பேசவே முகம் சுழிக்கும் அடித்தட்டு வாழ்வின் வலி

Posted by அகத்தீ Labels:

 


 

 


பேசவே முகம் சுழிக்கும் அடித்தட்டு வாழ்வின் வலி

 

” எத்தனை மனித வக்கிரங்கள் ஊர்ந்த மேனி இது . இன்று நீயுமா ?! வா என் அன்பே !” என்று முனங்கியபடியே கருநாகத்தை ஆரத்தழுவினாள் .அது அன்பாய் அவள் உதட்டில் ‘பச்’ என்று முத்தமிட்டது .

 

சமூகத்தால் கைவிடப்பட்டு  புற்று நோயில் அழுகிய பாலியல் தொழிலாளியான ஒரு பெண்ணின் அந்திமக் காலத்தில்   இரண்டு இட்லிக்காக வேலியோரம் ஒதுங்கும் கோர வாழ்வை இந்நூலின்  “பசி கொண்ட இரவு” கதை சொல்கிறது . நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி அழவைக்கிறது .

 

இக்கதை இத்தொகுப்பில்  கடைசிக் கதை இது .

 

இக்கதையை வாசித்த போது புகழ்பெற்ற  “சாதத் ஹாசன் மாண்டோ” என் நினைவுக்கு வந்து போனார். இப்படி ஒதுக்கப்பட்டோர் வாழ்வில் ரணத்தை எழுத்தில் தந்தவர் ; உருது மொழி எழுத்தாளர் சாதத் ஹாசன் மாண்டோ .

 

கள்ளச் சாராயம் விற்கிற பெண் என எவ்வளவு இளக்காரமாகச் சொல்லி விடுகிறோம் . ஆனால் அவர்களின் வாழ்க்கை வலியை அறிவோமா ? ” இந்த மாந்தோப்பு வேலை எவ்வளவோ மேல் .எல்லா இடத்திலும் கோவிந்தன் மாதிரி பொறிக்கிப் பயல்கள் இருக்கத்தான் செய்றானுக…” இந்த வரிகளில் காறித் துப்பும் சமூக யதார்த்தம் ஆயிரம் ஹேமா கமிட்டி அறிக்கைகளில் சொன்னாலும் தீராது .ஆனால் சரோஜா வாழ்வு என்ன ஆனது .”பாக்கெட் சாராயம்” என்னும் கதையின் உறுத்தும் நிஜம் வாசிப்பவரின் கன்னத்தில் ஓங்கி அறைகிறது .

 

கஞ்சா வழக்கில்  சிறையில் வாடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில்தான் எத்தனை சோகம் !  “காதல் என்னும் ஊழ்வினை” என்னும் கதை சமூகத்தின் இன்னொரு கோர முகத்தைக் காட்டும். அவள் பெயரோ ஜெயக்கொடி அவள் வாழ்வோ வெறும் கந்தல் துணி . செய்யாத குற்றத்துக்காக சிறைபட்டு , “அவளுக்கு [பெற்ற மளுக்கு ]யாராச்சும் சாப்பாடு கொடுத்திருப்பாளோ” எனக் கதறும் குரலை அமைதியாக் கடந்து போக முடியவில்லை.

 

 “ சீதை வேசியாக்கப்பட்டாள்” கதைத் தலைப்பே அதிர்வெடி . மனைவியை தவறாய்ப் புரிந்து சந்தேகிக்கும் கணவன் .சந்தேக நெருப்பில் தற்கொலை செய்து கொள்கிறான் . ”அம்மா ! சீதை! என் மகன் கொழுப்பெடுத்து செத்துப் போனதுக்கு நீ ஏம்மா வருத்தபடுற? …” என தலைகோதும் மாமியார் மானுடம் செத்துப் போகவில்லை என்பதன் சாட்சி.

 

கறுப்பு ஆடுகள் மலிந்த காவல் துறைக்குள் நேர்மையாய் இருக்கும் ஒருவன் ; அவனுக்குள்ளும் தலை விரித்தாடும் சாதியம் ; சந்தர்ப்ப சூழலை பயன்படுத்தி பெண்ணை வேட்டையாடும் சக காவல் மிருகங்கள்  “ மூன்றாம் நாளும் விடிந்தது” கதை காட்டும் சமூக இருட்டு நினைக்கவே பயமாக இருக்கிறது .

 

குடிகார கணவனால் நிம்மதியை இழக்கும் தாய் , தப்பி ஓடும் சிறுவன் ,அணைக்கும் சக அபலைக் கிழவி , உழைத்து வாழவும் விடாத சமூகம் என குத்திக் கிழிக்கும் கதை “ பூரணச் சந்திரன்.”

 

பிழைப்பு தேடி சென்னை செல்லும் பெண் எதிர்கொள்ளும் சிக்கலை யதார்த்தமாய் பேசி நம்மை உறைய வைக்கும் கதை “கனலி”

 

 “ ஏண்டா சடங்கானோம் ?” என வேணியை அழவைத்து , புயலில் சாகவிட்ட கொடுமை .மாதவிடாய் இயல்பானது . அதுவே  தீட்டு  என இந்திய சமூகத்தை ஆட்டிப் படைக்கும் பெருங்கூற்றாய்  ஆடுவதை சொல்லும் கதை “தீட்டு” .

 

“இத்தொகுப்பில் ஒப்பீட்டளவில் மனதை அழுத்தும் பெரிய துக்கம் எதையும் தராத மென்மையான கதை இது ஒன்றுதான்.”என ச.தமிழ்ச் செல்வனே சொல்லும் கதை “ மீனாட்சி அத்தை” ஒன்றுதான். ஆனால் அக்கதையிலும் கண்ணீரும் ஈரமும் உண்டு.

 

“இந்த சமூகத்திற்கு எது தேவையோ அதை எழுது அதனால் ஏற்படும் விமர்சனங்களைப் பற்றி கவலை கொள்ளாதே ,விமர்சனமே இல்லாத கதைகளை எழுத வேண்டுமென்றால் நீ எழுதுவதைவிட சும்மா இருப்பதே மேல் என்று திரும்பத் திரும்பச் சொல்லி எழுதத் தூண்டிய என் அன்புக் கணவர் ஜெயசீலன் என ‘ என்னுரையில் ‘ கி.அமுதா செல்வி குறிப்பிடுகிறார் .

 

சமூகம் பேசவே முகம் சுழிக்கும் அடித்தட்டு வாழ்வின் வலியை எழுத்தில் தருவது என்பது சவாலான செயல்தான் .  ‘பசி கொண்ட இரவு என்கிற சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஒன்பது  கதைகளையும் எழுத துணிச்சல் மட்டுமல்ல , எல்லையற்ற மானுட நேசமும், சமூகப் பார்வையும் , பெண்ணின் இதயமும் கண்ணும் வேண்டும் . அமுதா செல்விக்கு அது வாய்த்திருக்கிறது. ஆகவேதான் தன் முதல் கதைத் தொகுப்பிலேயே முத்திரை பதித்திருக்கிறாள் .

 

அடிதட்டு மக்களின் - விழிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை மட்டுமே கூர்ந்து நோக்கி ; பெண்ணின் வற்றா அன்புடன் கதைத் தொகுப்பை கொண்டு வந்திருக்கும் அமுதா செல்வியை வாழ்த்துகிறேன் . அவருக்கு தோள் கொடுக்கும் கணவர் ஜெயசீலனையும் வாழ்த்துகிறேன் . லட்சியத் தம்பதியராய் பல்லாண்டு வாழ்க நீவீர் ! உங்கள் எழுதுப் பயணம் மேலும் மேலும் தொடர்க இவ்வழியே !

 

வாசகர்களே ! உங்களுக்கு ஓர் சவால் !

கண் கலங்காமம் இத்தொகுப்பை உங்களால் வாசித்து முடிக்க முடியுமா ?

 

பசி கொண்ட இரவு ,

ஆசிரியர் : கி.அமுதா செல்வி ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949

E mail :     bharathiputhakalayam@gmail      /   www.thamizhbooks.com

பக்கங்கள் : 144 , விலை : ரூ.150 /

 

 

 சு.பொ.அகத்தியலிங்கம்.

16/09/24.

 

 

 

                                              

 


0 comments :

Post a Comment