போராட்ட காலத்தில் பென்சிலய்யாவின் ஓராண்டு நினைவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரேயர் மீட்டிங் மற்றும் பிரியாணி சாப்பாட்டைக்கூட அனுமதிக்காத போலீஸ் கெடுபிடி ; அதனை மாமி ,தாரா ,பரிசுத்தம் மற்றும் இதர பெண்கள் ஒற்றுமையாய் எதிர்த்து போலிஸ் நிலையம் சென்றது
போராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ!!
சு.பொ.அகத்தியலிங்கம்
தங்கள் குவாட்டர்ஸுக்கு எதிரே உள்ள குவாட்டர்ஸ் காலியான போது , “ வேறு யாராவது வரதா இருந்தா சொல்லுங்கோ நாம்ப இடமாறிடலாம் “ என தன் கணவரிடம் புலம்பிய மாமிதான் ; நிகழ்வு போக்கில் பென்சிலையா குடும்பத்தோடு உயிர்துடிப்பு மிக்க உறவைப் பேணினார்
வாலிபால் ப்ளேயர் பென்சிலய்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிற காட்சியில் நாவல் துவங்குகிறது . ஆச்சாரமான பிராமண குடும்பத்துக்கும் கிறித்துவ தலித் தெலுங்கு குடும்பத்தைச் சார்ந்த பென்சிலய்யா குடும்பத்துக்குமான நெருக்கமான பிணைப்பு வலுவாய் சொல்லப்படுகிறது .
ரயில்வேயிலும் துறைமுகத்திலும் குவாட்டர்ஸில் தன் வீட்டுக்கு எதிரே தலித் வராமல் தவிர்க்க எப்படி எல்லாம் முயலுவார்கள் என்பதை தனி நாவலாகவே சொல்லலாம் . அதனையும் மீறி மத ,மொழி ,சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அங்கு ஐசிஎப் குவாட்டர்ஸில் உருவாகும் ஒருவித பாசமும் பிணைப்பும் இந்நாவலில் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது .
1974 ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் சார்ந்து பின்னப்பட்ட நாவல் . அம்பிதான் இதன் கதை சொல்லி .நாவல் முழுவதும் சென்னை ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலை குடியிருப்பில் நிகழ்வதாகவே இருக்கிறது .அன்றைய காலகட்டத்தை அசை போடுவோருக்கு பலப்பல உணர்வுகளை உசுப்பிவிடும் நாவல் .
பென்சிலய்யா மரணம் அதைத் தொடர்ந்த கரிசனமிக்க அண்டைவீட்டார் அரவணைப்பு ; பென்சிலய்யா மனைவி பரிசுத்தம் ரயில்வே தரும் உதவியை ,வேலையைய்ப் பெற அனைவரும் மனப்பூர்வமாய் ஒத்துழைப்பது என அன்றைய காலகட்டத்தின் சமூக நல்லிணக்கம் மிக்க பரிவு நாவல் முழுக்க வியாபித்துள்ளது . இன்றைக்கு சாதியும் மதமும் கூறு போடும் சமூக அவலம் கண்முன் உறுத்துகிறது ; ஆயினும் இதன் விதை அன்றே உள்ளீடாய் இருந்த செய்தியும் நாவலில் போகிற போக்கில் மெலிதாய்க் கோடிடப்படுகிறது .
அம்பியின் குடும்பம் வித்தியாசமானது .ஆச்சாரமான அம்மா , ரயில்வே சங்கத்தில் ஈடுபாடுகொண்ட அப்பா , வாசிப்பின் வழி விரிந்த ஞானம் கொண்ட சகோதரி , வேலையில்லாத ஆனால் இடதுசாரி அரசியல் ஈடுபாடுகொண்டு அதே வேலையாய் அலையும் அம்பி .அவரது சகா வைத்தியர் வேலாயுதம் , கட்சியிலும் சங்கத்திலும் ஈடுபாடுகொண்ட தோழர்கள் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்நாவலில் உலவுவர் . இதில் அநேகம் பேர் மெய்யாக வாழ்ந்த சிலரின் மாதிரிகள் ; அவர்கள் அச்சு அசலாய் நம்முன் வந்து நிற்பது போல் சித்தரித்திருப்பது ராமச்சந்திர வைத்தியநாத்தின் வெற்றி என்பேன் .
அகில இந்திய ரயில்வே ஸ்டிரைக் உருவாகும் காலம் ; மெல்லக் கொதிப்பேறிய கோவம் ;வெடிப்பாய் நிகழ்ந்த ஸ்டிரைக் இவற்றை சொல்லுவதில் கூர்மையாய் இந்நாவலாசிரியர் செயல்பட்டிருக்கிறார் . கேட்டகிரி சங்கங்கள் , ஒர்க்கர்ஸ் யூனியன் ,யுனைட்டெட் ,பேரவை ,மஸ்தூர் ,கார்மிக் ,எஸ்சி எஸ்டி , ,சிஐடியு ,எஐடியுசி ,ஏஐஆர்எம், பெடரேஷன் ,சங்கு இப்படி பிரிந்து கிடக்கும் தொழிற்சங்கங்கள் தலைமையில் நிலவிய பல்வேறு ஊசலாட்டங்கள் என அனைத்தையும் உள்வாங்கி அததற்குரிய இடமும் நியாயமும் வழங்கி இருக்கிறார் எனில் மிகை அல்ல .
போராட்ட காலத்தில் பென்சிலய்யாவின் ஓராண்டு நினைவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரேயர் மீட்டிங் மற்றும் பிரியாணி சாப்பாட்டைக்கூட அனுமதிக்காத போலீஸ் கெடுபிடி ; அதனை மாமி ,தாரா ,பரிசுத்தம் மற்றும் இதர பெண்கள் ஒற்றுமையாய் எதிர்த்து போலிஸ் நிலையம் சென்றது ; அதனைச் சார்ந்த நிகழ்வுகள் மிக சிரத்தையோடு மிகுந்த பொறுப்புணர்வோடு எழுதப்பட்டிருக்கிறது .
போராட்டத்தின் நடுவே அம்பியின் தந்தையே நிர்வாகம் அனுப்பும் பஸ்ஸில் வேலைக்குச் செல்லும் நிர்ப்பந்தம் ஏற்படும்போது ; பரிசுத்தம் மறுத்து கம்பீரமாய் பஸ்ஸிலிருந்து இறங்குவது இயல்பாய் வடிக்கப்பட்டுள்ளது .
மதுரையில் போராட்டத்தை ஆதரித்து ரயில் மறியலில் ஈடுபட்ட ராமசாமி ரயிலேற்றிக் கொல்லப்பட்டது பதிவாகி இருக்கிறது .ஆனால் அது இன்னும் கொஞ்சம் விரிக்கப்பட்டிருக்கலாமோ ?
“ ஒரு நாற்பது அல்லது ஐம்பது நாட்களில் பெற்றிட்ட அனுபவம் ,ஒரு சகாப்த வாழ்வுக்கு இணையாகவே தோன்றுகிறது .” என நூலாசிரியர் என்னுரையில் சொல்லுவது மெய்யென்பதை இந்நூலும் உறுதி செய்கிறது .
அன்றைய காலகட்டத்தின் நாவல் ,சினிமா என அனைத்தையும் உரையாடல் வழி அம்பி மற்றும் சரோஜா பாத்திரம் மூலம் சொல்லிச் செல்வது நுட்பமான அவதானிப்பின் சாட்சி . இடையிடையே தான் சார்ந்த இயக்கத்தின் மீதும் மெல்லிய பகடிவீச்சு வாசிப்புக்கு மெருகூட்டி நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது .
பொதுவாக ரயில்வேயில் இறந்துபோனவரின் மனைவிக்கு வேலைதேடி உதவ அலையும் போது ஒரு வித உறவும் முகிழ்த்துவிடுவது சர்வசாதாரணம் ; அதனை கொச்சையாக்காமல் மேம்பட்ட ஆண் பெண் உறவாக அம்பி - பரிசுத்தம் உறவை சித்தரித்திருப்பது பாராட்டுக்குரியது .
“ உன் அப்பா ஸ்தானத்திலே இருந்து பார்தேன்னா எனக்கு சந்தோஷம்தான் ; அவனோடு அப்பாவ பார்க்கிறச்சே நிம்மதின்னும் சொல்லலாம் ; கோடி மங்கலம் ஐயாகுட்டி சாஸ்திரிகளோட பிள்ளையா பார்க்கிறச்சே கோபமும் ஆங்காரமும் சேர்ந்து வருது ; டிவெண்டி ஷாப் நாப்பது எண்பது டோக்கண் ஸ்கில்ட் சிவராமன் என்கிறப்போ எல்லா இடத்திலேயும் நடந்திண்டு இருக்கு ,இப்போ நம்ம வீட்லேயும் நடக்கிறது . இதுலெல்லாம்கூட நம்ம இஷ்டம்னு பிடிவாதம் பிடிச்சு சின்னஞ் சிறுசுகளை அலைக் கழிக்கணுமான்னு தோணுது .” என அம்பியின் அப்பா மூலம் சொல்லுவது அழுத்தமான பக்குவநிலை .இது எங்கும் வாய்க்கப் பெறின் குடும்ப ஜனநாயகம் மெல்ல தழைக்குமே! ஆணவக் கொலைகளுக்கு இடமில்லாமல் போகுமே !
அம்பி இடதுசாரி முழுநேர ஊழியனாக பரிசுத்தம் துணையாவது நல்ல குறியீடு . கணவனை இழந்து ரயில்வே குடும்ப பென்ஷன் பெறும் பெண் . இளவயதாயிருப்பினும் , மறுமணம் நியாயமாய் இருப்பினும் சட்டபூர்வமாய் செய்தால் பென்ஷனை இழக்க வேண்டிவரும் ; ஆகவே லிவிங் டுகெதர் போல் சேர்ந்து வாழுவதே இத்தைகோருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது . அம்பியும் பரிசுத்தமும் அப்படித்தான் .இச்செய்தி போகிற போக்கிலேனும் சொல்லியிருக்கலாமே ! அது ஒன்றும் பிழையும் அல்லவே ! விவாதிக்கப்பட வேண்டிய ஒரு பெரும் பிரச்சனையும் ஆயிற்றே !
ரயில்வே ஸ்டிரைக்கை மையமாக வைத்து நாவல் எழுதியதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும் ; இதுவரை செய்யாமல்விட்டதை செய்ததற்காக நன்றி கூறுகிறோம் .
அன்றைய போராட்டம் ; ரயில்வேயிலுள்ள சூழல் எல்லாம் தெரிந்த ஒருவருக்கு இந்நாவல் மிகமிக நெஞ்சுக்கு நெருக்கம் ஆகும் . ஆனால் ,புதிய வாசகனுக்கு இதிலுள்ள பல செய்தியை உள்வாங்குவதில் சிரமம் இருக்கத்தானே செய்யும் ?
முன்னுரை எழுதிய ஆர் .இளங்கோ இலக்கியம் குறித்து ஒரு பார்வை வழங்க முயற்சித்திருக்கிறார் .பிழையல்ல ;தேவைதான் . ஆனால் இந்த நாவலின் பேசு பொருளான ரயில்வே ஸ்டிரைக் குறித்து ஒரு வரலாற்றுக் குறிப்பை அவர் முன்னுரையாகவோ ,பின்னுரையாகவோ எழுதிச் சேர்த்திருக்க வேண்டும் . அப்போதுதான் நாவலின் நோக்கம் நிறவேறும் .
சில செய்திகளுக்கு அடிக்குறிப்பாகவோ பின் இணைப்பாகவோ விவரம் தந்திருக்க வேண்டும் .எடுத்துக்காட்டு : பொன்மலைத் தியாகிகள் . பல்வேறு ரயில்வே சங்கங்கள்
இதையெல்லாம் இளங்கோ செய்திருப்பின் வைத்தியநாத் நிச்சயம் ஏற்றிருப்பார் ; வேறு யாரேனும் செய்தால் மறுத்திருப்பார் . இளங்கோ செய்யத் தவறிவிட்டார் . நாவலே அம்பி மூலமின்றி வேறொருவர் மூலம் நகர்த்தப்பட்டிருப்பின் இன்னும் வலுவாய் இருந்திருக்குமோ ?
எப்படி இருப்பினும் இந்நாவல் வருகை காத்திரமானதும் . வாசிக்க வேண்டிய முக்கிய நாவலும் ஆகும் . போராட்ட வரலாற்று நாவலெனில் மிகையாமோ ? .
ஸ்டிரைக் , [ புதினம் ]
ஆசிரியர் : ராமச்சந்திர வைத்தியநாத்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,7, இளங்கோ சாலை , தேனாம்பேட்டை ,
சென்னை - 600 018.
பக் : 304 , விலை : 250/
0 comments :
Post a Comment