பாலின சமத்துவம் குறித்து வாய்கிழிய ...

Posted by அகத்தீ Labels:

 




 “பாலின சமத்துவம் குறித்து வாய்கிழிய பேசும் முற்போக்காளர்களே ! உங்கள் மனைவியிடம் அம்மாவிடம் அக்கா தங்கைகளிடம் மகளிடம் நீங்கள் நியாயமாக  சமத்துவம் பேணி நடந்து கொண்டிருக்கிறீர்களா ?”

 

அண்மையில் நான் மணமுறிவு பற்றி போட்ட ஓர் பதிவில் சில சங்கிகள் வசைமாரி பொழிந்திருந்தனர் .நாகரீகம் கருதி அதனை நீக்கிவிட்டேன் . ஆயினும் அவர்கள் கெட்ட வார்த்தைகளோடு பிசைந்து எழுப்பிய போதிலும்   கேள்வி முக்கியமானது என்பதால் அதை என் தமிழில் மேலே தந்துள்ளேன்.

 

முதுபெரும்  கம்யூனிஸ்ட் தலைவர் மறைந்த தோழர் பி.டி.ரணதிவே வாய்ப்பு கிடைக்கும் தொழிற்சங்க மேடையில் எல்லாம் சொல்வார் ,” நாம் இங்கு புரட்சிகரமான போராளியாக முழக்கமிடுகிறோம் .ஆனால் வீட்டில் மோசமான பிற்போக்கு ஆணாதிக்கக் கணவராகவே நடந்து கொள்கிறோம்.” அவர் ஒவ்வொரு மேடையிலும் அதிலும் ஆண் தொழிலாளர்களே மிகுந்திருந்த தொழிற்சங்க மேடையில் பாலின சமத்துவம் குறித்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார் .

 

என்னிடம் கேள்வி கேட்டவருக்கும் நேர்மையாகச் சொல்கிறேன் , “என் பேச்சுக்கும் செயலுக்கும் இன்னும் இடைவெளி இருக்கிறது என்பதே உண்மை . நான் எனக்குள் அதற்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன் . ஆணாதிக்கம் என்பது மூளையில் உறைந்து போயுள்ள மரபணு .அதைச் சுரண்டி சுத்தம் செய்வது அவ்வளவு எளிதான வேலையில்லை . நான் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன் . வெற்றி பெறாமல் போகலாம் .ஆனால் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துவதைவிட இது மேலானதுதானே !”

 

ஆணாதிக்க கருத்தோட்டம் என்பது ஆண்களிடம் மட்டுமே உள்ள குறை எனக் கருத்துவது தவறு . பெண்களிடமும் உண்டு . ஆண் ,பெண் மொத்த குடும்பத்திலும் இந்த கருத்தோட்டம் நிறைந்திருக்கும் .

 

நம் குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகளில் ,சடங்குகளில் ,சம்பிரதாயங்களில் ,பழக்க வழக்கங்களில் ,குடுமபச் சண்டைகளில் , போதனைகளில் பாலின பேதமும் ஆதிக்கமும் மூடத்தனமும் அப்பிக் கிடக்கிறது . அவற்றைப் பேணிப் பாதுகாப்பதில் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பெரும் பங்கு  இருக்கிறது என்பது நடைமுறையில் நாம் அன்றாடம் அனுபவிக்கும் உண்மை .

 

ஆகவே பாலின சமத்துவதுக்கான போராட்டம் அனைவரும் சேர்ந்து விடாப்பிடியாக நடத்தியாக வேண்டிய கருத்துப் போர் . அதன் முழுப்பலனை அடுத்த தலைமுறை நுகரக்கூடும். அதற்காக இந்தத் தலைமுறை பேசாமல் ,முயலாமல் இருக்க முடியுமா ? நானும் முயற்சிக்கிறேன் .நீங்களும் முயற்சி செய்யுங்கள் .

 

மேலே கேள்வி கேட்டவர் நோக்கம் பாலின சமத்துவம் அல்ல. அந்த முழக்கம் போலியானது என நிறுவி , அதன் மூலம்  பெண் அடிமைத்தனத்தை புனிதப்படுத்துவதுதான்.

 

உன் மனைவி கோவிலுக்குப் போவதை தடுத்து நிறுத்த முடியாத நீ  பகுதறிவு பற்றி பேசலாமா என குதர்க்கக் கேள்வி எழுப்பும் வகைதான் இக்கேள்வியும் . மனைவியின் கருத்துரிமை பற்றி இங்கு அவர்களுக்கு கவலை இல்லை . அதுபோல் ஆணாதிக்கம் போல் மேலிருந்து பாலின சமத்துவத்தை திணித்துவிடலாம் என முட்டாள்தனமான எண்ணமும் இக்கேள்விக்கு பின்னால் உண்டு .

 

பாலின சமத்துவம் என்பது பரஸ்பர உரையாடல் மூலமும் சில கறாரான நடவடிக்கைகள் மூலமும் படிப்படியாய் சமூக உளவியலாக்க வேண்டிய கருத்தோட்டம் .இதை உணராதவர் எழுப்பும் கேள்வியே அது .

 

விடுதலைப் போராட்ட காலத்தில் பேசப்பட்ட பெண் உரிமையும் இன்று பேசப்படுகிற பாலின சமத்துவமும் ஒன்றல்ல . முதலில் அந்த முயற்சி தொடங்கப்படாவிடில் இன்றைய நிலையை எட்டிப் பிடித்திருப்போமா ?

 

1920 கள் ,நாற்பதுகள் ,எழுபதுகள் ,எண்பதுகள் ,இந்த நூற்றாண்டின் தொடக்கம் ,இன்று என வளர்ச்சி ஒவ்வொரு கட்டமாய் தவழ்ந்து ,ஊர்ந்து ,உருண்டு ,எழுந்து ,நடந்து ,முட்டி மோதி வந்திருக்கிறது இனி அடுத்த கட்டத்துக்கும் நகரும் . தட்டையாய் எதையும் பேச முடியாது .பேசவும் கூடாது .

 

நான் அவர்களுக்குச் சொல்வேன் ,என் தாத்தா பாட்டியைவிட என் அம்மா அப்பா காலம் முன்னேறியது .நானும் என் இணையரும் மேலும் ஒரு படி எடுத்துவைத்தோம் .என் மகனும் மகளும் அவர்கள் வாழ்க்கையில் மேலும் பலபடி முன்னேறி உள்ளனர் . என் பேரப்பிள்ளைகள் அடுத்து பாய்ந்து முன்னேறுவார்கள் .

 

பாலின சமத்துவத்தை உரக்கப் பேசுங்கள் . உள்ளும் புறமும் அதற்காகப் போராடுங்கள். அதுதான் காலத்தின் தேவை . காலத்தின் கட்டளை .

 

சுபொஅ.

26/05/2024.


0 comments :

Post a Comment