ஆடும் மாடும்…
தலைப்பைப்
பார்த்ததும் யாரையோ கிண்டல் செய்ய - அரசியல் பகடி செய்ய நான் எழுதி இருப்பதாக நீங்கள்
கருதினால் , அதற்கு நான் பொறுப்பல்ல … அதையும் எழுதத்தான் வேண்டும் , ஆயின் இப்போது
எழுதுவது வேறு சங்கதி.
தி.முக வின்
தலைவர்களில் ஒருவரான தத்துவமேதை அமரர் டி.கே
.சீனிவாசன் எழுதிய அவசியம் படிக்க வேண்டிய நூல் ”ஆடும் மாடும்” . ஆண்களும் பெண்களும் என்பதுதான் அதன் பொருள். நான் இந்நூலைப்
பற்றியும் இப்போது எழுதப் போவதில்லை . நூலை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் …..
நடை பயிற்சியின்
போது நான் அன்றாடம் காணுகிற சில காட்சிகளை இங்கே சொல்லப் போகிறேன்; அவ்வளவுதான். அதற்கு
தோன்றிய தலைப்புதான் இது .
பெங்களூர்
ஊரகப் பகுதிக்கு உட்பட்ட பொம்மசந்த்ரா தொழிற்பேட்டையில் மாலை ஐந்து மணிக்கு வேலைமுடித்து பெண்களும் ஆண்களும்
கம்பெனிகளில் இருந்து சாரை சாரையாகப் புறப்பட்டு ,பெரிய ஊர்வலம் போல வருவார்கள் .ஜிகினி
ரோட்டில் இருந்தும் வருவார்கள் .
காச்சநாய்க்கன்
ஹள்ளி , எரண்டஹள்ளி, ஹிட்டனஹள்ளி ,ஹென்னகரா போன்ற நகரமயமாகிவரும் கிராமப்பகுதிகளை நோக்கி
[ 2 அல்லது மூன்று கி.மீ தொலைவுக்குள்] செல்லவே இந்த ஊர்வலம் . பைக் ,சைக்கிள் ,ஷேர்
ஆட்டோ ,பஸ் என பயணிப்போர் குறைவே .இவர்களின் குடியிருப்பு பெரும்பகுதிஅங்கு தான்.
[ அதை வீடென்றும் சொல்லலாம், வீடு மாதிரி என்றும் சொல்லலாம்
, கூடுமாதிரி என்றும் சொல்லலாம்.வடஇந்தியர் வசிக்கும் பெரும்பாலான வீடுகள் இடிந்த கட்டிடம்
/தகரமறைப்பு]
ஸ்டேட்பேங் நெருங்கியதும் பெரும்பாலான ஆண்கள் நின்றுவிடுவார்கள் .அங்கே சாலையோர கடைகளில் பெண்கள்
காய்கறி ,கருவாடு ,மீன் இவற்றோடு பஜ்ஜி போண்டா
கடைகளில் அல்லது பேக்கிரிகளில் ஏதாவது தின்பண்டமும் வாங்கிக் கொண்டு வேகவேகமாக ஓடுவார்கள்
. வழியில் அனுமார் கோயிலை நோக்கி ஓடிக்கொண்டே ஒரு கும்பிடு . வீட்டுக்கு போகும் அவசரம்
துடிப்பு அப்படி . இந்தத் தின்பண்டங்களை அவர்கள் சாப்பிட்டுப் பார்ப்பது அபூர்வம்
.எங்காவது ஓர் கடையில் ஒன்றிரண்டு பெண்கள் நின்று சாப்பிட்டால் அவர்கள் பி.ஜீ ஹாஸ்டல்களில்
தங்கி இருக்கும் பெண்களாக இருக்கும் .
திருமணமான
பெண்கள் வேகவேகமாக ஓடுவது குழந்தைகள் இவர்கள் வருகைக்கு காத்திருக்கும் என்பதற்காகத்தான்
.அவர்களுக்காகத்தான் இந்த தின்பண்டங்களோடு ஓடுகிறார்கள் . அதன் பின் சமைக்க வேண்டும் .அது மட்டுமல்ல தண்ணீர் பிடிப்பது,துணி
துவைப்பது [ வாஷிங் மெஷின் மிகக்குறைவு .தெருவோரம் சாலையில் கையால் துவைப்பதை இங்கு
எங்கும் சர்வசாதாரணமாகக் காணலாம்] என காத்திருக்கும் வேலை பட்டியல் அவர்களை ஓடவைக்கும்.
அது அவர்களின்
செகண்ட் ஷிப்ட் வேலை .ஆனால் கடமை ,பொறுப்பு ,தாய்மை ,குடும்பப் பெண் என பலவித முத்திரை
குத்தலாம். வலியும் சுமையும் அவர்களுக்குத்தானே
!
வேடிக்கை
என்னவெனில் இப்படி வரும் பெண்களில் கன்னடம் பேசுவோர் ,இந்தி பேசுவோர் ,தமிழ் பேசுவோர்
,தெலுங்கு பேசுவோர் என பல மொழியினர் இருப்பர் .இந்து .முஸ்லீம் .கிறுத்தவர் எல்லோரும்
இருப்பர் .எல்லா சாதியும் இருக்கும் . ஒடுக்கப்பட்ட,பிற்படுத்தப்பட்ட சாதியினரே அதிகம் இருக்கக்கூடும்.
[ இங்கே ஒரு
முடிதிருத்தகத்தில் எனக்கு முடிவெட்டியவரை விசாரித்தேன் அவர் உ.பி யிலிருந்து வந்தவர்
.பிராமிண் என்றார் . இப்பகுதியில் இவர் உறவினர்கள் பலபேர் ஆண்களும் பெண்களும் கம்பெனி
,கடை ,வீடு என வேலைசெய்கின்றனர்.]
ஆண்கள் பாதியிலே
நின்றுவிடுவார்களல்லவா ? இவர்களில் பெரும்பாலோர் முன்னால் ஓடிய பெண்களின் கணவர்களாகவோ
சகோதரர்களாகவோ, தந்தையராகவோ இருப்பார்கள்.
நின்ற ஆண்கள் அவரவர் நணபர் கூட்டத்தோடு பஜ்ஜி கடை ,பேக்கிரி என நுழைந்து எதையாவது சாப்பிட்டு, டீ குடித்து, தம்மடித்து,
அரட்டை அடித்து இரவு ஏழு ,எட்டு மணிவரை பொழுதைக் கொன்றுவிட்டு வீடு திரும்புவார்கள்
. தெரு முழுக்க பான்பராக் மென்று துப்பிய எச்சில் வேறு .கணிசமான ஆண்கள் ஒயின் ஷாப்பில்
கட்டிங் போட்டுவிட்டு தள்ளாடி தடுமாறி வீடு போய்ச் சேர இரவு ஒண்பது பத்து ஆகிவிடும் . கட்டிங் போட மொழி ,மத
,சாதி வித்தியாசமெல்லாம் கிடையாது .
அதன் பிறகு
குடும்பமே சாப்பிட்டு படுத்து காலையில் ஆறு / ஏழு மணிக்கெல்லாம் புறப்பட்டு விடுவார்கள். வழக்கம் போல் ஆண்களுக்கு
கம்பெனியில் ஒரு ஷிப்ட் மட்டும் ;பெண்களுக்கு கம்பெனி ,வீடு என இரண்டு ஷிப்டுகள் .
ஆடும் மாடும்
அன்றாடம் இப்படித்தான் ; அதுதான் ஆண்கள் பெண்கள் நிலை இப்படித்தான் இங்கு.
இவர்களின்
பெண்விடுதலை தாகம் எப்படிப் பட்டதாக இருக்கும் ?
இவர்களின்
“ அச்சா தீன்” கனவு எப்படிப்பட்டதாக இருக்கும் ?
சு.பொ.அ.
20/4/2023.
0 comments :
Post a Comment