பெண்ணின் சுயத்திற்கு

Posted by அகத்தீ Labels:

பெண்ணின் சுயத்திற்கு அர்த்தம் தேடும் நாவல் ….

மிக எளிமையான கதையோட்டத்தில் மிக ஆழமான சமூகப் பார்வையை ,பெண்ணியப் பார்வையை விதைப்பதில் இந்நாவல் பெருவெற்றி பெற்றுள்ளது. அருணா ,உமா என இரண்டு தோழிகளின் வாழ்க்கையோடு இணைந்த கதை . அருணா கெடுபிடி மிகுந்த சூழலில் வளரும் பெண் .அர்த்தமற்ற கெடுபிடிகளை வெறுக்கிறாள் . தன் சுயம் மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறாள் . காதலன் ஸ்ரீதரை மணந்து வெளியேறினால் தன் எண்ணம் ஈடேறும் எனக் கருதுகிறாள் . விடுதியில் தங்கிப் படிக்கும் தோழி உமா ஒப்பீட்டளவில் சற்று சுதந்திரமானவள் . அவள் அருணாவோடு உடன் படவில்லை .திருமணத்துக்கு பிறகு சுயம் பாதிக்கப்படும் என வாதிடுகிறாள் . அருணா தான் விரும்பியபடியே கல்லூரி ஆசிரியர் வேலை கிடைத்தபின் ஸ்ரீதரை மணந்து வீட்டைவிட்டு வெளியேறுகிறாள் . குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போட வேண்டும் என்கிற அருணாவின் முதல் விருப்பம் நிராகரிக்கப்படுகிறது . முதல் கசப்பு . கல்லூரியில் தொழிற் சங்க வேலைகளில் ஈடுபடுகிறாள் .ஸ்ரீதருக்கு அது உடன்பாடில்லை .முரண்பாடு தலைநீட்டுகிறது . சமூக அக்கறையோடு தொடங்கப்படும் ஒரு பத்திரிகையில் பங்கேற்கிறாள் முரண்பாடு மேலும் முற்றுகிறது . ஒரு புள்ளியில் வெடிக்கிறது . கல்லூரி போரட்ட களத்தில் சந்திக்கும் கோபால் ,கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே இடையே உள்ள உறுத்தும் உண்மையை அவள் காண்கிறாள் .முற்போக்கோ பிற்போக்கோ எல்லா ஆண்களும் பெண்ணின் சுயம் காயப்படுவது குறித்து கவலைப்படாத போக்கைக் கண்டு சீறுகிறாள் . ஹைதரபாத் மெஹந்திப் பெண்கள் குறித்து பேட்டி எடுக்கப் போனதும் ; ராசாத்தி என்கிற பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை விசாரிக்கச் சென்றதும் அருணா வாழ்வில் பெரும் தாக்கத்தை உருவாக்குகிறது . குடும்பத்தில் பெரும் புயலாகிறது .வீட்டைவிட்டு வெளியேறுகிறாள் அருணா. உமா திருமணம் செய்யாமல் தன் காதலன் சுதீரோடு சேர்ந்து வாழும் முடிவெடுக்கிறாள் .அதுவும் தனித்தனி வீடு. விரும்பும் போது சேர்ந்து கொள்வது . அந்த முடிவு சரியா ? தீர்வா ? கோழைத்தனமா ? நம்பிக்கைக் குறைவா ? கதைப் போக்கில் விவாதம் தொடர்கிறது . தீர்ப்பு வழங்கப்பட வில்லை . ஆனால் பெண்ணின் சுயம் மதிக்கப்படாத போது இத்தகைய பரிசோதனை முயற்சிகள் தவிர்க்க முடியாததுதானே ! உமாவைத் தேடி அருணா டெல்லி செல்கிறாள் . ஒரு கட்டத்தில் உமா கேள்விக்குப் பதில் சொல்லும் போது அருணா சொல்கிறாள் , “ ஆமாம் ,சமுதாயத்துடன் எனக்கு சம்மந்தமே இல்லாமல் , ஸ்ரீதர் மட்டுமே என் உலகம் என இருந்தால் ,இருந்தால் எத்தனையோ ஆண்களைவிட ஸ்ரீதர் நல்லவன்தான்.சின்னஞ்சிறு தகராறுகள் வந்தாலும் நானும் அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டு போயிருப்பேனோ என்னவோ,” மேலும் சொல்கிறாள் , “ …. நம்முடைய விழிப்புணர்வைப் பொறுத்துத்தான் நாம் ஆண்களின் அதிகாரத்தைப் பொறுத்துக் கொள்வோம் ….. … நான் ஸ்ரீதரை விட்டு வெளியே வந்திருக்கிறேன் .நீ சுதிருடன் திருமணம் என்ற பேச்சு இல்லாமல் புதுவிதமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாய் .இன்னும் சிலரோ தனிமையில் வாழ்கிறார்கள் . அந்த அதிகாரத்தைத் தாங்க முடியாமல் சிலர் செத்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள் . அவரவர் தனித் தனியாக அடையாளத்திற்காகத் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் .” இறுதியாக உமாசொல்கிறாள் , “ சமுதாயத்தை முழுவதுமாக மாற்ற என்னால் முடியாது என்று என்னால் முடிந்ததைக் கூட நான் செய்யாமல் இருந்தால் எப்படி ? அப்படிச் செய்யாமல் என்னால் வாழமுடியாது என்று எனக்குத் தெரிந்துவிட்டது .அந்த வேலையில் என்னை நான் நிரூபித்துக் கொள்கிறேன் . அதனால் எனக்கு எவ்வளவோ திருப்தி .என் வாழ்க்கை பிறவிப் பயனை அடைந்துவிட்ட உணர்வு . அந்த உணர்வு ஏற்படுவதே சுயேட்சைக்கு அர்த்தமில்லையா ? என் வாழ்க்கையை மட்டுமே நான் வாழ்வதாக இருந்தால் எனக்கு இந்த சுயேட்சை தேவையில்லை .என் சுயேட்சைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் .அந்த அர்த்தத்தைத் தேடுவதுதான் இப்போது என் வேலை .” பெண்ணின் சுயம் என்பது வெறுமே தன்னைக் குறித்த அக்கறை மட்டுமல்ல அதற்கு மேலும் ஒரு அர்த்தம் உண்டென உணர்த்தும் அழுத்தமான கதை .அழுத்தமான பதிவு . தெலுங்கு மொழியில் சாகித்ய அகடமி விருது பெற்ற ஓல்காவின் எளிமையும் உயிர்துடிப்பும் மிக்க நாவலை ; அதே உணர்வோடு தமிழாக்கி இருக்கும் கெளரி கிருபாநந்தன் மொழியாக்கத்திற்கான சாகித்ய அகடமி விருது பெற்றவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி . சிறகுகள் [ புதினம் ], ஆசிரியர் : ஓல்கா [ தெலுங்கு ], தமிழில் : கெளரி கிருபாநந்தன் . வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,7,இளங்கோ சாலை ,தேனாம்பேட்டை ,சென்னை – 600 018 . பக் : 160 , விலை : ரூ .150 / சு.பொ.அகத்தியலிங்கம். நன்றி ; புத்தக மேசை ,தீக்கதிர் , 31/12.2018.

0 comments :

Post a Comment