டெல்லி விவசாயிகள் முற்றுகை களத்தில் முதல் நாவல் …

Posted by அகத்தீ Labels:

 


 

 


டெல்லி விவசாயிகள் முற்றுகை களத்தில் முதல் நாவல் …

 

நடுவூர் பண்ணையார் குடும்பத்தைச் சார்ந்த ராணுவத்தில் பணியாற்றும் மேஜர் ஜெயந்த் ,அவர் இணையர் சுமதி மகன் வசந்த் மூவர்தான் இந்நாவலில் முதன்மைப் பாத்திரங்கள் . ஜெயந்தின் அப்பா ,பெரியப்பா ,தம்பிகள் ,தங்கை ,அம்மா ,பெரியம்மா , சுமதியின் அப்பா ,ஆச்சி,அம்மா உட்பட பண்ணையார் குடும்பக் கதையும் ; அத்துடன் அவரது ஊரார் , உழைப்பாளர் , பண்ணையார் ஜபர்தஸ்து ,பஞ்சாயத்து என்கிற வட்டத்துள் சுழலும் நாவலாக பிறந்து டெல்லி விவசாயிகள் போராட்ட களம் நோக்கி நகர்கிறது  வல்லபாய் எழுதிய நாவல் “ யுத்தம் என்பது…” .இது இவரின் முதல் நாவல் . ஏற்கனவே கவிதை ,சிறுகதை ,கட்டுரை என பங்களித்திருக்கிறார்

 

 

இந்நாவல் அதன் போக்கில் விவசாய நெருக்கடி ,எல்லைபிரச்சனை ,போர் ,சமாதானம் என விவாதிக்கிற நாவல் இது . கடைசியில் 2020 நவம்பரில் தொடங்கி ஓராண்டாக நீடித்த டெல்லியில் விவசாயிகள் முற்றுகையை உரக்கப் பேசி நிறைகிறது .

 

 “சமூகவெளியிலும் யுத்தம் தொடரும் மேஜர் “ எனப் பாராட்டு பெறுகிறார் ஜெயந்த்.  “ ‘ ஜெய்கிஷான்’ என முழங்கும் ஓர் ஜவான்,” என  ச.தமிழ்ச்செல்வன் தன் முன்னுரைக்கு கொடுத்துள்ள தலைப்பு நாவலைப்  பிழிந்து சொன்ன முத்திரைச் சொல்லாகும். ஜெய் ஜவான் ஜெய் கிஷான் என பிரதமராக லால்பகதூர் சாஸ்த்திரி இருந்த போது எழுப்பிய முழக்கம் ; இந்நாவலூடே உயிர் பெறுகிறது .

 

 

 “ ஒரு பருவம் பொய்த்தால் அடுத்த பருவம் எடுத்துவிடலாம் என்று விட்டதைப் பிடிக்கத் தொடரும் சூதாட்ட போதையாய் விவசாயம் ஏன் தொடர வேண்டும் ?” என சுமதி தன் அப்பாவிடம் கேட்ட கேள்வி நாவல் நெடுக எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது .

 

 “ ஓடிக்கிட்டே இருக்கணும் தாயி .அப்பத்தான் சோறும் தூக்கமும் ரசிக்கும் . இல்லேண்ணா சீக்காயிரும் .நெசம்தான்.இந்த கண்ணாமூச்சி வெளயாட்ல ஒரு சுகம்தான்.உழவை எல்லோரும் சுகமா நெனச்சிட்டா ஊர் முச்சூடும் சோத்துக்கு என்ன பண்ணும் தாயி !” சுமதிக்கு அவள் அப்பா சொன்ன பதில் விவசாயியின் மனோநிலைக்கு சாட்சி .

 

ஜெயந்த் தான் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதும் விவசாயத்தில் ஈடுபட நினைப்பதும் ; அதே நேரம் வேளாண் சிக்கல்களுக்கு தீர்வு இயந்திரத்தனமாய் பசுமை விவசாயம் எனச் சொல்வதில் உள்ள நழுவல் யுத்தியையும் யோசிக்கிறவராகவும் ; பேசுகிறவராகவும் காட்டப்படுகிறார் . “ மொட்டைமாடி புடலங்காயும் கத்திரிக்காயும் கொண்டு பன்னாட்டு நிறுவனத்தை எதிர்கொள்ள முடியுமா ? ” “பசுமைபுரட்சி இல்லாத உற்பத்தி தன்னிறைவையும் , நவீன விஞ்ஞானத்தின் உற்பத்தி உத்தி இல்லாத பசுமைப் புரட்சியையும் நினைத்துப் பார்க்க முடியுமா ?” “ ஊருக்கு சோறு போடுகிபவனின் உயிரை மாத்திரம் அவன் கவுரவத்திற்கு உத்திரவாதமாக்கும் நிர்ப்பந்தமான சமூக களத்தை” , விவசாயிகள் தற்கொலையை ஜெயந்த் வழி நாவலாசிரியர் விவாதமாக்குகிறார் . விவசாயம் கால கதியில் சந்திக்கும் மாற்றங்களூடே செல்ல வேண்டிய திசை வழியையும் சேர்த்தே யோசிக்கச் சொல்கிறது இந்நாவல்.

 

 “நடுவூர் பண்ணைக்கு அரை நாழி நெல் ஒரு விஷயமில்லை என்றாலும்..” பெரியப்பாவின் கனத்த மவுனம் குறித்து ஜெயந்த் வழி கவலை தெரிவிக்கிறார் நூலாசிரியர் ; ஆயினும் பண்ணையார் பார்வையில்தான் நாவல் பெரிதும் நகர்கிறது .விவசாயத்தொழிலாளிகளின் வலியும் ரணமும் சரியாகச் சொல்லப்படவில்லை .இந்த நாவலின் வரம்பில் அது அடங்காவிடிலும் விவசாயப் பிரச்சனை குறித்து பேசும் பொது அதுவும் முக்கிய கூறுதானே !

 

டெல்லி விவசாயிகள் முற்றுகையின் நியாயம் பற்றி பற்றி மேஜர் ஜெயந்த் அக்கறையும் கவலையுமாக பேசுவதும் . யுத்த களத்தில் ஒரு காலை இழந்து ,அவருக்கு விருது அறிவிக்கப்படும் போது ,”ஒட்டுமொத்த விவசாயிகளின் நியாயமான போராட்டத்திற்கும் ,எதிர்காலத்திற்கும் என்னுடைய இந்த சிறிய புறக்கணிப்பு சிறிய நம்பிக்கையை விதைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ,இராமனுக்கு அணில் போல ,விருதை மறுக்கும் என்னுடைய இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்கிற கடிதம் எழுதும் மேஜர் நம்முள் உயந்து நிற்கிறார் .

 

 இராணுவ வீரன் என்பவன் சீருடை அணிந்த  நம் விவசாய வீட்டுப் பிள்ளைகளே… தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளே .. நெருக்கடி முற்றும்போது அவர்களின் துப்பாக்கி ஆளும் வர்க்கத்திற்கு எதிராக நிற்கும் என்பது மார்க்சியப் பார்வை . எல்லா வகையிலும் விவசாயப் போராட்டத்தை ஒடுக்க முயன்ற மோடி இறுதியில் பணிய நேர்ந்தது ஏன் ? ராணுவத்துக்குள் ஏற்பட்ட முணுமுணுப்பும் ,முன்னாள் ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் நின்றதும்கூட காரணங்களுள் ஒன்றானது இல்லையா ? நாவலில் செய்தியிலும் அது தொக்கி நிற்கிறதோ ?

 

மறுபுறம் , மேஜர் யுத்த களத்தில் இருந்தாலும் யுத்தத்தின் அரசியலை ,சமாதானத்தின் தேவையை உணர்ந்தவராக யோசிப்பவராக சித்தரிக்கப்பட்டுள்ளார் . ஓரிடத்தில் மகன் வசந்த் ,” ஏம்பா பேட்டில்ல நீங்க எத்தனை பேரப்பா கொன்றுக்கீங்க” என கேட்டபோது ஜெயந்த் அதிர்ந்துவிட்டான் .  அன்று ஜெயந்த் தூங்கும் போது மார்பிலிருந்த ஹெமிங்க்வேயில் “ ஃபார்வெல் டூ ஆர்ம்ஸ்” [ ஆயுதங்கள் விடுவிப்பு] எனும் புத்தகத்தை சுமதி எடுத்து வைக்கும் காட்சி நுட்பமானது .

 

ஜெயந்தின் இணையர் சுமதி சமைத்துப் போடும் பெண்ணாக இல்லாமல் ; தமக்கான அடையாளத்தை தானே செதுக்குபவராக காட்டப்பட்டுள்ளது அடிகோடிட வேண்டிய செய்தியாகும் . தாயை இழந்து ஆச்சி வளர்ப்பில் வளர்ந்த சுமதி சுயதேடலும் , எதையும் எதிர்கொள்ளும் உள்ள உறுதியோடும் நாவல் நெடுக வருகிறார்.

 

“கல்யாணம்ல்லாம் சரி .எதுக்கு இவ்வளவு தடபுடலா ? இன்னும் கொஞ்சம்கூட சிம்ம்பிளா இருக்கலாமே ?” என்கிற மகள் கல்யாணியின் ஆதங்கத்தை மீறி கடன் வாங்கி செலவு செய்து கடனை அடைக்க நிலத்தின் ஒரு பகுதியை விற்கும் பெரியப்பா பாத்திரம் கிராமங்களின் நிஜம் . “ முக்கால் வாசிக்கும் மேலான குடும்பத்தின் நகைகள் வெவ்வேறு வங்கிகளில் பாடம் படிக்கப் போய்விட்டன.” என்கிற நூலாசிரியர் வரிகள் நூறு சதம் யதார்த்தம்.

 

விவசாய முற்றுகை குறித்த கவிதைகள் தமிழில் நிறைய வந்துள்ளன . கவிஞர் நா,வெ .அருள் தொகுத்த நூலும் ; அவர் எழுதிய நூலுமே சாட்சி . ஆனால் “ நாவலில் முதன் முறையாக பேசுபொருள் ஆகி இருக்கிறது” என்கிறார் ச.தமிழ்ச்செல்வன் . இன்னொரு நாவல் இல்லையே ! ஏன் ? பிரச்சனைகளை பேசினாலே பிரச்சார வாடை , அழகியலை கோட்டைவிட்டு  சரியும்  என்கிற தப்பெண்ணமே ,  இந்த எரியும் விவசாய போராட்டம்  தொட்டு நாவல் எழுதத் தடையாய் ஆகி இருக்குமோ ?

 

நாவலை படிக்கும் போது பல இடங்களில் வல்லபாய் ஒரு காலத்தில் லா சா ராமாமிர்தம் ரசிகராக இருந்திருப்பாரோ என்கிற ஐயம் எழுகிறது .சங்கீதம் போல் எழுத முயன்றுள்ளார் . இன்னொரு கோணத்தில் பார்த்தால் ஆங்கிலத்தில் யோசித்து தமிழில் எழுதும் மத்தியதர வர்க்கமாய்த் தெரிகிறார் .

 

இந்நாவலை விவசாயப் போராளிகளுக்கு சமர்ப்பணம் செய்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும் .

 

வாசிப்பீர் ! வாசிக்க பரிந்துரைப்பீர் !

 

யுத்தம் என்பது….[ நாவல்],  ஆசிரியர் : வல்லபாய் ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,

தொடர்புக்கு :044 24332924 /24330024 /8778073949

Email : bharathiputhkalayam@gmail.com  , www.thamizhbooks.com

பக்கங்கள் : 144 , விலை :ரூ.140/

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

12/4/2023.

 

 

 

 


0 comments :

Post a Comment