பெண்களின் உள்காயங்களிலிருந்து ….

Posted by அகத்தீ Labels:

 






 

பெண்களின் உள்காயங்களிலிருந்து ….

 

 “ உன் மெளன விலகல்

கணக்கில்லா காலம்

என்னை வதைத்தது”  -எனத் தொடங்கி

 

“ உன்னை நினைக்கையில்

எனக்கு எந்த உணர்வு மில்லை.”

 

-  என முடியும் ”அப்பால்” எனும் கவிதையே கிட்டத்தட்ட இந்த முழுத்தொகுப்பின் சாரம் .

 

பல கவிதைகளில் கவிஞர்  தன் உள் காயங்களை பெண்ணியக் குரலில் வலுவாய்ச் சொல்லுகின்றார் . ஆனால் அது தனித்த குரல் அல்ல.சமூகத்தின் ஊனப் பார்வையை எரிக்கும் நெற்றிக்கண் பார்வை . தன்னைப் போலவே பிற பெண்களின் ,மனிதர்களின் உள்வலியை  சொல்லும் பல கவிதைகளும் உள்ளன.

 

 

“ திடீரென இறந்து விட்டாள் மாமி

சுமங்கலியாய்

வீட்டிற்குள் வந்தபின்

அம்மா பெரிதாக அழுதாள்

‘ அவர் பிடுங்கல் இல்லாமல்

பத்துநாளாவது இருக்கணும்னு

சொல்லுவையே

இப்படிப் போயிட்டியே’

எனக் கூறி.”

 

 “சுமங்கலி” எனும் இக்கவிதையைப் படித்த பின்னர் அசைபோட்டேன் . “ தீர்க்க சுமங்கலி பவா”ன்னு வாழ்த்துகிறோமே , ஆயின் பெண்ணுள்ளம் அறிந்தோமா ?

 

ஆண்டாள் பிரியதர்ஷினியின் ஒரு சிறுகதையில் என நினைக்கிறேன். சதா சந்தேகப்படும் கணவன் ,மாமியார் இவர்களோடு வதைபட்டு வதைபட்டு சாகக் கிடக்கும் ஒரு பெண் , டாக்டரைப்  பார்க்கப் போவதுகூட அவர் மேலுள்ள ஆசை என்று குற்றம் சாட்டும் அவலம் . பிறந்த பிள்ளை எல்லாம் தனக்கு பிறந்ததுதானா என மரணப் படுக்கையிலும் அவளை துளைப்பான் கணவன். அவள் “ இறைவா என்னை மன்னித்துவிடு !” மனதிற்குள் வேண்டிவிட்டு ,அவனை அருகழைத்து காதில் சொன்னாள் “ மூன்று பிள்ளைகளில் ஒன்று உனக்குப் பிறக்கவில்லை.” இதோடு அவள் கண்மூடிவிட்டாள் . அவன் நடை பிணமானாள்.

 

பெண்களின் மனக்காயங்களின் வலியும் வீச்சும் ஆண்களுக்கு பிடிபடுவது சிரமம் . இத்தொகுப்பில் ஒரு பார்வையில் கடந்தால் “ கூறியது கூறல்” மலிந்திருப்பதாக் கூறலாம் ; ஆயின் உள் காயம் சீக்கிரம் ஆறுவதே இல்லை . மீண்டும் மீண்டும் வலி  கொப்பளிக்கும் போது என் செய்வது ?

 

“ ஆட்டோ” என்றொரு கவிதை ஆட்டோகாரர்கள் மீதான பொதுக் கோபம் முதல் பாதியில் ; மறுபக்கம் மழையில் தவிக்கும் போது , குழந்தைகளை பொறுப்போடு அழைத்துச் செல்வது ,மருத்துவ மனைக்கு செல்லும் போது மனிதம் ஓங்கும் ஆட்டோக்காரர் பொழுதுகளைச் சொல்லி நெகிழ வைத்து விடுகிறார். குப்பை வண்டி ஓட்டுபவர் குறித்த ,”இன்னாரின் மகன்” எனும் கவிதை,  பாபர் மசூதி இடிப்பைப் பேசும் “ இனியுமா ?” எனும் கவிதை இப்படி சுட்டிக்காட்ட நிறைய உண்டு.

 

வித்தியாசமான உவமானம் பலகவிதைகளில் தலைநீட்டும் . எடுத்துகாட்டு

 

“ இன்று இல்லை” எனும் கவிதையில்

 

“ ஆனாலும் நீ இருந்தாய்

வெகுநாட்களுக்கு

நாத்திகனாகிவிட்ட

முன்னாள் பக்தனின் நினைவில் தங்கிப் போன

மந்திரங்களைப் போல்

என் மனதின் இடுக்குகளில்..”

 

தேர்ந்தெடுக்கப்பட்ட 420 கவிதைகளின் தொகுப்பு இந்நூல் .

 

 “அரசியல் கதை அல்ல ; குடும்பக் கதை . கணவனைப் பிரிந்த பெண்ணின் வாழ்க்கை ரணம்தான் நூல் நெடுக நம் இரக்கத்தை யாசித்துக்கொண்டே இருக்கிறது .ஆனால் வழக்கமான குடும்பத்தின் கதையல்ல உறவுகளுக்குள் நடக்கும் போட்டி ,பொறாமை இவற்றின் கதை மட்டுமல்ல  ;  ஆணாதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் எவ்வளவு நுட்பமாகச் சமூகம் கட்டி அமைக்கிறது என்பதை கதைப் போக்கில் சொல்லிச் செல்வதுதான் இந்நூலின் தனிக்கூறு .”

 

 “கண்ணுக்குள் சற்று பயணித்து” எனும் ஆர் .வத்சலாவின் நாவலொன்றுக்கு 2017 டிசம்பரில் எழுதிய நூலறிமுகத்தில் குறிப்பிட்டேன். அதன் நீட்சிதான் இந்த கவிதைத் தொகுப்பும் எனில் மிகை அல்ல.

 

கடைசியாக ஒன்று , நானும் ஏராளாமான கவிதைகள்  எழுதி இருந்தாலும் அவற்றை தொகுத்து நூலாக்கத்  துணியவில்லை . வத்ஸலாவின் “ எப்படியாயினும் கவிதையைப் படித்தபின் என்னுள்ளும் ஓர் சலனம் .அவர் கவிதையைப் பார்ப்போம்.

 

“நான் எழுதிய கவிதை

நல்ல கவிதை

சுமாரான கவிதை

மோசமான கவிதை

கவிதையே அல்லாத கவிதை

உனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்

அது என் கவிதை

நான் பெற்றது.”

 

கவிதைத் தொகுப்புக்கு  “உள்வலி” என்றோ ”உள்காயம்” என்றோ பெயர் சூட்டி இருக்கலாமோ ?

 

வத்ஸலாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள்,

ஆசிரியர் : ஆர்.வத்ஸலா ,

வெளியீடு : ரெட் ரிவர் பதிப்பகம் ,

157/1 ,பத்பர்கஞ்ச் [ patparganj] , புது தில்லி -110091.

பக்கங்கள் : 530 விலை : ரூ.699/

 

 

 


0 comments :

Post a Comment