சொல்.72

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .72 [ 16 /11/2018 ]
எதுவாயினும் வீட்டிலுள்ள அனைவரையும் கூட்டிப் பேசுவதும் ; முடிவெடுப்பதும் மிகவும் ஆரோக்கியமான நடைமுறை .ஆயின் கிட்டத்தட்ட நம் சமூக வாழ்வில் இங்ஙனம் நடக்கும் குடும்பங்களைப் பார்ப்பதே அபூர்வம் .குடும்பத் தலைவரின் சொல்லுக்கு மறு பேச்சின்றி ஒப்புக் கொள்வதே சிறந்த குடும்ப வாழ்வின் இலக்கணம் என நமக்கு சொல்லிச் சொல்லி வளர்த்திருக்கிறார்கள் .

ஆக ,குடும்ப ஜனநாயகம் என்ற சொல்லே குடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் ஒரு வில்லனாகவே பார்க்கப்படுகிறது . அதுவும “ பெண்ணுக்கு என்ன உலக ஞானம் இருக்கும் ,, நாட்டு நடப்புத் தெரியுமா ,.. ஆம்பளைதான் அனைத்தும் அறிந்தவன் , நாலு யோசித்துத்தான் முடிவெடுப்பான் .அதற்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாலே மகிழ்ச்சி பொங்கும் .” இப்படித்தான் பொதுபுத்தியில் காலங்காலமாய் உறைந்து போயுள்ளது .இதை வழித்தெறிவது அவ்வளவு சுலபமல்ல .ஆனாலும் அதற்கான உரையாடலை இப்போதே துவங்கியாக வேண்டும் . வேறுவழியில்லை .

இங்கேதான் பிரச்சனை .முதலாவதாக எந்தப் பிரச்சனையை எடுத்தாலும் எல்லோரும் ஒரே போல் தெளிவாக இருப்பார்களோ ? மாட்டார்கள் .ஏனெனில் சமூகத்தோடு உள்ள உறவும் , வாய்ப்பும், ஊடாட்டமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் போது பார்வையும் மாறுபடத்தான் செய்யும் . அடுத்து எல்லோரும் பிரச்சனையை பரந்த மனதோடு எல்லோரும் அணுகுவார்களா ? அதிலும் ஒவ்வொரு பிரச்சனையிலும் ஒவ்வொருவரோடும் உள்ள விருப்பும் வெறுப்பும் சேர்ந்தே வினையாற்றும் . ஆக ,ஒத்த கருத்தோடு எல்லோரும் ஒரு முடிவெடுக்க இயலுமா ? சுலபமே அல்ல . என்ன செய்வது ?

அவசரமாக அன்றே முடிவெடுக்க வேண்டியவை தவிர மற்றவைகளை பற்றி ஒரே நாளில் ஏன் முடிவெடுக்க வேண்டும் . பிரச்சனையை முன்வைத்து அவரவர் கருத்தைச் சொல்லிவிடுங்கள் . முடிவெடுப்பதை மட்டும் தள்ளி போடுங்கள் .
வீட்டுக்குள் ஆளுக்கு ஆள் விவாதிப்பார்கள் .நல்லதும் கெட்டதும் வெளிப்படும் .ஒவ்வொருவரும்  அடுத்தவர் கோணத்திலும் ஒரு முறை யோசித்துப் பாருங்கள் . நிச்சயம் இங்கே ஆறின கஞ்சி பழங்கஞ்சியாக  அல்ல பக்குவப்பட்ட முடிவாக முகிழ்க்கும் !

நாட்டில் ஜனநாயகமே இன்னும் சரியாக வளரவில்லை .குடும்பத்தில் பூத்தா குலுங்கும் ? பொறுமையோடு விதையுங்கள் . நீர் பாய்ச்சுங்கள்  . உரம் போடுங்கள் .நிச்சயம் வருங்காலத்தில் மெல்ல பயன் தரத் துவங்கும் .
 Su Po Agathiyalingam



சொல்.71

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .71 [ 12 /11/2018 ]
பிறந்த ஊர் ,படித்த ஊர் ,வளர்ந்த ஊர் ,பணிபுரிந்த ஊர்கள் ,ஓய்வு பெற்ற ஊர் ,இப்போது வாழ்கிற ஊர் . மரணம் தழுவும் ஊர் எல்லாம் வெவ்வேறாக இருப்பதே இன்றைக்கு பலரின் வாழ்க்கை அனுபவமாக மாறிப் போயுள்ளது .இப்போது நீ எந்த ஊர்க்காரன் என்பதற்கு என்ன பதில் சொல்வது ? பெருங் கேள்வியே !

போகிற போக்கைப் பார்த்தால் மேலே ஊர் எனப் போட்டிருக்கும் இடத்தில் எல்லாம் நாடு எனப் போடும் காலமே வந்துவிடுமோ ? இன்றும்  ‘அவன் வந்தேறி இவன் வந்தேறி’ எனப் பேசித்திரியும் சிலரைப் பார்த்து சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை .

இப்படி ஊர் ஊராய் நாடு நாடாய் பந்தடாப்படும் வாழ்க்கையில் பண்பாடும் பாரம்பரியமும் மட்டும் அப்படியே ஆடாமல் அசையாமல் குத்துக்கல்லாய் தலைமுறை தலைமுறையாய் தொடருமோ ? நாம் பிறந்த ஊரும் நேற்று இருந்தது போலவா இன்றும் இருக்கிறது .நாளையும் இப்படியேதான் இருக்குமா ?

தனிமனிதர் வாழ்விலும் சமூகத்திலும் பழக்க வழக்கம் , பண்பாடு எல்லாம் கலந்துகொண்டும் மாறிக்கொண்டும்தான் இருக்கும் . வரலாறு நெடுக அப்படித்தான் இருந்தது .ஆயினும் அது மெதுவாய் நத்தையைப்போல் நகர்ந்து கொண்டிருந்தது ,இப்போதைய சூழல் சூறாவழியாய்த் தூக்கிப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது .

நீங்களோ நானோ எந்த ஒரு சமூகமோ இதிலிருந்து தப்பிக்கவே முடியாது . ஆயினும் எதை எங்கு போனாலும் சுமந்து சென்று அடுத்தவருக்கு பெருமையாய்க் காட்ட வேண்டும் ; ஈர்க்க வேண்டும் என்பதில்தான் நம் பண்பாட்டு அளவுகோல் இறுதியில் தொக்கி நிற்கிறது .

போகிற இடமெல்லாம் சாதியத்தை ,பாலின ஒடுக்குமுறையை , மூடத்தனங்களை ,மதவெறி சம்பிரதாயங்களை ,கேள்விமுறையற்று சரண்டைவதை சுமந்து செல்லுகிற எவரும் மனிதப் பிறவி என்பதன் பொருளைச் சிதைத்துச் சீரழித்தவரே ஆவர் .

மனிதராய் வாழ்ந்திட மனதை விசாலமாக்க வேண்டிய காலம் .அறிவை ஆழ உழ வேண்டிய காலம் . நுனிப்புல் மேய்ந்து பழம்பஞ்சாங்கக் கதை பேசி திரிந்தால் வரலாறு மன்னிக்காது .தண்டிக்கும் .
Su Po Agathiyalingam



சொல்.70

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .70 [ 11 /11/2018 ]
 அவர் வாயைத் திறந்தால் பொய்தான் .பொய்யைத் தவிர அவருக்கு வேறெதுவும் பேசத் தெரியாது .இப்படி ஒரு சிலரை அர்ச்சிக்கிறோம் . அவர் சத்திய புத்திரன் .அவர்  சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும் . வாழும் அரிச்சந்திரன் அவர் . இப்படி சிலரை சிலாகிக்கிறோம் .

முழு உண்மை .முழுப் பொய் என்பதெல்லாம் சும்மா பேச்சுக்குத்தான் . உண்மை அப்படி அல்ல . நீங்கள் உண்மையைச் சொல்வதாயினும் அப்படியே சொன்னால் யாரும் நம்ப மாட்டார் .ஏற்கவும்மாட்டார் .கொஞ்சம் கைச்சரக்கும் சேர்த்தே சொல்லும் போதுதான் அந்த உண்மைக்கும் உயிர் வரும் .

ஏனெனில் நீங்கள் அறிந்தது மட்டுமே உண்மை அல்ல ; அது உண்மையின் ஒரு பக்கம் மட்டுமே ! உண்மையின் மறுபக்கத்தை நீங்கள் தேடி இருக்கமாட்டீர்கள் . யோசித்திருக்கவும் மாட்டீர்கள் .எல்லா உண்மையையும் எல்லா இடத்திலும் பேசிவிடவும் முடியாது . நீதி மன்றத்தில் சத்தியம் செய்யும் போதுகூட எல்லா உண்மையையும் சொல்லுகிறேன் என்றா சத்தியம் செய்கிறோம் .இல்லையே  “ நான் சொல்வதெல்லாம் உண்மை .உண்மையைத் தவிர வேறில்லை .” அப்படி எனில் சொல்லப்படாத உண்மையும் உண்டுதானே !

பொய் சொல்வதற்கு துணிச்சல் மட்டுமல்ல நிறைய கற்பனையும் ஞாபக சக்தியும் வேண்டும் .ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க வேண்டும் .பொதுவாகச் சொல்வார்கள் “ கடன் வாங்குங்கள் ஞாபக சக்தி அதிகருக்கும் . ஆம் கடன் வாங்கும் போது சொன்ன பொய் , கடனைக் கட்டாமல் தொடர்ந்து சொல்லுகிற பொய் எல்லாம் ஒன்றோடு ஒன்றுப் பொருந்திப் போக வேண்டும் . ஆகவே சொல்லும் ஒவ்வொரு பொய்யையும் ஞாபகம் வைத்தாக வேண்டும் .”
எல்லா பொய்யையும் நுணுகி ஆராய்ந்தால் அது ஏதோ உண்மையின் ஒரு சிறுகூறின் மீதே பொய்யும் கட்டமைக்கப்பட்டிருக்கும் . ஆக உண்மை கலவாத பொய்யோ .பொய் கலவாத உண்மையோ ஒரு போதும் இல்லை .அதன் விகித்தாச்சாரமே பொய் .மெய் என்பதை இறுதியில்  முடிவு செய்யும் .

நான் சொல்வது வாழ்க்கையில் நாம் பேசும் உண்மை /பொய் குறித்ததே . சில அரசியல் வாதிகள் பேசும் பொய் உலகின் எந்த சூத்திரத்திலும் அடங்காதென்பது தனிக்கதை !!!!
Su Po Agathiyalingam



சொல்.69.

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .69 [ 11 /11/2018 ]
 “சார் ! வாஸ்தைப் பற்றி என்ன நினைக்கிறீங்க ?” என ஒருத்தர் என் வாயைக் கிளறினார் .

 “வீடு கட்டுவதற்காக ஆதியில் சில நெறி முறைகளை உருவாக்கி இருக்கலாம் .அவை அன்றையப் புரிதல் ,தேவையை ஒட்டி எழுந்திருக்கலாம். அவற்றில் பல உருவான இடத்தின் தட்ப வெப்பம் சார்ந்தும் பருவ சுழற்சி சார்ந்தும் வாழ்க்கை பழக்க வழக்கங்கள் சார்ந்தும் உருவாக்கப் பட்டிருக்கலாம் ; ஆனால் அவை இன்றும் எங்கும் அப்படியே பொருந்தும் என்பதும் ; வாழ்க்கை செழிப்பிற்கோ துன்ப துயரங்களுக்கோ அதுவே காரணம் என்பதும் வடிகட்டிய மூடத்தனம் என்பதன்றி வேறென்ன ?”

வீட்டில் கழிப்பறை என்பதோ , படுக்கை அறையோடு இணைந்த கழிப்பறை என்பதோ பண்டைய வாழ்வில் யோசித்திருக்கவே முடியாத ஒன்றல்லவா ? அடுக்களை என்பது விறகடுப்பின் தேவையை ஒட்டி ஜன்னல் எதுமின்றி இருட்டாய் ஒதுக்குப் புறமாய் இருப்பது அன்றையத் தேவை ,இன்று எரிவாயு பயன்படுத்தும் சூழலில் காற்றோட்டமாய் ,விபத்து எனில் உடன் தப்ப உகந்ததாய் முன்பக்கம் அமைவதே பொருத்தமானது .

நிறைய இடவசதியும் மக்கள் தொகை குறைவாகவும் இருந்த அப்போதைய வாஸ்து அது சார்ந்துதானே இருக்கும் .இன்று பெரும் மக்கள் தொகை .எல்லோருக்கும் வீடு எனில் அடுக்ககங்களே சாத்தியம் .ஆக இன்றைய தேவையும் வாய்ப்பும் அதற்குத் தகுந்தாற் போல் மாறித்தான் ஆகவேண்டும் .இங்கு இதை இப்படி மாற்றிவை அப்படி மாற்றி வை என்பதெல்லாம் இடவசதி ,தேவை பற்றிய ஞானமின்றி செய்யப்படும் வாஸ்து மூடத்தனமே !

அதெல்லாம் இருக்கட்டும் !  ‘பெட்ரூம்’ , ‘பிரைவேஸி’ என்றெல்லாம் நுனிநாக்கில் பேசுவோரே ! ஏழைகளுக்கு அரசு ஒதுக்கும் வீட்டில் ஒற்றை அறையில் கணவன் ,மனைவி ,வயதுக்கு வந்த பெண் ,பிள்ளை ,அப்பா ,அம்மா எல்லோரும் இடித்துக்கொண்டு படுக்க வேண்டும் .நீங்கள் சொன்ன எதுவும் அவர்களுக்கு இல்லையா அல்லது மனித மாண்பே அவர்களுக்கு மறுக்கப்படுவதேன் ? வாஸ்து /வீட்டு பிளான் எதுவாயினும் வர்க்கம் ,வர்ணம் ,சாதி எல்லாம் மூக்கை நுழைக்கத்தானே செய்கிறது என்னத்தச் சொல்ல?
Su Po Agathiyalingam



சொல்.68

Posted by அகத்தீ Labels:



தினம் ஒரு சொல் .68 [ 10 /11/2018 ]
சிரிப்பு ஓர் யோகா ,மருத்துவம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அது மெய்யே !அழுகையும் அப்படித்தானே எனில் ஏற்கத் தயங்குவர் .ஆயின் அதுவும் மெய்யே !இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே !

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது சரியே ! வாய்விட்டு அழுதால் மனசு லேசாகும் என்பதும் சரியே ! சிரிப்பும் அழுகையும் மனித உளநலனுக்கு அவசியமான இரண்டு வடிகால்கள் . ஆனால் இரண்டையும் இரு பாலருக்கும் உரியதாகப் பார்க்கும் சமூக உளவியல் உளதா ? ஐயமே!

பொம்பள சிரிச்சா போச்சு ,புகையில விரிச்சா போச்சு என பழமொழி சொல்லியே வாயை மூடிவிடுவர் . பொம்பள சிரிக்கிற சத்தம் வெளியே கேட்கக்கூடாதென இப்போதும் சொல்லும் ஆணாதிக்க மனிதர் உண்டு . பெண்ணின் சிரிப்புக்கு விதவிதமாய் சாயம் பூசத் தயங்காத நாடு இது . திரெளபதி சிரித்ததால்தான் மகாபாரத யுத்தம் என்று கதைவிடுவோர் உண்டு . ஆக சிரிப்பை ஆணுக்கு உரியதாக கிட்டத்தட்ட வகைப்படுத்திவிட்ட சமூகம் பெண்ணுக்கு என்ன தந்தது ?

நீ ஆம்பளயா லட்சணமா இரு ! பொம்பள மாதிரி கண்ணக் கசக்காதே . இதில் ஆண் அழக்கூடாது என்று மட்டும் சொல்லவில்லை .அழுகை பெண்ணுக்குரிய இழிந்த குணம் எனவும் சித்தரிக்கப்படுகிறது . பொதுவாய் வாய்விட்டு அழுவது பெண்ணின் இயல்பு போலவும் அமுக்கமாய் அழுவதே ஆணின் இயல்பு போலவும் ஒருவித மயக்கம் விதைக்கப்பட்டுள்ளது .

ஆணோ பெண்ணோ வாய்விட்டு சிரிப்பதும் ; வாய்விட்டு அழுவதும் இயல்பானது .தேவையானது . இதில் பாலின பேதம் கற்பித்தல் மடமை .மனதில் தேக்கிவைக்கப்பட்ட உணர்ச்சி பதட்டத்தை விசிறிவிடும் , இரத்தக் கொதிப்பை அதிகரிக்கும் .

ஆனால் எங்கு சிரிப்பது ,எங்கு அழுவது ,எதற்குச் சிரிப்பது ,எதற்கு அழுவது என்பதில்தான் வாழ்வியல் நுட்பம் அடங்கி இருக்கிறது . சிரிக்கக்கூடாத இடத்தில் சிரிப்பதும் ,அழக்கூடாத இடத்தில் அழுவதும் நம்மை பலகீனராக்கிவிடும் . சிரிப்பும் அழுகையும் ஆரோக்கியமான உணர்ச்சிகளே ; அது நம் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை .
Su Po Agathiyalingam



சொல்.67

Posted by அகத்தீ Labels:



தினம் ஒரு சொல் .67 [ 9 /11/2018 ]
ஆடம்பரம் தவிர்ப்பீர் . இந்த உபதேசத்தைக் காலங் காலாமாகக் கேட்டு வருகிறோம் . எது ஆடம்பரம் ? நேற்றின் ஆடம்பரம் இன்றின் தேவையாகிவிட்டதே ! ஆடம்பரத்தின் அளவுகோல்தான் எது ?

வானொலிப் பெட்டியும் கல்லுவீடும் நெல்லுச் சோறும் ஆடம்பரமாக இருந்த காலம் ஒன்று உண்டு . பிளாக் அண்ட ஒயிட் டிவி ,கலர் டிவி ,சாதா மொபைல் ,ஐ போண் ,லேப் டாப் ஒவ்வொன்றும் ஆடம்பரமாயிருந்து பின் அத்தியாவசியமாய் மாறிப்போனதே ! எப்படி ஆடம்பரத்தைத் தீர்மானிப்பது ?

ஆடம்பரத்தில் அளவுகோல் ஆளுக்கு ஆள் , ஊருக்கு ஊர் ,காலத்துக்கு காலம் ,மாறிக்கொண்டே இருக்கும் .வர்க்கம் ,வர்ணம் ,சாதி ,வயது ,பாலினம் ,கிராமம் ,நகரம் ,நவீன கண்டுபிடிப்புகள் என ஒவ்வொன்றும் ஆடம்பரம் எதுவென கட்டடளை இடுமே !வரையறையை மாற்றிக் கொண்டே இருக்குமே !

முன்பு டிமாண்ட அண்ட் சப்ளை என்கிற ரீதியில் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்பட்டது .அப்போது ஆடம்பரம் என்பதின் பொருள் வேறு .இப்போது முதலாளி எதை உற்பத்தி செய்கிறானோ அதனை வாங்கிக் குவிக்கும் நுகர்வோராக வெகுமக்களை கட்டமைக்கிறது .தொலைகாட்சியும் இதர ஊடகங்களும் 24 x 7 மணி நேரமும் அதற்கே சேவை செய்கிறது . ‘நுகர்வெனும் பெரும்பசி’யில் மனிதகுலம் சிக்கித் தவிக்கிறது .இப்போது ஆடம்பரம் என்பதன் பொருளே வேறு .

எது தேவை ? எதற்குத் தேவை ? ஏன் தேவை ? பணத்திற்கான வாசல் எது ? இப்படியான கேள்விகளூடேதான் ஒவ்வொருவரும் எது ஆடம்பரம் என்பதை முடிவு செய்ய இயலும் . “ இது இல்லாவிட்டால் என்ன இழப்பு ஏற்பட்டுவிடும் ? சமாளிக்கவே முடியாதா ?” இக்கேள்வியே ஆடம்பரத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான கேள்வி .

வட்டிக்கு வாங்கி பட்டாசு வெடிப்பது ஆடம்பரம் . மாறிடும் உலகோடு தன்னை புத்தாக்கம் செய்ய முனைவது ஆடம்பரமாகிடுமா ? ஆடம்பரம் என்பதின் எல்லை காலம் தோறும் மாறும் .நீளும் .ஆயினும் , நுகர்வெனும் பெரும் பூதத்தின் வாய் கரும்பாய் அரைபடாது வாழப்பழகுவதே அறிவுடைமை !!!
Su Po Agathiyalingam



Posted by அகத்தீ