பெரும்பசி பேய்ப்பசியுடன்
Posted by
இப்போதுதான் சோம்பல் முறிக்கிறேன்
அவன் வானத்துக்கும்
பூமிக்கும்
விஸ்வரூபமெடுத்து
நின்றான்
தன் இரும்புக்
கைகளால் கண்ணில்
கண்ட அனைத்தையும்
பிடுங்கி எறிந்தான்
நூறாண்டு கண்ட
ஆலமரமோ
பாரம்பரியமான கற்கோட்டையோ
மரமோ ,கட்டிடமோ
,உயிரோ ,செடி கோடியோ
எதையும் அவன் விட்டுவைக்கவில்லை
அவன் கால்களில்
புல்பூண்டு புழு
அனைத்தும் துவம்சமாயின
அவன் தோள்களில்
கால்களில்
ஒட்டிக்கொண்ட ஒட்டுண்ணிகள்
மகிழ்ச்சி ஆரவாரம்
செய்தன
“மானிடப் பதர்களே ! என்னையா எதிர்ப்பீர்?
ஊதிப் பறத்துவேன்
!நசுக்கி அழிப்பேன் ?
ஹா…ஹா,,,, ஹா,,,,,
ஹா,,,,” என்றவன்
அரக்கச் சிரிப்பை
அடக்கியபடியே
கடுப்பாய்க் கேட்டான்
, “ யாராடா
பூமிக்கு கீழே
நெருப்பைப் புதைத்தவன் ?”
முனகலாய் வெளிப்பட்டது
பதில்
“ நான் தான் தூங்கும் எரிமலை
இப்போதுதான் சோம்பல்
முறிக்கிறேன்.”
சுபொஅ.
பிணங்களின் காடு .
பிணங்களெல்லாம்
பிணங்களல்ல
எல்லா பிணங்களும்
சமமும் அல்ல
இருக்கும் பிணங்கள்
இறந்த பிணங்கள்
வாழ்ந்த பிணங்கள்
மறைந்த பிணங்கள்
வாழ்தலும் இருத்தலும்
ஒன்றல்ல என்பதை
அறியாப் பிணங்கள்
அறிந்த பிணங்கள்
அனாதைப் பிணங்கள்
ஆண்ட பிணங்கள்
அதிகாரப் பிணங்கள்
அரசவைப் பிணங்கள்
மர்மப் பிணங்கள்
மாண்புமிகு பிணங்கள்
ஊர்ப் பிணங்கள்
சேரிப் பிணங்கள்
உழைக்கும் பிணங்கள்
ஏய்க்கும் பிணங்கள்
நீட்டுப் பிணங்கள்
செல்லா நோட்டுப் பிணங்கள்
பக்திப் பிணங்கள்
கடவுள் பிணங்கள்
நீதிப் பிணங்கள்
போதைப் பிணங்கள்
காவிப் பிணங்கள்
கார்ப்பரேட் பிணங்கள்
மமதைப் பிணங்கள்
மகுடம் தரித்த பிணங்கள்
கொரானா பிணங்கள்
கொலைகாரப் பிணங்கள்
பிணங்கள் மட்டுமே
அலையும் காட்டில்
மனிதரைத் தேடிக்
காண்பது எங்ஙனம் ?
சுபொஅ.
நீ தேசபக்தனாகிட
எளிய வழி
சாப்பிட மட்டுமே
வாயைத் திற
அப்போதும்
நீ எதைச் சாப்பிட
வேண்டும் என்பதை
”அவர்களே” தீர்மானிப்பர்
. சரிதானே !
பதில் சொல்ல ஏன்
வாயைத் திறக்கிறாய் ?
“ஆம்.” ,”இல்லை” என்பதற்கு
தலையாட்டினால்
போதுமே அப்போதும்
“அவர்கள்” சொல்லுகிறபடி ஆட்டினால் போதுமே !
பணிவு என்பதும்
அடிமைத்தனம் என்பதும்
வேறுவேறு என ஏன்
தப்பாக நினைக்கிறாய் ?
அதுவே இது .இதுவே
அது அறிவாய் இதை
அடிமைத்தனம் சுகமானது
எனச் சொல்!! .
அவர்களால் அவர்களுக்காக
அவர்களே ஆளுவதே
அரசு என்பதை இன்னுமா
அறியாமலிருக்கிறாய் ?
பிறக்கும் போது
நீ எதைக் கொண்டுவந்தாய்
போகும்போது நீ
எதை கொண்டு போகப்போகிறாய் ?
அழுது கொண்டே பிறந்தாய் அழுது அழுதே சாகு
உனக்கு விதிக்கப்பட்டதை
நீ ஏற்றுக்கொள்
ஆண்டவன் அனுகிரகமோ
ஆட்சியின் அனுசரணையோ
அவர்களுக்கு மட்டுமே
என்பதை அறியாயோ ?
தவறியும் முணுமுணுக்காதே
! தவறியும் வாயைத் திறக்காதே !
தவறியும் முஷ்டியை
உயர்த்தாதே ! தவறியும் கண் சிவக்காதே !
தவறியும் சிந்திக்காதே
! தவறியும் கரம் கோர்க்காதே !
தவறியும் போர்க்குணத்தோடு
எழுந்து நின்றுவிடாதே !
சுபொஅ.