சட்டங்களை மட்டும் அதிகமாக இயற்றிக் கொண்டு செயல்படுத்தாமல் போவதில் என்ன பயன்?

Posted by அகத்தீ Labels:

 





சட்டங்களை மட்டும் அதிகமாக இயற்றிக் கொண்டு செயல்படுத்தாமல் போவதில் என்ன பயன்?

 

 

ஐயா,

வணக்கம்.

தங்கள் கருத்து சிறப்பாக உள்ளது. முற்றிலும் சரியே.

தற்போது உள்ள சட்டங்களில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்கப் பிரிவுகள் இல்லையா? சட்டங்களை மட்டும் அதிகமாக இயற்றிக் கொண்டு செயல்படுத்தாமல் போவதில் என்ன பயன்?

தேவை சட்டமா? சட்டத் திருத்தமா?

மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்குமா?

காவல் துறை செயல்படாத நிலையில் உள்ளது?

மக்களும் காவல்துறையை மதிப்பதில்லை? எங்கிருந்து நாம் சீர் செய்ய வேண்டும்?

 

நேற்று முகநூலில் நான் போட்ட பதிவுக்கு , வாட்ஸ் அப் மூலம் ஓர் நண்பர் அனுப்பிய கடிதம் இது . [ நேற்றைய பதிவை நினைவூட்ட ஸ்கிரின் ஷாட் போட்டோ இணைத்துள்ளேன். ]

தனிப்பட்ட முறையில் அவர் அனுப்பியதால் அவர் பெயரைக் குறிப்பிடவில்லை .ஆனால் எழுப்பியுள்ள கேள்விகள் வேறு பலருக்கும் இருக்கும் என்பதால் பதிலை பொதுவெளியில் பதிகிறேன் .அவருக்கும் அனுப்பி உள்ளேன்.

 

1] தற்போது உள்ள சட்டங்களில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்கப் பிரிவுகள் இல்லையா?

 

இருப்பது போதவில்லை . தமிழ் நாட்டின் பெருமை மிகு ‘சுயமரியாதைத் திருமணச்சட்டம்’ [ 1968 ]; சடங்கு மீறிய திருமணங்களை  பதிவு செய்ய வழி செய்கிறது . சாதி மீறி திருமணம் செய்தாலும் பதிவு செய்ய சட்டத்தில் இடம் உண்டு . ஆனால் ஆணவக்கொலையை தடுக்க வழி இல்லை . அதற்கு கடும் தண்டனை வழங்க வழியில்லை . ஏனெனில் சட்டத்தின் நோக்கம் விருப்பபூர்வமாக சுயமரியாதையோடு செய்யும் திருமணங்கள் சட்டபூர்வமானவை என்று சொல்வது மட்டுமே . அதனை சிறப்பாகச் செய்கிறது .அதற்கு மேல் அச்சட்ட வரம்பை விரிக்க வழியில்லை .வழக்கமான கிரிமினல் சட்டங்களில் ,சிவில் சட்டங்களில்  இதற்கான போதாமை உள்ளது .ஆகவே சாதி ஆணவக் கொலைக்கு எதிராகத் தனிச்சட்டம் கோருவது தேவையாக உள்ளது.தவிர்க்க முடியாதது .

 

2] சட்டங்களை மட்டும் அதிகமாக இயற்றிக் கொண்டு செயல்படுத்தாமல் போவதில் என்ன பயன்?

 

வரதட்சணைக்கு எதிரான சட்டம்  [1961 ]உண்டு என்ற போதிலும் , வரதட்சணை குறைந்த பாடில்லை . ஆயின் வரதட்சணைக் கொலைகள் சட்டத்தின் கீழ் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வழி உண்டு . இது முன்பைவிட சற்று முன்னேற்றம் .

 

வன்கொடுமை தடுப்பு சட்டம் உண்டு .ஆயினும் வன்கொடுமைகள் ஆங்காங்கு அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன . இச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொதுக்குரல் வலுக்கும் போது சட்டம் பாயவும் செய்கிறது . சட்டம் இயற்றுவதோடு பணி முடிந்துவிடாது . தொடர் விழிப்புணர்வும் சமூக நிர்ப்பந்தமும் தேவை என்பதே உலக அனுபவம் . நிறவெறி இன ஒடுக்கலுக்கு எதிரான சட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டும் அமலாக்க பெரும் போராட்டமும் முயற்சியும் தேவைப்பட்டன என்பதே அமெரிக்க அனுபவமும்கூட . இன்றும் அங்கு அதற்கான போராட்டம் தொடர்கிறது .

 

குழந்தைத் திருமணத்தை தடுக்க தனிச்சட்டம் [ 1929 / புதிய சட்டம் 2006 ]தேவைப்பட்டது . தற்போதும் அங்கொன்று இங்கொன்றாக நடக்கிறது . ஆனால் பொது தளத்தில் கிட்டத்தட்ட குழந்தைத் திருமணம் தவறென்று உணரப்பட்டுள்ளது .ஆகவேதான் எங்கேனும் நடந்தால் பொதுவெளிக்கு முதலில் வந்துவிடுகிறது.

 

கணவன் இறந்ததும் மனைவியை உயிரோடு எரிக்கும் உடன்கட்டை ஏறுதலை எதிர்த்த சட்டம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே [1829-ம் ஆண்டு டிச.4  ] நிறைவேற்றப்பட்டுவிட்டது . 1987 ராஜஸ்தானில் ரூப்கன்வர் உயிரோடு கணவன் சிதையில் எரிக்கப்பட்டு கோயிலும் கட்டப்பட்டது. பாஜக இதனை நியாயப்படுத்தியது .இன்றும் ரூப்கன்வரை போற்றுகிறது ஆர் எஸ் எஸ் . ஆயினும் பொது புத்தியில் உடன்கட்டை ஏறுதல் தீதென உணரப்பட்டுவிட்டது .

 

ஆகவே ’சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டமும்’ தேவையே. சட்டம் வந்த மறுநாளே எல்லாம் திருந்திவிடும் என்கிற மூடநம்பிக்கை எல்லாம் யாருக்கும்  இல்லை . தொடர் விழிப்புணர்வும் தொடர் போராட்டமுமே இதை ஆணவக் கொலைகளை பின்னுக்குத் தள்ளும் .அதற்கு இச்சட்டமும் வலுவான கைஆயுதம் ஆகும் .

 

3] தேவை சட்டமா? சட்டத் திருத்தமா?

 

 வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961 லேயே நிறைவேற்றப்பட்டாலும் போதாமை காரணமாக பின்னர் திருத்தம் செய்யப்பட்டது . ஆணவக் கொலைதடுக்க ஏற்கெனவே சட்டம் இல்லாததால் தனிச்சட்டமே தேவை . சாதி ஆணவக்கொலை என்பது ஓர் தனித்த குற்றச் செயலாக சமூகத்தில் வெளிப்படும் போது அதனை தனியாகக் கையாள்வதே நியாயம் .

பொதுவாய் குழந்தைகள் மீதான வன்முறை ,பெண்கள் மீதான வன்முறை போன்றவற்றை தடுக்க பலசட்டங்கள் இருந்த போதிலும் ;  குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக பொக்காஸோ சட்டம் [போக்சோ சட்டத்தின் முழு விரிவாக்கம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), ஆங்கிலத்தில் (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) எனப்படும் ] தேவைப்பட்டது இல்லையா ? அது கூடுதல் கவசமாக இருப்பது போல் ; ’சாதி ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டமும்’ தேவை .இதனை சட்டங்களில் சில திருத்தங்கள் செய்வதன் மூலம் சாதிக்க முடியாது .

 

4] மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்குமா?

 

இது அரசியல் கேள்வி. தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி முழுக்க முழுக்க ஆர் எஸ் எஸ் அடியாளாக ஜனநாயக விரோதமாகவே செயல்படுகிறவர் . முடிந்தவரை தடுக்கவே முயற்சி செய்வார் .அண்மை உச்சநீதிமன்றத் தீர்ப்பு கொஞ்சம் கடிவாளம் போட்டுள்ளது .ஆயினும் என்ன நடக்கும் என உறுதியாகக் கூற இயலாது . முதலில் சட்டமன்றம் சட்ட முன்வடிவை நிறைவேற்றட்டும் . சட்டமாக்க தொடர்ந்து அரசியல் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டம்  நடத்தி வெற்றி பெறுவோம்.

 

5 ] காவல் துறை செயல்படாத நிலையில் உள்ளதே?

 

ஆம் .ஆம்.ஆம். காவல்துறையில் சாதி ,மத  ஆதிக்க வெறி மேலோங்கி உள்ளது . மேலும் உள்ளூர் பெரிய மனிதர்கள் ,சாதி மத அமைப்பின் பெரும்புள்ளிகள் கைப்பாவையாய்  காவல்துறை செயல்படும் போக்கு நெடுங்காலமாக உள்ளது .கரடு தட்டிப்போன இந்த காவல்துறைக்கு மனித உரிமையை ,மனித மதிப்பைக் கற்றுக்கொடுக்கும் சவாலான பணி அரசுக்கும் பொதுநலனில் அக்கறை உள்ளோருக்கும் உள்ளது .

 

’பெரியார் மண்’ ’ சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மண்’என பெருமை பேசினால் மட்டும் போதாது .  அதன் பொருள் சாதி ,மத ஆதிக்கங்களை , மூடத்தனங்களை முற்றாய் விட்டொழித்த மண் என்பதல்ல . அவற்றிற்கு எதிராக வலுவாக போராடிய மண் ,போராடிக்கொண்டிருக்கிற மண் ,இனியும் போராட வேண்டிய மண் என்பதே ஆகும் .ஏனெனில் இரண்டாயிரம் ஆண்டுகளாக இரத்ததோடு ஊறிய சாதி மத வெறியும் மூடத்தனங்களும் அவ்வளவு சீக்கிரம் பட்டுப்போகாது .மீண்டும் மீண்டும் தலைதூக்கும் ; தலைதூக்கிக் கொண்டிருக்கிறது . இடைவிடாது .போராடிக்கொண்டே இருக்க வேண்டும் . போராட்டத்திற்கும் விழிப்புணர்வுக்கும் ஓய்வு என்பதே இல்லை . இதனை கேலி பேசுவோரை சட்டை செய்யாமல் செயலாற்றியாக வேண்டிய காலகட்டம் இது .

 

மக்களும் காவல்துறையை மதிப்பதில்லை? எங்கிருந்து நாம் சீர் செய்ய வேண்டும்?

 

காவல்துறை மட்டுமல்ல நிர்வாக இயந்திரம் முழுவதும் சாதி ,மத , பண ,அதிகார செல்வாக்கு ஊடுருவி சீரழித்துள்ளது . சீர் செய்வது முதல் பணி . மரியாதை என்பதைக் கேட்டுப்பெறவும் முடியாது ; உத்தரவிட்டும் பெற முடியாது . காவல்துறை தன் மரியாதையை ஈட்ட பெரு முயற்சி செய்தாக வேண்டும் .இப்போது படுபாதாளத்தில் கிடக்கிறது என்பதை அவர்களை உணரவைக்க வேண்டும் . அவர்களுக்கும் சங்கம் வைக்கிற உரிமை வழங்கி ஜனநாயக உணர்வை உருவாக்கலாம் . கடும் கருத்துப் போராட்டம்தாம் .

 

பொதுவாக ஐரோப்பியர்கள் தங்களை ’law-abiding citizen ‘ அதாவது சட்டத்தை மதிக்கிற குடிமக்கள் எனக் கூறிக்கொள்வார்கள் . ஆனால் நம் நாட்டில் சட்டத்தை அறிந்து கொள்வதும் மிகக்குறைவு . மதித்து நடப்பதும் மிகக்குறைவு . ஆகவே இதனை சீர் செய்ய மேலிருந்தும் கீழிருந்தும் கடும் முயற்சியும் பயிற்சியும் தேவைப்படுகிறது . இது ஓர் அரசியல் போராட்டம் .

 

ஐயா !

உங்கள் கேள்விக்கு என்னால் முடிந்த விளக்கத்தைத் தந்துள்ளேன் . மேலும் பன்முனை விவாதம் இன்னும் புரிதலை கூர்மையாக்கும் . நன்றி !

 

சுபொஅ.

19/09/25.

 

 

 

 

 

 

 

 

 


0 comments :

Post a Comment