ஐ டி ஐ /சிடிஐ பயின்ற போது...

Posted by அகத்தீ Labels:

 

இங்கே மூன்று படங்கள் பதியப்பட்டுள்ளன. அதில் இரண்டு சான்றிதழ்கள் . அரசியல் நோக்கோடு யாரையோ கேலி செய்வதற்காக அதனைப் பதியவில்லை.மாறாக 3/4/2023 அன்று வாட்ஸ்அப்பில் வந்த – இங்கு பதியப்பட்டுள்ள  ஒரு ஆட்டோகிராப்  கிளர்த்திய நினைவலைகள் அவை.

 

ஆட்டோகிராப் சினிமா பார்த்திருப்பீர்கள். எழுபதுகளில் ஓர் பழக்கம் உண்டு.  இருபது முப்பது வண்ண காகிங்கள் கொண்ட குட்டி டைரி போன்ற குறிப்பேடு. கல்வி நிலையங்களில் இறுதியாக விடைபெறும் போது ஆசிரியர் ,நண்பர்களிடம் கையொப்பம் வாங்குவது இதில்தான். பிடித்தமான பொன்மொழியோடு கையெழுத்து போட்டுத் தருவார்கள். அப்போது யாரிடமாவது போண் இருந்தால் அது விதி விலக்கு; பெரும்பாலும் கிடையாது . எனவே முகவரிதான்.நான் கையெழுத்து போட்டுக் கொடுத்த ஆட்டோகிராபில்கூட குரோம்பேட்டை முகவரியே இருக்கும்.

 

[11 ஆம் வகுப்பு படிக்கும் போது குடும்பம் சுசீந்திரத்தில் இருந்து சென்னைக்கு வந்தது . அப்போது அங்கேதான் வசித்தோம். குரோம்பேட்டை நேரு போர்ட் ஹை ஸ்கூலில்தான் படித்தேன் . 72ல் பழவந்தங்கலுக்கு மாறினோம்.பின்னர் பெரம்பூர் ,செவ்வாப்பேட்டை திரூர் , இப்போது பெங்களூர்]

 

 இது 71 ஆம் ஆண்டு ஆட்டோகிராப்.தொழிற் பயிற்சி முடிந்த போது நண்பன் வி.முனிரத்தினத்துக்கு நான் கையொப்பமிட்டுக் கொடுத்தது. 3/4/2023 அன்று வாட்ஸ்அப்பில் அவன் அதை அனுப்பிய போது நெஞ்சுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் படபடத்தன. இடையில் 52 ஆண்டுகளில் எவ்வளவு மாறிவிட்டோம் ?

 

சென்னை கிண்டியிலுள்ள Central Training Institute for Instructor எனும் ஒன்றிய அரசு நிறுவனத்தின் ஓர் அங்கமான MODEL  TRAINING INSTITUTE ல் 1969 -71 ஆம் ஆண்டுகளில் TOOL AND DIE MAKER  எனும் புதிய தொழிற்பயிற்சிப்  பிரிவு அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது . அதில் முதல் BATCH ல் நாங்கள் 21 பேர் பயின்றோம்.

 

முதலில் 20 பேர் தான் . அதே பயிற்சி நிலையத்தில்  blacksmith  ஓராண்டு பயிற்சி முடித்த வி.முனிரத்தினம் வந்து சேர 21 பேர் ஆனது .

 

 

 

1) சு.பொ.அகத்தியலிங்கம் என்கிற நான்.

2) ரா. உத்தண்டராமன்.

3)ஜெ.ஜெயராஜ்

4)டி.மிலான்

5)வி.முனிரத்தினம்.

6)ஜி.பாபு

7)சமியுல்லா

8) மோகனலிங்கம்

9)பால் அருள் ஜோஸ்

10) விஜயன்பிள்ளை

11)ஜேம்ஸ்

12)வேணுகோபால்

13)கிருஷ்ணன்

14)ராஜகோபால்

15)விஜயரங்கம்

16)நடராஜன்

17)கணபதி

18)வெங்கடேசன்

19)ஹரிபட்

20) டேவிட்

21)கண்ணையா

 

எனக்கு 16 பேர் பெயர் நினைவுக்கு வந்துவிட்டது .உத்தண்டராமனிடம் பேசிய போது மீதி ஐந்தும் வந்து சேர்ந்தது .

 

நாங்கள்  பயின்ற போது அங்கு இயந்திரங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் .எங்களுக்கு மட்டும் மதியம் 2 முதல் இரவு 9 வரை ஷிப்ட் . முதலில் பாட வகுப்புகள் .மற்ற பிரிவு மாணவர்கள் 5 மணிக்கு வெளியேறியபின் எங்களுக்கு PRACTICAL நடைமுறை பயிற்சி என ஏற்பாடு .

 

பெரும்பாலும் ஆசிரியரை ஐஸ் வைத்து எட்டு மணிக்கெல்லாம் வெளியேறிவிடுவோம் . பட்ரோட் ஜெயந்தி தியேட்டரில் இரண்டாம் ஆட்டம் சினிமாதான். பிறகு நடந்து வந்து விடுதியில் [ஹாஸ்டலில் ] தங்கிவிட்டு காலைதான் வீடு செல்வோம். சில நேரம் சைதாப்பேட்டை நூர்ஜகான் தியேட்டர் ,ஜெயராஜ் தியேட்டர் எனவும் போவதுண்டு . அண்ணாசாலை சாந்தி ,சபையர் எல்லாம் எங்கள் பட்ஜெட்டுக்கு ஒத்துவராது . பெரும்பாலும் தியேட்டருக்கும் நடந்தே போய் நடந்தே வருவோம்.

 

பிரிவு உபச்சார விழாவின் போது முதன் முதலாக ஹோட்டல் உட்லண்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு , சபைரிலோ / சாந்தியிலோ படம் பார்த்த நினைவு .

 

உத்தண்டராமன் ,ராஜகோபால் எல்லாம் சிவாஜி ரசிகர் பட்டாளம் . மோகனலிங்கம், கண்ணையா எல்லாம் எம்ஜிஆர் ரசிகர் படை. விஜயரங்கன் வித்தியாசமாக ஜெய்சங்கர் ரசிகன் . இவர்கள் சாதாரண ரசிகர்கள் அல்ல ; அனைத்து விபரங்களையும் விரல் நுனியில்  நாக்கு நுனியில் வைத்திருக்கும் வெறிகொண்ட ரசிகர்கள் .நான் எம் ஆர் ராதா ரசிகன் ; அதனால் நான் எல்லோருடனும் சேர முடிந்தது .இதனால் பிரச்சனைகளும் எழுந்ததுண்டு . அப்போது தமிழ்நாட்டில் மலையாளி எதிர்ப்பு அரசியல் சூடுபிடிக்க எங்கள் வளாகத்திலும் எதிரொலி இருந்தது .

 

 பரமேஸ்வரன் எனும் ஓர்  ஆசிரியர் முதலில் எங்கள் வகுப்பாசிரியர் .அவர் மலையாளி. தமிழன் மலையாளி பிரச்சனை . மாணவர்களுக்குள் மோதல் . பரமேஸ்வரன் மாற்றப்பட்டு சங்கர நாராயண ஐயர் ஆசிரியர் ஆனார் .பரமேஸ்வரனும் ராஜினாமா செய்துவிட்டு ஸ்பிக்குக்கு வேலைக்கு போய்விட்டார் .

 

அங்கு படித்த ஒவ்வொரு மாணவனும் சங்கர நாராயணனைக் கொண்டாடுவார் . ஒவ்வொரு மாணவனும் நன்றாக இருக்க வேண்டும் ,யாரின் எதிர் காலமும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்கிற பரந்த மனதுக்கு சொந்தக்காரார் . அவர். செக்‌ஷன் மார்க் ,அட்டெண்டன்ஸ் இரண்டும் முக்கியமானது ஒவ்வொரு மாணனுக்கும். சங்கரநாராயணன் இதில் எல்லோருக்கும் தாரளமாய் வழங்குவார் .  யாரையும் பழி வாங்கவே மாட்டார் ,முடிந்தவரை உதவுவார் .

 

“உங்க தலையில் mud களிமண்ணா இருக்குன்னு ?” அடிக்கடி கேட்பார் . அதனால் அவரையே mud வாத்தியார் என அழைப்போம் . அவருக்கும் அது தெரியும் . ரசிப்பார் . கடைசி நாள் பிரிவு உபச்சார விழா ,பரிசு எதிலும் பங்கேற்கமாட்டார் . “ நல்லா வேலை செய்து சம்பாதிங்க ,உங்க கல்யாண அழைப்பிதழை தந்தால் போதும் மகிழ்வேன்” என்பார் .நான் என் திருமண அழைப்பை அவரைத் தேடிச் சென்று கொடுத்தேன். வாழ்த்தினார் . ஆனால் எதற்கும் போகமாட்டார் .

 

எங்கள் பேட்ஜில் முனிரத்தினம் நல்ல தொழில் நுட்பர் .எல்லோரிடமும் சமமாகப் பழகுவார் . கோலார் தங்க வயலில் இருக்கிறார். இப்போதும் என்னோடு முகநூல் வழி தொடர்பில் உள்ளார் .அவர் அனுப்பிய ஆட்டோகிராபே இங்கு மையமாகி உள்ளது .

 

நான் ,உத்தண்டராமன் ,ஜெயராஜ் ,மிலான் ,ஜி பாபு ,சமியுல்லா ஐவரும் பல இடங்களில் ஒன்றாய் திரிவோம். படிப்பு முடிந்ததும் நான் உட்பட எட்டு பேர் ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டரில் அப்ரெண்டீஸாகப் போனோம். பாபு கர்நூல் போய்விட்டான். உத்தண்டராமன் பி ஆர் அண்ட் சன்ஸ் அப்புறம் லூகாஸ் என வேலைக்குப் போனர் . சமியுல்லா ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ்  அப்புறம் ஜிப் இண்டஸ்ட்ரீஸ் .இவர் தினமணி சிவராமனின் ரசிகர் ,ஜெயராஜும் மிலானும் விசாகப்பட்டிணம் பின் ஹைதராபாத் எனப் போனார்கள்.மிலான் பார்வை அற்றோருக்காக புதிய உபகரணங்களை வடிவமைத்தவர்.ஜெயராஜ் இராணுவ தளவாட உற்பத்தியில் பணிபுரிந்தவர் . நடராஜன் டி ஐ சைக்கிள் போனார் . நடராஜன்  எழுத்தாளர் ஜெயகாந்தனின் உறவினர் . கராத்தே வீரர் . கண்ணையா பளுதூக்கும் வீரர் . மோகனலிங்கம் டெலிபிரிண்டரிலேயே தொடர்ந்தார் . இவர் கைத்தறி நெசவாளர் குடும்பம் .எல்லோருக்கும் லுங்கி . கர்ச்சீப் மலிவாய் தருவார் . பால் அருள் ஜோஸ் வசதியான குடும்பம் .ரீல் மன்னன். டேவிட் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு நேவியில் சேர்ந்துவிட்டார் .நான் பெஸ்ட் அண்ட் கிராம்டன் உட்பட சில கம்பெனிகளின் பணியாற்றிவிட்டு அரசியல் இலக்கியம் எனப் பயணப்பட்டேன் .உத்தண்டராமன் வேலையில் இருந்து கொண்டே என் வழியில் பின் தொடர்ந்தார் .

 

அந்த ஒரு கூட்டுப் பறவைகள் திசைக்கொருவராய் போய்விட்டோம் . கண்ணையா இறந்துவிட்டதாக அறிகிறேன் . மிலான் ,ஜெயராஜ் ,உத்தண்ட் , முனிரத்தினம் ,நான் ஓரளவு தொடர்பில் உள்ளோம்.

 

மற்றவர்கள் யார் யார்எங்கெங்கு இருக்கிறார்கள் ? 

இந்த முகநூல் எல்லோரையும் ஒன்றிணைக்குமா ?

ஒரு முறையேனும் வாய்ப்புள்ள எல்லோரும் சந்தித்தால் என்ன ?

இந்த ஆர்வக் கோளாறே இந்த நெடிய பதிவிற்கு என்னை உந்தித் தள்ளியது .

நண்பர் முனிரத்தினம் அனுப்பிய ஆட்டோகிராப்பே இந்த ஆர்வக் கோளாறை என்னுள் உசுப்பிவிட்டது என அறிக !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

P.Agasthiyalingam [பழைய நண்பர்களுக்காக… அவர்கள் அறிந்த பெயர்]

4/3/2023.

 

 





0 comments :

Post a Comment