தன்னையும் திருத்தும் !உன்னையும் திருத்தும் !

Posted by அகத்தீ Labels:

 





தன்னையும் திருத்தும் !உன்னையும் திருத்தும் !

 

இயற்கை அதன் போக்கில் நம்மை வாழவைக்கிறது . நாம் அதற்கு கொடுக்கிற தொல்லைகளுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்தாலும்.தன் கடமையில் அது வழுவுவதில்லை.

 

மழை ,வெயில் ,பனி ,வசந்தம் எல்லாம் மாறி மாறி வருவது இயல்பான சுழற்சி .ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை .ஒன்று மட்டுமே இருந்தால் இயக்கம் அற்றுப்போகும்.

 

வெயில் இல்லாமல் மழை இல்லை .மழை இல்லாமல் பனி இல்லை .பனி இல்லாமல் வசந்தம் இல்லை .வசந்தம் இல்லாமல் வெயில் இல்லை .சுழன்றுகொண்டே இருந்தால்தான் பூமி .நின்று போனால் என்ன ஆகும் ?

 

உன் உறைவிடம் , உன் உடை ,உன் உணவு ,உன் பழக்க வழக்கங்கள், உன் வாழ்முறை எல்லாம் பருவ மாறுதலோடு இயைந்து மாறிக்கொண்டே இருந்தால் இயற்கை உனக்கு தொல்லை இல்லை நண்பன் .தோழன்.

 

நீ இயற்கையை உன் முன் மண்டியிட வைக்க மல்லுக் கட்டுகிறாய் . இயற்கை உன்னை அதன் முன் மீண்டும் மீண்டும் மண்டியிட வைக்கிறது ?உன் கர்வம் ஒவ்வொரு முறையும் பங்கப்படுகிறது .என்ன செய்ய ?

 

இயற்கையை புரிந்து கொள்ள முயற்சி செய் ! மழை உனக்கு மட்டுமல்ல , நிலத்துக்கும் கடலுக்கும் உரிய பங்கு உண்டு . எல்லாவற்றையும் நீயே சுருட்ட நினைத்தால் சுழற்சி முடங்கும் .முதலுகே மோசம் வரும் .முதலில் இதனை அறிந்து கொள் !

 

வெயில் நிலத்தில் மீது மட்டுமா ஆட்சி செய்கிறது கடல் மீதும்தான் ; விளைவு பருவமழைக்கு வெற்றிலை வாக்கு வைத்து அழைப்பு விடுகிறது .நீ ஏன் வெயிலைச் சபிக்கிறாய் ?

 

இயற்கையப் புரிந்து கொள்வது என்பது முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் போடும் அரைகுறை தகவல் அல்ல . அடி முடி அறியாமல் அவசரகோலத்தில் பழிபோடும் சின்னப்பிள்ளைத்தனம் ஆகவே ஆகாது .

 

பருவகாலம் ஒவ்வொன்றுக்கும் ஓர் பங்கு உண்டு .ஓர் பணி உண்டு .அதனை செய்தால் மட்டுமே அது பருவகாலமாய் இருக்கும் . தப்புத் தாளங்கள் எங்கும் இருக்கும் .பருவ காலங்கள் மட்டும் தப்புமா ?

 

தப்புத் தாளங்கள் என்பது நிரந்தரமல்ல .அதனை வைத்து மட்டுமே எந்த அவசர அரைகுறை முடிவுக்கும் போகாதே ! இயற்கையும் தப்பு செய்யும் .தன்னை திருத்தி தகவமைத்துக் கொள்ளும் .

 

உன்  பொறுப்பற்ற அளவுக்கு மீறிய தலையீட்டால் தாமதமாகலாம் .ஆனால் முடங்கி விடாது .இயற்கை தன்னையும் திருத்தும் !உன்னையும் திருத்தும் ! முடங்குவதல்ல முன்னேறுவதே இயற்கையும் நீயும் என்று உணர் !

 

அரைகுறைகளால்தான் எப்போதும் பேராபத்து.அரைக்கிணறு தாண்டுவது அறிவிலித்தனம் . ஆனாலும் எல்லாம் உனக்குத் தெரியும் என்கிற இறுமாப்புக்கு மட்டும் குறைவில்லை .

 

இளைய தலைமுறையே!  இயற்கையை ஆழப்படி ,அகலப்படி , முழுதாய் படி , ஒன்றோடு  ஒன்று இணைத்துப் படி ! இயற்கை உன் வசப்படும் ! நீ இயற்கையோடு இயைந்து நடப்பாய் !

 

சரிதானே ! தோழா!

 

சுபொஅ.

04/05.2024.

 


0 comments :

Post a Comment