வட்டார வழக்குகள் : மறு
பரிசீலனை தேவை.
“ திருநெல்வேலி
என்றாலேயே அல்வாவும் ‘ஏல’ என்ற சொல்லும்தான் என்பது போன்ற தோற்றம் உள்ளது.அதிலும்
‘ஏல’ என்ற சொல் பயன்பாடு மக்கள் தொடர்பு சாதனங்களில் மிகவும் செயற்கைத் தனமாக உள்ளது.”-
இப்படி தோழர் வீ.பழனி “தாமிரபரணி தீரத்து சிறுகதைகள்” நூலில் குறிப்பிட் டிருப்பது
மிகையல்ல . உண்மையே .நான் என்னுள் அசைபோட்டேன் ;
நான்
1967-68 களில் 11 வது வகுப்பு படிக்க குமரி மாவட்டத்திலிருந்து சென்னை வந்தேன் .வகுப்பறையில்
சக மாணவர்கள் என் பேச்சை கேலி செய்தனர் . அதிலும் என் ஆங்கில உச்சரிப்பு உச்சபட்ச கேலிக்குரியதானது
. அப்போது ஏற்பட்ட கூச்சத்தின் விளைவு இன்றுவரை ஆங்கிலத்துக்கும் எனக்கும் இடைவெளி
.ஆனால் தமிழ் என் ஆர்வத்தை கிளர்த்திவிட்டது . என்னிடம் இருந்த நாஞ்சில் வாடை மெல்ல
மெல்ல குறைந்தது . 1967 தொடங்கி 2013 வரை சென்னை திருவள்ளூர் என வாழ்ந்து விட்டதின்
பலன் அது .
நாஞ்சில்
நாட்டு மொழி வழக்கு மிகவும் வித்தியாசமானது . நாஞ்சில் நாடு முழுவதும் ஒரேப் போல் இருக்காது
.குறிஞ்சி ,முல்லை ,மருதம், நெய்தல் என நானிலமும் உள்ள மாவட்டம் . அகத்தீஸ்வரம் ,தோவாளை
தமிழ் ஒரு மாதிரி இருக்கும் , கலகுளம் ,விளவங்கோடு தமிழ் ஒரு மாதிரி இருக்கும் . குளச்சல்
கடலோர மக்களின் தமிழ் முற்றிலும் வேறு வகையில் இருக்கும்.
பேச்சும்
நடையும் உருவமும் இவர் குமரி மாவட்டத்துக்கு உரியவர் எனக் காட்டிக் கொடுத்துவிடும்.
ஆனால் இன்று குமரி மாவட்டத் தமிழே பெரிதும் மாறி இருக்கிறது . எங்கும் பரவி இருக்கும்
குமரி மாவட்டத்துக்காரர்கள் மூலமும் ,நவீன ஊடகங்கள் வழியும் நிறைய சொற்கள் புழக்கத்துக்கு
வந்து விட்டன . பழைய சொற்கள் பல வழக்கொழிந்து போகின்றன .பழக்க வழக்கங்களிலும் மிகப்
பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன .
எல்லா வட்டார
வழக்குகளும் அப்படித்தான் . சென்னைத் தமிழ் என சினிமா கொச்சைப் படுத்தியது அல்ல சென்னைத்
தமிழ் . மாநகரில் வியாபாரம் ,தொழில் ,அரசியல் வழி பலவேறு பண்பாடுகளுடனும் மொழிகளுடனும்
ஊடாடியதால் அது சார்ந்த சொற்களும் உரையாடல்களுமாய் விரிந்து ஜனநாயகமானதுதான் சென்னைத்
தமிழ் .
ஆரம்ப காலங்களில்
எழுத்துத் துறையிலும் திரைப்படத்துறையிலும் தஞ்சை வட்டாரம் கோலோச்சியதால் அந்த வட்டாரத்
தமிழே நல்ல தமிழ் என்றும் ஏனையவை எல்லாம் வட்டார வழக்கென்றும் சொல்லும் அளவுக்கு மாறிவிட்டது .
ஒரு கட்டத்தில்
அந்ததந்த வட்டார பெருமிதம் பேச திரைப்படங்களும் நாவல் சிறுகதைகளும் முயன்ற போது அது
சாதிய வழக்காறுகளாகவும் திரிந்தன. மிகைப் படுத்தப்பட்டன
. தஞ்சைத் தமிழும் அப்படியே !
உலகமயமமாக்கலும்
,தாராளமயமாக்கலும்,தனியார்மயமாக்கலும் நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஆங்கிலம்
கலந்த தமிழை பொதுப் பாணியாய் வியாபார நிமித்தம் திணித்து ; அதை நம் இயல்பாக்கி விட்டது
. மறுபுறம் வட்டார பெருமிதத்தை சாதிய பெருமிதத்தைக் காட்ட டி வியும்
, சினிமாவும் , தகல் தொடர்பு ஊடகங்களும் படைப்புகளும் மிகைப்படுத்தி செயற்கைத்
தனமாய் வட்டார வழக்கைப் பேசுகின்றன.
ஆக ,வட்டார
வழக்கில் சாதியமும் உண்டு . வட்டார வழக்கில் நல்ல தமிழ்ச் சொற்களும் உண்டு .சொலவடை
பழமொழிகளில் பெண்ணடிமைத்தனம் ,சாதியம் , மூடத்தனம் சார்ந்தவையும் உண்டு அனுபவத் தழும்பேறி
யவைகளும் உண்டு . எல்லாவற்றையும் பெருமிதத்தோடு கொண்டாடுவதும் பிழை .கண்ணை மூடிக்கொண்டு
நிராகரிப்பதும் பிழை .காலத்திற்கு ஏற்றவை எவை எவை என கண்டு தெளிவதும் தொடர்வதும் நல்லது
.ஆகாதனவற்றை ஆழக்குழி தோண்டி புதைப்பதும் தேவை .
கலப்படமில்லாத
சுத்த சுயம்புவான மொழியோ ,பண்பாடோ ,பழக்க வழக்கங்களோ எங்கும் எப்போதும் இல்லை .கொள்வதும்
கொடுப்பதும் நடந்து கொண்டேதான் இருக்கும் . சமூகத்தின் வளர்ச்சியோடும் வீழ்ச்சியோடும்
மொழியும் ஏறி இறங்கும் .சமூகம் கைவிடும் மொழி காணாமல் போய்விடும் . எத்தனை ஆயிரம் கோடி
கொட்டி அழுதாலும் பிழைக்காது .எடுத்துகாட்டு சமஸ்கிருதம் .
பேச்சு வழக்கிலும்
அறிவியல் முன்னேற்றம் தொழில் வர்த்தக தொடர்பு சார்ந்தும் மொழி கலப்புக்குள்ளாகும்
. மொழி கலப்பு நூறு சதம் பிழையுமல்ல ; நூறுசதம் சரியுமல்ல . எந்தச் சொல்லைக் கொள்வது
எதை மறுப்பது என்பதில்தான் மொழியின் உயிர்ப்பு தொடரும்.
பெயர்
சொற்களை மொழிபெயர்ப்பது வீண் . வினைச் சொற்களைப் புறக்கணித்து வாக் பண்ணி ,ஸ்மைல் பண்ணி ,குக் பண்ணி ,மியூசிக் பண்ணி , டைரக்ட் பண்ணி ,ரீட் பண்ணி இப்படி
பண்ணித் தமிழாக்குவது மொழியைக் கழுத்தை நெரித்துக் கொல்வதாகும் .தொலை காட்சியும் ஊடகங்களும் இந்தக் கொலையில் முக்கிய பங்காற்றுகிறது .
டிவி ,தொலைகாட்சி
,சினிமா ,தகவல் தொடர்பு சாதனங்கள் லாபத்தை மையமாகக் கொண்டே இயங்குவதால் அதில் நம் மொழியும்
பண்பாடும் செழுமையுறும் என எதிர்பார்ப்பது பலன் தராது .
பேச்சு வழக்கில்
இனிமை சேர்ப்போம் குமரி,நெல்லை ,கோவை,தஞ்சை ,விழுப்புரம் ,கடலூர் ,சென்னை ,மலைகள்
,கடலோரம் எங்கும் புழங்கும் இனிய பேசுமொழியை
ஒன்றாய் கலந்து வளமாக்குவோம் ,வலிமைகூட்டுவோம் !
பெளதீகம்
,இரசாயணம் , ஜியோமதி என்றால் இந்த காலத்துப் பிள்ளைகளுக்குத் தெரியாது .அழகிய தமிழில் இயற்பியல் ,வேதியல் ,வரைகணிதம் என புழக்கத்திற்கு வந்துவிட்டது
. அருமையாய் ‘வணக்கம்’ சொல்வதை
விடுத்து ’நமஸ்காரம்’
என காராமாவது சங்கித்தனமே ! அவர்களே ! வாங்க போங்க என மரியாதை கலந்த
நம் மொழி இருக்க ஜீ !ப்ரோ ! என்றெல்லாம் ஒட்டு சேர்ப்பது அருவருப்பாய் இருக்கிறது
.
இலக்கண சுத்தமான
மொழியை யாரும் பேசுவதில்லை . பழகு தமிழ் , இனிய தமிழ் , சொல்வளம் மிக்க தமிழ் , வலிமையான
தமிழ் , வானமளந்த அனைத்தும் அறிந்த தமிழ் நம்மிடம்
இருக்க அதில் தேவையற்றவற்றைக் கலக்கலாமா ? யோசிப்பீர் !
வாழ்க எம்
தமிழ் ! வல்லமை மிக்க வாழ்வியல் மொழி !
சுபொஅ.
0 comments :
Post a Comment