ‘சத்ய சோதக்’ அமைப்பில் தீவிர செயல்பாட்டாளர் .இவர்களது மகன்தான் சரத் பவார் .இவர் சகோதரர்கள் ,உறவினர்கள் பலர் உழவர் உழைப்பாளர் கட்சியிலும் இடதுசாரி இயக்கங்களிலும் இருந்தவர்கள் . இத்தகைய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் நேருவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். யஷ்வந்த்ராவ் பல்வந்த்ராவ் சவான் என்கிற ஓய் பி சவானை தன் அரசியல் வழிகாட்டியாகக் கொண்டவர் . உறுதியான காங்கிரஸ்காரர் .

 

காங்கிரஸ் கொள்கையில் பற்றுறிதி கொண்டவராக இருந்த போதிலும் அரசியல் சதுரங்க காய்நகர்த்தலில்  காங்கிரஸை எதிர்த்து காங்கிரஸ் [ எஸ் ] கட்சியில் சேர்ந்ததும், பின் மீண்டும் இந்திரா தலைமையிலான காங்கிரஸில் இணைந்ததும் ,மீண்டும் பிரிந்து தேசியவாத காங்கிரஸ் எனும் கட்சி தொடங்கி இன்றுவரை தொடர்வதும் இவரது அரசியலின் இன்னொரு முகம் . எங்கு இருப்பினும் காங்கிரஸ்காரராக தன்னைக் கருதிக் கொள்வது இவர் நிலை .

 

காங்கிரஸில் லிபரல் [ தாராள சிந்தனையாளர்] , கன்சர்வேட்டிவ் [பழமைவாதி ] ,குழப்பவாதி ,சந்தர்ப்பவாதி எல்லோரும் அடக்கம் . தாதாபாய் நவ்ரோஜி தொடங்கி லிபரல் சிந்தனை வலுவாக இருந்தது ஒரு காலம் . காந்திக்கு பின் நேருவின் முற்போக்கான முகமே காங்கிரஸின் ஈர்ப்பு மையம். சவானும் அதன் அங்கம் .பவாரும் அப்படியே . இப்போது காங்கிரஸூக்கு லிபரல் முகம் மிகக் குறைவு .கோஷ்டியும் காங்கிரஸும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் . நூலை வாசிக்கும் போது இவ்வுணர்வே எனக்கு ஏற்பட்டது .

 

“ என்னை பெரிதும் ஈர்க்கும் இந்தியாவின் இரு பெரும் பண்புகள் ஜனநாயகமும் பல இனப் பண்பாடும்தான் . ஈடு இணையற்ற பன்முகத் தன்மை கொண்டது நம் பாரதத் துணைகண்டம் [ ஒற்றைநாடாகப் பார்க்காமல் துணைக் கண்டம் என அவர் குறிப்பிட்டிருப்பது மிக முக்கியம்.] . கடந்த 65 ஆண்டுகளில் [ நூல் எழுதும் போது ]ஏற்பட்ட பல சமூக ,அரசியல் கொந்தளிப்புகளிலும் நிலைகுலையாமல் இருந்திருக்கிறோம் .ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படத் தக்க இப்பண்பே நம் நாட்டின் எதிர்காலச் சிறப்புக்கும் காரணமாக விளங்கும் என நம்புகிறேன்.” என இவர் கொடுத்துள்ள வாக்குமூலம் கிட்டத்தட்ட இவரின் தெளிவான அரசியல் பயணத்தின் குறியீடு ஆகும்.

 

பேரழிவைக் கொண்டுவந்த லத்தூர் நிலநடுக்கம் ,மும்பை தொடர் குண்டு வெடிப்புகள் போன்ற மிகவும் சவாலான காலகட்டத்தில் இவர் முதலமைச்சராக  உறுதியுடன் செயல்பட்டு தன் நிர்வாகத்திறமையை நிரூபித்தார் .லத்தூரும் மும்பையும் மீண்டெழுந்ததில் இவரின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது .

 

மரத்வாடா சட்ட பலைகலைக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட முதலில் ஆணையிட்ட முதல்வர் பவார் . கடும் எதிர்ப்பு எழுந்த போது நிறுத்திவைத்து ,மீண்டும் முதல்வரான போது சாதுரியமாக பெயர் சூட்டிய இவரின் முயற்சியும் காய் நகர்த்தலும் மக்கள் தொடர்பும் எல்லோரும் படிக்க வேண்டிய பாடம் .கோட்பாட்டில் உறுதியாக இருக்கும் போதே வறட்டுத்தனமாக முரட்டுத்தனமாக செய்யாமல் சூழலை சாதகமாக உருவாக்கிட செய்யும் சாமர்த்தியம் காய்நகர்த்தல் முக்கியமானது . இதுவும்  இந்நூலில் உள்ள பாடம்.

 

என்ரான் , மரபணு மாற்றப் பயிர்கள் போன்றவற்றில் இவர் இன்னும் உறுதியாக அந்தப் பக்கம் நிற்பதோடு அதன் தோல்விக்கு வருந்தவும் செய்கிறார் . என்ரானுக்கு எதிரான போராட்டத்தையும் எதிர்மறையாகவே பார்க்கிறார் . மகாராஷ்டிராவில் தத்தா சமந்த் எனும் அதிதீவிர தொழிற்சங்கத் தலைவரின் முரட்டு அணுமுறையால் மும்பை தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டது எனவும் அதை மீட்க தான் எடுத்த முயற்சியையும் சொல்கிறார் . ‘ வாரி ‘ எனப்படும் கிராமப்புற விவசாயிகளின் பக்தி யாத்திரை வடிவத்தில் விவசாயிகள் யாத்திரை நடத்தி விவசாயிகளை ஈர்த்தவர் பவார் .

 

 

இவர் தொழில் வளர்ச்சி ,ஒருங்கிணைந்த வளர்ச்சி ,விவசாய வளர்ச்சி இவற்றில் தனித்த ஆர்வமும் பார்வையும் உடையவர் . பொறுப்புகளில் இருந்த போது விடாது விவரங்களைத் தேடி வாசித்தவர் .பலரோடு உரையாடி தன்னை புதுப்பித்துக் கொண்டே இருந்தவர் . முதலாளிகளோடு நல்லுறவைப் பேணிக்கொண்டே பொதுமக்களோடு நல்லுறவைப் பேணுவது கழைக்கூத்தாடி நடப்பது போல் சாகசம் .அதில் இவர் கைதேர்ந்தவர் .இந்நூலில் நிறைய சாட்சிகள் உண்டு .ஹூண்டாய் கார்தொழிற்சாலையை மகாராஷ்டிராவில் முதலீடு செய்ய அழைத்து வந்தார் .ஆனால் அங்கு சூழல் அவருக்கு எதிராகப் போனதால் . ஜெயலலிதாவிடம் பேசி தமிழ்நாட்டிற்கு மடை மாற்றிவிட்டார் .

 

இயற்கை பேரிடர் மேலாண்மை ,மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தி , வேளாண் பொருட்களுக்கு விலை , வேளாண் கடன் தள்ளுபடி இப்படி காத்திரமான பிரச்சனைகளில் அமைச்சராக இவர் முன்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது .

 

நேருவுக்கு பின் இந்திராகாந்தி தொடங்கி சோனியா காந்தி வரை அக்குடும்பத்தோடு உடன்பட்டும் முரண்பட்டும் அரசியலில் பயணித்த இவரின் கதை காங்கிரஸ் வீழ்ச்சியின் ஒரு பக்கத்தைச் சொல்லும் . 10 ஜன்பாத் குடும்ப அரசியலில் கடும் வெறுப்பு கொண்டவராகவே பவார் உள்ளார் . நரசிம்மராவ் ஆட்சியை புகழ்கிறார் .அதே சமயம் பாபர் மசூதி இடிப்பு விஷயத்தில் அவரின் பிடி தளர்வாக இருந்ததையும் சொல்லுகிறார் .மன்மோகன் ஆட்சியின் மீதும் பாராட்டும் விமர்சனமும் வைக்கிறார் .அவசியம் படித்தறிய வேண்டிய செய்தி .ராகுல் காந்தி மீது நம்பிக்கை வைத்துள்ளார் .ஆயினும் காலம் கனிய வேண்டு மென்கிறார் .

 

கட்சிக்கு வெளியே சிவசேனாதலைவர் தாக்ரே ,சந்திரசேகர் ,பிஜுபட்நாய்க் ,வாஜ்பாய் ,செகாவத் ,சீக்கிய தலைவர்கள் ,சரண்சிங் உடபட பலகட்சித் தலைவர்களோடு தனிப்பட்ட நல்லுறவைப் பேணுபவராகவே பவார் உள்ளார் .இதனால் அவரால் சில முக்கிய பிரச்சனைகளில் காத்திரமாக தலையிட முடிகிறது . ஆயினும் இவர் அரசியல் சதுரங்கம் வட இந்தியாவுக்கு வெளியே குறைவே .தமிழ்நாடு ,கேரளா பற்றிய புரிதலில் வட இந்தியத் தலைவருக்கே உரிய எல்லை இவருக்கும் உண்டு. அதைவிட குறைவாகவே தமிழகத்தை அறிந்துள்ளார் .

 

 ‘காலைவாருபவர்’ , ‘ஊழல் பேர்வழி’ என்கிற அவப்பெயர் தமக்கு உண்டென்பதை ஒப்புக்கொள்ளும் பவார் அவற்றில் உண்மையில்லை என ஒரே போடாக போடுவதை நம்புவது சிரமமே ! இடதுசாரிகளை விமர்சன ரீதியாகவே சுட்டுகிறார் . காலமாறுதலை புரிந்து கொள்ளாதவர்கள் என்கிறார் .‘ஜோலாவாலக்கள்’ [ ஜோல்னாபையர்கள் ]என்று கிண்டலும் செய்கிறார் . இடதுசாரிகள் இவரோடு முரண்படும் இடங்கள் நிறைய ஆயினும் இவரிடம் அறிய வேண்டிய செய்திகளும் உண்டு .

 

வாயில் புற்றுநோய் ,இதய அறுவை சிகிட்சை ,எலும்பு முறிவு என கடும் நோய்களோடு மன உறுதியோடு போராடி மீண்டவர் . குறிப்பாக அந்த அத்தியாயம் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.

 

மனைவி பிரதிபா பவார் . மகள் சுப்ரியா சுலே இப்போது இவர் அரசியலில் பவாரின் வாரிசாகிவிட்டார் . மைத்துனர் அஜித் பவார் இப்போது அரசியலில் இவர் எதிரியாகிவிட்டார் .

 

இந்நூலில் உள்ள பல செய்திகள் கொறிக்க மட்டுமல்ல புரிதலுக்கும் உரியன ; சிலவற்றை  மட்டுமே கீழே தருகிறேன்.

 

1] மகாராஷ்டிராவை வறட்சி வாட்டிய போது பல மாநில முதல்வர்களிடம் முதல்வர் என்ற முறையில் உதவி கேட்டுப் பெற்றதைச் சொல்லிவிட்டு .அன்றைய உ.பி.முதல்வர் கமலபதி திரிபாதி காலைத் தொட்டு வணங்காததால்  உதவி செய்ய மறுத்து விட்டதையும் சொல்லிச் செல்கிறார்.

2] பவாரும் சிவசேனா தலைவர் தாக்ரேவும் சேர்ந்து வார இதழ் ஒன்று தொடங்க திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகளையும் பக்காவாகச் செய்தனராம். அப்போது தாக்ரே ஆலோசனைப்படி அவர் உறவினரான தெய்வீக சக்தி மிக்க ஓர் பெண்மணியிடம் துவக்க தேதி குறிக்கச் சொன்னார்களாம் . அந்த பெண்  தேதி குறித்த பின் சொன்னாராம் ,” இந்த சஞ்சிகைக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.பிரபா தேவியில் உள்ள சித்தி விநாயகர் திருவடியில் முதல் பிரதியை வையுங்கள். எல்லா பிரதிகளும் விற்றுத் தீர்ந்துவிடும் .கடைகளில் ஒரு இதழ்கூட கிடைக்காது.” என்றாராம். பவார் சொல்கிறார் ,” அவர் சொன்னது சரியாய்ப் போனது . கடைகளில் ஒரு இதழைக்கூட காண முடியவில்லை .ஏனென்றால் வாங்குவோர் யாருமில்லை .சீக்கிரத்திலேயே அந்த கூட்டு முயற்சியை மூட்டை கட்டிவிட்டோம்.”

3] இந்தியாவும் அமெரிக்காவும் அணு ஒப்பந்தம் கையெழுத்திட்ட போது பால் மற்றும் பால் பொருட்கள் அமெரிக்காவிடமிருந்து பெறும் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக இருந்ததாம் . ஆனால் அந்த பாலானது  “மாமிசம் கலந்த மாட்டுத் தீவனத்தைப் போட்டு வளர்த்த பசுக்களின் பால்” என்பது தெரியவந்தது . இது இங்கு பெரிய உணர்வை கிளப்பிவிடும் என்பதால் திட்டத்தையே கைவிட்டுவிட்டோம் என்கிறார் . இந்த நிகழ்வின் போது அருவருப்பான மொழியில் அமெரிக்கா பதில் சொன்னதையும் குறிப்பிட்டுள்ளார் .பசு அசைவத்தை சாப்பிடும் எண்ணத்தையே இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

 

[அது சரி ! இப்போது அமெரிக்கா போகும் சங்கிகள் அந்த மாட்டுப் பாலை குடிப்பார்களா ? அந்த மாட்டு கோமியத்தை குடிப்பார்களா ? பசுவும் மாமிச உண்ணியாக மாறிவிட்டதோ ! சங்கீஸ் ! என்னடா சனாதனத்துக்கு வந்த சோதனை உங்கள் நேச அமெரிக்காவில்… : இது என் கேள்வி]

 

3] அரிசி , கோதுமை போன்ற மாவுப் பொருட்களை மானிய விலையில் கொடுக்கிறோம். ஆனால் புரதச் சத்து குறைவே இந்தியாவில் சவாலான பிரச்சனை . புரதம் மிக்க பயிறு ,பருப்பு உற்பத்தி குறைவு .விலையும் அதிகம் .ஏழைகள் வாங்க முடியாது .  “இந்நிலையில் மாட்டிறைச்சியும் தடை செய்யப் பட்டுவிட்டால் புரதத்துக்காக ஏழைகள் எதைத்தான் சாப்பிடுவார்கள் ?” எனக் கேட்கிறார் பவார் .

 

4] லத்தூர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மறுவாழ்வுக்காக வீடுகள் கட்ட நான்கு மாடல்களை தயார் செய்து மக்கள் விரும்பியதை தேர்வு செய்து பல்வேறு அமைப்புகளின் உதவியோடு  கட்ட அனுமதித்போதும்  ,” ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் ஒரே இடத்தில் வசிக்கும் படியாக தொகுப்புகள் அனுமதிக்கப்படாது.“ என நிபந்தனை விதித்து அமலாக்கினார் பவார் .

 

5] தலித்துகள் ,சிறுபான்மையோர் , மகளிர் ,ஒடுக்கப்பட்டோரிடம் தமக்கு பரிவு உண்டென சொல்லும் இவர் தலித் கவிஞர் ஜவாகர் ரத்தோட் .ஜகதாப் போன்றோரை சுட்டுகிறார் .மகளிர் உரிமை பற்றி பேசுகிற போது தன் தாயின் முற்போக்கு நினைவோடும் அக்கறையோடும் பேசுகிறார் .

 

இப்படி சுவையான பல செய்திகள் உண்டு . ஓர் அறுபத்தி ஐந்து ஆண்டுகள்  அரசியல் வரலாற்றை அறிய இந்நூல் பயன்படும் .வாசிப்பீர் !

 

எனது அரசியல் வாழ்க்கை : அடித்தட்டிலிருந்து அதிகாரத்தின் நுழைவாயில் வரை,ஆசிரியர் : சரத் பவார், தமிழில் : கண்ணையன் தட்சிணாமூர்த்தி ,

வெளியீடு  : அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் ,

தொடர்புக்கு : 9443029736 , e mail : amti@drmcet.ac.in   பக்கங்கள் : 380 , விலை : ரூ.350 /

 

 

சுபொஅ.

30/10/23.

 

 

 

 

 


0 comments :

Post a Comment