ஜீனி போட்ட டீ யா ? கருப்பட்டி காப்பியா ?

Posted by அகத்தீ Labels:

 

 




ஜீனி போட்ட டீ யா ? கருப்பட்டி காப்பியா ?

 

தமிழில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான சொற்கள் நா. கதிரைவேற் பிள்ளையின் அகராதியில் தொகுக்கப் பெற்றுள்ளது . [ கெளரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது ] இப்போது இதன் எண்ணிக்கை மேலும் விரிந்திருக்கும். எல்லாவற்றையும் எல்லோரும் தெரிந்திருக்க வாய்ப்பும் இல்லை .தேவையும் இல்லை .

 

மிகப்பெரிய எழுத்தாளர்கூட தன் படைப்பு மொத்தத்திலும் ஐயாயிரம் ஆறாயிரம் சொற்கள் பயன்படுத்தினாலே அதிகம் . ஷேக்ஸ்பியரே அப்படித்தான் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள் . ஒரு மொழியில் சுமார் [ தோராயம் இன்னும் வழக்காகவில்லை] ஐநூறு சொற்களுக்குள்தான் சாதாரண மனிதன் வாழ்க்கையில் புழங்கும் என்கிறார்கள் மொழியிலாளர்கள் .அவர் தொழில் சார்ந்து புழகுவது தனி.

 

இதில் வட்டார வழக்குகளே மேலோங்கி நிற்கும் .அதுவே இயல்பு . அதே போல் பிற மொழிக் கலப்பே இல்லாமல் நூறு சதம் [ விழுக்காடு என தூய தமிழிலும் சொல்லலாம் ] இயங்குவதாய்ச் சொல்வது கற்பனை .  தோழர் வீ.பழநியும் ’என்னுரையில்’ அதைச் சுட்டி இருக்கிறார் .

 

பெயர் சொற்களை மொழிபெயர்ப்பது வீண் . வினைச் சொற்களைப் புறக்கணித்து வாக் பண்ணி ,ஸ்மைல் பண்ணி ,குக் பண்ணி ,மியூசிக் பண்ணி , டைரக்ட் பண்ணி ,ரீட் பண்ணி  இப்படி பண்ணித் தமிழாக்குவது மொழியைக் கழுத்தை நெரித்துக் கொல்வதாகும் .தொலை காட்சியும் ஊடகங்களும் இந்தக் கொலையில் முக்கிய பங்காற்றுகிறது .

 

பெளதீகம் ,இரசாயணம் , ஜியோமதி என்றால் இந்த காலத்துப் பிள்ளைகளுக்குத் தெரியாது .அழகிய தமிழில் இயற்பியல் ,வேதியல் ,வரைகணிதம் என புழக்கத்திற்கு வந்துவிட்டது . அருமையாய்  ‘வணக்கம்’ சொல்வதை விடுத்து ’நமஸ்காரம்’ என காராமாவது சங்கித்தனமே !

 

நான் ஐடிஐ படிக்கும் போது தமிழில் பாடநூல்கள் மிகக்குறைவு .ஒன்றிரண்டு இருக்கும்.அதுவும் மிகவும் கேலிக்குரியதாய் இருக்கும் . எடுத்துகாட்டு . மரத்தாலான சுத்தியல் / பிளாஸ்டிக்காலான சுத்தியல் இருக்கும் .இது அடிப்பதற்கல்ல  வடு இல்லாமல் நேர் செய்ய பயன்படும் .இதனை ஆங்கிலத்தில் soft hammer என்பர் . தமிழில் நாங்கள் கொட்டாப்புளி என்போம் . கொட்டாப்பிடி என வீ.பழநி அகராதியில் தொகுத்துள்ளார் . ஆனால் அதனை மெதுவடை போல் மெதுசுத்தி என அப்போது மொழியாக்கம் செய்திருந்தார்கள்  . ஸ்குரூ டிரைவரை  திருப்புளி [ இந்த அகராதியிலும் உள்ளது ] என்போம் .இதை முடுக்கும் கருவி என அப்போது மொழி பெயர்த்திருந்தனர் .anvil என்பது சம்மட்டி அடிக்கும் போது அடியில் வைக்கப்படும் கனமான இரும்பு மேடை .இதனை அடிதாங்கி  /இடிமனை என நாங்கள் சொல்வோம்  அதனை  ‘வைத்தடி மேடை’ என மொழியாக்கம் செய்திருந்தனர்.உழைக்கும் மக்கள் தன் வாழ்க்கையோடு ஏராளமானச் சொற்களை சுமந்து திரிகின்றனர் . அதனை அறியாமல் மொழியாக்கம் செய்வோர் இப்படித்தான் நம்மை காயப்படுத்துகின்றனர் .

 

விருதாப் போனவனே என நாஞ்சில் நாட்டில் ஏசுவார்கள் . வீணாகப் போனவனே என்று பொருள் . விருதாப் போனவர்களுக்கு விருதா கொடுக்கும் இந்நாளில் அச்சொல் முக்கியத்துவம் பெறும் .இந்த அகராதியில் அச்சொல்லைத் தேடினேன் கிடைக்கவில்லை . எல்லா சொற்களையும் அவர் எழுத முடியாது .இந்நூல் நல்ல முயற்சி .

 

முச்சூடு என்ற சொல் முழுவதும் எனப் பொருள் படும் . நாஞ்சில் ,நெல்லை மாவட்ட வழக்கு .“பாலின்றி பிள்ளை அழும்” எனத் தொடங்கும் பாடலில் ப.ஜீவானந்தம் “ வீடு முச்சூடும் அழும்” எனப் பாடி இருப்பார். இந்த அகராதியில் அச்சொல் இடம் பெற்றுள்ளது. கருப்பட்டி என்பதா பனைவெல்லம் என்பதா ? அது , நீ வாழும் ஊரைப் பொறுத்தது .

 

சந்து என்பதை நாஞ்சில் நாட்டில் முடுக்கு என்பார்கள் .இந்நூலில் முடுக்குதல் இருக்கிறது முடுக்கு இல்லை . ஈருள்ளிதான் வெங்காயம் இல்லை நாஞ்சில் நாட்டிலும் நெல்லையிலும் .அட, கன்னடத்திலும் ஈருள்ளிதான்.

 

காணத் துவையலும் சுடுகஞ்சியும் பப்படமும் சின்ன வயதில் அம்மை  [அம்மாவின் நாஞ்சில் வழக்கு] அதிகம் தந்திருக்கிறார் .சென்னைக்கு வந்த போது ஒரு கடையில் போய் காணம் கேட்டேன் .அண்ணாச்சி சொன்னார் இங்கே இதன் பெயர் கொள்ளு . இந்த அகராதியில் காணம் உள்ளது .

 

எல்லா சொற்களையும் எழுதுவது சிரமம் . மாதிரிக்கும் ஒன்றிரண்டு சுட்டினேன். இந்நூலை வாசிக்கும் முன் வெள்உவனின் முன்னுரை ,கிருஷியின் அணிந்துரை , பழநியின் என்னுரை மூன்றையும் அவசியம் படியுங்கள் .

நீங்கள் ஒரு வேற்று மொழி ஊருக்குப் போகிறீர்கள் . அங்குள்ள மொழியைக் கற்றுக்கொள்வது எளிது .காய்கறிகள் ,மளிகைச் சாமான்கள் ,விழிச் சொற்கள் , மரியாதைச் சொற்கள் என சுமார் முன்னூறு சொற்கள் தெரிந்தால் சமாளிக்கலாம் .போகப்போக நிறைய அறியலாம் .

 

[ உபதேசம் செய்யும் நான் பத்துவருடங்கள் கடந்த பின்னும் கன்னடத்தில் ஒற்றை வார்த்தை கற்றுக்கொள்ளவில்லை .என்னை பார்த்த உடனே எல்லோரும் எப்படியாவது தமிழில் பேசிவிடுகின்றனர் .என் செய்வது ?]

 

 ஆனால் அடுத்த மொழி பேசத் துவங்கும் போது முதலில் எந்தெந்த சொற்களை பயன் படுத்தக்கூடாது அல்லது அந்த சொல் எந்த கெட்ட நோக்கில் உள்ளது என முதலில் அறிய வேண்டும் . நாம் பேசாமல் தவிர்க்கவும் ,பிறர் பேசும் போது உஷாராகவும் இது அவசியம் . சே குவேரா கூட இந்த ஆலோசனையை அவர் பயணத்தில் சொல்லி இருக்கிறார் .கடைப் பிடித்திருக்கிறார்.

 

ஆமாம் கண்டக்ட்ரிடம்  மீதிச் சில்லறையை பையக் கொடுங்கள் என்றால் , மெதுவாகக் கொடுங்கள் என்றுதானே அர்த்தம் . பணப்பையை கேட்பதாய் கருதினால் சண்டைதான் . உங்களுக்கு தெரிந்த சொல்தான் சரியென ‘ நிலையாநிக்காதீங்க’ [அடம் பிடிக்காதீங்க] அந்த ஊரில் அதன் பொருள் வேறாக இருக்கக்கூடும் .  திருநெல்வேலியில் போய் சக்கரையில்லா டீன்னு கேட்காதீங்க ஜீனி இல்லா டீன்னு கேளுங்க .சரிதானே !

 

கம்யூனிஸ்டுகளின் மொழிப்பற்றுக்கும் அக்கறைக்கும் இந்நூலும் சாட்சி .தோழர் பழநியும் சாட்சி.

 

சொல்லும்…. பொருளும்…. [ 2800 தமிழ்ச் சொற்கள் ]

ஆசிரியர் : வீ.பழநி , வெளியீடு : அ ஆ இ பதிப்பகம் , 27,அழகர் நகர் , பெருமாள்புரம் அஞ்சல் ,பாளையங்கோட்டை ,திருநெல்வேலி – 627 007 .தொடர்புக்கு : 94433 91196 / 63816 48023 /   palanicpm55@gmail.com பக்கங்கள் : 168  , விலை : ரூ.120/

 

 

சு.பொ.அ.

13/05/2024

 

0 comments :

Post a Comment