193வது வார்டிலிருந்து போராட்டக் கங்கு…

Posted by அகத்தீ Labels:புரட்சிப் பெருநதி -9


193வது வார்டிலிருந்து போராட்டக் கங்கு

சு.பொ.அகத்தியலிங்கம்.
"இல்லைஇல்லைஅரசியல் உணர்வுள்ள தொழிலாளர்கள்
அடிதடிப் போராட்டம் நடத்தக்கூடாது.
இதைப் பற்றி துண்டுப் பிரசுரம் எழுதுவோம்"
என்றார் லெனின்.

"1917 ஆம் ஆண்டுப் புரட்சிக்கான ஒத்திகையே 1905 ஆம் ஆண்டுப் புரட்சி எனில் 1905 ஆம் ஆண்டுப் புரட்சிக்கான ஒத்திகையே 1896 ஆம் ஆண்டு வேலை நிறுத்தம்" –என மதிப்பிட்டது சரியே!

ரஷ்ய தொழில் வளர்ச்சியும் தொழிலாளர் வர்க்க எழுச்சியும் குறுகிய காலத்தில் நிகழ்ந்தது.1865 முதல் 1890 வரை இயந்திரப் பாட்டாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகி 14 லட்சத்தைத் தாண்டியது. அடுத்த பத்து வருடங்களில் மேலும் இரட்டிப்பாகி 28 லட்சத்தை நெருங்கியது.மிகக் குறைந்த கூலி – 12 மணி நேர வேலைபுளி மூட்டைபோல் திணிக்கப்பட்ட விடுதிசற்றே முணுமுணுத்தாலும் பெரும் அபராதம்; ரஷ்யத் தொழிலாளர்கள். கொடுமை தாளாமல் அவ்வப்போது வெடித்தனர். இயந்திரங்களை உடைத்தனர். அலுவலகங்களை நொறுக்கினர். விடிவு வரவில்லை. அடக்குமுறை அதிகரித்தது. அமைப்பு தேவை என்கிற எண்ணம் மெல்ல துளித்தது.

1875 இல் ஒடேஸ்ஸா நகரில் "தெற்கு ரஷ்யத் தொழிலாளர் சங்கம்" தோன்றியது. போலீஸ் நெருக்கடியால் ஒன்பதே மாதங்களில் சங்கம் முடங்கியது.தச்சரான கால்டுரின், பிட்டரான அப்னார்ஸ்கி ஆகியோர் முன்கை எடுக்க 1878 இல் புனித பீட்டர்ஸ்பர்க்கில் "வட ரஷ்ய தொழிலாளர் சங்கம்" தலை எடுத்தது; அப்னார்ஸ்கி வெளிநாடுகளில் பணியாற்றியவர். முதல் அகிலத்தோடும் மார்க்சிஸ்ட் சமூக ஜனநாயக இயக்கங்களோடும் அறிமுகம் கொண்டவர்.200 பேரை உறுப்பினராகக் கொண்ட இச்சங்கம்; வேலைநேரம் குறைப்பு, பேச்சுரிமை, எழுத்துரிமை என அரசியல் கோரிக்கைகளையும் உள்ளடக்கி வேலை நிறுத்தம் செய்ய முயன்றது. ஜாரின் கொடுங்கரம் நசுக்கியது.1880லிருந்து பத்து வருடத்தில் அதிலும் கடைசி ஐந்து வருடத்தில் 80 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்ற 48 வேலைநிறுத்தங்கள் நடந்தன.

1885 இல் மோரோனோவ் மில்லில் மிகப்பெரிய வேலைநிறுத்தம் நடந்தது. 8000 தொழிலாளர்கள் பணியாற்றும் இம்மில்லில் இரண்டு வருடத்தில் ஐந்து முறை சம்பளம் குறைக்கப்பட்டது . கடும் அபராதமும் விதிக்கப்பட்டது. போராட்டத்துக்கு பியோத்தர் மோய்ஸியென்கோ என்ற தொழிலாளி தலைமை ஏற்றார். ஆயுத பலத்தால் வேலைநிறுத்தம் நசுக்கப்பட்டது. 60 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.1887 இல் காஸன் பல்கலைக் கழகத்தில் லெனின் சேர்ந்தார்.

அரசியல் ஈடுபாட்டால் பல்கலையிலிருந்து வெளியேற்றப்பட்டார். பெடோஸியெவ் தலைமையில் இயங்கிய மார்க்சியக் குழுவில் இணைந்தார். அங்கிருந்து அரசு வெளியேற்ற சமரா சென்ற லெனின் மார்க்சியக் குழு ஒன்று அமைத்தார். பின்னர் புனித பீட்டர்ஸ்பர்க் சென்று அங்கு 20க்கும் மேற்பட்ட மார்க்சியக் குழுக்களை ஒன்றிணைத்து "தொழிலாளர் வர்க்க விடுதலைக்கான போராட்ட சங்கம்" உருவாக்கினார்.புஷ்கின் என்ற தொழிலாளியோடு தோழமை கொண்டு; அவரின் அறையில் தங்கி லெனின் உரையாடினார் .ஆலையில் கோபம் கொண்ட தொழிலாளர்கள் அராஜகத்தில் ஈடுபட்டதை விவரித்தார் புஷ்கின். "இல்லைஅரசியல் உணர்வுள்ள தொழிலாளர்கள் அடிதடிப் போராட்டம் நடத்தக்கூடாது.

இதைப் பற்றி துண்டுப் பிரசுரம் எழுதுவோம்" என்றார் லெனின்; அப்போதே எழுதவும் துவங்கினார் .புஷ்கின் தூங்கி விட்டார் .காலையில் பார்த்தால் குண்டு குண்டான கையெழுத்தில் துண்டுப் பிரசுரம். நாலு படிகள். விடியவிடிய எழுதி லெனினின் கண்கள் சிவந்திருந்தன. செமியனிகோவ் , தார்ண்டன் ஆலைத் தொழிலாளிகளுக்காகவும் , உழைக்கும் பெண் தொழிலாளிகளுக்காக தனியாகவும் பிரசுரங்கள் எழுதினார். 1895 டிசம்பரில் லெனினும் நாற்பது தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர் . முப்பதாயிரம் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பங்கேற்கும் புனித பீட்டர்ஸ்பர்க் வேலைநிறுத்த தயாரிப்பு துவங்கியது. சிறையிலிருந்த படியே லெனின் அதற்கு உதவினார்.

சிறையில் தனக்கு தரும் ரொட்டியில் மைக்கூடு செய்து அதில் பாலை ஊற்றி படிக்கத்தந்த புத்தகங்களில் பாலால் எழுதி வெளியே அனுப்புவார்; வெளியே தாளை சூடுபடுத்தினால் கருப்பாய் எழுத்து தெரியும். காவலர் வந்துவிட்டால் மைக்கூட்டை அப்படியே விழுங்கிவிடுவார். ஒரு நாள் ஆறு மைக்கூட்டை விழுங்கியதாக கூறினார்.தன்னைக் காணவந்த குரூப்ஸ்காயாவிடம் லெனின் உரையாடியது: "நூலகப் புத்தகத்தை இன்று சகோதரிகளுக்கு அனுப்பி வைத்தேன் . அத்தோடு மரியாவின் புத்தகத்தையும்தான்..."மரியாவின் புத்தகத்தைப் புரட்டினால் போதுமென குருப்ஸ்காயா மனதில் குறித்துக் கொள்வார்."என் வார்டு எண் தெரியுமல்லவா?""தெரியாமல் என்ன? 193"193 ஆம் பக்கத்தைப் பார்க்க வேண்டும் என்று புரிந்து கொள்வார்.

"வேலை நிறுத்தங்கள் பற்றி", "ஜார் சர்க்காருக்கு…" கட்சிக்கான வேலைத் திட்ட நகல்" இப்படி மூன்று பிரசுரங்கள் சிறையில் இருந்தபடி எழுதினார் . வேலை நிறுத்தம் தோற்கடிக்கப்பட்டாலும்; வேலை நிறுத்தம் குறித்து செய்தி வெளியிடக்கூட தடை விதித்திருந்த ஜார் அரசு மிரண்டு; வேலை நிறுத்தம் குறித்து சுற்றறிக்கை அனுப்பியதே முதல் வெற்றியாகக் கருதப்பட்டது.

அதுமட்டுமின்றி தொழிலாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை முதலாளிகள் எடுத்துக் கொள்ளக் கூடாது; தொழிலாளர் நலனுக்கே செலவிட வேண்டுமென ஜார் ஆணையிட்டதும் வெற்றியின் துவக்கப் புள்ளியே !மிகையில் பிரஷ்னோவ் என்பவர் தலைமையிலான 20 பேர் கொண்ட மார்க்சியக் குழு 1891இல் முதன் முதலாக ரஷ்யாவில் மேதினத்தைக் கொண்டாடியது .

"வந்தது களி மிகுந்த மேதினமே !
அந்தப் புறம் போ ! கவலையின் நிழலே !
கடும் பகைப் புயல்கள் அடித்திடும் நம்மேல்,
காரிருள் சக்திகள் கொடுமையாய் நசுக்கும்!
இறுதிப்போரைப் பகைவருடன் புரிவோம்!"
என உற்சாகமாய்ப் பாடி லெனினும், குருப்ஸ்காயாவும், போலந்துக்காரர், புரோமீன்ஸ்கீயும், பின்லாந்துக்காரர் எங்க்பெர்க்கும் 1899 மேதினத்தைக் கொண்டாடினர். அதுவும் சிறைப்பட்டிருந்த ஷுசென்ஸ்கொயே கிராமத்தில் கொண்டாடினர்.

"புனித பீட்டர்ஸ்பர்க் தொழிலாளர் விடுதலைக்கான போராட்ட சங்கத்தின் முக்கியத்துவம் என்னவெனில் தொழிலாளி வர்க்கத்தால் பூரணமாக ஆதரிக்கப்பட்டு இயங்கும் ஒரு புரட்சிக் கட்சிக்கு உண்மையான முதல் மூலாதாரமாக அது விளங்கிற்று" என்றார் லெனின்.

தொழிலாளர்களின் மெய்யான நண்பன் மார்க்சியமே ; நரோத்தினிசமல்ல என்பதை புரியவைக்கஅணிதிரட்டபகூனின், காவுத்ஸ்கி போன்றோர்களோடு லெனினும் பிளக்கனோவும் நடத்திய கருத்துப் போர் காத்திரமானது. இன்றும் பயிலத்தக்கது.

நன்றி : தீக்கதிர் 02-01-2017
0 comments :

Post a Comment