மழைவந்ததும்...
சு.பொ.அகத்தியலிங்கம்.
மழை வந்ததும் ஒதுங்க இடம் தேடினேன்
மழையில் ஆட்டம் போட்டு அம்மாவிடம்
அடிவாங்கிய நாட்கள் நினைவிலாடின
பேரன் மழையில் நனையாமல் அணைத்துச்
சென்ற நேற்றின் காட்சி நெஞ்சில் விரிந்தது
மழை என்னை மெல்ல கடத்திச் சென்றது
ஒரு மழை இரவில் மண்சுவர் இடிய கூரை சரிய
விடியவிடிய தவித்த தவிப்பு வலித்தது நெஞ்சில்
மாமழை போற்றுதும் என்றதும் இதயத்தின் துடிப்பே
அடைமழை எப்போது நிற்கும் ; ஏங்கியதும் மெய்யே !
கேட்டதும் கேட்டபடி பெய்ய ஏவலாளா மழை ?
பெய்கையில் தேக்கவும் வடிக்கவும் தவறியது யார் பிழை ?
பெய்யாமல் வறுத்ததும் பெய்து அழித்ததும் என
ஒவ்வொரு மழையும் ஒரு சுவட்டை விட்டுச் செல்கிறது
மனிதனுக்கு அதில் எவ்வளவோ பாடம் இருக்கிறது
பேசுகிறோம் எழுதுகிறோம் பேசிக்கொண்டே இருக்கிறோம்
நேற்றின் தேவையும் இன்றின் சிக்கலும் புரிந்தும் புரியாமல்
யார் மீது பழிபோட ; என்னென்ன கதை சொல்ல ஓயாமல்
யோசித்தோம் ; ஒரு போதும் உன்மைதேடி உரையாடினோமா ?
0 comments :
Post a Comment