தற்கொலை நேரம்….
பேய்களின் சக்கரவர்த்தி
வழிநெடுக முட்களையும் இருட்டையும்
ஒருசேர திணித்துக் கொண்டே இருந்தது.
கொஞ்சம் இரக்கமுள்ள பேய்கள்
மின்மினிப் பூச்சியையாவது விட்டுவைக்கலாமே
என மெல்ல முணுமுணுத்தது .
அங்கே என்ன சத்தம் என்கிற அதட்டலில்
முணுமுணுப்பு காணாமலே போய்விட
மயாண அமைதி இருட்டுக்கு துணையானது .
சக்கரவர்த்திப் பேயின்
விழிகளை நேரில் சந்திக்கவும் பயந்து
தேவதைகள் ஒழிந்து கொண்டன.
அகோர பசி கொண்ட சக்கரவர்த்திப் பேய்
வனம் ,வளம் ,அறிவு ,அன்பு அனைத்தையும்
இரத்த கவிச்சியோடு உண்டு களித்தது .
சுடுகாடான காட்டில் அழுகையும்
பற்கடிப்பும் ஒப்பாரியும் மாரடிப்பும்
நிரந்தரமாய் குடியேறியது
பிரார்த்தனைகளுக்கும் வேண்டுதல்களுக்கும்
அருள்பாலிக்க முடியாமல்
கடவுள்கள் தற்கொலை செய்துகொண்டனர் .
பேய்களின் ராஜ்யத்தில் எமக்கென்ன வேலை என
கடவுள் தற்கொலைக் குறிப்பில் எழுதியதை
சக்கரவர்த்தி பேய் வெற்றி என அறிவித்தது
எல்லாவற்றையும் விட மனிதம் வலுவானது என
சூரியோதயம் தெளிவாய்ச் சொன்னது
துவங்கியது சக்கரவர்த்திப் பேயின் தற்கொலை நேரம்.
சுபொஅ.
0 comments :
Post a Comment