நெருப்பிலிருந்து கேள்விகள் . [ டிசம்பர் 25 : வெண்மணி நினைவுகள் ] சு.பொ.அகத்தியலிங்கம் . வெண்மணி பற்றி எரிந்த போது நான் பள்ளி இறுதி வகுப்பு மாணவன் ; அந்த கொடூரச் செய்தி எம் செவியை எட்டவில்லை . அதன் பின் தொழிற்கல்வி பயிலச் சென்ற போதும் திராவிட அரசியலோடுதான் என் உறவு . தொழிற்பயிற்சி முடிந்து ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸில் பயிற்சியாளராய்ச் சேர்ந்த போதே இடதுசாரி அரசியல் எனக்கு பரிச்சயமானது . என் உடன் தொழிற் கல்வி பயின்ற பாபு என்பவரின் மாமா ,ரிசர்வ் வங்கி கேண்டினில் பணி புரிந்த தோழர் பத்மநாபன் மூலம் ‘ வெண்மணி’ என்ற சிறுபிரசுரம் கிடைத்தது .கே .முத்தையா தொகுத்தது என நினைக்கிறேன் .என் நெஞ்சில் அன்று இரவு பற்றிய வெண்மணி நெருப்பு இன்னும் அணையவே இல்லை . நான் அப்போதெல்லாம் கவியரங்கங்களில் பங்கேற்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு . அக்கவியரங்குகளில் தவறாது வணக்கம் சொல்கையில் மூன்று பேருக்கு வணக்கம் சொல்லியே துவங்குவேன் . “ அன்னை விலங்கொடிக்க /ஆதிக்கப் பகை முடிக்க / தன்னைப் பலிதந்த /சிங்க இளைஞர்களே / சிகப்பு வணக்கங்கள் …. வெள்ளையர்கள் போனபின்பு /ஆளவந்த கொள்ளையர்கள் / அஹிம்சா தடியடியில் / சாத்வீகச் சிறைகளில் /சரித்திரத்தின் பக்கத்தை /இரத்தத்தால் நிறைத்தவரே / இதயத்து வணக்கங்கள் …. [ இதைத் தொடர்ந்து மூன்றாவதாகச் சொல்வேன் ..] யுகயுகமாகப் புகைந்து கொண்டிருந்த /வர்க்கப் பகைமை /வர்ணக் கொடுமை /வெண்மணியில் / வெறிகொண்டெரிந்தபோது / வீழ்ந்த மலர்களே /வீரவணக்கம் ! வீரவணக்கம் !” ஆக ,வெண்மணி என்னுள் கனந்து கொண்டே இருந்தது . அவசர காலத்துக்கு சற்று முன்பு ,நான் குடியிருந்த சென்னை பழவந்தங்கல் பகுதியில் இளைஞர்கள் சேர்ந்து “வெண்மணிப் படிப்பகம்” துவங்கினோம் . தோழர்கள் உராவரதராஜன் ,து ஜானகிராமன் , முண்டன் [ரிசர்வ் வங்கி] , குமாரதாஸ் போன்றோர் எமக்கு உற்சாகம் தந்து வழிகாட்டினர் . படிப்பகத்தை திறந்து வைத்தபின் ஒரு நர்சரி பள்ளி வகுப்பறையில் சுமார் நாற்பதுபேர் நிரம்பிய கூட்டத்தில் தோழர் மைதிலி சிவராமன் சுமார் இரண்டு மணி நேரம் நெஞ்சைப் பிழிந்தார் . அழுகையும் கோபமும் சத்திய ஆவேசமும் கொப்பளிக்கும் அந்த உரையின் ஒவ்வொரு வார்த்தையும் இப்போதும் நெஞ்சம் முழுக்க நிறைந்து கிடக்கிறது . “ அரைப்படி நெல் அதிகம் கூலி கொடுத்தால் எந்த நிலப்பிரபுவுக்கும் களஞ்சியம் குறைந்துவிடாது .இது அவர்களுக்கும் தெரியும் .பிரச்சனை அதுவே அல்ல ; கூனிக் கிடந்தவர் நிமிர்ந்தனர் என்பதை ;செங்கொடி ஏந்தி முழக்கமிடுகின்றனர் என்பதை ; தங்கள் ஆதிக்கத்துக்கும் ,சாதிய மேலாண்மைக்கும் விடப்பட்ட சவாலாகக் கருத்தினர் . இதை இப்படியே விடக்கூடாது .முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கொக்கரித்தனர் .அதன் எதிரொலியே இந்த மனம் பதைக்கும் படுகொலை .” இதுவே அவர் பேச்சின் சாரம் .வரிசையாக தேதிவாரியாக சம்பவக் கோர்வையாக சமூக ,வரலாற்று சூழலோடு அரசியல் பார்வையோடு இதனை அவர் விவரித்தார் . உரை முடிந்ததும் .கேள்வி-பதில் தொடங்கியது . என் நண்பரும் ஒருவர் மீண்டும் மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பி விவாதத்தை அந்தப் புள்ளியிலேயே நகர்த்தினார் . கேள்வியின் கரு இதுதான் , “ வெண்மணி வர்க்கப் போராட்டமா ? வர்ணப் போராட்டமா அதாவது சாதியப் போராட்டமா ?” உயிரோடு எரிக்கப்பட்ட அனைவரும் ஒடுக்கப்பட்ட ,தாழ்த்தப்பட்ட சமூகப் பிரிவினர் என்பதும் ; எரித்தவர் அனைவரும் மேல் சாதியினர் மற்றும் ஆதிக்க சாதியினர் என்பதும் தற்செயலானதல்ல . அதே நேரம் செங்கொடி ஏந்தி வர்க்கப் போரில் ஈடுப்பட்டவர் என்பதும் மெய்யே ! ஆக இது வர்க்கப் போராகவும் சாதிய கொடுமைக்கு எதிரான போராகவும் இருந்தது .இரண்டு கூறும் இதில் இருந்தது .இப்படி விளக்கமும் எதிர் கேள்வியுமாக அன்று ஒரு பயிற்சிக் களமானது அக்கூட்டம் . பின்னர் வாலிபர் சங்கப் பொறுப்புகளுக்கு வந்த பின் , முதல் முறை திருவாரூர் சென்றபோது தோழர்கள் ரெங்கசாமி ,மார்க்ஸ் இருவரோடு பஸ்சில் பயணித்தும் நடந்தும் கீழ்வெண்மணிக்கு போய் வீரவணக்கம் செலுத்தினேன் .அந்த நொடியில் என்னுள் பாய்ந்த வைராக்கியம் இன்றுவரை என்னை செங்கொடியோடு பிணைத்து நிற்கிறது . வாலிபர் சங்க மூன்றாவதுவது மாநில மாநாடு திருவாரூரில் நடந்த போது ,தோழர் தனுஷ்கோடி அந்த மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினார் .திடீரென தன் சட்டையைக் கழற்றி முதுகைக் காட்டினார் . சவுக்கடியின் தழும்புகள் பார்த்தோம் . உணர்ச்சி மயமானது அரங்கம் . சாணிப்பாலுக்கும் ,சவுக்கடிக்கும் பயந்து அவர் இலங்கைக்கு ஓடியபின்னரும் கங்காணிகள் இழுத்துவந்து மீண்டும் அதே நுகத்தடியில் பூட்டிய கொடுமைகளை விவரித்த பின்னர் அவர் சொன்னார் , “ அடித்தால் திருப்பி அடி ” என தோழர் சீனிவாசராவ் சொன்ன மந்திரச் சொல்தான் எங்களை நிமிர வைத்தது . நான் எழுதப்படிக்கத் தெரியாதவன் .எழுதப்படிக்கக் கற்றதும் , ஊராட்சி தலைவராக ,சட்டமன்ற உறுப்பினராக ,மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக நான் உயர்ந்து நிற்க செங்கொடியே காரணம் என அவர் விவரித்தார் . அவருடைய உரை வர்க்கப் போரின் பாலபாடமானது எங்களுக்கு . இந்த நேரத்தில் இன்னொன்றை சொல்லியாக வேண்டும் , அவசர காலத்தில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் நாவல் படித்தேன் .அப்போது அந்த நாவலை கடுமையாக எதிர்த்து ஒரு சாராரும் ; சார்ந்து ஒரு சாராரும் விவாதித்தனர் .நான் முதல் பிரிவோடுதான் இருந்தேன் . ஆயினும் வெண்மணியை முன்வைத்து இடதுசாரிகள் ஓர் நல்ல நாவலை ஏன் படைக்கவில்லை என்கிற கேள்வியை எழுப்பினேன் . பதில் கிடைக்கவே இல்லை . இப்போதும் எனக்குள் ஓர் வலுவான கேள்வி உண்டு . கேரளத்தில் கையூர் போராட்டத்தைச் சார்ந்து கன்னடத்தில் நிரஞ்சனா எழுதி ;பின்னர் அது மலையாளத்துக்கும் மொழியாக்கப்பட்டு தோழர் பி .ஆர் .பரமேஸ்வரன் தமிழாக்கிய “நினைவுகள் அழிவதில்லை .” என்ற நூல் போல் வெண்மணிக்கு ஒன்று ஏன் இன்று வரை வரவில்லை . சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய “செந்நெல்” போல் சில வந்துள்ளது மறுக்கவில்லை ஆயினும் வெண்மணி ,பொன்மலை , தேசப்பிரிவினையின் போது பொன்மலை ரயில்வே தொழிலாளர் ஆற்றிய அரும்பணி போன்ற அற்புதமான காவியக் களங்களை இடதுசாரி எழுத்தாளர்கள் தொடவில்லை என்பது என்னுடைய அழுத்தமான குற்றச்சாட்டு . திண்டுக்கல் தோல்பதனிடும் தொழிலாளர் போராட்டத்தை மையமாக்கி தோழர் ஏ .பாலசுப்பிரமணியன் வாழ்வை சார்ந்து தோழர் டி .செல்வராஜ் எழுதிய “ தோல்” நாவல் குறிப்பிடத் தக்க ஒன்று .அதையும் இடதுசாரிகள் போதுமான அளவு கொண்டு சென்றோமா ? விடை காண வேண்டிய கேள்வி இது . கையூர் தியாகிகளை இன்னும் வீரியமாய் நினைவூட்டுவதில் கேரளத் தோழர்களின் முயற்சி நாம் கற்க வேண்டிய ஒன்று ,கையூர் தியாகிகள் வரலாற்றை முன்வைத்து “அபுபக்கரின் அம்மா பேசுகிறேன்” என்கிற கதாபிரசங்கம் இன்னும் உயிர்துடிப்புடன் கையூரையும் இன்றையத் தேவையையும் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறது . வெண்மணி குறித்து அப்படி ஏதேனும் உண்டா ? அவசர காலத்தைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சென்னையில் மோகன லட்சுமி திருமண மண்டபத்தில் நடந்த போது ஒரு முயற்சி நடந்தது . நான் ,மைதிலிசிவராமன் , மைதிலியின் இணையர் கருணாகரன் , எழுத்தாளர் ஜானகிகாந்தன் சேர்ந்து வெண்மணி வில்லுப்பாட்டு தயாரிப்பில் ஈடுபட்டோம் . மைதிலி கருதுகள் வழங்க ,நான் எழுத ,ஜானகிகாந்தன் பயிற்சி அளிக்க அவர் மகன் வில்லிசைத்தார் ,கருணாகரன் ஒருங்கிணைத்தார் . ரொம்பவும் அமெச்சூராகத்தான் இருந்தது .மாநாட்டில் பிரதிநிதிகள் மாநாட்டு உணவு வேளையில் போட்டோம் .ஈர்க்கவில்லை .அதோடு அந்த முயற்சி கைவிடப்பட்டது .அந்த எழுத்து வடிவ வில்லிசை இப்போது எங்கிருக்கு யாரிட்ட இருக்குன்னு தெரியாது . வெண்மணி நம் கலை இலக்கியவாதிகளின் கைவாளாகும் போது வீரியம் பெறுமே! வெண்மணி எழுப்பும் கேள்விகள் அநேகம் .ஆராயவும் ,படிக்கவும் ,திருந்தவும் ,செயல்படவும் ஆயிரம் உண்டு . தோழர் பி.டி.ரணதிவே ஒரு செய்தியைச் சொல்லுவார் , “எண்பதுகளில் தலித் மக்களிடையே தோன்றிய போர்க்குணமிக்க விழிப்புணர்வு அதற்கு முந்தையதில் இருந்து மாறுபட்டது .” ஆம் மகாராஷ்டிராவில் கருக்கொண்டு இந்தியா முழுவதும் பரவிய இந்த ‘போர்க்குணம் மிக்க விழிப்புணர்வு’ மிக முக்கியமானது . வெண்மணி அதற்கு முந்தையது .அதனை இந்த அளவு கோலோடு அப்படியே பொருத்துதலும் ஆகாது ; அது அணிதிரட்டப்பட்ட வர்க்கப் போரின் ஒரு கூறாகவும் சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பின் ஒரு கூறாகவும் இணைந்தே இருந்தது .போரட்ட களத்தில் தலித்துகளோடு இதர இடை நிலைசாதியினரும் இருந்தனர் .பலர் தலைமை ஏற்று வழிநடத்தினர் என்பது மிகமுக்கிய பாடமாகும் . தலித் விடுதலை என்பது ஜனநாயக இயக்கங்களோடு தோள் இணைவதில்தான் அடங்கி இருக்கிறது . வெண்மணி நெருப்பிலிருந்து ஓலம் மட்டுமே கேட்கவில்லை .சமூகத்தின் மனச்சாட்சி நோக்கி ஆயிரம் ஆயிரம் கேள்விகளும் ஒலிக்கின்றன .விடை தேடுவோமே ?
Labels
- அலசல் ( 122 )
- அனுபவம் ( 69 )
- ஆய்வு ( 4 )
- இலக்கியம் ( 60 )
- கட்டுரை ( 8 )
- கவிதை ( 309 )
- குட்டிக்கத ( 3 )
- கேள்விகள் தொடர ( 1 )
- சl ( 1 )
- சிறுகதை ( 14 )
- சொற்கோலம் ( 12 )
- தினம் ஒரு சொல் ( 101 )
- நினைவுகள் ( 6 )
- நூல் மதிப்புரை ( 186 )
- புரட்சிப் பெருநதி ( 53 )
- வாழப்பழகு ! ( 2 )
- விவாத மேடை ( 21 )
About Me
Followers
Blog Archive
Powered by Blogger.
0 comments :
Post a Comment