கூடுதல் மகிழ்ச்சி...கூடுதல் நம்பிக்கை
சென்ற
ஆண்டு வந்துபோன
அதே பொங்கல்
அல்ல
இந்த
ஆண்டும் வருவது …
கூடுதல்
மகிழ்ச்சி
கூடுதல்
நம்பிக்கை
கூடுதல்
எழுச்சி
கொரானா
காலத்திலுமா
என நீங்கள்
கேட்பது
காதில்
விழுகிறது
ஆண்டொன்றாய்
உழவர்கள் போராடி
ஆள்வோரை
மண்டியிடச் செய்து
வென்றது
மகிழ்ச்சிதானே!
சேற்றை
மிதிக்கும் உழவரை
தெருவில்
வதைத்த மமதையை
பணிய
வைத்தது நம்பிக்கைதானே !
வயல்வெளியில்
வியர்வையையும்
போர்க்களத்தில்
உயிரையும்
சொரிந்து
பெற்ற எழுச்சியன்றோ !
இந்த
ஆண்டு பொங்கலை
இறும்பூதெய்தி
கொண்டாடு !
இனிவரும்
காலம் நமதாகும் !
உழவன்
பெற்ற பெருவெற்றி
உழைப்போர்
குருதியை சூடேற்றும்
உலுத்தர்கள்
மகுடம் உருண்டோடும் !
சென்ற
ஆண்டு வந்துபோன
அதே பொங்கல்
அல்ல
இந்த
ஆண்டும் வருவது …
கூடுதல்
மகிழ்ச்சி
கூடுதல்
நம்பிக்கை
கூடுதல்
எழுச்சி
ஆனாலும்
,
ஊரும்
சேரியும் உறவாடி
ஒன்றாய்ப்
பொங்கல் கொண்டாடும்
உன்னதநாள்
எப்போது ?
சு.பொ.அகத்தியலிங்கம்.
13/1/2022.
0 comments :
Post a Comment