முற்போக்கு பேசும் பலர் சொந்த வாழ்வில் முற்போக்காளர்களாக இருக்கிறார்களா ?
Posted by Labels: தமிழ் திரட்டி , தொடக்கப்பள்ளி
தொடக்கநிலைக் கேள்வி- பதில் - [ 8 ]
முற்போக்கு பேசும் பலர் சொந்த வாழ்வில் முற்போக்காளர்களாக இருக்கிறார்களா ?
கேள்வி :
முற்போக்கு பேசும் பலர் சொந்த வாழ்வில் முற்போக்காளர்களாக இருக்கிறார்களா ? தங்கள் வாழ்வில் கடைப் பிடிக்க முடியாத ஒன்றை அடுத்தவர்களுக்கு உபதேசிப்பது எப்படி முற்போக்காகும் ? பச்சையாகக் கேட்பதெனில் பாலின சமத்துவம் பேசிக்கொண்டே அதற்கு நேர் எதிரான செயலில் ஈடுபடுவோரை முற்போக்காளர் எனச் சொல்லலாமா ?
பதில் :
இக்கேள்வியை அனுப்பியவர் தற்கால செய்தி ஒன்றை எடுத்துக்காட்டியே கேட்டிருந்தார் . ஒரு குறிப்பிட்ட செய்தியை அலசுவது வேறு ; பொதுவாய்ப் பதில் சொல்வது வேறு . நான் பின்னதிலேயே ஊன்றி நிற்கிறேன்.
புதுமைக் கவிஞர் பாரதியாரிடம் ஒரு முறை அவர் போதைப் பழக்கம் குறித்துக் கேட்டார்களாம் , அதற்கு அவர் , “ துடைப்பம் பெருக்குகிறதா என்பதுதான் கேள்வி ; அதில் என்ன ஒட்டி இருக்கிறது என்பதல்ல ...” இப்படி அவர் சொன்னதாகச் சொல்லப்படுவது உண்மையா ? தெரியாது . செவி வழிச் செய்தி . ஆயினும் இப்பதிலை ரசிக்கலாம் . ஏற்க முடியாது .
“நதி மூலம் ரிஷி மூலம்” பார்க்கக்கூடாது என ரிஷிகளின் இருண்ட பக்கத்தைக் கண்டும் காணாமல் விடச் சொல்வது நம் நாட்டில் வழக்கமாக இருந்துள்ளது . பாரதி சொன்னதாகப் பேசப்படுவதிலும் இதே அணுகுமுறைதான் வெளிப்பட்டுள்ளது . முற்போக்காளர்கள் விஷயத்திலும் இதே அணுகுமுறை ஏற்க முடியுமா ? முடியாது . யாராக இருப்பினும் ஏற்க முடியாது .
அதே நேரத்தில் முற்போக்காளர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல . இந்த பூமியில் பிறந்தவர்கள் . அவர்கள் வாழும் சமூகத்தின் நல்லதும் கெட்டதும் அவர்கள் மீதும் படிந்தே இருக்கும் .இன்றையச் சமூகச் சூழலும் குடும்பச் சூழலும் வளர்ப்பு முறையும் முற்போக்காக இல்லை . ஜனநாயகமாக இல்லை . அதன் எண்ணற்ற நிறப் பிரிகைகள் எல்லோர் மீதும் படிந்தே இருக்கும் . முற்போக்கு பேசும் சிலர் சொந்த வாழ்வில் முற்போக்காளர்களா இல்லை என்பது நிஜம்தான் .
நாம் வாழும் சமூகத்தில் போலிகள் உலவுவது புதிதல்ல . நல்ல பயிர்களிடையே களைகளும் இருக்கும் .களைகளை உரிய நேரத்தில் அகற்றாவிடில் பயிர்களை அழித்துவிடும்.
முற்போக்காளனாக ,பகுத்தறிவாளனாக ,புரட்சிக்காரனாக அமைப்புக்கு உள்ளிருந்தே போராட வேண்டி இருக்கிறது .இதில் வெற்றி பெறுவது சவாலானதே ! ஆனால் செய்தாக வேண்டும்.
சாமியார்கள் , மத பீடத்தில் இருபோர் ,ஆன்மீகவாதிகளிடமும் இந்த பலவீனம் ஓங்கி இருக்கும் . அதே வேளை அவர்களின் கருத்தியலே பெண்ணடிமைத்தனம்தான் . பெண்ணை இழிவாகப் பார்ப்பதுதான்.ஆகவே அங்கு நடக்கும் அட்டூழியங்கள் தனிநபர் வழுக்கலாகச் சறுக்கலாக மட்டுமே பார்க்கப்படுவதும் ; பொது தாக்குதல் இல்லாமல் தப்பிப்பதும் நடந்துவிடும் .
அதே வேளை , அந்த ஒட்டு மொத்த அமைப்பே பெண்களுக்கு எதிரானது என்பதைத் தம் தொடர் விமர்சனம் மூலம் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கும் முற்போக்காளர்களிடையே ஏற்படும் சிறிய சறுக்கலும் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகிவிடுவது இயல்பு .
இன்னொரு புறம் ‘பாலின சமத்துவப் பார்வை’ நேற்றும் இன்றும் ஒருப்போல் இல்லை . ஒவ்வொரு நாட்டுக்கும் , பண்பாட்டுச் சூழலுக்கும் , காலச் சூழலுக்கும் ஏற்ப பாலின சமத்துவப் பார்வை மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது .இதனை உள் வாங்க வேண்டும் .
நான் பொதுவாழ்வில் நுழைந்த 1975 காலகட்டத்தில் எனக்கு இருந்த பெண்ணியப் புரிதலுக்கும் , இன்றைய புரிதலுக்கும் நிறைய வேறுபாடு உண்டு .ஜனநாயக மாதர் சங்கம் உருவான காலத்தில் இன்றைய குரலில் பேச வாய்க்கவில்லை . அன்றைக்கு திருநங்கைகளை மாதர் சங்க ஊர்வலத்தின் கடைசியில் வர அனுமதித்தற்கே தோழர் மைதிலி சிவராமன் அமைப்புக்குள் விமர்சனங்களை எதிர்கொண்டார் . இன்றைக்கு பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது . ஆக , எல்லா கருத்தியலையும் போல ‘பாலினப் பார்வையும்’ வளர்ந்துகொண்டே இருக்கிறது என்பதை முதலில் உள்வாங்க வேண்டும்.
மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் பி.டி.ரணதிவே அடிக்கடி சொல்லுவார் , “ மேடையில் மாபெரும் புரட்சிக்காரர்கள் … வீட்டிலோ மோசமான இந்துக் கணவர்கள் …” [ இங்கே கிறுத்துவக் கணவர்கள் ,இஸ்லாமியக் கணவர்கள் எனவும் போட்டுக்கொள்க ] மார்க்ஸ் , எங்கெல்ஸ் ,லெனின் எல்லோரும் இந்த இரட்டைத் தனமைக்கு எதிராக கடுமையாக எச்சரித்துள்ளனர் . ‘வாய்ச்சொல் வீரர்கள்’ என சாடியுள்ளனர் . மேடையில் பேசும் முற்போக்கு ஏன் வீட்டிற்கு வரவில்லை ?
மேடையில் பாலின சமத்துவம் பேசுவதற்கு ஒரு கருத்து போதும். ஆனால் வீட்டில் அதை பின்பற்றி வாழ்வதற்கு தினம் தினம் உன் அதிகாரத்தை, உன் சௌகரியத்தை, உன் குடும்பத்தின் பழக்கத்தை நீயே உடைக்க வேண்டும். ‘குடும்ப ஜனநாயகம் ‘ பயில வேண்டும் .பழக வேண்டும் . இங்கே இரத்தத்தில் ஊறிப்போன ஆணாதிக்கம் குறுக்கிடுகிறது . அதை உடைப்பது எளிதல்ல . ஒவ்வொருவரும் தமக்குள்ளும், வீட்டுக்குள்ளும் போராட வேண்டும் .அதிலும் வீடு மொத்தமும் உறவுகளும் அக்கம் பக்கமும் ஒரே பக்கமாக நிற்கும் போது தனியாளாய் வாளைச் சுழற்றுவது மிகச்சிரமமான செயலே !
ஆணாதிக்கம் என்பது ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமும் இருக்கிறது .ஆணாதிக்கத்தை எதிர்த்த போராட்டத்தைப் பெண்கள் தங்களுக்குள்ளும் நடத்தியாக வேண்டும் . சடங்கு , சம்பிரதாயம் , சென்டிமெண்ட் ,பழக்க வழக்கம் இவற்றினோடு தன்னை நிலை நிறுத்த முயலும் , பாலின பேதத்தை எதிர்த்த போராட்டம் ஒவ்வொரு வீட்டிலும் ஆணும் பெண்ணும் இணைந்தே நடத்திட வேண்டும்.
ஒரு ஆணும் பெண்ணும் பரஸ்பர ஒப்புதலுடன் விருப்பமுடன் எப்படி நடந்து கொள்வது என்பது அவரவர் உரிமை .அதனை யாரும் கேள்வி கேட்க முடியாது . இதனை தோழர் சுந்தரய்யா அவர் வாழ்க்கை வரலாற்று நூலில் ஓரிடத்தில் வலியுறுத்திச் சொல்கிறார் . அதே சமயம் , வற்புறுத்தியோ / ஆசைவார்த்தை காட்டியோ / உண்மைகளை மறைத்து ஏமாற்றியோ; ஏதோ ஒரு வகையில் யாரேனும் ஒருவர் பாதிக்கப்படும் போது - பாதிக்கப்பட்டவர் புகார் செய்யும் போது , அது நிச்சயம் தண்டனைக்குரிய குற்றமே என்கிறார் .
இப்படி குற்றச் செயலில் ஈடுபடுகிறவர்கள் முற்போக்களராக இருந்தால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது . இது அவரின் முற்போக்கால் ஏற்பட்ட தவறல்ல ; அவரின் சுய பலவீனத்தால் நடந்ததென அறிக ! அவர் தான் பேசிய கொள்கைக்கும் விசுவாசம் இல்லாமல் நடந்துள்ளார் என்பதே உண்மை . தவறே செய்யாதவனல்ல கம்யூனிஸ்ட் ; தவறை ஒப்புக் கொண்டு தன்னை திருத்திக் கொள்பவனே கம்யூனிஸ்ட் . தண்டனையை ஏற்று ,தன்னைத் திருத்திக் கொள்ளாதவன் கம்யூனிஸ்டாக தொடர முடியாது .
மேலே சுட்டியது போன்றோர் ஒரு வகை . இன்னொரு வகையினர் கட்சிக்குள் இருக்கும் விஷக்கிருமிகள் . இவர்கள் பேச்சுக்கும் செயலுக்கும் மிகுந்த இடைவெளி இருக்கும் . முழுக்க முழுக்க தன்னிச்சையாகச் செயல்படுவார்கள் . தவறு செய்துவிட்டு மறைக்க முயல்வார்கள் . நியாயப்படுத்த வியாக்கியானம் செய்வார்கள் .கோஷ்டி சேர்ப்பார்கள் .இந்த சந்தர்ப்பவாதிகளை அம்பலப்படுத்தியாக வேண்டும் . தண்டித்தாக வேண்டும் . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இத்தகையோர் இருக்கலாம் . அடையாளம் கண்ட போதெல்லாம் கட்சி கறாராக நடவடிக்கை எடுத்திருக்கிறது .கட்சி நியாயப்படுத்த ஒரு போதும் முனைந்ததில்லை .
முற்போக்கு என்பது என்ன உடுத்துவது, என்ன படிப்பது, என்ன பேசுவது என்பது மட்டும் இல்லை. அது யாரை எப்படி நடத்துகிறாய் என்பதிலும் அடங்கி உள்ளது .நீ பொதுவில் பெண் விடுதலை பேசிவிட்டு, தனிப்பட்ட உறவில் ஒரு பெண்ணை அவமதித்தால், அவள் உழைப்பைச் சுரண்டினால், அவள் உடல் மீது உனக்கு உரிமை உண்டு என்று நினைத்தால், நீ பேசிய அத்தனை கருத்தும் செத்துப் போகிறது. உன் செயல்தான் உன் கொள்கை.
அடுத்தவர்களுக்கு உபதேசிப்பது முற்போக்காகாது. அது வெறும் பிரச்சாரம். தன் வாழ்வில் கடைப்பிடிக்க முடியாததை அடுத்தவனுக்கு சொல்வது அறம் இல்லைதான் , ஆயின் , வீட்டில் அமலாக்க முனைந்து தோற்றுப்போனால் ; அதனை வெளிப்படையாகச் சொல்வதில் தப்பில்லை .நீ நேர்மையாக முயற்சித்திருக்கிறாய் ... வெற்றி தோல்வி பொருட்டல்ல.… அதே வேளை முயற்சியே எடுக்காமல் ஜால்சாப்பு சொல்லித் திரிவோர் உண்டு .அதனை இனம் கண்டு .அம்பலப்படுத்தியாக வேண்டும் .
இங்கே இன்னொன்றை சுட்டியாக வேண்டும் திமுக ,அதிமுக ,தவெக போன்ற கட்சிகளில் பாலின சமத்துவம் குறித்து கூர்த்த சிந்தனையுடையோர் உண்டு .தொடர்ந்து பிரச்சாரம் செய்வோரும் உண்டு .ஆயினும் பல வேளைகளில் பெண்களை தரக்குறைவாகப் பேசும் போக்கும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது . ஏன் ?
கருத்தியல் ரீதியாக முற்போக்காக இவர்கள் இருப்பினும் ; வாழ்க்கை நெடுகிலும் பழக்க வழக்கம் சார்ந்து அழுகிய சமூகச் சூழலின் பிரதிநிதியாக வாழ்ந்துகொண்டிருப்பதால் அவர்கள் இயல்பிலேயே அது ஒட்டிக்கொண்டிருக்கிறது . பல வேளை வெளிப்பட்டுவிடுகிறது .சிலர் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிடுகின்றனர் .பலர் வறட்டுப் பிடிவாதத்தால் நாறிப்போகின்றனர் .
விமர்சனம் ,சுயவிமர்சனம் என்கிற இரண்டு கூர்மையான ஆயுதங்களை கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புவிதி தந்திருக்கிறது .அதனை சரியாகப் பற்றி நின்றால் வெல்ல முடியும் . சுயவிமர்சனம் என கம்யூனிஸ்டுகள் சொல்வதும் அகத்தாய்வு என ஆன்மீகவாதிகள் சொல்வதும் ஒன்றல்ல . கம்யூனிஸ்டுகள் சொல்வது தவறை பகீரங்கமாக ஒப்புக் கொண்டு தனக்குத்தானே திருந்தி வாழப் போராடுவது .ஆன்மீகவாதிகள் சொல்வது அதை அல்ல ; உள்ளுக்குள் நீ மாற இறையை நாடு என்பதுதான் .அதில் எனக்கு உடன்பாடில்லை .
ஜெர்மன் தத்துவஞானம் நூலில் - மார்க்ஸ் சொல்கிறார், "மனிதர்களின் உணர்வு அவர்களின் இருப்பை தீர்மானிப்பதில்லை, அவர்களின் சமூக இருப்புதான் அவர்களின் உணர்வை தீர்மானிக்கிறது."
இதன் பொருள் என்ன? நீ மேடையில் என்ன பேசுகிறாய் என்பது முக்கியம் இல்லை. நீ உற்பத்தி உறவில், சொத்துரிமையில், குடும்பத்தில் யார்? நீ எஜமானனா, அடிமையா? நீ சுரண்டுகிறாயா, சுரண்டப்படுகிறாயா?
ஆக உன் வாழ்நிலை உன் உணர்வைத் தீர்மானிக்கும் ; நீ வாழும் சமூகத்தை தலைகீழாக மாற்றும் புரட்சிக்காரனாக வாழ முடிவெடுத்தால் உன் சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் நேர்மையை ,ஒழுக்கத்தை , உண்மையை முன்னிறுத்துவது தவிர்க்க இயலாதது .அப்படிச் செய்யாதவர்கள் போலிகள் என்றறிக !
ஒரு அளவுகோல் வைத்துக் கொள் தோழா:
மேடையில் இல்லாதபோது, கேமரா இல்லாதபோது, யாரும் பார்க்காதபோது நீ யாராக இருக்கிறாயோ, அதுதான் நீ. மற்றதெல்லாம் விளம்பரம். ஆக , நீ ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு விசுவாசமாக இருக்க எல்லா இடத்திலும் எல்லா சந்தர்ப்பத்திலும் போராடிக்கொண்டே இரு . பலன் ஒரு நாள் நிச்சயம் கிட்டும் .
சரி ! ஓர் உண்மையைச் சொல்லட்டுமா ? நானும் பாலின சமத்துவத்துக்காக தொடர்ந்து அகமும் புறமும் போராடிக்கொண்டேதான் இருக்கிறேன் … நீங்களும் அப்படியே ஆகுக!
- சு.பொ.அகத்தியலிங்கம் .
17/10 /26.
குறிப்பு : ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘கேள்வி -பதில்’ வெளிவரும் . நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். முந்தைய கேள்வி பதில்களை வாசிக்க akatheee.blogspot.com


0 comments :
Post a Comment