நீ தேசபக்தனாகிட
எளிய வழி
சாப்பிட மட்டுமே
வாயைத் திற
அப்போதும்
நீ எதைச் சாப்பிட
வேண்டும் என்பதை
”அவர்களே” தீர்மானிப்பர்
. சரிதானே !
பதில் சொல்ல ஏன்
வாயைத் திறக்கிறாய் ?
“ஆம்.” ,”இல்லை” என்பதற்கு
தலையாட்டினால்
போதுமே அப்போதும்
“அவர்கள்” சொல்லுகிறபடி ஆட்டினால் போதுமே !
பணிவு என்பதும்
அடிமைத்தனம் என்பதும்
வேறுவேறு என ஏன்
தப்பாக நினைக்கிறாய் ?
அதுவே இது .இதுவே
அது அறிவாய் இதை
அடிமைத்தனம் சுகமானது
எனச் சொல்!! .
அவர்களால் அவர்களுக்காக
அவர்களே ஆளுவதே
அரசு என்பதை இன்னுமா
அறியாமலிருக்கிறாய் ?
பிறக்கும் போது
நீ எதைக் கொண்டுவந்தாய்
போகும்போது நீ
எதை கொண்டு போகப்போகிறாய் ?
அழுது கொண்டே பிறந்தாய் அழுது அழுதே சாகு
உனக்கு விதிக்கப்பட்டதை
நீ ஏற்றுக்கொள்
ஆண்டவன் அனுகிரகமோ
ஆட்சியின் அனுசரணையோ
அவர்களுக்கு மட்டுமே
என்பதை அறியாயோ ?
தவறியும் முணுமுணுக்காதே
! தவறியும் வாயைத் திறக்காதே !
தவறியும் முஷ்டியை
உயர்த்தாதே ! தவறியும் கண் சிவக்காதே !
தவறியும் சிந்திக்காதே
! தவறியும் கரம் கோர்க்காதே !
தவறியும் போர்க்குணத்தோடு
எழுந்து நின்றுவிடாதே !
சுபொஅ.
0 comments :
Post a Comment