வாசிப்பின் சாளரம்

Posted by அகத்தீ Labels:

 

வாசிப்பின் சாளரம்




 

நூலறிமுகம் ,நூல் விமர்சனம் ,நயந்துரை ,விதந்துரை ,பாராட்டுரை , கிழி , அலசல் ,ஆராய்ச்சி , லயிப்பு ,ரசனை , உள்வாங்கல் ,வாசிப்பனுபவம் ,நூலில் கரைதல்,படைப்பாளுமையோடு உரையாடல் இப்படி விதவிதமாக படைப்பாளியோடு ஒருவர் கைகுலுக்க இயலும் . ஆனால் ஒரே நூலில் எல்லாம் சாத்தியமாகுமா ? சாத்தியமாகி இருக்கிறது ந.பெரியசாமிக்கு .அதன் உயிர் சாட்சிதான் “மொழியின் நிழல்”.

 

நாற்பது கட்டுரைகள் .அவற்றுள் 25 கவிதைத் தொகுப்புகள் சார்ந்தவை , மூன்று நாவல்கள் சார்ந்தவை , இரண்டு நாடகங்கள் சார்ந்தவை ,இரண்டு கடிதங்கள் சார்ந்தவை, சிறுகதை ,பதிவுகள் உள்ளிட்ட இதரவை எட்டு என இவ்வளவு பெரும் இலக்கியப் பரப்பில் ‘மொழியின் நிழல்’ பேசுகிறது . நூலாசிரியரின் வாசிப்பு பெருவழி வியக்க வைக்கிறது .சந்தம் கொஞ்சும் கவிநடை உரைநடை வாசிப்பை ஈர்ப்பாக்குகிறது .

 

“ கவித்துவம் , கற்பனை ,சமூகப்பார்வை ,உணர்வு மயமான அணுகுமுறை , சக படைப்பாளிகளை உச்சி முகர்ந்து கொண்டாடும் மன விசாலம் “ என ந.பெரியசாமியின் இயல்புகளையும் வாசிப்பு அனுபவத்தையும் கமலாலயன் பாராட்டுவது மிகை அல்ல .உண்மை .

 

இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் நாற்பது படைப்பாளுமைகளோடும் ந.பெரியசாமியோடும் கைகுலுக்கும் பேரானந்தம் கிடைக்கும் . இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையாக எடுத்து என் கருத்தைச் சொல்ல வேண்டுமாயின் அந்நூல் ஒவ்வொன்றையும் நான் வாசித்திருக்க வேண்டும் , ஒன்றிரண்டை மட்டும் சுட்டல் நேர்மையாகாதே .

 

இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரிடத்தும் ஏதேனும் ஒரு நூலை குறித்து இதனை நாம் இன்னும் வாசிக்காமல் இருக்கிறோமே என்கிற குற்ற உணர்ச்சியை நிச்சயம் தூண்டும் , இன்னும் வாசிக்க வாசிக்க நீளும் படைப்புலகை நோக்கி உந்தித்தள்ளும் .ஆக ‘மொழியின் நிழல்’ வாசிப்பின் சாளரம்.

 

மொழியின் நிழல் ,

ந.பெரியசாமி ,

பக்கங்கள் : 188 , விலை: ரூ 180/

தேநீர் பதிப்பகம்,

தொடர்புக்கு : 90809 09600

 

சுபொஅ.

12/1/2022.

 

 

0 comments :

Post a Comment