சடங்காக இல்லாமல்…… சாணை பிடிக்கும் பட்டறையாக …

Posted by அகத்தீ Labels:

 


சடங்காக இல்லாமல்…… சாணை பிடிக்கும் பட்டறையாக …

 

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்ட்] தமிழ்நாடு மாநில 23 வது மாநாடு மார்ச் 30 அன்று செம்படை அணிவகுப்போடு மதுரையில் தொடங்குகிறது . என் நினைவுகள் பின்னோக்கி குமிழியிடுகின்றன .

 

நான் கட்சிக்கு வந்தபின் சென்னையில் நடைபெற்ற 10 வது மாநில மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றேன் . அம்மாநாட்டிற்கான பிரச்சாரப் பணியிலும் ஈடுபட்டேன் . வெண்மணி வில்லிசை நிகழ்ச்சி தயாரித்ததும் அப்போதுதான் .

 

இம்மாநாட்டுக்கு முன் சென்னை –செங்கை மாவட்ட 10வது மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது .அதிலும் பங்கேற்றேன் . அன்றைய சென்னை என்பது இன்றைய வட சென்னை ,தென் சென்னை , மத்திய சென்னை , செங்கல்பட்டு ,திருவள்ளூர் ,காஞ்சி என ஆறுமாவட்டங்கள் இணைந்தது .

 

எனது மாநாட்டு அனுபவங்கள் அப்போதுதான் தொடங்கின . முதலில் கிளை மாநாட்டிலும் பங்கேற்றேன். மாநாட்டுற்குப் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டதையே பெருமையாகக் கருதி மகிழ்ந்த காலம் அது .

 

20 வது தமிழ்நாடு மாநில மாநாடு நாகப்பட்டிணத்தில் நடைபெற்ற போது நான் விருப்ப ஓய்வு பெற்றேன் . மொத்தமாக சென்னை தொடங்கி நாகைவரை பதினோரு மாநில மாநாடுகளில் பங்கேற்றவன் . உள்ளுக்குள் ஊறும் எல்லா நினைவுகளையும் சொல்லிவிட முடியாதல்லவா ?

 

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சென்னை மாவட்ட மாநாட்டில் விவாதத்தில் பங்கேற்று நான் பேசியபின் தோழர் வி.பி.சி சொன்னார் , “ பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல் விவாதத்தில் பேசுவது கூடாது . நாம் சொல்ல வேண்டிய கருத்தை வரிசைப்படுத்தி வழங்கப்பட்ட குறுகிய நேரத்தில் பேசப் பழக வேண்டும் .”

 

சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தோழர் .ஏ.பாலசுப்பிரமணியன் மாநாட்டு விவாதங்களுக்கு தொகுப்புரை வழங்கும் போது பாராட்ட வேண்டியவைகளை மனம் திறந்து பாராட்டியதும் ; ஏற்க வேண்டியவற்றை தயக்கமின்றி ஏற்றதும் ; தவறுகளை கறாராக அதே நேரத்தில் காயப்படுத்தாமல் சுட்டியதும் இன்றும் நினைவில் உள்ளன .

 

தீக்கதிர் பற்றிய விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு போதுமான ஊழியர் இன்மையைச் சொன்னார் . தோழர் அருணனுக்கு திருமண ஏற்பாடு நடந்து வருகிறது , திருமணத்திற்கு பிறகு தீக்கதிருக்கு வருவதாய் சொல்லியிருக்கிறார் . சூழல் எப்படி இருக்குமோ ? பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் .

 

இம்மாநாடுகளை அசைபோடும் போது அன்று அர்ப்பணிப்போடு உழைத்த தோழர்கள் ஒவ்வொருவராய் மனக் கண் முன் வருகின்றனர் . யாரைப் பற்றிச் சொல்வது ? யாரை முதலில் சொல்வது ? என்னால் முடிவு செய்ய முடியவில்லை .

 

தோழர் கஜபதியை ,மேயர் கிருஷ்ணமூர்த்தியை ,ஞானசாமியை ,சி கே .மாதவனை , சி .கே .மாணிக்கத்தை ,சுப்பாராவை .எஸ் கே சீனிவாசனை ருக்மணி அம்மாளை ,வரதம்மாளை பட்டியல் முடியவில்லை .நீண்டு கொண்டே செல்லும் .

 

சென்னைத் தோழர்களே கிட்டத்தட்ட மறந்துவிட்டனரோ என நினைக்கத் தோன்றுகிறதுபுதிய தலைமுறைக்கு சென்னைத் தோழர்கள் பற்றியாவது கொஞ்சம் நினைவூட்ட வேண்டுமென்று மனம் ஏங்குகிறது .அதன் விளைவே என் பதிவுகள் .

 

கட்சியின் மாநில வரலாறு தோழர் என். ராமகிருஷ்ணன் முயற்சியால் ஓரளவு தொகுக்கப்பட்டுள்ளது . தோழர் என்ஆர் மூத்த தலைவர்களின் வரலாற்றையும் ஓரளவு சொல்லிவிட்டார் . களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் புத்தகம் மூலம் ஜி.ராமகிருஷ்ணன் பலரை நினைவூட்டி இருக்கிறார் .பல மாவட்ட வரலாறுகளும் ஓரளவு தொகுக்கப்பட்டுள்ளன . ஆனால் சென்னை ,தஞ்சை ,குமரி வரலாறுகள் என்ன ஆனது ?

 

குமரி மாவட்ட வரலாறு தோழர் என் .ராமகிருஷ்ணனால் எழுதப்பட்டு இன்னும் வெளியிடப்படாமல் கிடக்கிறது . புதிய குமரி மாவட்டக்குழு முயற்சி எடுத்து விரைவில் கொண்டு வரும் என நம்பலாமா ?

 

தஞ்சை மாவட்ட வரலாறு அதாவது அன்றைக்கு ஒன்றாயிருந்த தஞ்சை மாவட்ட வரலாறு மிக முக்கியமானது .இதனை எழுத தோழர் என் .ராமகிருஷ்ணன் முயற்சித்தபோது தலைவர்கள் தலையிட்டு இது வழக்கமான தகவல் தொகுப்பாக இருந்தால் போதாது பெரும் உயிர்ப்புடன் வரவேண்டும் என கருத்து தெரிவித்து - அவர் எழுதுவதைவிட தோழர் ச.தமிழ்ச் செல்வன் எழுதலாம் எனச் சொல்ல , தோழர் என்ஆர்ம் மனம் உவந்து ஒப்புக் கொண்டார் .

 

இப்பணியை முடிப்பதற்காகவே தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தமிழ்ச் செல்வனும் தன்னை மாநிலக் குழுவிலிருந்து விடுவித்துக் கொண்டதாய் மாநாடு முடிந்ததும் என்னிடம் அலைபேசியில் சொன்னார் . விரைவில் நூல் வரும் என  நம்புகிறேன். தோழர் ஜி வீரையன் எழுதிய விவசாய இயக்க வரலாறு இப்போது கொஞ்சம் ஆறுதல் தருகிறது .

 

அன்றைய சென்னை மாவட்ட வரலாறு – இன்றைய ஆறு மாவட்டங்களின் தொகுப்பான வரலாறு எழுதவும் தோழர் என் ராமகிருஷ்ணன் முயற்சித்தார் . அதுவும் தலைவர்களின் பெருங்கனவால் அவர் தன் முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று .கனவு கண்டவர் யாரும் அதற்காக இதுவரை துரும்பையும் கிள்ளிப்போடவில்லை .இனியும் நடக்குமா தெரியாது .பழைய அனுபவம் உள்ள தோழர்கள் கிட்டத்தட்ட விடைபெற்று விட்டனர் . இன்னும் ஒன்றிரண்டு பேரே மீதம் உள்ளனர் . என்ன செய்வது ? ஏக்கப் பெருமூச்சே பதிலாகிறது .

 

தோழர் என்.ராமகிருஷணன் குறித்து அவரது படைப்பரங்கு பற்றிய கருத்தரங்கில் நான் ஆற்றிய உரையில் சொல்லியிருப்பேன் , ” நாளை நிச்சயம் உழைக்கும் மக்கள் ஆட்சி செய்வார்கள். அப்போது வரலாற்றை உண்மையாக எழுத முயற்சிப்பார்கள். அதற்கு ஆவணமாக இத்தொகுப்புகள் அமையும். தமிழக உழைக்கும் மக்கள் போராட்ட வரலாற்றை நேர்மையாக எழுத முயலும் எந்தத் கொம்பனும் இவரது – தோழர் என். ராமகிருஷ்ணனின் நூல்களை மேற்கோள் காட்டாமல், இதிலிருந்து விபரங்களை எடுத்தாளாமல் எழுதவே இயலாது. ஏனெனில் இது அடிப்படை ஆதாரமாக ஆவணமாக அத்தாட்சியாக அடித்தளமாக உள்ளது.”

 

எந்த வரலாற்று நூலும் , அறிவியல் நூலும் முதல் முயற்சியிலேயே நூறு சதம் சரியாக அமைந்துவிடாது .முதலில் எழுதுவோர் தகவல் தளம் அமைப்பர் .விடுபட்டவை ,விடை காணாத கேள்விகள் என முயற்சித்து பின் வருவோர் செப்பனி செப்பனிட்டு செழுமைப் படுத்த வேண்டும் . காலம் செதுக்கிச் செதுக்கி சரியான பார்வை வழங்கும் .இதில் முன்னத்தி ஏரான ஏரான தோழர் என்.ராமகிருஷ்ணன் சென்ற மாநாட்டில் இருந்தார் .இம்மாநாட்டில் இல்லை .

 

நான் நாகை மாநாட்டில் விடுவித்துக் கொண்டபின் சென்னையில் நடந்த 21 வது மாநில மாநாட்டிற்கு வந்தேன் .பிரதிநிதியாக அல்ல ,சென்னைத் தோழர்களின் – குறிப்பாக தோழர் பாக்கியத்தின் அழைப்பை ஏற்று வரவேற்புக்குழு பாட்ஜ் அணிந்து மாநாட்டில் வலம் வந்தேன் . 22 வது மாநில மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்ற போது இப்படியொரு வாய்ப்பு இல்லை . இப்போது மதுரை மாநாடு தீக்கதிர் தோழர்கள் அழைத்தனர் – குறிப்பாக முருகன் அழைத்தார் ஆயினும் வருவதற்கான திட்டமும் வாய்ப்பும் இல்லை .

 

மாநாடுகள் சடங்காக இல்லாமல்…… ஆயுதங்களை சாணை பிடிக்கும் பட்டறை ஆகட்டும் !

 

சு.பொ.அகத்தியலிங்கம். 22/3/2022.

 



உரைச் சித்திரம் – 2.

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் – 2.

 

வாழ்தலின் நெறி…….

 

 

 

 

மலையைக் கற்பனை செய்யுங்கள் , அதன் உச்சியில் வட்ட முழுநிலா ! அடடா ! அடடா!  கற்பனைசெய்தாலே அழகு சொட்டுகிறதே !

 

மலைபோல் யானை நிற்கிறது , அதன் மீது ஒருவர் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் ,அவர் பொன்வண்ணத்தில் குடை பிடித்திருக்கிறார் .

 

மேலே சொன்ன இரண்டு காட்சியையும் அருகருகே வரைந்து பாருங்கள் அதன் பேரழகும் மதிப்பும் புலப்படும் .

 

யானை மேல் உட்கார்ந்திருப்பவர் முடிசூடிய மன்னர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ !

 

ஆனால் அந்த மாமன்னரும் ஒரு நாள் இறந்து போனார் . அப்போது பிணம் என இழிந்த நிலையானார் !

 

யாக்கை நிலையற்றது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?

 

சூரியன் ஒவ்வொரு நாளும் உதிக்கிறாள் . வாழ்வு ஒவ்வொரு நாளாகக் குறைந்துகொண்டு போவதை சொல்லிச் செல்கிறான் .

 

சாவு எல்லோருக்கும் வரும் ! எப்போது வேண்டுமானாலும் வரும் !

 

சாவு உங்களைத் தேடி வரும் முன் , நாலு பேருக்கு நல்லது செய்யுங்கள் !

 

சங்க இலக்கியங்களின் ஒன்றான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியார் வரைந்து காட்டும் சித்திரங்களே மேலே சுட்டியவை 

 

நாலடியார் மட்டுமல்ல சங்க இலக்கியம் நெடுகிலும் இத்தகு யாக்கை நிலையாமை குறித்து நிறையவே பேசப்படுகின்றது .

 

சாவைக் காட்டி மிரட்டவோ – சாக்குருவி வேதாந்தம் பேசவோ அல்ல . ஒன்றிரண்டு அப்படியும் இருக்கலாம் ;ஆயினும் பெரிதும் மேலோங்கி இருப்பது அதுவல்ல ; வாழ்தலின் அறத்தை நெறியைச் சொல்லவே !

 

சாவு எந்த நொடியிலும் வரட்டும் கவலையில்லை .வாழும் ஒவ்வொரு நொடியும் நல்லன நினை ! நல்லன செய் ! ஊருக்கு உழை ! ஒல்லும் வகையெல்லாம் அறன் வழி செல் !

 

 

 

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில். [21]





வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்
நிலவார் நிலமிசை மேல். [22]



ஒவ்வொரு நொடியிலும் பயனுற வாழ்வதென்பது பிறர் நலன் பேணலே !

ஆம் . நொடிகளுக்கிடையே வாழ்ந்தாலும் கோடி மின்னலைப்போல் வாழவேண்டும் .சரிதானே !

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

20/3/2022.

உரைச் சித்திரம் – 1.

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் – 1.

 

 


 

 அடுதீ அல்லது சுடுதீ அறியாது;

இனிய காண்க; இவண் தணிக !”

 

இப்படி நாம் நெஞ்சாரா வாயார வாழ்த்தும் அரசுகளே எங்ஙணும் அமைந்தால்  எப்படி இருக்கும் ?

 

இது ஒரு புறநானூற்று கனவு .

 

சிறிய யாழ் எனும் இசைக்கருவியில் தேனைவிட இனிமையாய் பாடல் இசைக்கும் பாணா !

 

உடுக்கை, உறுமி, கஞ்சிரா, கடம், கிணை, தண்ணுமை, தவில், பம்பை, பறை, மத்தளம், முரசு போன்ற எண்ணற்ற தோல் இசைக்கருவிகளை  தமிழ் சமூகம் அறியும் . அதில் ஒன்றே கிணை .குளத்து ஆமையைக் கயிற்றால் கட்டியது போன்ற வடிவமைப்பில்லான கிணையை இசைப்பவனே !

 

 இனிய காண்க ! இவண் தணிகஎன முழங்கி , அதாவது  இனிமை பொங்கட்டும்! அமைதி தழைக்கட்டும்!’ என முரசறைந்து பாடல் முழக்குபவனே !

 

கிள்ளி வளவன் நாடு எப்படிப் பட்டது தெரியுமா ?

 

தை மாதத்தில் இறைக்க இறைக்க வற்றாது ஊறும் குளத்து நீர் போல அள்ளிக் கொடுக்க கொடுக்க வற்றாத செல்வம் உடைய நாடு ! குடிக்க நீரும் உண்ணச் சோறும் குறைவு இன்றி கிடைக்கும் நாடு !

 

உணவு சமைக்க அடுப்பை மூட்டுவதால் உண்டாகும்  அடுதீஅங்கு நிரம்பி இருக்கும் ! ஆனால் பகை மன்னன் ஊரையே சுட்டெரிக்கும்  சுடுதீஅறியாத நாடு !

 

நீங்கள் நம்பிக்கையோடு அவனிடம் செல்லுங்கள் !

 

வண்டு மொய்க்கும் ஆம்பல் பூவையும் ,பாதிரிப் பூவையும் சூடியஉதட்டில் புன்னகை மின்னும் உன் விறலியோடு  கிள்ளிவளவனிடம் செல்வாயாக !

 

விறகு வெட்ட காட்டுக்குச் சென்றவனுக்கு எதிர்பாராமல் அதிர்ஷ்டவசமாக தங்கப் புதையல் கிடைத்தது போன்ற கனவல்ல.

 

மெய்யாகவே வளவன் அப்படி அள்ளிக் கொடுப்பான் ! நம்பிச் செல்வீராக !

 

 

சோழன் குளமுற்றுத்துஞ்சிய கிள்ளி வளவனைப் புகழந்து புலவர் கோவூர் கிழார் பாடிய இந்தபுறநானூற்றுப் பாடல் சொல்லும்  முக்கியச் செய்தி என்ன தெரியுமா ?

 

 

அடுப்பு நெருப்பைத் தவிர யுத்த நெருப்பில்லா தேசத்தில் செல்வம் கொழிக்கும் ! மகிழ்ச்சி பொங்கும் ! அமைதி நிலவும் !

உலகமே யுத்தமின்றி வாழ்க ! யுத்தச் செலவுகள் குறையக்குறைய குளிர்நீரும் குறையாத சோறும்எல்லோருக்கும் கிட்டுமே!

 

 

 

 

 தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;
வினவல் ஆனா முதுவாய் இரவல!

5

தைத் திங்கள் தண்கயம் போலக்,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி,

10

நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,
இன்னகை விறலியொடு மென்மெல இயலிச்

15

செல்வை ஆயின், செல்வை ஆகுவை;
விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!”

 


                                                                                                    [ புறநானூறு : 70 ]

 

ஆம் !

குளிர்நீரும் குறையாத சோறும்எல்லோருக்கும் கிட்டுமே!

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

18/3/2022.

 

குறிப்பு : அடிக்கடி கொஞ்சம் இப்படி இலக்கிய விருந்தும் பரிமாறலாம் என எண்ணுகிறேன்.சரிதானே !