எல்லா மதக் கடவுள்களும் தான்.

Posted by அகத்தீ Labels:

 


இன்றைய உலகில் மிகமிக அதிக பயத்துடன் ஓடி ஒளிந்து கொண்டிருப்பது யார் ?

 

சந்தேகம் என்ன ? கடவுள். கடவுளேதான்.

 

எந்த மதக் கடவுள் ?

 

வேறுபாடெல்லாம் இல்லை . எல்லா மதக் கடவுள்களும் தான்.

 

ஏன் ?

 

ஒன்றா ? இரண்டா ? சொல்லி அழ…

 

சொன்னால்தானே தெரியும்

 

சாத்தான்கள் கையில் அதிகாரம் . கடவுளின் குழ்ந்தைகள் கொல்லப் படுகிறார்கள் .பட்டினி போடப்படுகிறார்கள்.பழிவாங்கப் படுகிறார்கள். எல்லாம் கடவுளின் பெயரால் . அநீதியைத் தடுக்க இயலாத கடவுள்கள் ஓடி ஒளிந்து கொண்டே இருக்கிறார்கள்.

 

மெய்தான் .மெய்தான் . உண்மையை உரக்கச் சொல்லாதே நீயும் ஓடு அந்தக் கடவுள்களின் பின்னால் …

 

சுபொஅ.

22/10/23.


வைகறை 74 வாழ்க்கைப் படிப்பினை மலர்.

Posted by அகத்தீ Labels:

 


 “புனல் சூழ் மணல் தோப்பில் குயில் கூட்டம் நாங்கள் :வைகறை 74 வாழ்க்கைப் படிப்பினை மலர்.” கிடைத்தது . மகிழ்ச்சி.

 

வாழும் போதே சான்றோர்களை மத்தித்து போற்றல் நல்ல மரபு . அது வெறும் தனிநபர் துதியாக அமையாமல் பல்வேறு அருஞ்செய்திகளைத் தாங்கி வருதல் அதனினும் நன்று .

 

வைகறை வாணன் எனும் நல்ல எழுத்தாளர் .இதழாழர் , நூல் பதிப்பாளர் , சமூக செயல்பாட்டாளர் ,தமிழாய்ந்த சிந்தனையாளர் குறித்த அருமையான செய்திகளும் தகவல்களும் தமிழ்ச் சமூகம் அறிய வேண்டிய ஒன்று .அதனை தொகுத்தளித்த மலர் குழுவுக்கு பாராட்டுகள் .

 

280 பக்கங்கள் .69 கட்டுரைகள் ,படங்கள்  அத்துடன் பெட்டிச் செய்திகள் அடங்கிய மலர் . பொதுவாய் இது போன்ற மலர்களில் நாயகன் புகழ்மாலை மட்டுமே இடம் பெறும் . மலரின் நோக்கமும் அதுதானே ! இம்மலர் அதனின்று மாறுபட்டு வந்திருக்கிறது .

 

அரியல்[அரிஷ்டம்] எனும் அருமருந்து , திரைக்கு பின்னால் , கி.ரா .நேர்காணல் , இயற்கை பாலும் இலக்கணப் பாலும் , காதல் என்பது எதுவரை ?, வைகறை வானம் என உருது பாரசீக  கவிதைகள் குறித்த கட்டுரை ,ஸ்பானிஷ் நாட்டுப்புற கதை அடங்கிய பிடாரி ,எம் வி வெங்கட்ராமனும் சமகால எழுத்துகளும் , தமிழ் ஒளி குறித்து ,இலக்கியப் பழமொழிகள் , கால்டுவெல் , மஹாகவி ,தரங்கம்பாடி சீகன் பால்கு , காமம் , இன்குலாப் நாடகங்களில் ஈழப்பதிவுகள் , மூளை குறித்த மருத்துவ அறிவியல் கட்டுரை , பி.சீனிவாசராவ் – கோ நடேசய்யர் ஒப்பீடு ,சிதம்பரனார் ,சோழர்கள் நீர் மேலாண்மை , இப்படி மலரின் கணிசமான பகுதி பொதுத்தளத்தில் கட்டுரைகள் இடம் பெற்றிருப்பது வித்தியாசமான முயற்சி .

 

வைகறை தமிழ் பற்றாளர் ,இடதுசாரி சிந்தனையாளர் அதே சமயம் பெரியார் அம்பேர்கர் சிந்தனையின் தாக்கத்தையும் கொண்டவர் , தமிழீழ ஆதரவாளர் - அதன் பல்வேறு போக்குகளை உள்வாங்கி எல்லா குழுவோடும் நட்பு பாராட்டி அதேநேரம் தேசிய இனப் பிரச்சனை குறித்த தனித்த பார்வை உடையவர் . இம்மலர் நெடுக உள்ள கட்டுரைகளில் அவரின் அரசியல் சார்பு புலப்படும்.

 

நக்கீரன் ,சிகரம் ,காக்கைச் சிறகினிலே , பாலம் ,நந்தன் ,சங்கம் ,குமுதம் உள்ளிட்ட பல ஏடுகளில் தடம் பதித்தவர் . பொன்னி எனும் பதிப்பகம் நடத்தி காத்திரமான நூல்களை பதிப்பித்தவர் ,

 

என்னைவிட மூன்று வயது பெரியவர் . எனக்கு அவரை நன்கு தெரியும் .ஆனால் நெருங்கிப் பழகியதில்லை .அவசரகாலத்தில் சிகரம் ஏட்டின் மூலம் அறிமுகம் . செந்தில்நாதன் ,இளவேனில் ,பெ.நா.சிவம் போன்றோரோடு இருந்த நெருக்கம் வைகறையோடும் அரணமுறுவலோடும்  இருந்ததில்லை . நான் எழுதிய களப்பால் குப்பு குறித்த கட்டுரையை நந்தன் இதழில் வெளியிட்டவர் . [ மீண்டும் அந்த கட்டுரையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் .] அவர் வெளியிட்ட நூல்கள் , இதழ்கள் மூலமே அறிமுகம் .

 

எனக்கு இலக்கிய ஆர்வமும் ஈடுபாடும் இருந்த போதிலும் ஒரு தொழிலாளி என்கிற முறையில் தொழிற்சாலை தாண்டி இலக்கிய உலகோடு சங்கமிக்க வாய்ப்பு குறைவே .அவசரகாலத்திற்கு சற்று முன்பும் பின்புமாய் இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அத்தகைய இலக்கியவாதிகள் ,அறிவுஜிவிகள் தொடர்பு முகிழ்த்தது எனக்கு .ஆனால் இயக்கம் வேகமாக இழுத்துக் கொண்டது .

 

விரைவில் வாலிபர் சங்க பொறுப்பேற்று கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் தமிழகம் முழுவதும் சுற்ற வேண்டியவனானேன். அதன் பின் 20 ஆண்டுகள் தீக்கதிர் நாளேட்டில் பணி. எனவே இலக்கிய மற்றும் அறிவுஜீவிகளோடு தனிப்பட்ட முறையில் நெருங்கிக் பழக உண்டு உறங்க உறவாட உரையாட சந்தர்ப்பம் மிகக் குறைந்தது .

 

அவரவர் எழுத்தின் மூலமே உறவு அமைந்தது . வைகறையை நான் நேசித்த போதும் இரண்டறக் கலக்க வாய்ப்பு அமையாதது அப்படியே . நான் தோள் சாய்ந்து என் துயர்களை இறக்கி வைக்கும்  சிபிஎம் தலைவர்களில் ஒருவரும் விவசாய சங்கத் தலைவருமான தோழர் கோ .வீரய்யன் அடிக்கடி வைகறை வாணன் குறித்து என்னிடம் பேசுவார் . அவர் மூலமே வைகறையை அதிகம் அறிந்தவன்.

 

இம்மலர் அவரின் பன்முக பரிணாமத்தை எமக்கு சொல்கிறது . இன்றைய இளைய தலைமுறை அறியவும் பழைய தலைமுறை அசை போடவும் இம்மலர் வாசம் மிகுந்து பூத்துள்ளது . வாசிப்பீர் !

 

“புனல் சூழ் மணல் தோப்பில் குயில் கூட்டம் நாங்கள் :வைகறை 74 வாழ்க்கைப் படிப்பினை மலர்.”

பக்கங்கள் : 280 , விலை : ரூ.400 /

தொடர்புக்கு : பொன்னி , 8248338118 , vivekdushy@gmail.com

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் ,

20/10/2023.



ஒவ்வொரு நாளும்......

Posted by அகத்தீ Labels:

 









ஒவ்வொரு நாளும்

நடை பயிற்சியின் போது

கடந்துபோகும்

தண்ணீர் லாரிகளின் எண்ணிக்கை

கூடிக்கொண்டே போகிறது.

 

ஒவ்வொரு தெருவிலும்

இரவும் பகலும்

ஆழ்துளைக் கிணறு தோண்டும்

இயந்திரத்தின் இரைச்சல்

கேட்டுக்கொண்டே இருக்கிறது .

 

வீட்டின் பின்புறமுள்ள

சில நூற்றாண்டுகள் பழமையான எரி

ஆலை ரசாயணக் கழிவுகளால்

நிரம்பி நாற்றமெடுக்கிறது

 

குடிநீர் கேன் விநியோக

சப்தமும் காட்சியுமாய்

ஒவ்வொரு நொடியும்

நகர்ந்து கொண்டே இருக்கிறது.

 

வானம் தினசரி இருண்டு

நாலு தூறல் போட்டு

போக்கு காட்டிக்கொண்டே இருக்கிறது .

 

குளிர் நகரத்தில்

ஸ்வெட்டர்கள் பீரோவில்

அடைபட்டுவிட்டன

ஏசியும் ஃபேனும் மின்நுகர்வை

அதிகரித்துக் கொண்டிருக்கிறது .

 

பழியை யார் மீது போடலாம் ?

மூளையை கழற்றி வைத்துவிட்டு

மூக்கையும் கண்ணையும்

தீட்டிக் கொண்டிருக்கிறோம்.

நாக்கு தடித்துக் கொண்டிருக்கிறது.

 

சரி ! சரி ! யோசித்தது போதும்

தண்ணீர் லாரியில் அடிபடாமல்

தெருவில் நடக்கப் பழகு முதலில்.

 

சுபொஅ.

17/10/23. பெங்களூர்.

 

 



“எட்டு மணி நேர வேலை” : யாரோ போட்ட பிச்சை அல்ல…

Posted by அகத்தீ Labels:

 



  “எட்டு மணி நேர வேலை” : யாரோ போட்ட பிச்சை அல்ல…

 

அண்மையில் வெளியான நூல் . ஆனால் ஒரிரு மாதங்களில் உருவான நூல் அல்ல .” இந்த புத்தகத்தின் கருத்துகள் நீண்ட நாட்களாக நான் களமாடிய கருத்துகளாகும் .” என நூலாசிரியர் கூறிய வாக்குமூலம் மெய்யென்பதை நூலை வாசிப்போர் உணர்வர் .

 

இந்நூல் குறித்து  ‘ஐம்பொறி’ யூ டியூப்பில் நாலய்ந்து அறிமுகங்கள் காணக்கிடைக்கின்றன . ஏற்கெனவே சில நூலறிமுகங்களும் வெளிவந்து விட்டன . ஆகவே இங்கே என் பணி வழிமொழிவது மட்டுமே !

 

இந்நூல் நான்கு முக்கிய கேள்விகளுக்கு விடைகூற முனைந்துள்ளதாகவே நான் கருதுகிறேன் .

 

1] உழைப்பு – கூலி –லாபம் – வேலைநாள் இவற்றுக்கு இடையே உள்ள அரசியல் பொருளாதார உறவு என்ன ? உபரி மதிப்புக்கும் வேலைநாளுக்கும் இடையிலான உறவின் சித்தாந்தத் தொடர்பு என்ன ?

 

2] தொழிற்புரட்சியின் காலகட்டத்தில் நேரம் காலம் இல்லாமல் உழைக்கும் கரங்களும் குழந்தைத் தொழிலாளியும்  முதலாளிகளுக்கு  தேவைப்பட்டது ஏன் ? அதனை உருவாக்க செய்யப்பட்ட சட்டபூர்வ மற்றும் சட்டபூர்வமற்ற முயற்சிகளின் வரலாறும் வலியும் ரணமும் எத்தகையது ?

 

3] 18 மணி நேர உழைப்புச் சுரண்டலில் இருந்து எட்டு மணி நேர உழைப்புக்கு உழைக்கும் வர்க்கம் வந்து சேர கடந்து வந்த கரடு முரடான கண்ணீரின் வெப்பம் மிகுந்த பாதை எது ?

 

4] எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து உலகெங்கும் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சிந்திய ரத்தத்தின் சுவடுகள் எவை ? எவை ? போராடிப் பெற்ற சட்டங்கள் எவை ? எவை ? அதற்கு இன்று வந்துள்ள பேராபத்து யாது ?

 

இப்படி எழும் அடிப்படைக் கேள்விகள் சார்ந்து 13 பகுதிகளாக இந்நூல் அமைந்துள்ளது .

 

முதல் இரண்டு கேள்விகளுக்கு விடை சொல்லும் போது இருந்த ஆற்றின் வேகம் ,அப்புறம் சட்டென பாய்ச்சல் வேகத்தில் நகர்ந்து விடுகிறது . வரலாற்றை ஏற்கெனவே ஒரளவு உள்வாங்கியவர்களுக்கு நினைவூட்டலாக அவை போதும் .ஆயின் புதிய வாசகர்களுக்கு இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசியிருக்கலாம் . நூலின் பக்க அளவு ஒரு வேளை தடை ஆகியிருக்குமோ !

 

தோழர் வீரராகவன் ஆய்வு செய்து எழுதிய “ சென்னை பெருநகர தொழிறசங்க வரலாறு “[ அலைகள் வெளியீட்டகம்] ,தோழர் பி.ராமமூர்த்தி எழுதிய  “தொழிற்சங்க இயக்கம் எனது நினைவுகள்” [ பாரதி புத்தகாலயம்],சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம் மூன்று தொகுதிகள் [ நியூ செஞ்சுரி புக்ஸ் வெளியீடு ] இவற்றிலிருந்து சில செய்திகள் ,மேற்கோள்கள் சேர்க்கப்பட்டிருந்தால் இன்னும் வலுவாயிருக்குமோ ? ஒரு வேளை இது என் பேராசையோ !

 

 “ மக்கள் உற்பத்திக் கருவிகளையும் நிலத்தையும் இழந்த பிறகுதான் வேலை நேரம் என்பது சமூகப் பிரச்சனை ஆகிறது என்பதை பொதுவாக அறிவோம் . இதனை வரலாற்று ரீதியாக தகவல்களைச் சேகரித்து , எல்லையற்ற வேலை நேரம் என்ற கொடுமை எப்படி உழைக்கும் மக்களை நரகத்தில் தள்ளியது என்பதில் தொடங்கி வர்க்கப் போராட்டம் காரணமாக வேலை நேரத்திற்கு எல்லை எப்படி வந்தது என்பதை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது .” இப்படி தோழர் வே.மீனாட்சிசுந்தரம் முன்னுரையில் கூறியிருப்பதைவிட அதிகமாக நான் என்ன சொல்லிவிட முடியும் ?

 

 

இளம் தொழிற்சங்க ஊழியர்களுக்கு தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய வகுப்பிற்கான ஓர் தலைப்பின் பாடக்குறிப்புகளே இந்நூல் எனில் மிகையாமோ ?

 

வாசிப்பீர் !

வேலை நாள் : ஒரு வரலாற்றுப் பார்வை ,

ஆசிரியர் : அ.பாக்கியம் ,

வெளியீடு : தூவல் பதிப்பகம் ,

54 ,கரிகாலன் தெரு , ஜி எஸ் நகர் , ஆர் ஏ புரம் ,சென்னை – 600 028 . 

அலைபேசி : 94863 44333 , மின்னஞ்சல் : vedhaperumal@gmail.com

பக்கங்கள் : 160 , விலை : ரூ.200 /

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

10/10/2023.


கண்ணுக்கு எட்டாத உலகம்.

Posted by அகத்தீ Labels:

 

கண்ணுக்கு எட்டாத உலகம்.

 


 

புது புத்தகத்தின் வாசம்

எப்போதும் கிறங்க வைக்கிறது .

வாசித்து அடுக்கிய புத்தகங்கள்

பார்க்கும் நொடியில் புன்னகைக்கிறது .

வீட்டில் இடமில்லாமல்

பராமரிக்க முடியாமல்

இடம் பெயர்ந்து விட்ட ,

இரவலாகப் போய்விட்ட

அன்பளிப்பாய் கைமாறிவிட்ட ,

தோழமையோடு ‘சுட்டு’ச் சென்றுவிட்ட

புத்தகங்கள் நினைவிலாடுகிறது.

வாசிக்காமல் கண்ணெதிரே

அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள்

 “பழைய உன் வேகம் எங்கே ?”என

கேலி செய்கிறது என் முதுமையை.

ஒவ்வொரு புத்தகத்தையும்

வாசித்து முடிக்கும்போதும்

 ”கற்காதது உலகளவு” என உறைக்கிறது.

 “கை மண் அளவே” கற்ற எனக்கு

நேற்றைவிட இன்று என் வீட்டு

சாளரம் அகலமாய் திறந்திருக்கிறது

நேற்றைவிட இன்று வெளிச்சம்

வெகுதூரம் பரவுகிறது .

ஆனாலும் இன்னும் கண்ணுக்கு எட்டாத

உலகம் விரிந்து கொண்டே போகிறதே !

என்ன செய்ய ? என்ன செய்ய ?

 “படி ,படி ,படி ,படி மரணிக்கும் வரை !”

 

சுபொஅ.

7/10/2023.

 


வள்ளுவர் நிச்சயம் காதலித் திருப்பார்

Posted by அகத்தீ Labels:

 



 


வள்ளுவர் நிச்சயம் காதலித் திருப்பார்

 

   ‘வள்ளுவர் நிச்சயம்

காதலித் திருப்பார் ‘,

என்று

அவள் உள்மனம் சொன்னது .

 

இப்படி உறுதியாய் சொல்பவர் ஆர் .பாலகிருஷ்ணன் .

 

2017 ல் வெளியான “பன்மாயக் கள்வன்” புத்தகம் குறித்து 2023 ல் எழுதலாமா ? எப்போது படித்தாலும் எழுதலாம் என்பது பொதுவான சமாதானம். ஆனால் அதைவிட முக்கியமான காரணம் வேறொன்று உண்டு .

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் அறம் ,பொருள்,இன்பம் என முப்பாலிருந்தும் , மூன்றாம் பாலான இன்பத்துப்பால் அல்லது காமத்துப் பால் பற்றி தமிழ்ச் சமூகம் பேசியது மிகமிகக் குறைவே . இது என் நெடுநாள் கருத்து .

 

அறத்துப்பால் ,பொருட்பாலில் உள்ள குறள்கள் மேற்கோள் காட்டப்பட்ட அளவு ,புழங்கும் அளவு இன்பத்துப்பால் புழங்குகிறதா என்பது என் கேள்வி . இப்பாலில் 25 அதிகாரங்களும் 250 குறள்களும் இடம் பெற்றிருந்தாலும் விரல்விட்டு எண்ணத் தக்க குறள்களே பொது புத்திக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது .

 

கலைஞர் குறளோவியத்தில் சில காட்சிகளை வரைந்து காட்டி இருக்கிறார் . ஆயினும் போதுமான வெளிச்சம் படாத பகுதியாகவே நான் குறளின் மூன்றாம் பாலை எண்ணிப் பார்ப்பதுண்டு .இத்தகையச் சூழலில்  இன்பத்துப் பாலில் இருந்து 56 குறள்களைத் தேர்வு செய்து , 57 காட்சிச் சித்திரங்களாய் ,எழுத்தோவியங்களாய் இன்றைய நவீன உலகச் சொல்லாடல்களோடு ஆர் .பாலகிருஷ்ணன் தந்திருக்கிற “பன்மாயக் கள்வன்” என்னைக் கவர்ந்துவிட்டான். ஆகவே காலங்கடந்தும் எழுதுவதில் பிழை ஏதும் இல்லயே !

 

சங்க இலக்கியத்தில் காதலுக்கு உயர்ந்த இடம் உண்டு . இயற்கையையும் காதலையும் அறத்தையும் கொண்டாடியவன் தமிழன் என்பதற்கு சங்க இலக்கியங்களே சாட்சி . திருக்குறளின் மூன்றாம் பால் ஓர் மானுட உளவியல் படைப்பு எனில் மிகை அல்ல. பாலகிருஷ்ணன் அதனை நூல் நெடுக மெய்பிக்கிறார் .

 

 “ ‘ என்’

‘தொன்மையைப் போலவே

மென்மையானது

என் ‘ தொடர்ச்சி’

 

நான்

‘காவடிச்சிந்து அல்ல

காதல் சிந்து.”

 

 ‘ பிரிவு ஆற்றாமை’ யில் இடம் பெற்றுள்ள குறளை முன்வைத்து தீட்டிய முதல் சித்திரத்தில் தெறிக்கிற முத்திரை 57 கவிதைகளிலும் தொடர்வது வியப்பு . கவிஞனும் காதலும் பிரிக்க முடியாததா ? பிரிக்கக் கூடாததா ?

 

 “ சேலை கட்டிய கூகுள்” என்கிற கவிதை “ அலர் அறிவுறுத்தல்” அதிகாரத்திலுள்ள குறள் சார்ந்தது . தலைப்பே நவீனமாக இருக்கிறது . அலர் என்றால் என்ன ?

 

“ ‘தினத்தந்தி’ என்று

தனக்கொரு

பெயர் இருப்பது

அவளுக்கேத் தெரியும் .

மாலையில் குளக்கரைக்குப்

போகும்போது

அவள்

‘ மாலைமுரசு’ என்று

அழைக்கப்படுகிறாள்.

 

‘புறம்’ பேசுவது

என்னவோ

அநேகமாக

‘அகப்பொருள்’தான்..

 

இந்த நெடுங்கவிதையில் முடிவில் சொல்கிறார்,

 

“தனது வதந்தியால்

நிகழும்

நல்ல கெட்

பக்க விளைவுகள்

எதைப் பற்றியும் அறியாமல்

குருவம்மா

அலப்பறையாக

அலர் தூற்றி வருகிறாள்.

 

தினம் ஒரு

புது அலர்.

 

வளர்.”

 

கம்ப்யூட்டர் ,ஊடகம் ,சினிமா எல்லாவற்றையும் வள்ளுவனின் அலரோடு பிசைந்ததில் நூலாசிரியர் தனித்து நிற்கிறார் .

 

பருவக் கோளாறு பற்றி பேச வந்தவர் ‘ புருவக் கோளாறு’ பற்றி பேசுகிறார் .தகையணங்குறுத்தலில் வள்ளுவன் சொன்னதுதான் .

 

“விழியில் அம்பையும்

புருவத்தில் வில்லையும்

கண்டுபிடித்தவன்

கவிஞனோ இல்லையோ

நிச்சயம் ரொம்பவும்

காயம் பட்டவன்.”

 

  “ எடுத்ததும் கொடுத்ததும்” என்ற தலைப்பில் ” பசப்புறு பரவலை” பேசவந்தவர் சொல்கிறார்,

 

“ சிறகைக் கொடுத்து

சிலுவையை ஏற்பதா ?

காதல் கணக்கு ?

வாய்ப்பாடு அல்ல

உளவியல் .”

 

காதலில் மயங்கி வர்ணிப்பது போல் வரியாய் இந்நூலை விவரிக்கத் தேவையில்லை . இன்னும் ஒன்றிரண்டோடு முடித்துக் கொள்கிறேன்.

 

 “உறக்க தினம்” என்ற கவிதையில் “படர் மெலிந்திரங்கல்” சார்ந்து பேசுகிறார் ,

 

  “கட்டிலின் மறுமுனையில்

ஒரு காட்டெருமையைப்

போலத் தூங்கிக்

கொண்டிருந்தான்

அவள் காதல் கணவன்”

 

இக்கவிதையின் இன்னோர் இடத்தில் சொல்கிறார் ,

 

“எனது மனதை மட்டும்

உன்னால்

படிக்க முடியுமென்றால்

பனிக்குடம் ஆகும்

உன் கண்கள்.”

 

 “ஊடலுவகை” பற்றி பேசவந்தவர்  “சொர்க்கத்தின் பின்கோடு” என தலைப்பிட்டு சொல்கிறார்,

 

“இந்த

 ‘புலவி நுணுக்கம்’

தெரியாத

 ‘இடம்’

எதுவானாலும்

அது

தேடல் மருணித்த

வெற்றிடம் .”

 

ஒவ்வொரு கவிதையும் நீள் கவிதைதான் .நான் சில வரிகளையே சுவைக்கத் தந்தேன் . முழுவதும் சுவைக்க நூலைவாசிப்பீர் !

 

ஆர் .பாலகிருஷ்ணனின் எழுத்தோவியங்களுக்கு அழகு சேர்க்கிறது மருதுவின் கோட்டோவியங்கள் எனில் மிகை அல்ல. 25 அத்தியாயங்களையும் இந்நூல் தொட்டுச் சென்றாலும் “ படர் மெலிந்திரங்கல்” ,”குறிப்பு அறிவுறுத்தல்” எனும் இரு அத்தியாயங்களில் அதிகம் எடுத்தாண்டிருக்கிறார்.சங்க இலக்கிய நதியில் நீந்தி முக்குளித்த நூலாசிரியரின் கவிதை மணமும் காதல் மனமும் கைகோர்த்து நடம் புரிகிறது .

 

“ நீங்கள் எழுபது வயதைக் கடந்துவிட்டீர்கள் . இப்போது உங்களுக்கு இதெல்லாம் மிக முக்கியமா ?” என என்னை நானே கேட்டுக் கொண்டேன். சங்க இலக்கியம்  முதுமைக் காதலைக்கூட பேசுமே ! முதுமையிலும் காதல் வரும் மரணம் வரைகூடவரும் என கண்ணதாசன் சொல்லியிருக்கிறாரே ! எனக்கும் இந்த காதல் நூல் பிடித்துவிட்டது .படித்தால் உங்களுக்கும் பிடிக்கும்.

 

முன்னுரையில் பிரபஞ்சன் சொல்கிறார் ,” காதல் என்ற சொல்தான் ,பால்கள் எனப்படும் பெண்கள் ,திருநர்கள் ,ஆண்பால் என்ற ஆடைக்குள் அடங்காச் சொல்லாகும் .அதற்கு வர்ணம் இல்லை .சாதிமதம் இல்லை ,இடம் காலம் இல்லை .அது வானம் .வள்ளுவரால் அளக்க முடிந்தது . அவர் சூரியனாக மாறினார் ,ஆகவே முடிந்தது .”

 

மேலும் பிரபஞ்சன் தொடர்கிறார் ,” பொதுவாகக் குறள் ,குறளுக்கு அர்த்தம் என்பதுதான் நம் மரபு .[ மேலே யாரும் சிந்தித்துவிடக் கூடாது அல்லவா ?] ஆர் .பாலகிருஷணன் ,இந்த நுண்ணிய விஷயத்தின் பல பரிமாணங்களைக் கவிதையாக மாற்றுகிறார் .

 

வள்ளுவன் காதலின் உளவியலை நுட்பமாகப் பார்த்தவன் .இதை நன்கு உணர்ந்து இந்நூலை படைத்திருக்கிறார் ஆர் .பாலகிருஷ்ணன் .

 

இந்த நூலுக்கு “பன்மாயக் கள்வன்” என்ற தலைப்பு ஏன் ? நூலாசிரியரே விளக்கம் தருகிறார் ;

 

 “ ‘பன்மாயக் களவன்’ என்ற இந்த நூலின் தலைப்பே திருவள்ளுவர் தந்ததுதான் [குறள் 1258] .இன்பத்துப் பாலில் ததும்பும் உணர்வின் ஆழம் , உண்மையில் ஓர் யதார்த்த உளவியல் .என் மட்டில் ‘பன்மாயக் கள்வன்’ வேறுயாருமில்லை ,வள்ளுவன்தான்.அறம் பேசும் ஆசானாய் ,பொருள் பேசும் அறிஞனாய் ,இன்பம் பேசும் காதலனாய் இந்த வள்ளுவனுக்குள் எத்தனை பன்முகங்கள் ! ஆமாம் . பன்மாயக் கள்வன்’ என்பதில் ’மரியாதைப் பன்மை’இல்லைதான்.ஒருமைதான்.அதனால் என்ன ?அதுதான் அருமை. வள்ளுவனிடம் நமக்கு இல்லாத உரிமையா ?”

 

பன்மாயக் கள்வன் , ஆசிரியர் : ஆர்.பாலகிருஷ்ணன்,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு :24332924 /9444960935 

email : thamizhbooks@gmail.com    / www.thamizhbooks.com

பக்கங்கள் : 304  , விலை : ரூ.270 /

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

agathee2007@gmail.com

 

 

 


காந்தியும் பிள்ளையாரும்

Posted by அகத்தீ Labels:

 





காந்தியும் 


பிள்ளையாரும்

 





பிள்ளையார் : காந்திஜி ! என் சுற்று முடிந்தது


.இன்று உன் சுற்று ஆரம்பம்..காவிகளிடம் ஜாக்கிரத….

 

காந்தி : பிள்ளையாரப்பா ! நீ என்ன சொல்ல வருகிறாய் ?

 

பிள்ளையார் : காந்திஜி ! முதலில் என்னைக் கும்பிடுவானுக ! என் தலையில கலகக் கொடி ஏற்றுவானுக …  அப்புறம் ஆற்றில குளத்தில கடல்ல போட்டு சாகடிப்பாங்க… இப்போ உன்னைக் கும்பிடுறானுக …

 

காந்திஜி : பிள்ளையாரப்பா நீ அதிர்ஷ்டசாலி ! உன்னைக் கும்பிட்டுட்டு கொல்றாங்க … என்னை முதல்ல கொண்ணுட்டானுக அப்புறம்தான் கும்பிடுறாங்க ..

 

பிள்ளையார் : காந்திஜி ! ஆமாம் ஆமாம் அத மறந்திட்டேன் …இவனுக நம்மைத் தூக்கிச் சுமக்கிறதே நம்மப் போட்டு மிதிக்கத்தான்…

 

காந்திஜி : பிள்ளையாரப்பா  ! இவனுக பதவிப் பசிக்கும் … இரத்தப்பசிக்கும் … வெறுப்பு அரசியலுக்கும் … நாமதானா பலி ஆடு ?

 

பிள்ளையார் : காந்திஜி ! நானு பாலு குடிக்கிறதா ஊரெல்லாம் டிராமா போட்டானுக … நான் ஒரு சொட்டு குடிச்சிருந்தா அப்பவே என் கோயில் புகுந்து வெட்டியிருப்பானுக  என் ஜோலி முடிஞ்சிருக்கும்… நான் கல்லு களிமண்ணுன்னு அவனுகளுக்கு நல்லாத் தெரியும் அதனாலதான் என்ன வச்சி கலவரம் செய்ய சதி செய்யுறாங்க…

 

காந்தி : அவனுக தெய்வ பக்தியும் வேஷம் , அவனுக தேசபக்தியும் வேஷம் , சாதி வெறியனுக மற்றும் கார்ப்பரேட் அடியாளுங்க.. மனசு முழுக்க குரோதம் ,வன்மம் இவனுக நெஞ்சில அன்பு , கருணை ,மனிதம் மருந்துக்கும் கிடையாது . நான் சொன்ன ராமராஜ்யம் ‘அன்பு ராஜ்யம்’ . அங்கு ராமனும் ரஹிமும் ராபர்ட்டும் தோள்ல கைபோட்டு நடப்பாங்க .. இவங்க சொல்ற ராமராஜ்யம் எல்லோரும் வெட்டிட்டு சாகிற  ‘குரோத ராஜ்யம்’…

 

பிள்ளையார் : காந்திஜி ! மெதுவா பேசு ! இது  ‘புல்டோசர் ராஜ்யம்’ .. உம்மை பீடத்தோடு பிடுங்கி எறிய புல்டோசரை அனுப்பிடுவானுக…

 

பிள்ளையார் எலி வளையைத் தேடினார் பதுங்க … !!!

 

நவகாளியைப் போல்  கைத்தடியோடு 

“ஒண் மேன் ஆர்மி” ஆனார் காந்தி …… !!!

 

சுபொஅ.

2/10/2023.