குடும்பம் என்கிற அமைப்பு இனியும் தேவையா ?

Posted by அகத்தீ Labels: ,

 




தொடக்கநிலைக் கேள்வி- பதில் - [ 10 ]

 

குடும்பம் என்கிற அமைப்பு இனியும் தேவையா ?

 

 

கேள்வி :

குடும்பம் என்கிற அமைப்பு இனியும் தொடருமா ? தொடர வேண்டுமா ? கம்யூனிஸ்டுகள் ‘குடும்ப உறவை வெறும் பண உறவு’ என்று சொன்னார்களா ? என்ன சொன்னார்கள் ? ஏன் சொன்னார்கள் ? ’குடும்ப ஜனநாயகம்’ எனச் சொல்லி வீட்டுக்குள் அரசியலைக் கொண்டு வரலாமா ?

 

பதில் :

கேள்வியில் குழப்பம் இருந்தாலும் பொது சமூக உளவியலில் மேலோங்கும் ஐயமே ! இங்கே ஒரே மூச்சில் முழுமையாக விளக்கம் சொல்லிவிட இயலாது . முடிந்தவரை முயல்கிறேன்.

 

இன்றையக் குடும்ப அமைப்புதான் ஆதியில் இருந்ததா ? இல்லை . குடும்ப அமைப்பும்   பரிணாம வளர்ச்சியில் உருவானதே . ஐவருக்கு ஒருத்தி என்பது மகாபாரதம் , ஒருவனுக்கு ஒருத்தி என்பது இராமாயணம் , உரைசால் பத்தினி ,ஆசை நாயகி  இரண்டுக்கும்  சிலப்பதிகாரம் , சிங்கிள் உமன் மணிமேகலை , நீலகேசி ,மொரட்டு பேச்லர் அனுமார் , விநாயகர்  , இருதாரமும் பலதாரமும் காமக் களியாட்டமும் சாமிகதைகளில் நிறைய உண்டு . புராணங்களைத் தோண்டினால் காணக்கிடைக்கும் பல அமசங்கள் ஆதிசமூகத்தின் எச்சங்களைச் சுட்டுவனவே. தொல்காப்பியம் ,மநுதர்மம் எல்லாவற்றிலும் பல வகை மண உறவுகள் விளக்கப்பட்டிருக்கும் . சங்க இலக்கியங்கள் வாழ்வின் பல கூறுகளைச் சுட்டும் .மொத்தத்தில் இன்றைய ‘ஒரு தார திருமணம் சார்ந்த குடும்பம்’ என்பது பரிணாம வளர்ச்சியின் விளைபொருள் . எங்கெல்ஸ் எழுதிய ‘ குடும்பம் -தனிச்சொத்து -அரசு ஆகியவற்றின் தோற்றம் ’ நூலினை வாசிக்க தெளிவு பிறக்கும் .

 

மனித சமூகத்தின் அடிப்படை அலகாகத் [ Basic Unit  ] திகழ்வது குடும்பமே . இந்த குடும்பம் ஒரு  நிறுவனமாகிவிட்டது [ institutionalization ].இதனால் இதில் நன்மைகளும் உண்டு . தீமைகளும் உண்டு . வேண்டும் ,வேண்டாம் என முடிவெடுப்பதற்கு முன் இரதரப்பு வாதத்தையும் கேட்பது அவசியம் .

 

 குடும்ப அமைப்பு தொடர வேண்டும் என்பவர்களின் முன் வைக்கும் வாதங்கள்எவை ? பாதுகாப்பும், உணர்வுப்பூர்வ அரவணைப்பும் தருவது குடும்பம் என்பர் . மனிதன் தனியா இல்லாமல் கூடி வாழவே குடும்பம் ;  குழந்தை பருவம் , இளமை , நோய், முதுமை, வேலை இழப்பு போன்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் குடும்பம் தான் முதல் பாதுகாப்பு வலை. தனிமை, மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற  பிரச்சனைகளுக்கு்க் குடும்பம்  இயற்கையான வடிகால் , ஊன்றுகோல் ; சிலருக்கு அதுவே பிரச்சனையாக இருக்கும் என்பது வேறு .

 

குழந்தை வளர்ப்பும், பண்பாட்டுத் தொடர்ச்சியும் குடும்பத்தின் முக்கிய கூறு எனலாம். “குடும்பம் தான் ஒரு சமூகத்தின் நினைவு வங்கி [ Memory bank ] ”.ஒரு குழந்தைக்கு மொழி, ஒழுக்கம், பண்பாடு, வரலாறு, மதிப்புகள் எல்லாமே முதலில் குடும்பத்தில் இருந்து தான் கிடைக்கிறது. பள்ளியோ அரசாங்கமோ இதை முழுமையாகச் செய்ய முடியாது.குடும்ப உறவுகள் ஒவ்வொன்றும் ஒருவித நெருக்கத்தையும் பாதுகாப்பையும் தரும் .

 

பொருளாதார நிலைத்தன்மைக்கு குடும்பம் அவசியம் .வீடு, சொத்து, உழைப்பு, கடன், தொழில் என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதால் தனி நபருக்கு ஏற்படும் பொருளாதார சுமை குறைகிறது.  ‘கூட்டுக் குடும்பத்தில்’ ஒருவர் விழுந்தாலும் மற்றவர் தாங்குவார்.இதில் அனுபவம் மாறுபடலாம் .இன்று இந்தக் கூட்டுக் குடும்பங்கள் கிட்டத்தட்ட சிதைந்துவிட்டன .

 

சமூக ஒழுங்கை நிலைநாட்டுவதில் குடும்பத்தின் பங்கு அதிகம் . குடும்பம் என்ற சிறிய அலகு இருந்தால் தான் சமூகத்தில் ஒழுங்கும், பொறுப்புணர்வும் இருக்கும் . தவறுகளுக்கு கடிவாளம் போடும். திருமணம், உறவுகள் மூலம் மனித உறவுகளுக்கு ஒரு தெளிவான கட்டமைப்பும், கடமையும் உருவாகிறது . “தந்தை ,தாய் ,கணவன் ,மனைவி ,மகன் ,மகள் , சகோதரன் ,சகோதரி ,மாமன் ,அத்தை ,தாத்தா ,பாட்டி இப்படி வரும் உறவுகள் வெறும் சொல் அல்ல ; திட்டவட்டமான கடமையைத் தாங்கி நிற்கின்றன.” என்பதை எங்கெல்ஸ் தன் நூலில் மிகச் சரியாகப் பதிவு செய்துள்ளார்.

 

 

இப்படி பலவற்றைச்சுட்டி குடும்ப அமைப்பைத் தொடர விரும்புவோர் வாதிடுகின்றனர் .குடும்ப அமைப்பு காலில் பூட்டப்பட்ட விலங்காக மாறிவிட்டது என்போர் முன் வைக்கும் வாதங்கள் எவை  எவை தெரியுமா ?

 

தனி மனித சுதந்திரத்தைப் பறிப்பதில் முன்னிற்பது குடும்பம் .பாரம்பரிய குடும்ப அமைப்பு தனி நபரின் விருப்பங்களைத் தேர்வுகளை  மதிப்பதில்லை .கட்டுப்படுத்துகிறது . யாரை திருமணம் செய்வது, என்ன வேலை செய்வது, எப்படி வாழ்வது, எதை நம்புவது - எல்லாவற்றுக்கும் ஒரு வட்டம் போட்டு நிற்கச் சொல்கிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர்களின் கனவுகள்  ‘குடும்ப கௌரவம்’ என்ற பெயரில் நசுக்கப்படுகின்றன.

 

சமத்துவமின்மையும் அதிகாரப் படிநிலையும் குடும்ப அமைப்பில் மிகப்பெரும் விலங்கு . குடும்பங்களில் ஆணாதிக்கம், மூத்தவர்களின் ஆதிக்கம், சாதி, வரதட்சணை, சொத்துரிமை சிக்கல்கள் போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. சடங்கு சம்பிரதாயம் என்கிற போர்வையில் பெண்களை வசக்கி மாட்டைத் தொழுவத்தில் கட்டுவதுபோல் கட்டுகிறது . குடும்பம் என்பது அன்பின் கூடு எனச் சொல்லப்பட்டாலும்  ; பலருக்கு , குறிப்பாகப் பெண்களுக்கு அது ஒடுக்குமுறையின் கூடாராமாகவே இருக்கிறது.இன்னும் கூர்மையாகச் சொல்வதாயின் ஆணாதிக்கத்தையும் பாலின பாகுபாட்டையும் சாதி மத உணர்வையும் அறிவுக்குப் பொருந்த சடங்கு சம்பிரதாயங்களையும் திணித்து பாதுகாப்பது குடும்ப அமைப்பே . “பகிரங்கமாகவோ மறைவாகவோ உள்ள பெண்ணின் வீட்டு அடிமைத்தனத்தின் அடிப்படையில்தான் நவீன காலத் தனிப்பட்ட குடும்பம் இருக்கிறது.” என எங்கெல்ஸ் கூற்றை அனுபவம் மெய்யென்று நிரூபிக்கிறது . எல்லா பாலினத்தவருக்கும் இந்த சிந்தனையோட்டம் உண்டு .

 

ஆக ,ஒரு தரப்பு சொல்றது -  “குடும்பம் தான் மனிதனை மனிதனாக வைத்திருக்கும் வேர்.அதில் வெந்நீர் ஊற்றக்கூடாது .” இன்னொரு தரப்பு சொல்றது - ”அதே வேர் தான் பலரை வளர விடாமல் கட்டிப் போடும் சங்கிலியாக மாறிவிட்டது . சமத்துவத்துக்கும் தனிமனித உரிமைக்கு எதிராகிவிட்டது.” காலம் வேகமான மாறுதல்களை நம்மீது திணித்துக் கொண்டிருக்கிறது .

 

புதிய வகை உறவுகள் மற்றும் அடையாளங்கள் முன்னுக்கு வரும் சூழலில் குடும்ப அமைப்பு தடையரணாகிறது . மாற்று பாலின விழைவு , LGBTQ+, திருமணம் வேண்டாம் என நினைப்பவர்கள், தனியாக வாழ விரும்புபவர்கள், குழந்தை வேண்டாம் என முடிவெடுப்பவர்கள் போன்றவர்களை பாரம்பரிய குடும்ப அமைப்பு பிழையாகப் பார்க்கிறது ,விலக்குகிறது அல்லது குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறது. ஆகவே குடும்பம் என்ற அமைப்பையே கால் விலங்காகக் கருதும் சூழல் ஓங்கி வருகிறது .நண்பர்கள் வட்டம் (chosen family), மணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வது [ live-in] , co-living  எனப்படும் உறவுகளாகாமல் சிலர் குடும்பமாக வீட்டை பங்கிட்டு வாழும் முறை என பலதும் முன்மொழியப்படுகின்றன .காலம்தான் இதற்கான தீர்வை தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது . தற்போது  ஆசியக்  ‘கூட்டுக் குடும்பம்’ Joint Family  என்பது கிட்டத்தட்ட சிதைந்து விட்டது .  Nuclear family என்கிற தனிக்குடும்ப அமைப்பை புதிய பொருளாதாரசூழலும் உலகமயச் சூழலும் திணித்துவிட்டன . இனி அடுத்து என்ன ஆகும் என்பதைக் கணிப்பது மிகச் சிரமமே ! 

[ இதனை தோரயமாகச் சுட்டும் ஒரு வரைபடம் இணைப்பில்  AI உதவியுடன் ]

 

பொருளாதார, சட்ட ரீதியான மாற்று வழிகள் பல முளைவிட்டுவிட்டன . பொதுச் சமையல்கூடம் ,பொதுச் சலவைக்கூடம் ,அரசு, காப்பீடு, முதியோர் இல்லம், குழந்தைக் காப்பகம் , பெண்கள் விடுதி ,பேயிங் கெஸ் , போன்ற மாற்று ஏற்பாடுகள்   வந்துவிட்டன ; குழந்தை வளர்ப்புக்கும், முதுமை பாதுகாப்புக்கும் குடும்பம் மட்டுமே ஒரே வழி என்பதும் மாறிக்கொண்டிருக்கிறது . அரசும் பொறுப்பேற்கும் என்கிற சூழல் வந்துவிட்டால்  ; இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி சலிப்பூட்டும் வீட்டு வேலைகளை எளிதாக்கி எல்லோருக்கும் உரித்தாக்கிவிட்டால் ; நடைமுறையில் அடிமை விலங்கு நொறுங்கிவிடும் . அப்போதும் பண்பாட்டு ரீதியாக இரத்த மரபணுவில் உறைந்து போயுள்ள ஆணாதிக்கத்தை எதிர்த்த சமத்துவத்துக்கானக்  கருத்துப் போர் தொடரத்தான் வேண்டும்.

 

கேள்விக்கு  விடை காண , மார்க்ஸியம் குடும்பம் பற்றி சொன்னதைச் சரியாக உள்வாங்க வேண்டும் . “ முதலாளித்துவ வர்க்கம் ,குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சி பூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்ட்து .குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது….. இந்த முதலாளித்துவம் வீழ்த்தப்படும் போது ; அதன் கூறான  பண உறவை மையமாகக் கொண்ட குடும்பமும் வீழ்ந்துவிடும் .” கம்யூனிஸ்ட் அறிக்கை சொல்வது ‘ முதலாளித்துவ குடும்ப அமைப்பைத்தான் . ஏனெனில் பொருளாதாரத்தில் ஆணையே பெரிதும் சார்ந்து நிற்கச் செய்யும் அமைப்பு அது . சொத்துரிமையும் பொருளாதாரமும் அதிகாரத்தை ஆதிக்கத்தை ,ஏற்றதாழ்வை ,இணக்கமற்ற சூழலை உருவாக்குகிறது . அது வீழ்த்தப்பட்டு அந்த இடத்தில் பரஸ்பர அன்பையும் ஒத்துழைப்பையும் நல்கும் புதிய குடும்பம் மலரும் . இதுதான் மார்க்சியக்  கனவு .

 

முதலாளித்துவம் நொறுங்கும் வரை இன்றைய ஆணாதிக்கக் குடும்ப உறவு தொடரலாமா ? கூடாது . “குடும்ப ஜனநாயகம்” எனும் வழியை நாம் பற்றி நிற்க வேண்டும் . இதன் பொருள் வெறும் தேர்தல் கணக்கு போல் பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படுவது என்றால் குடும்பத்தில் ஆணாதிக்கமே தொடரும் . அப்படி அல்ல பெரும்பான்மை ,சிறுபான்மை என்று இல்லாமல் ஒவ்வொருவர் கருத்தையும் மதித்து அதற்கு உரிய இடம் இடம் கொடுக்கிற ; உரையாடி முடிவெடுக்கிற ; அடுத்தவர் உணர்ச்சிக்கு உரிய இடம் அளிக்கிற வழியே குடும்ப ஜனநாயகம் . இது பேசுவது எளிது .நடைமுறை மிகவும் கஷ்டமானதுதான் . ஆனால் இதனைப் பின்பற்றாவிடில் குடும்ப அமைப்பே சிதறிவிடும் .

 

 ‘குடும்ப அமைப்பை உடைக்க வேண்டும்’ என குரல் கொடுக்கும் பெண்ணியியலாளர்கள் முதலாளித்துவ அமைப்பை உடைத்தெறியக் குரல் கொடுப்பதில்லை . கட்டற்ற சுதந்திரம் கோரும் இவர்கள் மேல்தட்டு மனோநிலையில் இருப்பவர்கள் . தோழர் லெனின் கேட்கிறார் , “ முதலாளித்துவ பெண்ணியியலாளர்கள் சுதந்திர பாலியியல் தேடல் என்பது எதை .? ஆதி சமூகத்தில் இருந்த கட்டற்ற பாலுறவையா ?” அதை லெனின் கடுமையாக எதிர்த்தார் . பாட்டாளி வர்க்கம் நடை முறையில் சேர்ந்து வாழவும்  ; இயலாத போது பிரிந்து வாழவும் எளிதில் பழகும் . ‘அறுத்துக் கட்டுவது இங்கு இயல்பாக நடக்கும்’. ஆகவே அவர்கள் குடும்பத்தை உடைக்கச் சொல்வதில்லை .குடும்பத்தை மேம்படுத்தி ஜனநாயகப்படுத்தி சமத்துவம் பேணும் அலகாக மாற்றவே முயல்கிறார்கள் என்பார் லெனின் .

 

எது எப்படி இருப்பினும் ,குடும்பத்தின் எதிர்காலம் குறித்து  எங்கெல்ஸ் தன் புகழ் பெற்ற நூலில் மார்க்கனையே முன் மொழிகிறார் . அதையே லெனினும் எடுத்துக் காட்டினார் . நமக்கும் அதைவிட மேம்பட்ட பதில் இன்னும் கிடைக்கவில்லை .

 

“குடும்பம் என்பது தொடர்ச்சியாக  நான்கு வடிவங்களைக் கடந்து வந்திருக்கிறது .இப்போது ஐந்தாவது வடிவத்தில் இருக்கிறது என்ற உண்மையை ஒப்புக்கொண்டால் இந்த வடிவம் நிரந்தரமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது . அதற்குத் தரக்கூடிய பதில் இதுதான் :  சென்ற காலத்தில் நடந்ததைப் போல சமூக முன்னேற , குடும்பமும் முன்னேறும் ; குடும்பமும் மாறும் . அது சமுதாய அமைப்பின் படைப்பு .அதன் பண்பாட்டை அது பிரதி பலிக்கும் .நாகரீகம் தொடங்கிய காலத்தில் இருந்து ஒரு தார மணக் குடும்பம் மிகவும் முன்னேற்ற மடைந்திருக்கிறது .நவீன காலத்தில் கணிசமாக மேம்பட்டிருக்கிறது . எனவே ஆண்- பெண் சமத்துவம் முழுமையாக சாதிக்கப்படும் வரை அது மேலும் மேம்பட முடியும் என்று குறைந்தபட்சமாகக் கருதிக் கொள்ளலாம்.நெடுந்தூர எதிர் காலத்தில் ஒரு தார மணக் குடும்பத்தினால் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமற் போனால் ,அதற்குப் பின்னால் வரப் போகின்றவற்றின் இயல்பை ஆருடம் கூற இயலாது.”

 

குடும்பம் ,காதல் பற்றி ஒரு கேள்வி பதிலில் நிறைவு செய்ய இயலாது . இன்னும் நிறைய உரையாட வேண்டும் . வாய்ப்புக்கு காத்திருப்போம் . இதனை ஒரு காதல் கவிதையோடு நிறைவு செய்வோம் . தமிழீழக் கவிஞர் நளாயினி தாமரைச் செல்வி எழுதியது . [ இக்கவிதையில் உள்ள குருட்டு ,செவிட்டு ,ஊமை என்ற சொற்களோடு நானும் உடன்படவில்லை .அவர் எழுதிய காலம் சூழல் சார்ந்தது . எனினும் கவிஞரைத் திருத்த எனக்கு உரிமை இல்லை .பொறுத்தருள்க .]

 

“ காதல் என்றால்

என்னவென்று தெரியுமா

உனக்கு ?

 

எனக்கே எனக்கான வாழ்வையும்

உனக்கே உனக்கான வாழ்வையும்

நீயும் ,நானும்

மனம் கோர்த்து

வாழ்ந்து பார்ப்பதுதான்.

 

அதற்காக

என் வாழ்வை

என் விருப்பு வெறுப்பை

எல்லாம் துறந்து

உனக்காய் மட்டும்

உன் விருப்பு வெறுப்போடு

உனக்காய் வாழ

எனக்கு இஷ்டமில்லை.

 

நீ நினைக்கும்

குருட்டு

செவிட்டு

ஊமைக் காதலியாய்

நான் இருப்பேன் என

நினையாதே !”

 

- சு.பொ.அகத்தியலிங்கம் .

31 /10 /26.

குறிப்பு : ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘கேள்வி -பதில்’ வெளிவரும் . நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். முந்தைய கேள்வி பதில்களை வாசிக்க  akatheee.blogspot.com    

 

 

 

 

 


 

 

 

0 comments :

Post a Comment