புதிய தலைமுறையினர் தேடித்தேடி கற்க…

Posted by அகத்தீ Labels:

 





 “நெடுநாள் களப்போராளியாய் இருந்து அனுபவத் தழும்பேறிய எம் அன்புத் தோழர் வீ.பழனி ” காரல் மார்க்ஸ் சொற்சித்திரம்” எனும் ஓர் எளிய நூலை ஆரம்பநிலை மாணவர்களுக்காய் எழுதித் தந்திருக்கிறார் . மார்க்சியம் எனும் மகாசமுத்திரத்தை  “இதோ பார்!” என விரல் நீட்டி குழந்தைக்கு காட்டுவது போல் காட்டி இருக்கிறார் . அந்தக் கடலுக்குள் குதித்து நீச்சலடிக்கும் ஆர்வத்தை ஊட்டி இருக்கிறார் …..”


 புதிய தலைமுறையினர் தேடித்தேடி கற்க…

 

[ நூலுக்கு வழங்கிய அணிந்துரை ]

 

 “மார்க்சியம் தோற்றுவிட்டது ,காலாவதி ஆகிவிட்டது” என முதலாளித்துவ உலகம் 24 x 7 மணி நேரமும் அரற்றிக்கொண்டே இருக்கிறது . கடுமையான விமர்சனங்களை பரப்பிக்கொண்டே இருக்கிறது . ஆயின் , நெருக்கடியில் இருந்து விடுதலைபெற உலகம் மார்க்ஸை நோக்கியே திரும்பிக் கொண்டிருக்கிறது . ஏனெனில் மார்க்சியம் வறட்டுச் சூத்திரம் அல்ல வாழ்வின் வழிகாட்டி ; சமூக அறிவியல் ; மானுட விடுதலையின் திறவுகோல் .

 

மார்க்ஸ் குறித்தும் மார்க்சியம் குறித்தும் தினசரி புதுப்புது நூல்கள் வந்து கொண்டே இருக்கின்றன .ஏனெனில் மார்க்சியம் ஒரு போதும் திகட்டாத அமுதம் ; இன்னொரு வகையில் சொல்வதானால் வற்றா அறிவுச் சுனை ,இறைக்க இறைக்க புதிது புதிதாய் ஊறிக்கொண்டே இருக்கும். அப்படி வந்து குவியும் நூல்கள் பல திறத்தன ; ஆரம்ப நிலை மாணவர் தொடங்கி ஆராய்ச்சி நிலை வரை பலவகைப்பட்டன. தேவை முடியவில்லை . பெருகிக்கொண்டே இருக்கின்றது .

 

நெடுநாள் களப்போராளியாய் இருந்து அனுபவத் தழும்பேறிய எம் அன்புத் தோழர் வீ.பழனி ” காரல் மார்க்ஸ் சொற்சித்திரம்” எனும் ஓர் எளிய நூலை ஆரம்பநிலை மாணவர்களுக்காய் எழுதித் தந்திருக்கிறார் . மார்க்சியம் எனும் மகாசமுத்திரத்தை  “இதோ பார்!” என விரல் நீட்டி குழந்தைக்கு காட்டுவது போல் காட்டி இருக்கிறார் . அந்தக் கடலுக்குள் குதித்து நீச்சலடிக்கும் ஆர்வத்தை ஊட்டி இருக்கிறார் .

 

ஐந்து பகுதிகளாக 14 அத்தியாயங்கள் .80 பக்கங்கள் . சின்ன சின்ன பத்திகளில் செய்திகளைப் பொதிந்து தந்திருக்கிறார் .

 

‘புதுயுகத்தின் வழிகாட்டி’ எனும்  பகுதியில் மார்க்சின் அருமை பெருமைகளை சிறப்புகளை இன்றியமையாமைகளை எடுத்துரைக்கிறார் .வரலாற்று பின்புலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை சுருங்க பட்டியலிடுகிறார் .

 

மார்கஸ் திடீரென ஞானம் பெற்ற ரிஷி அல்ல ; அவருக்கு பார்வதியோ யேகோவோ  வந்து ஞானப்பால் புகட்டவில்லை . எப்படி தன் முன் வாழ்ந்த தத்துவ அறிஞர்களை ,சமகால ஞானிகளை வாசித்து அவர்கள் சொன்னவற்றை விவாதித்து அதிலுள்ள பிழைகளை பட்டியலிட்டு சரியானவற்றை உட்கிரகித்து வளர்ந்தவர் மார்க்ஸ் .

 

ஏன் கம்யூனிஸம் என்ற சொல்கூட மார்க்சின் கண்டுபிடிப்பல்ல 1777ல் விக்டர் ஹுவே எழுதிய ‘ தத்துவரீதியான சமூகத்திற்கான திட்டம்” என்ற நூலில் பயன்படுத்தியதே . ஆனால் அச்சொல்லுக்கு ஆழந்த பொருளும் ஈர்ப்பும் உருவாக்கியவர் மார்கஸ் . இதை இந்நூலில் பழனி சுட்டுகிறார் . மார்க்சியம் என்ற சொல்லாடல் கூட மார்க்ஸாலோ எங்கெல்ஸாலோ முதலில் பயன் படுத்தவில்லை . பிறரே அதற்குச் சூட்டினர் .

 

இரண்டாம் மார்க்ஸ் எழுதிய நூல்கள் ஒவ்வொன்று குறித்தும் சிறு குறிப்பு தருகிறார் . ஒவ்வொரு நூலும் எச்சூழலில் ஏன் எழுதப்பட்டது என்பது வெறும் வரலாற்றுச் செய்தி அல்ல ; அதுவே ஓர் அரசியல் பாடம் . தோழர் பழனி அதற்கான பாடக்குறிப்பை இந்த பகுதியில் தந்துள்ளார் .

 

கூலி என்றால் என்ன ? லாபம் என்பது யாது ? என்பது சாதாரணக் கேள்வி அல்ல .அடிப்படைக் கேள்வி . அரசியல் பொருளாதாரத்தின் அச்சாணி . 1865 ல் மார்கஸ் எழுதிய ‘கூலி விலை லாபம் “ எனும் சிந்தனைப் பொறிதான் ’மூலதனம்’ எனும் பெரும் சித்திரத்தின் திறவுகோல். இவற்றை மூன்றாம் பகுதியில் சுட்டுகிறார் .

 

உயிரின் தோற்றம் ,மனித சமூக வரலாறு ,வர்க்கப் போராட்டம் , இயக்க இயல் பொருள் முதல் வாதம் , வரலாற்றியல் பொருள் முதல் வாதம் ,புவிப்பாதுகாப்பு ,திருத்தல்வாதம் ,சோஷலிசம் ,புரட்சி  போன்ற கருத்து பேழைகளை அறிமுகம் செய்கிறது நான்காவது பகுதி . மார்க்ஸை வாசித்து ஞானம் பெற வேண்டும் , சமூக மாற்றத்துக்கான போரில் ஆயுதம் ஆக்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது இப்பகுதி .

 

’ ஒவ்வொருவரும் எல்லோருக்காகவும் ,எல்லோரும் ஒவ்வொருவருக்காகவும் “ என தத்துவம் தந்த மார்க்சின் வாழ்க்கை குறிப்புகளும் ,எங்கெல்ஸ் ,லெனின் ,லிப்னெட் போன்றோரின் மதிப்பீடுகளையும் , சிறந்த மேற்கோள்களையும் உள்ளடக்கியது ‘வாழ்க்கைச் சரித்திரம்’ என்ற நிறைவுப் பகுதி .

 

அகராதிக் குறிப்புகள் போல் செய்திகளைத் தொகுத்து மார்க்ஸை புதிய தலைமுறையினர் தேடித்தேடி கற்க அறிமுகம் செய்துள்ளது இந்நூல் .

 

இந்நூலை எழுதிய எம் தோழர் வீ.பழனிக்கு வாழ்த்துகள் .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

20/05/2024.

 

 


0 comments :

Post a Comment