கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் வெற்றி பெற முடியவில்லை ?

Posted by அகத்தீ Labels: ,

 






தொடக்கநிலைக் கேள்வி- பதில் - [ 9 ]

 

 

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் வெற்றி பெற முடியவில்லை ?

 

கேள்வி :

மக்களின் பிரச்சனைகளுக்கு மார்க்சியம்  தீர்வு சொல்லும் போது ,  கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்னால் அணி திரளாமல், சினிமா நடிகர்கள் மற்றும் சாதி, மதப் பிரிவினை பேசும் சக்திகளின் பின்னால் மக்கள் செல்வது ஏன்?

 

பதில் :

ஆழமான ஆய்வுக்கு உரிய கேள்வி . கட்சிகளின் அதிகார பூர்வமான ஆய்வை நீங்களே தேடி வாசித்துக் கொள்க . நான் அதற்குள் இங்கு நுழையவே மாட்டேன் . பொதுமைப் படுத்தி சுருக்கமாய்ச் சொல்வது சிரமம்தான் . நியாயம் வழங்குமா, தெரியாது . ஆயினும் முயற்சிக்கிறேன் . சமூக உளவியலில் இன்னும் மார்க்சியம் வேர்பிடிக்காததே காரணம் என ஒற்றை  வரியில் சொல்லிவிடலாம் . பதில் போதுமானதல்ல. ஏன் என்கிற கேள்வி தொடரும்.

 

சமூக உளவியல் ஒரு நாளில் கட்டமைக்கப்பட்டதல்ல . கால ஓட்டத்தில் குளத்தில் பாசி படிவது போல் – செம்பில் களிம்பு சேர்வது போல் – நீர்நிலைகளில் படர் தாமரை சேர்வது போல் – ஆற்றில் சாக்கடை கலப்பது போல் - சமூக உளவியலில் சேர்ந்துவிட்ட குப்பைகள் அதிகம் ; அதனை அகற்றுவதில் ஏற்பட்ட தோல்விதான் மார்க்சியம் வெற்றிபெற குறுக்கீடு என மேலோட்டமாகச் சொல்லிவிடலாம் . அது முழு உண்மை அல்ல . உண்மையின் ஒரு சிறு  பகுதி .

 

 ‘சமூகத்தில் எப்போதும் கோலோச்சுவது ஆளும் வர்க்கச் சித்தாந்தங்களே ’ என்பார் மார்க்ஸ் . அதை எதிர்த்து ஒரு சித்தாந்தப் போரை நடத்த வேண்டிய கட்டாயத்தில்தான் மார்க்சியம் எப்போதும் இருக்கும் இப்போதும் இருக்கிறது .

 

 “நாளைக்கு கிடைக்கும் பலாக்காயை விட இன்னைக்கு கிடைக்கும் களாக்காய் மேல்” என்றொரு பழமொழி உண்டு . அதாவது தொலைநோக்கோடு பார்க்காமல் அவ்வப்போது கிடைக்கும் சில்லறைப் பலன்களிலேயே மக்களின் நாட்டம் இருக்கும் . இது ஆளும் வர்க்கம் தூண்டில் போட மிக வசதியான சமூக உளவியல் .

 

அடுத்து ‘ மீட்பர்களை’ எதிர் பார்க்கும் சமூக உளவியல் . யாரோ ஒரு சூப்பர் ஹீரோ வருவார் ; எல்லா துயரையும் தீர்ப்பார் என்கிற மயக்கம் நெடுங்காலமாய்ப் புராணங்கள் வழியாகவும் , வாய்மொழிக்கதைகள் மூலமும் உருவாக்கப்பட்டிருக்கிறது .இந்த மாயையை இன்று நவீன ஊடகங்கள் மூலமும் கெட்டிப்படுத்தப்படுகின்றன . ஆளும் வர்க்கம் அவ்வப்போது இப்படிப்பட்ட  ‘சூப்பர் ஹீரோக்களாக’ சில  ‘தலைவர்களை’ முன்னிறுத்தித் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றன .

 

நிஜ எதிரிகளான முதலாளித்துவத்தையும் நிலப்பிரபுத்துவதையும் ஏகாதிபத்தியத்தையும் இனம் காண விடாமல் சாதி ,மத ,இன ரீதியாக ஒரு கற்பனை எதிரியை உருவாக்கி அவனோடு சண்டை போட வைப்பது ஆளும் வர்க்கத்திற்கு மிகவும் சாதகமானது.எளிதானது .உணர்ச்சியைக் கொம்பு சீவுவதும் சுலபம் . இப்படி பல்வேறு காரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

“ ஜனநாயகம் நீடிப்பதற்கும் பாசிசம் தலைதூக்காமல் இருப்பதற்கும் ஆதாரமான இரண்டு நிபந்தனைகளை  இத்தாலிய மார்க்சிய அறிஞர் அந்தோனியா கிராம்ஷி கூறினார் அல்லவா …. அதாவது ,ஒன்று - புரட்சிகரமான மாறுதல் நிகழவில்லை ..இரண்டு,மதபிற்போக்குத் தனத்துக்கு எதிரான கோட்பாட்டு ரீதியான சண்டை நடத்தப்படவில்லை .இவைதான் அந்த இரண்டு அம்சமும் ஆகும்.” [அயஜஷ் அஹமத் ; பாசிசம் பழசும் புதுசும் ]

 

கிராம்ஷி மிகத் தெளிவாகச் சொன்னார்.  “ஆளும் வர்க்கம் வெறுமே போலீஸை வைத்து மட்டும் ஆள்வதில்லை. அவர்கள் சினிமா, ஊடகம், கல்வி, கோவில், குடும்பம் ,விழாக்கள் , கொண்டாட்டங்கள் ,பண்பாட்டு நடவடிக்கைகள்  மூலம் ஆள்கிறார்கள்.” இப்போது சமூக வலைதளங்கள் ,ரீல்ஸ் எல்லாம் அடங்கும் . சாதியும் மதமும் தங்கள் பிடிமானத்தை இங்கேதான் கெட்டிப்படுத்துகின்றன .இதனை கம்யூனிஸ்டுகள் முழுமையாக உள்வாங்கி தங்கள் பிரச்சார வியூகத்தை வடிவமைக்காதவரைப் புலம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

 

ஒரு தொழிலாளிக்கு தினமும் 8 -10 மணி நேரம் வேலை. அவனுக்கு களைப்பு தீர சினிமா தேவைப்படுகிறது. அந்த சினிமாவை தயாரிப்பது யார்? பெரு முதலாளிகள். அவர்கள் என்றாவது "முதலாளிகளால் தான் நீ ஏழையாக உழல்கிறாய்" என்று படம் எடுப்பார்களா? எடுக்க மாட்டார்கள். மாறாக, "விதி, தலைவிதி, தனிமனித நல்லொழுக்கம் ,சூப்பர் ஹீரோ " என்று கதை சொல்வார்கள்.சூப்பர் ஹீரோக்களின் அவதார மகிமையை நம் உளவியலில் திணிப்பார்கள் .

 

அதனால் மக்கள் மார்க்சியத்தைப் பார்க்காமல் இருப்பது மக்களின் தவறு அல்ல. அவர்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக மிகப்பெரிய ‘கருத்தியல் இயந்திரம்’ இரவு பகலாக வேலை செய்துகொண்டே இருக்கிறது.

 

மார்க்சியம்  விடியலுக்கானத் தீர்வைச் சொல்கிறது என்பது உண்மைதான் .ஆனால் அதை மக்களின் மொழியில் சொல்கிறார்களா? பல நேரங்களில் கம்யூனிஸ்டுகளின் பேச்சு புத்தக மொழியாகவும், போராட்ட முழக்கமாகவும்  நின்றுவிடுகிறது. சினிமாக்காரன் மக்களின் அழுகையை பயன்படுத்துகிறான், சாதிக்காரன் மக்களின் கோபத்தை பயன்படுத்துகிறான். உடனடி ஓர் எதிரியை அவர்கள் நிறுத்துகிறார்கள் .அது உண்மை எதிரி அல்ல ; ஆனால் வெறுப்புப் பிரச்சார வலிமையால் அதனை கட்டமைத்துவிடுகிறார்கள் . போராட்டம் திசை மாறி விடுகிறது .

 

 

மக்கள் சினிமா, சாதி ,மதம் பின்னால் செல்வது அவர்கள் அறியாமையால் அல்ல. அது அவர்கள் மீது திணிக்கப்பட்ட அறியாமையினால்தான். இப்போது , மார்க்சியத்தின் வேலை வெறும் தீர்வைக் காகிதத்தில் எழுதுவது அல்ல. அந்த தீர்வை மறைக்கும் திரையைக் கிழிப்பதுமாகும்.

 

லெனின் சொன்னது போல், தொழிலாளி தானாகவே தொழிற்சங்க உணர்வு வரை தான் வருவான், வர்க்க உணர்வை வெளியில் இருந்துதான் கொண்டு செல்ல வேண்டும். அந்த கொண்டு செல்லும் வேலையை, பொறுமையாக, மக்கள் மொழியில், அவர்கள் வாழ்விடத்தில் இருந்து செய்யும்போது தான், மக்கள் நடிகர்களின் பின்னால் இருந்து விலகி, தங்கள் சொந்த வர்க்கத்தின் பின்னால் அணிதிரள்வார்கள்.இது நடக்காமல் போனதற்கு மக்கள் காரணம் அல்ல, அதை செய்ய வேண்டிய கம்யூனிஸ்டுகள் இன்னும் போதுமான அளவு செய்யவில்லை என்பதே காரணம்.தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய் . வலுவான கட்டமைப்பும் , உறுதியான இலக்கும் , அளப்பரிய தியாகமும் கொண்டு கட்டி எழுப்பப்படுவதுதான் புரட்சி .

 

கிராம்ஷி தான் இந்த கேள்விக்கு மிக முக்கியமான சாவி. மார்க்ஸ், லெனின் காலத்திற்கு பிறகு "ஏன் புரட்சி மேற்கத்திய நாடுகளில் நடக்கவில்லை?" என்ற கேள்வியை சிறையில் இருந்தபடியே யோசித்தவர் அவர்.

 

ஆளும் வர்க்கம் இரண்டு வழிகளில் ஆள்கிறது என்கிறார்: அதாவது, ஒரு பக்கம்  பல்வேறு பிரச்சார பண்பாட்டு வடிவங்கள் மூலம்  நம்மை ஒப்புக்கொள்ள வைப்பது - நம்மை சம்மதிக்க வைப்பது. இன்னொரு பக்கம் போலீஸ், ராணுவம், சிறை போன்ற ஒடுக்கிமுறைக் கருவிகள் மூலம் பணிய வைப்பது .

 

"Hegemony describes how the state and ruling capitalist class use cultural institutions to maintain power... hegemony is a complex combination of both 'leadership' (consent) and 'domination' (coercion or force)."

 

 அரசு என்றால் போலீஸ், கோர்ட் மட்டும் தான் என்று  நினைக்கிறோம். கிராம்ஷி சொல்கிறார்; ”அப்படி இல்லை” என்று. 

 

அவரது புகழ்பெற்ற சூத்திரம் தெரியுமா ?

 

அரசு = அரசியல் அதிகாரம் + சிவில் சொசைட்டி . வேறு வகையில் சொல்வதாயின் மேலாதிக்கம் என்பது சிவில் சொசைட்டி எனும் கவசத்தால் பாதுகாக்கப்படுகிறது .

 

“State = political power + civil society (in other words hegemony protected by the armour of coercion).”

 

அரசியல் அதிகாரம் Political power = அரசாங்கம், போலீஸ், ராணுவம், நீதிமன்றம் - இவை வன்முறையால் அடக்கும்.

சிவில் சமூகம் Civil Society = குடும்பம், பள்ளி, கோவில் / சர்ச் / மசூதி, சினிமா, ஊடகம், மதம் ,சாதி சங்கம் ete …ete…இது நம்மை கருத்தியல் ரீதியாக ஒப்புக்கொள்ள வைக்கும்.

 

இதனை உண்மையில் உள்வாங்கியது ஆர் எஸ் எஸ் தான் . அத்வானி ஒரு முறை சொன்னார் , “ அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைவிட சிவில் சொசைட்டியைக் கைப்பற்றுவதே எங்கள் இலக்கு” .ஆர் எஸ் எஸ் இன் ஒவ்வொரு நகர்வும் இத்திக்கு நோக்கித்தான் .

 

 “கோட்டையைச் சுற்றி பெரும் பாதுகாப்பு மதில்களும் காப்பரண்களும் அகழிகளும் இருப்பது போல , நவீன ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்க ஒரு புறம் அடக்குமுறைக் கருவிகளும் மறுபுறம் சிவில் சொசைட்டியும் இருக்கின்றன.” என்கிறார் கிராம்ஷி .

 

“The massive structures of the modern democracies, both as State organizations, and as complexes of associations in civil society, constitute for the art of politics as it were the ‘trenches’ and the permanent fortifications of the front in the war of position”

 

1917 இல் ரஷ்யாவில் சிவில் சமூகம் பலவீனமாக இருந்ததால், அரசை நேரடியாக தாக்கி வீழ்த்த முடிந்தது . அன்றைக்கு தகவல் தொழில் நுட்பம் மிகவும் குறைவாக இருந்தது . 

 

ஆனால் இன்றைக்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் சிவில் சமூகம் மிக வலுவாக இருக்கிறது. சாதி, மதம், சினிமா என்ற ஆயிரம் அகழிகள் இருக்கின்றன. இங்கு நேரடியாக அரசை வீழ்த்த முடியவில்லை . அரசு ஆடினாலும் /  மாறினாலும் இந்த அகழிகள் ஆளும் வர்க்கத்தைக் காப்பாற்றி விடுகின்றன .

 

இது தான் சினிமா நடிகர் மற்றும் சாதித் தலைவர் செய்வது. ஒரு நடிகர் "நான் தமிழன், நான் தான் உங்கள் பிரதிநிதி" என்கிறார். ஒரு சாதித் தலைவர் "நான் தான் இந்த சாதியின் பிரதிநிதி" என்கிறார். உண்மையில் அவர்கள் ஒரு சிறு முதலாளித்துவக் குழுவின் பிரதிநிதிதான். ஆனால் அவர்கள் தங்களை "ஒட்டுமொத்த சமூகத்தின்" பிரதிநிதியாகக் காட்டும் திறனை வைத்திருக்கிறார்கள். அந்த திறனைத்தான் சினிமாவும், பணமும், ஊடகமும் அவர்களுக்குக் கொடுக்கிறது. 

 

கிராம்ஷி சொல்கிறார், ஒவ்வொரு வர்க்கமும் தனக்கான Organic Intellectuals - கருத்துநிலை அறிவுஜீவிகளை உருவாக்கும். முதலாளிகளுக்கு அவரது அறிவுஜீவிகள் யார் ? பேராசிரியர்கள் ,சினிமா இயக்குனர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், சாமியார்கள்,கூலிக்கு மாரடிப்பவர்கள் ,இன்னும் பலர். 

 

 

உழைக்கும் வர்க்கத்திற்கும் தனது சொந்த அறிவுஜீவிகள் தேவை. கட்சி புத்தகம் படித்தவர் மட்டும் அறிவுஜீவி அல்ல. தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டே தன் சக தொழிலாளிக்கு சுரண்டலை புரிய வைக்கும் தொழிலாளி தான் உண்மையான அறிவுஜீவி.

 

[ இ.பா.சிந்தன் எழுதிய “இஸ்ரேலிய இந்துத்துவ சினிமா” எனும் நூல் சினிமாக்கள் எப்படி கருத்துத் திணிப்பு ஆயுதமாக்கப்படுகின்றன என்பதை விவரிக்கிறது . வாசிக்கவும்....]

 

 

தோழரே, அதனால் மக்கள் சினிமா பின்னால் போவது இயல்பு தான். ஏனென்றால் அந்த அகழியில் தான் எதிரி பலமாக உட்கார்ந்திருக்கிறான். நாம் இன்னும் அந்த அகழிக்குள் போய் போரைத் தொடங்கவில்லை. நாம் வெறுமே கோட்டை வாசலில் நின்று முழக்கமிடுகிறோம், ஆனால் போர் நடக்க வேண்டியது  எங்கு ? கல்லூரிகளிலும் ,பள்ளிகளிலும் , கிராமத்து டீக்கடைகளிலும் , சினிமா தியேட்டர் வாசல்களிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும்  , இன்ஸ்டா  ,முகநூல் போன்ற சமூக ஊடகங்களிலும் …. ஒவ்வொருவர் வீட்டுக்குள்ளும் …. குடும்பத்துக்குள்ளும் ….. ஒவ்வொருவர் இதயத்துக்குள்ளும்.... கடினமான பணிதான் ... வேறு வழி இல்லை.....

 

 நான் சொல்லுகிற கருத்தில் நீங்கள் 100 % மாறுபடலாம் ; அது உங்கள் உரிமை....

 

[ மீண்டும் சொல்கிறேன் . கட்சி அறிக்கைகளில் சொல்லப்பட்டிருப்பதை வாசித்து அங்கு விவாதிப்பீர்.இதனோடு போட்டு குழப்ப வேண்டாம் . இது பொதுவான பதில் மட்டுமே ]

 

 

- சு.பொ.அகத்தியலிங்கம் .

24 /10 /26.

குறிப்பு : ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘கேள்வி -பதில்’ வெளிவரும் . நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். முந்தைய கேள்வி பதில்களை வாசிக்க  akatheee.blogspot.com    

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

0 comments :

Post a Comment