தேநீர் விருந்து : விடுதலை முழக்கம்

Posted by அகத்தீ Labels:





புரட்சிப் பெருநதி – 11


‘தேநீர் விருந்து’: விடுதலை முழக்கம்

சு.பொ.அகத்தியலிங்கம்






வரிவசூலிக்க எதிர்ப்பு வலுத்தது.
படைகள் மீது மக்கள் பனிக்கட்டிகளை எறிந்து
போராடினர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில்
ஐந்து பேர் பலியாயினர்.
இது ‘பாஸ்டன் படுகொலை’


"அந்தப் பிரசுரத்தின் தாக்கம் திடீரென அமெரிக்க மனங்களைப் பரவலாகப் பற்றிப்படர்ந்தது. பொதுவாழ்வில் இருந்தவர்கள் அதைப் படித்தார்கள். கிளப்புகளில் அதுபற்றிப் பேசினார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் பாதிரியார் ஒருவர் சர்ச்சில் உபதேசத்திற்குப் பதில் இதை வாசித்தார்."- பென்சில்வேனிய தலைவர் பெஞ்சமின் ரஷ் கூறியிருப்பது மிகைக்கூற்றல்ல.

ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பிரதிகள் விற்ற "காமன்சென்ஸ்" என்ற பிரசுரம் அமெரிக்க சுதந்திரப்போரில் ஆயுதமானது.

அமெரிக்கா என்பதே குடியேற்ற நாடுதான்! வசந்த புஷ்பம் கப்பலில் வந்த கதையை முன்னொரு அத்தியாயத்தில் பார்த்தோம்.பிரிட்டனிலிருந்தும் இதர ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வந்து அங்கு குடியேறி; அம்மண்ணின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை வேட்டையாடிக் குவித்து - அந்த குருதிக் கவிச்சியோடு பிறந்ததே அமெரிக்கா .காலனி எனச் சொல்லப்பட்ட 13 மாநிலங்களில் வாழ்ந்த மக்கள் தங்களை அமெரிக்கராகக் கருதாது பிரிட்டிஷாராகவே கருதிக்கொண்டனர்.
இதிலும் வட அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் வேறுபாடு உண்டு!பண்ணை அடிமைத்தனம் குரூரமாய்க் கோலோச்சியது தெற்கில்தான்.

மாநிலங்கள் தனியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதுகூட தன் எதிர்கால நலனுக்கு சவாலாகும் என பிரிட்டிஷ் அரசே அஞ்சியது. தன் போர்ச் செலவுகளை காலனிகள் மீது திணித்தது .மதுவுக்கு வரி, சர்க்கரை பாகு கழிவுக்கு வரி, முத்திரை வரி, தங்குமிடச் சட்ட வரி, இறக்குமதி வரி என கொடுமை அதிகரித்துக்கொண்டே போனது.பணப்புழக்கம் குறைந்தது – சில தொழில்கள் நலிவை சந்தித்தன - வெறுப்பு பரவியது; தங்கள் கருத்தே கேட்கப்படாமல் தங்கள் மீது சுமை ஏற்றுவதா என கேள்வி எழுப்பத் துவங்கினர் மக்கள்.தங்கள் காலனி முழுவதுக்கும் ஒரே மாதிரி அதிகாரம் வேண்டுமென குரல்கள் எழுந்தன.
1765 -1766 இல் எல்லா காலனிகளிலும் "விடுதலையின் புதல்வர்கள்" என்கிற இயக்கம் முளைவிட்டது. அறிவுஜீவிகள், நடுத்தர மக்கள், கைவினைஞர்கள், சிறு வர்த்தகர்கள் இதில் அணி திரண்டனர்.கிளர்ச்சிகள் வலுத்தன. முத்திரைத் தாள் அலுவலகம் , மேட்டுக்குடியினர் வீடுகள் தாக்கப்பட்டன. நியூயார்க்கில் பிரிட்டனை எதிர்த்து விடுதலை நினைவுத் தூண்கள் எழுப்பினர். பிரிட்டிஷ் போலீஸ் அதை உடைக்க – இவர்கள் மீண்டும் எழுப்ப போர் தொடர்ந்து . வரிவசூலிக்க எதிர்ப்பு வலுத்தது. படைகள் மீது மக்கள் பனிக்கட்டிகளை எறிந்து போராடினர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாயினர்.இது "பாஸ்டன் படுகொலை" எனப்படும்!

அமெரிக்க உள்நாட்டுத் தேயிலைக்கு வரிவிதித்து உள்நாட்டுத் தேயிலை உற்பத்தியை முடக்கவும் தங்கள் நாட்டுத் தேயிலையைத் திணிக்கவும் பிரிட்டிஷார் கடும் முயற்சி மேற்கொண்டனர். பெரும் எதிர்ப்பு கிளம்பியது.பாஸ்டன் துறைமுகத்தில் தேயிலையை இறக்கி கிளர்ச்சியை முறியடிக்க ஆளுநரின் மகன் முயற்சித்தான். ஆயிரக்கணக்கானோர் துறைமுகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளையில் சுமார் நூறுபேர் செவ்விந்தியர் வேடத்தில் ரகசியமாகக் கப்பலுள் நுழைந்து தேயிலை மூட்டைகளை கடலில் தூக்கி வீசினர்.இதனை "பாஸ்டன் தேநீர் விருந்து" என வரலாறு செல்லமாய் பெயர் சூட்டியது.

பிரிட்டிஷ் அரசு அதிர்ந்தது. படைகளை அனுப்பியது. பலரைக் கைது செய்து லண்டனுக்கு இழுத்துச் சென்றது. போராட்டம் சுதந்திரக் கோரிக்கை நோக்கி வேகம் பெற்றது.13 மாநிலங்களின் சட்டமன்றங்களும் பிரதிநிதிகளை அனுப்பக் கூடிய காண்டினண்ட் காங்கிரஸ் பிரிட்டிஷ் பொருட்களைப் புறக்கணிக்க முடிவு செய்தன. மேட்டுக் குடியினர் பங்கேற்காவிடினும் விவசாயிகளும் ,நடுத்தர மக்களும் பங்கேற்றனர். நீதிமன்றங்களை முடக்கினர்.
அமைதியான புறக்கணிப்பு போராக உருவெடுத்தது. மேட்டுக் குடியினர் பணிந்து போக முயன்றனர். 1776 இல் டாம் பெயின் என்பவர் எழுதிய "காமென்சென்ஸ்" என்ற பிரசுரத்தில் "சுதந்திரமான குடியரசுதான் தீர்வு" என எழுதினார் . பண்டித மொழியில் அல்லாமல் பாமரர் மொழியில் எழுதினார் . இந்தத் துண்டுப் பிரசுரம் குறித்தே இங்கு ஆரம்பத்தில் குறிப்பிட்டோம்.ரத்தம் சிந்தா சுதந்திரப் போர் என சொல்லப்பட்டாலும் இருதரப்பும் படைதிரட்டி மோதியதும்; பொருட் சேதமும் உயிர் சேதமும் பெருமளவு இருந்தது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது..
பென்சில்வேனியாவைச் சார்ந்த பெஞ்சமின் பிராங்கிளின் , வெர்ஜீனியா தலைவரான தாமஸ் ஜெஃபர்சன் போன்றோர் முதலில் சுதந்திரக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை. நாளாக நாளாக மக்களின் எழுச்சி அவர்களையும் இணங்க வைத்தது. 1776 ஜூலை 4 இல் காண்டினண்ட் காங்கிரசு "எல்லா மனிதர்களும் பிறப்பால் சமம்" என்கிற உலகப் புகழ்பெற்ற சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது .ஜார்ஜ் வாஷிங்டன் தலைமை ஏற்க உள்நாட்டுப் போர் தொடங்கியது, ஏழாண்டுகள் தொடர்ந்தன .1783 யுத்தம் முடிவுக்கு வந்தது அமெரிக்கா முழு சுதந்திர நாடானது.
"இங்கிலாந்துக்கு விரோதமாக அமெரிக்க காலனிகள் விளைவித்த புரட்சி வெறுமே அரசியல் புரட்சியாகும். அதற்கு முன் தோன்றிய தொழிற்புரட்சியைப் போலவோ – அதற்குப் பின் தோன்றி சமூக அஸ்திவாரத்தையே அசைத்த பிரெஞ்சுப் புரட்சியைப் போலவோ முக்கியமானதல்ல" என்கிறார் நேரு. "ஆனாலும் அமெரிக்கப் புரட்சி என்பது பிரிட்டனிலிருந்து காலனிகள் அரசியல் விடுதலை பெறுவது என்பதற்கு சற்று மேலானது" என வரலாற்றாசிரியர் கிறிஸ் ஹார்மன் கூறுகிறார்."

1788 இல் மாநிலங்களின் கூட்டு அரசியல் அமைப்பிற்கு ஒப்புக் கொண்ட காலகட்டத்திலேயே அமெரிக்கா முழுவதுமான சுதந்திர சந்தை சக்திகள் மாநில சட்டமன்றங்களில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கிவிட்டன.

இது வேறுவகையாக நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஒரு பொருளாதார மாற்றத்திற்கான களத்தை அமைத்துத் தந்தது .அதேசமயத்தில் பழைய ஒடுக்குமுறை, சுரண்டல் வடிவங்களை தீவிரப்படுத்தியது; பரப்பியது.

"1776 சுதந்திரப் பிரகடனம் எல்லோரும் சமம் என்று சொன்னாலும், எல்லோருக்கும் வாக்குரிமை என அறிவித்தாலும் அது ஏட்டளவிலேயே இருந்தது. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை .கருப்பர்கள் மீதான அடிமைத்தனமும் தொடர்ந்தது. உள்நாட்டு யுத்தம் முடிந்தும் எண்பது ஆண்டுகள் அடிமைத்தனம் நீடித்தது.1863 இல் ஆப்பிரஹாம் லிங்கன்தான் அடிமைத்தனத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.
1917 இல் ரஷ்யப் புரட்சி பெண்கள் உள்ளிட்டு அனைவருக்கும் சமமான வாக்குரிமை வழங்கிய பின்னர் – நெடுங்காலமாக போராடி வந்த அமெரிக்க பெண்களின் உரிமைக்குரல் வலுப்பெற்றது.1918 இல் சட்டமியற்றப்பட்டது; 1920 இல் பெண்களுக்கு வாக்குரிமை அமலுக்கு வந்தது.பொருளாதாரச் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் எதிர்த்து எழுந்த விடுதலைப் போரில் பிறந்த அமெரிக்கா, உலகெங்கும் பொருளாதாரச் சுரண்டலிலும் ஒடுக்குமுறையிலும் முன்நிற்பது வரலாற்று முரணாகும்.
புரட்சி தொடரும்…

தீக்கதிர் . 16-01-2017


0 comments :

Post a Comment