மாண்பமை நீதிமான் அவர்களே !

Posted by அகத்தீ Labels:

 



மாண்பமை நீதிமான் அவர்களே !

 

இயேசு ,அல்லா ,ராமன் ,ஜெகநாத்

இன்ன பிற கடவுள்களை எல்லாம்

பிரபஞ்சத்தை விட்டு கடத்த ஆணையிடுங்கள் !

 

குறைந்த பட்சம்

இடைக்கால தடையாவது

உடனே பிறப்பியுங்கள் !

 

அவர்கள் ஆண்டுக் கணக்காய்

பாலஸ்தீனக் குழந்தைகளை

ஏறெடுத்து பார்க்கவும் மறுக்கிறார்கள் !

 

அவர்கள் சோமாலியா குழந்தைகளுக்கு

எந்த அரிசியிலும்

பெயர் எழுத மறுக்கிறார்கள் !

 

தன் கண்ணெதிரே நடக்கும்

பாலியல் வன்புணர்வை தடுக்காமல்

கண்டு களிக்கிறார்கள் !

 

ஆதிக்க கொடுஞ்சிறையில்

பாட்டாளி தோழர்களுக்கு

கடைக்கண் திறக்கவும் மறுக்கிறார்கள் !

 

மதம் பிடித்த மனிதர்களின்

மனிதமற்ற வன்முறைகளை

ஆசீர்வதித்து மகிழ்கிறார்கள் !

 

வல்லான் வகுத்ததே வாய்க்காலென

அவர்கள் பக்கமே சாய்ந்து

அறம் கொல்கிறார்கள் !

 

அச்சமும் அறியாமையும் அடிமைத்தனமும்

உச்சத்திற்கொண்டு வாழ்வதே

ஏழைக்கு விதிக்கப்பட்டதென நம்பச் சொல்கிறார்கள் !

 

இன்னும் இன்னும் சொல்லச் சொல்ல நீளும்

அத்தனை கொடுமைகளுக்கும்

சாட்சியாய் , கல்லாய் நிற்கிறார்கள் !

 

மாண்பமை நீதிமான் அவர்களே !

அருள்கூர்ந்து…

 

 

இயேசு ,அல்லா ,ராமன் ,ஜெகநாத்

இன்ன பிற கடவுள்களை எல்லாம்

பிரபஞ்சத்தை விட்டு கடத்த ஆணையிடுங்கள் !

 

குறைந்த பட்சம்

இடைக்கால தடையாவது

உடனே பிறப்பியுங்கள் !

 

சுபொஅ.

03/09/24.

 

 



0 comments :

Post a Comment