இன்னும் நிறையக் கொட்டிக்கிடக்கே

Posted by அகத்தீ Labels:







இன்னும் நிறையக் கொட்டிக்கிடக்கே...

ச. சுப்பாராவ் என்றதும் அவரது மறுவாசிப்பு படைப்புகளே நினைவில் நிற்கும். புராணங்களை உள்வாங்கி நுட்பமாய் சமூகநீதி ,பெண்ணியம்,வர்ணாஸ்ரமம் போன்ற கோணங்களில் நறுக்குத் தெறித்தாற்போன்ற ஆனால்உறுத்தாத படைப்புகளை தந்து நம் நெஞ்சில் சம்மணம்போட்டு உட்கார்ந்திருப்பவர் அவர்.

முந்தைய மூன்று தொகுப்புகளை அசைபோட்டுக்கொண்டே இந்த நான்காவது தொகுப்பில் நுழைந்தால் இதிலும் மொத்தம் 16 கதைகளில் ஏழு கதைகள் மறுவாசிப்பு சார்ந்தவை.

ராமன் சரயு நதியில் தற்கொலை செய்து கொண்டானா? கொல்லப்பட்டானா? என்கிற முடிச்சை அவிழ்க்கும், “ வேறொன்றின் ஆரம்பம்.” கதை பரிசு பெற்ற கதை. சம்புகன் தலையை ராமன் கொய்தகதை தெரிந்தவர்களுக்கு சம்புகனின் மகன் பழிவாங்கியதன் நியாயம் புரியும் ; எந்த வேறொன்றின் ஆரம்பம் என்பதும் தெளிவாகும். சம்புகன் யாரென்பதை கதையோட்டத்தில் ஒற்றை வரியாகவேனும் சேர்த்திருக்கலாமோ?

“குரு.” , “ஒரு சக்கரவர்த்தியின் ஜனனம்” , “இரண்டாம் இடம்,” மூன்றுகதைகளுக்கும் மிக நெருக்கமான தொடர்புள்ளது மட்டுமின்றி ; இக்கதைகளின் துவக்கமும் கிட்டத்தட்ட திரும்ப திரும்பச் சொல்வது சலிப்பூட்டாதோ?தனித்தனி இதழில் வரும்போது தெரியாது ; ஒரே தொகுப்பில் இடம்பெறும் போது வாசகனை சற்று இடறவைக்குமே!. மூன்றையும் ஒன்றாக்கி மூன்று காட்சிகளாய் பின் பகுதியை அமைத்திருந்தால் வீரியம் கூடியிருக்கலாம் ?

இந்த மூன்று கதைகளோடு , “ராஜ தந்திரி’ , “பதிலில்லா கேள்வி” “ராஜ்ஜியத்திற்காக” ஆகியனவும் சேர்த்து ஆறுமே மகாபாரத கதைகளின் மறுவாசிப்பே.

கர்ணனின் குரு ஏகலைவன் எனப் பேசும் குரு , வர்ணக்கலப்பின் மீதான வன்மத்தைப் பேசும் ஒரு சக்கரவர்த்தியின் ஜனனம், இரண்டாம் இடம், ராஜதந்திரி, பதிலில்லா கேள்வி, இவற்றுடன் பரமாத்மாவின் பெண் பற்றிய அருவருப்பான பார்வையை போட்டுடைக்கும் ராஜ்ஜியத்திற்காக என இக்கதைகளின் நுட்பமான மறுவாசிப்பை பாராட்டாமல் இருக்கவே முடியாது.

அனுபவச் சூட்டில் பொரித்தெடுத்த ; மனமாற்றம் , பூனை புராணம், டார்வின் விதி , தேவரனைவர் , புதிய பாடம் போன்ற கதைகள் நம் நெஞ்சோடுபேசும் .

அதிலும் அந்த ‘‘ஜீன்ஸ்” எல்லோரையும் அசை போடவைக்கும்.“மெல்லுவதற்கு கொஞ்சம் அவல் ,” என்பது வெறும் கதையல்ல ; ஆண் பெண் நட்பு பற்றி பொதுபுத்தியில் உறைந்து போயுள்ள சீழைக் குத்திவிடும் நுட்பமான கதை ; அதில் மேற்கோளாய் வரும் விகடன் கவிதை உட்பட.

“எஞ்சிய சில நல்ல பக்கங்கள்,” எனும் முதுமை சார்ந்த அனுபவப் பிழிவு நம்மை நாமே அசைபோடவைக்கும் . அது சரி, இத்தொகுப்புக்கு அவ்வளவு கச்சிதமாய் இத்தலைப்பு பொருந்திப் போவது எப்படி ?

மொழி பெயர்ப்புப் பணியில் தீவிரமாகி விட்டதால் படைப்பிலக்கியத்தில் பங்களிப்பது குறைந்து போயுள்ளது. கேட்டுக்கொண்ட போதுமட்டுமே எழுத நேர்ந்தது என முன்னுரையில் கூறியுள்ளதை இந்நூலை வாசிக்கும் போது உணரவும் முடிகிறது.

மொழி பெயர்ப்பு பணியைக் குறைத்து மதிப்பிடவும் இல்லை ; வேண்டாம் என்று கூறவும் மாட்டேன் . ஆனால் என் போன்றோர் கவிதை,சிறுகதை என முயன்றும் வெற்றிபெற முடியவில்லை .ஆனால் உங்களுக்கு நன்கு கைவரப் பெறுகிறது .நல்லதோர் வீணை செய்தே நலங்கெடப் புழுதியில்எறிவதுண்டோ?

இலக்கிய,இதிகாச,புராணப் பரப்பில் மறுவாசிப்புக்கு இன்னும் நிறையக் கொட்டிக் கிடக்கே!.



எஞ்சிய சில நல்ல பக்கங்கள் ,ஆசிரியர் : ச. சுப்பாராவ்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,7,இளங்கோ சாலை , தேனாம்பேட்டை , சென்னை - 600 018.
பக் : 80 , விலை .ரூ.70/
சு.பொ.அகத்தியலிங்கம்.
நன்றி : புத்தகமேசை , தீக்கதிர் , 08/03/2018.

0 comments :

Post a Comment