இடுக்கண் வருங்கால் நகுக !

Posted by அகத்தீ Labels:

 


இடுக்கண் வருங்கால் நகுக !

 

நடை பயிற்சி செல்லும் போது

முதியோர்கள்

கையில் ஊன்றுகோல்

அவசியம் வேண்டும்

வெறி நாய்களிடமிருந்து

தன்னைக் காத்துக்கொள்ள.

 

பாதம் முதல் இடுப்பு வரை

கடிபடா கவச உடை

பாதுகாப்புக்காக

தலைக்கவசம் போல்

கட்டாயமாக்கலாம் !

 

இடுப்புக்கு மேலே

என்ன செய்வது

கேடயம் தாங்கி நடப்பது

வீரர்க்கு மட்டுமல்ல

அனைவர்க்கும் நன்று !

 

[ நேற்று நடை பயிற்சியின் போது நாங்கள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டது . ஜீவகாருண்ய வழியில் வேறு எப்படி யோசிக்க  முடியும் ?]

 

நடை முடிந்து

பெஞ்சில் உட்கார்ந்ததும்

கொசு கடிக்கிறது

வலையைச் சுற்றிக்கொண்டே

திரியலாமோ ?

 

எலிப் பொறி

கரப்பான் பூச்சி மருந்து

வாங்கச் சொன்னார்களே

இனி வீட்டில்

என்ன பதில் சொல்வது ?

 

இடுக்கண் வருங்கால் நகுக !

 

சுபொஅ.

21/09/25.

 

 

 

 


சட்டங்களை மட்டும் அதிகமாக இயற்றிக் கொண்டு செயல்படுத்தாமல் போவதில் என்ன பயன்?

Posted by அகத்தீ Labels:

 





சட்டங்களை மட்டும் அதிகமாக இயற்றிக் கொண்டு செயல்படுத்தாமல் போவதில் என்ன பயன்?

 

 

ஐயா,

வணக்கம்.

தங்கள் கருத்து சிறப்பாக உள்ளது. முற்றிலும் சரியே.

தற்போது உள்ள சட்டங்களில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்கப் பிரிவுகள் இல்லையா? சட்டங்களை மட்டும் அதிகமாக இயற்றிக் கொண்டு செயல்படுத்தாமல் போவதில் என்ன பயன்?

தேவை சட்டமா? சட்டத் திருத்தமா?

மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்குமா?

காவல் துறை செயல்படாத நிலையில் உள்ளது?

மக்களும் காவல்துறையை மதிப்பதில்லை? எங்கிருந்து நாம் சீர் செய்ய வேண்டும்?

 

நேற்று முகநூலில் நான் போட்ட பதிவுக்கு , வாட்ஸ் அப் மூலம் ஓர் நண்பர் அனுப்பிய கடிதம் இது . [ நேற்றைய பதிவை நினைவூட்ட ஸ்கிரின் ஷாட் போட்டோ இணைத்துள்ளேன். ]

தனிப்பட்ட முறையில் அவர் அனுப்பியதால் அவர் பெயரைக் குறிப்பிடவில்லை .ஆனால் எழுப்பியுள்ள கேள்விகள் வேறு பலருக்கும் இருக்கும் என்பதால் பதிலை பொதுவெளியில் பதிகிறேன் .அவருக்கும் அனுப்பி உள்ளேன்.

 

1] தற்போது உள்ள சட்டங்களில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்கப் பிரிவுகள் இல்லையா?

 

இருப்பது போதவில்லை . தமிழ் நாட்டின் பெருமை மிகு ‘சுயமரியாதைத் திருமணச்சட்டம்’ [ 1968 ]; சடங்கு மீறிய திருமணங்களை  பதிவு செய்ய வழி செய்கிறது . சாதி மீறி திருமணம் செய்தாலும் பதிவு செய்ய சட்டத்தில் இடம் உண்டு . ஆனால் ஆணவக்கொலையை தடுக்க வழி இல்லை . அதற்கு கடும் தண்டனை வழங்க வழியில்லை . ஏனெனில் சட்டத்தின் நோக்கம் விருப்பபூர்வமாக சுயமரியாதையோடு செய்யும் திருமணங்கள் சட்டபூர்வமானவை என்று சொல்வது மட்டுமே . அதனை சிறப்பாகச் செய்கிறது .அதற்கு மேல் அச்சட்ட வரம்பை விரிக்க வழியில்லை .வழக்கமான கிரிமினல் சட்டங்களில் ,சிவில் சட்டங்களில்  இதற்கான போதாமை உள்ளது .ஆகவே சாதி ஆணவக் கொலைக்கு எதிராகத் தனிச்சட்டம் கோருவது தேவையாக உள்ளது.தவிர்க்க முடியாதது .

 

2] சட்டங்களை மட்டும் அதிகமாக இயற்றிக் கொண்டு செயல்படுத்தாமல் போவதில் என்ன பயன்?

 

வரதட்சணைக்கு எதிரான சட்டம்  [1961 ]உண்டு என்ற போதிலும் , வரதட்சணை குறைந்த பாடில்லை . ஆயின் வரதட்சணைக் கொலைகள் சட்டத்தின் கீழ் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வழி உண்டு . இது முன்பைவிட சற்று முன்னேற்றம் .

 

வன்கொடுமை தடுப்பு சட்டம் உண்டு .ஆயினும் வன்கொடுமைகள் ஆங்காங்கு அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன . இச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொதுக்குரல் வலுக்கும் போது சட்டம் பாயவும் செய்கிறது . சட்டம் இயற்றுவதோடு பணி முடிந்துவிடாது . தொடர் விழிப்புணர்வும் சமூக நிர்ப்பந்தமும் தேவை என்பதே உலக அனுபவம் . நிறவெறி இன ஒடுக்கலுக்கு எதிரான சட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டும் அமலாக்க பெரும் போராட்டமும் முயற்சியும் தேவைப்பட்டன என்பதே அமெரிக்க அனுபவமும்கூட . இன்றும் அங்கு அதற்கான போராட்டம் தொடர்கிறது .

 

குழந்தைத் திருமணத்தை தடுக்க தனிச்சட்டம் [ 1929 / புதிய சட்டம் 2006 ]தேவைப்பட்டது . தற்போதும் அங்கொன்று இங்கொன்றாக நடக்கிறது . ஆனால் பொது தளத்தில் கிட்டத்தட்ட குழந்தைத் திருமணம் தவறென்று உணரப்பட்டுள்ளது .ஆகவேதான் எங்கேனும் நடந்தால் பொதுவெளிக்கு முதலில் வந்துவிடுகிறது.

 

கணவன் இறந்ததும் மனைவியை உயிரோடு எரிக்கும் உடன்கட்டை ஏறுதலை எதிர்த்த சட்டம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே [1829-ம் ஆண்டு டிச.4  ] நிறைவேற்றப்பட்டுவிட்டது . 1987 ராஜஸ்தானில் ரூப்கன்வர் உயிரோடு கணவன் சிதையில் எரிக்கப்பட்டு கோயிலும் கட்டப்பட்டது. பாஜக இதனை நியாயப்படுத்தியது .இன்றும் ரூப்கன்வரை போற்றுகிறது ஆர் எஸ் எஸ் . ஆயினும் பொது புத்தியில் உடன்கட்டை ஏறுதல் தீதென உணரப்பட்டுவிட்டது .

 

ஆகவே ’சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டமும்’ தேவையே. சட்டம் வந்த மறுநாளே எல்லாம் திருந்திவிடும் என்கிற மூடநம்பிக்கை எல்லாம் யாருக்கும்  இல்லை . தொடர் விழிப்புணர்வும் தொடர் போராட்டமுமே இதை ஆணவக் கொலைகளை பின்னுக்குத் தள்ளும் .அதற்கு இச்சட்டமும் வலுவான கைஆயுதம் ஆகும் .

 

3] தேவை சட்டமா? சட்டத் திருத்தமா?

 

 வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961 லேயே நிறைவேற்றப்பட்டாலும் போதாமை காரணமாக பின்னர் திருத்தம் செய்யப்பட்டது . ஆணவக் கொலைதடுக்க ஏற்கெனவே சட்டம் இல்லாததால் தனிச்சட்டமே தேவை . சாதி ஆணவக்கொலை என்பது ஓர் தனித்த குற்றச் செயலாக சமூகத்தில் வெளிப்படும் போது அதனை தனியாகக் கையாள்வதே நியாயம் .

பொதுவாய் குழந்தைகள் மீதான வன்முறை ,பெண்கள் மீதான வன்முறை போன்றவற்றை தடுக்க பலசட்டங்கள் இருந்த போதிலும் ;  குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக பொக்காஸோ சட்டம் [போக்சோ சட்டத்தின் முழு விரிவாக்கம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), ஆங்கிலத்தில் (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) எனப்படும் ] தேவைப்பட்டது இல்லையா ? அது கூடுதல் கவசமாக இருப்பது போல் ; ’சாதி ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டமும்’ தேவை .இதனை சட்டங்களில் சில திருத்தங்கள் செய்வதன் மூலம் சாதிக்க முடியாது .

 

4] மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்குமா?

 

இது அரசியல் கேள்வி. தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி முழுக்க முழுக்க ஆர் எஸ் எஸ் அடியாளாக ஜனநாயக விரோதமாகவே செயல்படுகிறவர் . முடிந்தவரை தடுக்கவே முயற்சி செய்வார் .அண்மை உச்சநீதிமன்றத் தீர்ப்பு கொஞ்சம் கடிவாளம் போட்டுள்ளது .ஆயினும் என்ன நடக்கும் என உறுதியாகக் கூற இயலாது . முதலில் சட்டமன்றம் சட்ட முன்வடிவை நிறைவேற்றட்டும் . சட்டமாக்க தொடர்ந்து அரசியல் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டம்  நடத்தி வெற்றி பெறுவோம்.

 

5 ] காவல் துறை செயல்படாத நிலையில் உள்ளதே?

 

ஆம் .ஆம்.ஆம். காவல்துறையில் சாதி ,மத  ஆதிக்க வெறி மேலோங்கி உள்ளது . மேலும் உள்ளூர் பெரிய மனிதர்கள் ,சாதி மத அமைப்பின் பெரும்புள்ளிகள் கைப்பாவையாய்  காவல்துறை செயல்படும் போக்கு நெடுங்காலமாக உள்ளது .கரடு தட்டிப்போன இந்த காவல்துறைக்கு மனித உரிமையை ,மனித மதிப்பைக் கற்றுக்கொடுக்கும் சவாலான பணி அரசுக்கும் பொதுநலனில் அக்கறை உள்ளோருக்கும் உள்ளது .

 

’பெரியார் மண்’ ’ சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மண்’என பெருமை பேசினால் மட்டும் போதாது .  அதன் பொருள் சாதி ,மத ஆதிக்கங்களை , மூடத்தனங்களை முற்றாய் விட்டொழித்த மண் என்பதல்ல . அவற்றிற்கு எதிராக வலுவாக போராடிய மண் ,போராடிக்கொண்டிருக்கிற மண் ,இனியும் போராட வேண்டிய மண் என்பதே ஆகும் .ஏனெனில் இரண்டாயிரம் ஆண்டுகளாக இரத்ததோடு ஊறிய சாதி மத வெறியும் மூடத்தனங்களும் அவ்வளவு சீக்கிரம் பட்டுப்போகாது .மீண்டும் மீண்டும் தலைதூக்கும் ; தலைதூக்கிக் கொண்டிருக்கிறது . இடைவிடாது .போராடிக்கொண்டே இருக்க வேண்டும் . போராட்டத்திற்கும் விழிப்புணர்வுக்கும் ஓய்வு என்பதே இல்லை . இதனை கேலி பேசுவோரை சட்டை செய்யாமல் செயலாற்றியாக வேண்டிய காலகட்டம் இது .

 

மக்களும் காவல்துறையை மதிப்பதில்லை? எங்கிருந்து நாம் சீர் செய்ய வேண்டும்?

 

காவல்துறை மட்டுமல்ல நிர்வாக இயந்திரம் முழுவதும் சாதி ,மத , பண ,அதிகார செல்வாக்கு ஊடுருவி சீரழித்துள்ளது . சீர் செய்வது முதல் பணி . மரியாதை என்பதைக் கேட்டுப்பெறவும் முடியாது ; உத்தரவிட்டும் பெற முடியாது . காவல்துறை தன் மரியாதையை ஈட்ட பெரு முயற்சி செய்தாக வேண்டும் .இப்போது படுபாதாளத்தில் கிடக்கிறது என்பதை அவர்களை உணரவைக்க வேண்டும் . அவர்களுக்கும் சங்கம் வைக்கிற உரிமை வழங்கி ஜனநாயக உணர்வை உருவாக்கலாம் . கடும் கருத்துப் போராட்டம்தாம் .

 

பொதுவாக ஐரோப்பியர்கள் தங்களை ’law-abiding citizen ‘ அதாவது சட்டத்தை மதிக்கிற குடிமக்கள் எனக் கூறிக்கொள்வார்கள் . ஆனால் நம் நாட்டில் சட்டத்தை அறிந்து கொள்வதும் மிகக்குறைவு . மதித்து நடப்பதும் மிகக்குறைவு . ஆகவே இதனை சீர் செய்ய மேலிருந்தும் கீழிருந்தும் கடும் முயற்சியும் பயிற்சியும் தேவைப்படுகிறது . இது ஓர் அரசியல் போராட்டம் .

 

ஐயா !

உங்கள் கேள்விக்கு என்னால் முடிந்த விளக்கத்தைத் தந்துள்ளேன் . மேலும் பன்முனை விவாதம் இன்னும் புரிதலை கூர்மையாக்கும் . நன்றி !

 

சுபொஅ.

19/09/25.

 

 

 

 

 

 

 

 

 


“சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டம்”

Posted by அகத்தீ Labels:

 


 “சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டம்” வேண்டும் என்று கம்யூனிஸ்டுகளும் விசிகவும் கேட்டால் , அது ஏதோ  “ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிரான சட்டம்”  கேட்கிறார்கள் என சில சாதிவெறியர்கள் நடுங்கிப்  பதிவு போடுகிறார்கள் . இன்னும் சிலர் உங்கள் ஒட்டு வங்கிக்கு வேட்டுவைத்துக் கொள்ளாதீர்கள் என புத்தி சொல்கிறார்கள் ! உண்மை என்ன ?

 

சாதி ஆணவப் படுகொலை ஒரு குறிப்பிட்ட சாதி இன்னொரு குறிப்பிட்ட சாதிக்கு எதிராக செய்வது மட்டுமல்ல ; எல்லா சாதியிலும் நடக்கிற கொடுமை ஆகும் . தலித்துகளுக்குள்ளும் சாதி ஆணவப் படுகொலை நடக்கிறது . பிற்படுத்தப்பட்டோருக்குள்ளும் நடக்கிறது .  இரு சாராருக்கு இடையிலும் நடக்கிறது .உயர் சாதியினர் எனச் சொல்லிக் கொள்வோருக்குள்ளும் வெளியேயும் நடக்கிறது .

 

ஆகவே எந்தச் சூழலில் நடந்தாலும் அது ஆணவப் படுகொலையே . சட்ட ரிதியான திருமண வயதை எட்டிவிட்ட எந்த ஆணோ பெண்ணோ தான் விரும்புகிற இணையைக் கைப்பிடிக்கிற உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு . அதைத் தடுக்கிற கொலை செய்கிற எல்லாமும் ஆணவக் கொலையே !

 

இதை உரக்கச் சொல்வதனால் ஒட்டுவங்கிக்கு பாதிப்பு எனில் அதைப் பொருட்படுத்தாமல் சமூக நலனை முன்னிறுத்தி செயல்படுபவர்களே கம்யூனிஸ்டுகள் . ஆட்டு மந்தை போல் பின்னால் போவதல்ல தலைமை .ரயில் எஞ்சினாய் முன்னே வழிநடத்திச் செல்வதே தலைமை .

 

சுபொஅ.

18/09/25.

 

 


தேஷ் பக்த்

Posted by அகத்தீ Labels:

 


கோவணம் கட்டியவர்களை

பைத்தியக்காரர்கள்

எனச் சொல்லும் ராஜா

நிர்வாணமாக இருக்கிறார்

எனச் சொல்வதுதான்

தேசவிரோதம் !

 

நிணம் ஒழுகும் வாயை

துடைத்துக்கொண்டே

‘சாந்தமூர்த்தி’ என

தனக்குத்தானே

சொல்லிக்கொள்ளும் ராஜாவை

மோசடிக்காரன் என்பவன் நிச்சயம்

தேசவிரோதியே !

 

“ராம் ! ராம் “ “சிவ ! சிவ !”

நாமம் ஜெபித்தபடி

நச்சை ஊரணியில் ஊற்றும்

உத்தமன் பெயர் பாடி !

விஷ்வகுருவென தாழ்பணிவதே

தேஷ்பக்தி !தேஷ்பக்தி ! தேஷ்பக்தி !

 

சுபொஅ.

16/09/25.


இரண்டு முகம் !

Posted by அகத்தீ Labels:

 



ஒவ்வொருக்குள்ளும்

இருக்கிறது இரண்டு முகம்

தாராளம் கஞ்சத்தனம்

ஒழுக்கம் ஒழுக்கமின்மை

நேர்மை நேர்மையின்மை

பொறுப்பு பொறுப்பின்மை

அறம் அறமின்மை

மனிதம் மனிதமின்மை

விசால இதயம் குறுகிய மனசு

அன்பு அன்பின்மை

ஒவ்வொருக்குள்ளும்

இருக்கிறது இரண்டு முகம் !

 

ஊரே கொண்டாடும் ஒருத்தருக்குள்ளும்

ஓர் வில்லன் தூங்கிக் கொண்டிருப்பான்

ஊரே பழிக்கும் வில்லன் இதயத்தின்

ஓரத்திலும் ஈரக்கசிவு இருக்கும் .

யார் யாருக்கு எப்போது

எங்கு ஏன் எப்படி

என்பது மட்டுமே கேள்வி !

ஒவ்வொருக்குள்ளும்

இருக்கிறது இரண்டு முகம் !

 

 சுபொஅ.

11/09/25.

 

 


’மாமன்’ திரைப்படத்தை முன்வைத்து ….

Posted by அகத்தீ Labels:

 




 “அரசு EWS  குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஒதுக்கும் வீடுகளில் எந்த வசதி இருக்கிறது ? எட்டிப் பார்த்து வாருங்கள் !.....”

 

 

’மாமன்’ திரைப்படத்தை முன்வைத்து ….

 

மிகத் தாமதமாக அண்மையில் ‘மாமன்’ திரைப்படம் பார்த்தேன் . இது அப்படம் குறித்த விமர்சனம் அல்ல . ஆயின் அப்படம் பற்ற வைத்த ஒரு பொறியினை விரிவாக்கம் செய்து ஓர் சமூகப் பிரச்சனையை , பண்பாட்டு பிரச்சனையை விவாதிக்கலாம் எனக் கருதுகிறேன். கொஞ்சம் விசாலமனதோடு வாசிக்க வேண்டுகிறேன்.

 

திருமணத்திற்கு பிறகும் மாமனோடுதான் படுத்து உறங்குவேன் , ஒன்றாகத்தான் இருப்பேன் என[ பாசத்தைக் கொட்டி வளர்க்கும்] அக்கா மகன் பொடியன்  அடம் பிடிப்பதால் வரும் உறவுச் சிக்கலை படம் ஆக்கி இருக்கிறார்கள் . திரைக்கதை அமைப்பு , கையாண்ட முறை இவற்றில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு . விமர்சனங்கள் உண்டு .ஆயினும் வழக்கமான அடிதடி குத்துப்பாடு மசாலா தடவாத  மாறுபட்ட படம் . நடிப்பு சிறப்பு . அதனால் படம் எனக்குப் பிடித்திருக்கிறது .

 

கிராமப்புறத்தில் சிலரின் முதல் இரவுகளில் இதுபோன்ற சம்பவங்கள்  கேள்விப் பட்டிருக்கிறோம் .  பெரியவர்கள் குழந்தைக்கு வேறு ஆசை காட்டி மடை மாற்றி சமாளிப்பார்கள் . திரைப்படம் கொஞ்சம் நாடகபாணி ஆக்கி இருக்கிறது . சரி ! சினிமாவில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பது புரிகிறது . படம் பார்த்த பின் நான் கொஞ்சம் யோசித்தேன் . கேள்வி எழுந்தது .

 

திருமணமானவர்கள் அனைவருக்கும் நம் நாட்டில் நம் பண்பாட்டில் ’தாம்பத்தியத்திற்கான முழு வாய்ப்பும் சுதந்திரவெளியும்’ இருக்கிறதா என்பதுதான் என் மனதில் தெறித்த மையமான கேள்வி .

 

கலைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போது சூப்பர் ஸ்டார் உட்பட பலர் கொந்தளித்து ஒருவரின் படுக்கை அறையில் எப்படி  போலீஸ் நுழையலாம் என கண்டனம் முழங்கினர் . சரிதான் .அது மனித உரிமை மீறல் . கண்டிக்கப்பட வேண்டும் . மனித உரிமை அக்கறை உள்ள எல்லோரும் கண்டித்தனர் . இப்போதும் அந்த கண்டனம் மிகச்சரி என்றே கருதுகிறேன்.

 

அதேவேளை , இங்கு சமூகத்தில் தனி படுக்கை அறையே இல்லாத நிலையே பெரும்பாலோருக்கு உள்ளதே .  இதைப் பற்றி யாரும் பெரிதாய் இதுவரை கவலைப்பட்டதாகவே தெரியவில்லையே .இது மனித உரிமை மனித மாண்பு மீறாலகப் பேசப்படுவதே இல்லையே . இதுதான் முரண்பாடு . மேலிருப்போருக்கு பேசப்படும் ’நியாயம்’ கீழே வரவர ’கனத்த மெளனம்’ ஆகிவிடுகிறது. 

 

கூட்டுக் குடும்ப வாழ்வில் கணவன் மனைவி தனித்து மனம்விட்டு பேசுவதற்கான வாய்ப்பு பொதுவாக  நம் சமூகத்தில்  உண்டா ? பெரும்பாலும் இல்லை . பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவிக்குத் தனித்த படுக்கை அறை உண்டா ? கேள்விக்குறிதான் .

 

ஒரு வேளை நடுத்தரக் குடும்பத்தில் இளம் தம்பதியினருக்கு அப்படி ஓர் அறை ஒதுக்கப்படும் போது ஐம்பது அறுவது வயது மாமனார் மாமியார் நடுக்கூடத்தில் தூங்க வேண்டும் . மகனுக்கோ மகளுக்கோ திருமணம் ஆனபின்னும்

 ’பெருசுகளுக்கு சுகம் கேட்குதோ’ என்கிற எள்ளல் பேச்சு இங்கு சர்வசாதாரணம் .

 

ஆணோ பெண்ணே எந்த வயதாயினும் தனிப்படுக்கை அறை தேவை என்பதை ஏற்றாலும் அதற்கான வாய்ப்போ வசதியோ இல்லாத சமூகச் சூழல் .பொருளாதார நிர்ப்பந்தம் இங்கு கோலோச்சுகிறது .

 

‘தனிக் குடித்தனம்’ என்கிற கோரிக்கையின் நியாயம் இதன் பின்னால் ஒளிந்திருக்கிறது . மறுபுறம் பொருளாதாரச் சூழலும் பண்பாட்டு இறுக்கமும் தடையாகவும் வந்து நிற்கிறது .இது பொதுவிவாதமாக ஆக்கப்படுவதே இல்லை .

 

 

பெரும்பாலான குடும்பங்களில் ‘ படுக்கை அறையே கிடையாது ‘; எட்டுக்கு எட்டு ஒற்றை அறையில் கணவன் மனைவி தாய் தந்தை மகன் மகள் எல்லோரும் ஒன்றாய் உறங்க வேண்டிய கட்டாயம் . இட்டுக்கட்டி சொல்ல வில்லை . அரசு EWS  குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஒதுக்கும் வீடுகளில் எந்த வசதி இருக்கிறது ? எட்டிப் பார்த்து வாருங்கள் !

 

அடுக்களை ,படுக்கை அறை ,பூஜை அறை , படிப்பறை ,கூடம் எல்லாம் ஒற்றை அறைதான் .போனால் போகுதென்று ஒரு கழிப்பறை மட்டும் கூடுதலாக இருக்கும் . [ நான் இங்கு EWS எனச் சொன்னது ஒடுக்கப்பட்ட அடித்தட்டு ஏழைகளை .  வருடத்திற்கு எட்டு லட்சம் வருமானம் பெறும் மேல்ஜாதி அரிய வகை ஏழைகளை [EWS] அல்ல . அது அயோக்கியத்தனமான இட ஒதுக்கீடு ] இதைத்தான் பொதுவாய் வீடு கொடுத்து விட்டதாக அரசு தப்பட்டம் அடித்துக் கொள்ளும் .

 

அடிக்கடி தீப்பிடிக்கும் குடிசை வீடுகளைவிட இது மேலானதுதான் , ஆனாலும் மனித மாண்புகள் தலைகுனியும் வீடுகள்தாம் இவை  . எட்டடி கூட்டுக்குள்ளே ஆறெழு பேர் வாழும் என்று சொல்லக்கூடாது எப்படியோ காலந்தள்ளும் சர்க்கஸ் . இதுவா மாண்பான வாழ்க்கை ? இதுவா மனிதம் ?

 

இருக்கிற இடம் மிகவும் சிக்கலாக இருப்பினும் ஆண் பெண் பாலின உணர்ச்சி மழுங்கிவிடாதே . பூனை இருக்கும் வீட்டில்தான் எலியும் குடும்பம் நடத்தி குட்டி போடுகிறது என்பதுபோல் ; எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் இயந்திரகதியாய் தாம்பத்தியம் நடந்தேறிக் கொண்டிருக்கும் .இங்கே ஆணின் திருப்தி மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் பெண்ணின் இச்சை பேசவே முடியாது .தலைவன் முன் தலைவி தன் இச்சையை சொல்லவும் கூடாது எனத் தடுக்கும் சீரழிந்த பண்பாட்டை என்ன பண்ணித் தொலைப்பது ?

 

சரி ! இதுதான் இப்படி எனில் . தனி படுக்கை அறை உள்ள வீட்டில் இரு குழந்தை பிறந்ததும் குழந்தைக்குத் தனிப் படுக்கை என்பது பொதுவாகக் கிடையாது .இரண்டு மூன்று குழந்தைகள் உள்ள குடும்பதில் இடநெருக்கடி மிகப் பெரும் வாழ்க்கை சவால்தான்.

 

கடைசி குழந்தை  கட்டிலின் மேலே  இருவருக்கும் இடையில் , கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் கட்டிலுக்கு அடியிலும் கட்டிலுக்கு பக்கத்திலும் தூங்க வேண்டும் . தாத்தா பாட்டி இருக்கும் வீட்டில் வளர்ந்த குழந்தைகள் அவர்களுக்கு அருகில் திண்ணையிலோ கூடத்திலோ ! மீண்டும் யோசித்துப் பாருங்கள் தாம்பத்தியம் வெறும் இயந்திரம் போல் நடந்தேறும் இனப்பெருக்கமும் கைக்கூடும் ஆயினும் முழுமை அடையாத உணர்ச்சிகள் வேறு வேறு வடிவத்தில் வெடிக்கும் . பல குடும்ப முரண்களில் இதனை கணக்கில் எடுக்காமலே பஞ்சாயத்து ஒருதலைப் பட்சமாக பேசி முடிக்கப்படும் .

 

நான் அமெரிக்கா சென்ற போது கவனித்தேன் . மேலை நாடுகளில் அப்படித்தான் .அங்கு குழந்தைகளுக்கு தனிக் கட்டிலில் தனி அறையில் படுத்து உறங்கப் பழக்கிவிடுகிறார்கள் . பெற்றோரோடு தூங்க வைப்பது சட்டப்படி குற்றம் . குழந்தைகள் தானேதான் சாப்பிட வேண்டும் .ஊட்டிவிடக் கூடாது .  காரில் பயணிக்கும் போது மடியில் குழந்தையை வைத்துக் கொள்ளக்கூடாது .தனி இருக்கை .தனி ஏற்பாடு . குழந்தைகள் சுயமாக செயல்படவே ஊக்குவிக்கப் படுகிறார்கள் . இதனால் பாசம் இல்லாதவர்கள் என நாம் கருதுவது தவறு . குழந்தைகள் உரிமைக்கு அங்கு அதிக முக்கியத்துவம் உள்ளது . குழந்தையின் ஒப்புதல் இல்லாமல் தொடக்கூட முடியாது .நல்ல பண்பாடு .  நம் பண்பாட்டு சூழலில் இருந்து பார்க்கும் போது சில மனத்தடைகளும் உருவாகத்தான் செய்கிறது .

 

அதுபோல் எந்த வயதாயினும் கணவன் மனைவிக்கு ‘பிரைவேசி ‘முக்கியம் என்கிற புரிதல் வலுவாக இருக்கிறது . ஆம் .அது இயற்கைத் தேவை அல்லவா ? நாமும் இதனை பின்பற்றலாம்தான் ஆயின் இதற்குரிய இடவசதியும் பணவசதியும் பண்பாட்டுத் தெளிவும்  உறுதியும் தேவை அல்லவா ? அவ்வளவு சீக்கிரம் நமக்கு அது வந்துவிடுமா ?

 

பல குடும்பச் சிக்கல்களை கூர்ந்து அலசினால்  ; அது மாமியார் மருமகள் பிரச்சனை ஆயினும் அல்லது கணவன் மனைவி முரண்பாடு ஆனாலும் அவர்களின் தாம்பத்ய உறவில் ஏற்படும் விரிசல் இருப்பது புலனாகும் .

 

கணவன் மனைவி சுதந்திரமாக மனம்விட்டு பேச உறவாட ஒரு ’பிரைவேசி’ இல்லாத போது அதனால் ஏற்படும் அழுத்தம் மாமியார் மருமகள் மோதலாகவோ, கணவன் மனைவி சண்டையாகவோ வெடிக்கும் . இதில் இளம் தம்பதியருக்கு மட்டுமல்ல குடும்பதின் மூத்த தம்பதியினருக்கு ‘பிரைவேசி ‘ தேவைப்படுகிறது என்கிற பார்வைக் கோளாறு ஆட்டுவிக்கிறது.

 

இப்பார்வையை இப்போது இளைய தலைமுறை உணர்கிறது மாற்ற எத்தணிக்கிறது. ஆயினும் பண்பாட்டு இறுக்கமும் வாழ்க்கை நெருக்கடிகளும் வாய்ப்பிற்கு முட்டுக்கட்டைப் போடுகிறது .

 

இது வெறும் உடலுறவு சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல . மனம் விட்டுப் பேச , பழகவே பிரைவேசி  தேவைப் படுகிறது . காலம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது கணவன் மனைவிக்கே தனித்தனி அறைகள் . அவரோ /இவரோ அனுமதி இன்றி அங்கு நுழையக்கூட முடியாது . இரண்டு பேருக்கும் தனித்துவம் உண்டு என்கிற திசையில் மேற்கின் பண்பாடு நகர்கிறது .அதற்கான சூழலும் அமைகிறது .

 

இங்கு அதை எல்லாம் மேல்மட்டத்தில் உள்ள ஒன்றிரண்டு சதவீதம் குடும்பங்கள் மட்டுமே யோசிக்க முடியும் . மற்றவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க இயலாத சூழல் உள்ளது. மேற்கில் இந்த எண்ணிக்கை சற்றுகூடுதல் அவ்வளவுதான் .ஆயினும் இந்தப்  பார்வை பரவலாகி உள்ளது . அங்கும் நம் குடும்பங்கள் போல் இடவசதி பணவசதி இல்லாதோர் சந்திக்கும் பிரச்சனைகள் உண்டு . ஆனாலும் பண்பாட்டுச் சூழல் நம்மைவிட ஜனநாயகமானது .மிகவும் பரந்தது . நாமும் அதை நோக்கி பயணிக்கலாம் .

 

கும்பத்தில் ஜனநாயக் காற்று வீச வேண்டும் . குழந்தைகள் ,முதியோர்கள் ,தம்பதியர் , பெற்றோர் என ஒவ்வொருவருக்கும் உரிமைகளும் உண்டு .கடமைகளும் உண்டு . இதில் ஆணாதிக்கமோ பெண்ணாதிக்கமோ வயது உறவு நிலை சார்ந்த ஆதிக்கமோ  இல்லாத ஜனநாயக பூர்வமாக அனைத்தையும் அணுகுகிற ”குடும்ப ஜனநாயக் பண்பாட்டை” நோக்கிப் பயணிப்பது தவிர்க்க முடியாதது . காலத்தின் தேவை . இதற்கான விவாதங்கள் தொடங்குவதே முதல் படியாகும் . திரைப்படங்களிலும் களமாக வேண்டும் . மாமன் படம் எனக்கு இதனை பேசச் சொன்னது .

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

10/09/25 .


ஆயிரம் கதைகள்….

Posted by அகத்தீ Labels:

 



பயணத்தின் போது

புன்னகையால் ஈர்த்த

மழலையின் தாய் ….

 

அவசரமாக கடக்கும் போது

எதிர்பட்ட சோகம் கப்பிய

முதியவள் …

 

ஹோட்டலில் சாப்பிடும் போது

விலையைக் கேட்டுகேட்டு தவிர்த்த

இளைஞன் …

 

மருத்துவமனையில் நுழையும் போது

பிரசவலியை சுமந்து நின்ற

கணவன்….

 

ஒவ்வொருவரும் அடை காக்கும் கனவுகள்

சிறகை விரித்தால்

ஆயிரம் கதைகள்….

 

சுபொஅ.

11/09/25.